வெள்ளி, மே 27, 2011


                    
                   காக்கை குருவி எங்கள் ஜாதி  

 எங்கள் உறவினர் திரு தங்கராஜ் சிவகாசியில் பறவைகளுக்கு தினந்தோறும் வீட்டு மொட்டை மாடியில் தான்யங்களும் தொட்டியில் நீரும் கடந்த மூன்று வருடங்களாக வைத்து பராமரித்து வருகிறார்.  இது எளிய செய்தியாக இருக்கும்.  நேரில் பார்த்தால் அதில் உள்ள சிரமங்களும், அவரது குடும்பத்தினரின் ஒத்துழைப்பும், அவரது விடா முயற்சியும் தெரியும்.

நாங்கள் உங்களை சிவகாசிக்கு திரு தங்கராஜ் வீட்டிற்கு அழைத்து செல்கிறோம்.  சிவகாசியில் விருதுநகர் புறவழிச் சாலையில் சுப்ரமணியபுரம் பகுதியில் அமைந்திருக்கிறது.  நமது களம் வீட்டின் இரண்டாவது மாடி - மொட்டை மாடி - 25' X 25' - சுற்றிலும் உயர்ந்த கட்டிடங்கள் உள்ளன.  பக்கங்களில் நிறைய மரங்கள் உள்ளன.  மாடியில் பெரிய நீர்த் தேக்கம் ஒன்று வைத்திருக்கிறார், உபரியாக சின்டெக்ஸ் நீர்த்தேக்கம் ஒன்றும் வைத்திருக்கிறார்.  மாடிச் சுவரில் பறவைகள் நீர் அருந்துவதற்காக இரண்டு சிமின்ட் தொட்டிகள் வைத்திருக்கிறார்.  

அளவு இரண்டு அடி நீளம், ஒரு அடி அகலம், அரை அடி ஆழம்.  இவை பறவைகளுக்காக தேடிப் பிடித்து விசேஷமாக ஆர்டர் கொடுத்து வாங்கப் பட்டவை.  பிளாஸ்டிக், மற்றும் இரும்பு தகடுகளில் செய்தால் தண்ணீர் சீக்கிரம் சூடாகி விடும்.  பறவைகள் நீர் அருந்த வராது என்கிறார்.

அந்த மூலையிலே ஒரு தண்ணீர் குழாய் அமைத்திருக்கிறார்.  தரை முழுவதும் பாருங்கள்.  தான்யங்கள் சிதறிக் கிடக்கின்றன.  அரிசி, கோதுமை முதலியன.



















இவர் பறவைகளை பராமரிக்க வேண்டும் என நினைத்திருக்கிறார்.  ஒரு பாத்திரத்தில் தான்யங்களை வைத்துப் பார்த்திருக்கிறார்.  பறவைகள் நீர் மட்டும் அருந்தி விட்டு சென்று விடுகின்றன.  ஒரு நாள் இவரது குழந்தைகள் விளையாட்டில் தான்யங்கள் பாத்திரங்கள் கொட்டி தான்யங்கள் சிதறி விடுகின்றன.  மறு நாளிலிருந்து பறவைகள் தான்யங்களை பொறுக்க ஆரம்பிக்கின்றன.  அதிலிருந்து தான்யங்களை விதை விதைப்பது போல் தூவ ஆரம்பித்து விட்டார்.

காலை ஆறு மணியிலிருந்து பத்தரை மணி முடிய காகங்கள் வரும், நீர் அருந்தி விட்டு தான்யங்களை பொறுக்கிவிட்டு செல்லும்,  விசேஷமாக வடை வாங்கி சிறிய துண்டுகளாக பிய்த்து மேலே சிமின்ட் கிராதி மேல் தூவுகிறார். காகங்கள் விரும்பி உண்கின்றன.  இவர் சற்று தாமதமாகி விட்டால் காகங்கள் கரைகின்றன.  இவரை ஞாபகப் படுத்துகின்றன.  இதற்கு இவரது குழந்தைகள் - ஸ்வேதா, ஸ்வாதி - ஒத்துழைப்பும், ஆர்வமும் அதிகம்.

பறவைகளுக்காக இவர் மொட்டை மாடியை உபயோகிப்பதும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் - காலை பத்தரை மணி முதல் மதியம் ஒன்றரை மணி முதல் - துணிகள் காயப்போடுவது, வடகம், கோதுமை போன்ற தான்யங்கள் காயப் போடுவது, குழந்தைகள், பெரியவர்கள் நடமாட்டம் போன்றவை.  உணவுப் பொருட்கள் காயப் போட்டால் கருப்பு துணி விரித்து காயப் போடுகிறார்கள்.  பறவைகள் கருப்பு நிறத்திற்கு வராது என்கிறார்.

இன்று (22.5.11) ஞாயிற்றுக் கிழமை மதியம் சுமார் மூன்று மணி இருக்கும்.  மொட்டை மாடி காலியாக இருக்கிறது. 

பறவைகள் ஆள் நடமாட்டம், ஏதாவது அசைவுகள் இருந்தால் இறங்காது என்பதால் நாங்கள் மூடிய கதவிற்கு பின்னால் நின்று கொண்டு கிராதியின் துவாரங்கள் வழியாக பார்த்துக் கொண்டு காத்திருக்கிறோம்.  மெதுவாக ஒரு புறா மட்டும் சுவரில் வந்து அமர்கிறது. 

 படிப்படியாக எதிரில் உள்ள சுவரில் மற்ற புறாக்கள்  காத்திருக்கின்றன.  இந்த ஒற்றைப் புறாவின் சைகைக்காக காத்திருக்கின்றன.  இடையிடையே காக்கைகள் வந்து தண்ணீர் குடித்து விட்டு, சில குளித்து விட்டும் செல்கின்றன.  அணில்கள் வந்து தான்யங்களை சாப்பிட்டு விட்டு தண்ணீர் அருந்தி விட்டும் செல்கின்றன. 


அணில் இரண்டு கால்களில் உட்கார்ந்து கொண்டு இரண்டு கால்களில் சாப்பிடும் அழகு அழகு தான்.

நிறைய நேர காத்திருப்பிற்குப் பின் ஒரு புறா இறங்குகிறது.  பின் படிப்படியாக இறங்குகின்றன.  ஒரே தடவையில் கிட்டத்தட்ட நாற்பது புறாக்கள் வரை இறங்குகின்றன. 


 கிட்டத்தட்ட நான்கைந்து வகைகள் இருப்பது போன்று தெரிகின்றது. ஆண் புறா சற்று பெரிதாக இருக்கின்றது.  கம்பீரமாக இருக்கின்றது.  கூட்டமாக இரை எடுக்கும்போது ஆண் புறா சுற்றிச் சுற்றி வந்து காவல் செய்வது போல் கம்பீரமாக வருகிறது.  பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது.  படங்களை பாருங்கள்.  

ஏதாவது சாலையில் வண்டிச் சத்தமோ ஏதாவது வெடிச் சத்தமோ ஏதவாது பாத்திரங்கள் விழும்போது உள்ள சத்தங்களோ கேட்டால் உடனே கூட்டமாக கிளம்பி விடுகின்றன.  ஒரே தடவையில் உடனே கிளம்பி விடுகின்றன.  பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

 கரிச்சான் குருவி, சிட்டுக் குருவி, மைனா, காகங்கள், அண்டங்காக்கா போன்ற பறவைகள் வருகின்றன.  தற்போது மயில்களும் காலையில் வருகின்றன என்றார்.  படங்களை பாருங்கள்.
 




















திரு தங்கராஜைப் பற்றி, இவர் எனது மூத்த தமக்கையின் மகன்.  படிப்பு என்னைப் போல் பத்தாவது வகுப்பு தான்.  பிறந்த ஊர் சிவகாசி.  சிவகாசி என்றாலே சுறுசுறுப்பு தான்.  இந்த மண்ணை மிதித்தாலே சுறுசுறுப்பு உங்களை பற்றிக் கொள்ளும்.  வந்து பாருங்களேன்.  இங்குள்ள மக்கள் எப்படி இருக்கின்றார்கள் என்று.  இரவும் பகலும் சந்தோசமாக உழைத்துக் கொண்டே  இருப்பார்கள்.  இந்தியா முழுக்க சுற்றி வருவார்கள்.  எனவே வெளியே உள்ள மாறுதல்கள், கட்டிடக்கலை, துணி வகைகள், ஆபரணங்கள் போன்றவைகள், புதிய வாகனங்கள் இங்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.  எளிமையான வாழ்க்கை, கடுமையான உழைப்பு, நல்ல வாழ்க்கை தரம், படிப்பிற்கு உதவுவது, தொழிலாளர்களுக்கு உதவுவது - கிட்டத்தட்ட ஒரே குடும்பம் போன்று தான் இருப்பார்கள் -  நாம் இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

இவர் மின்சார வயரிங் சம்பந்தப்பட்ட சிறிய தொழிற்சாலை வைத்திருக்கிறார்.  இவரது மனைவியும் சேர்ந்து கவனித்துக் கொள்கிறார்.  கீழே தொழிற்சாலை, மாடியில் வீடு.  மதியத்திற்கு பிறகு இவருக்கு வேலையும்  சேர்த்து  பறவைகளைக் கவனிப்பதுவும் ஒரு வேலை தான்.  இரண்டரை மணிக்குப் பிறகு மணிக்கொரு தடவை மாடிக்குப் போய் பறவைகள் சாப்பிட சாப்பிட தான்யங்களை தூவி விட்டு,

 தண்ணீர் குறைந்தால் பக்கத்துக்கு குழாயிலிருந்து பிடித்து ஊற்றி விட்டு வருகிறார்.  இந்தப் பணி ஆறரை மணி வரை நடக்கிறது.  தினந்தோறும் இவரே தொட்டிகளை கழுவி தண்ணீர் மாற்றி விடுகிறார்.  மூன்று நாட்களுக்கு ஒரு முறை மொட்டை மாடியை நன்கு பெருக்கி சுத்தம் செய்கிறார்.  இவர் வேலைக்கு வெளியில் செல்ல வேண்டியிருந்தால் இவரது மனைவி இந்தப் பணியை செய்கிறார்.  இவர்கள் குடும்பத்துடன் வெளியில் செல்ல வேண்டியிருந்தால் தண்ணீர் மாற்றி விட்டு தான்யங்களை நிறைய போட்டு விட்டு செல்கிறார்கள்.இரண்டு மூன்று நாட்கள் செல்ல வேண்டியிருந்தால் பக்கத்து வீட்டுக்காரர்களை பார்த்துக் கொள்ளச் சொல்லி செல்கிறார்கள்.  குழந்தை வளர்ப்பு போல் கவனித்துக் கொள்கிறார்கள்.

தினந்தோறும் கிட்டத்தட்ட மூன்று கிலோ அரிசி, அரைக் கிலோ கோதுமை, மற்றும் வடை முறுக்கு (மாற்றி மாற்றி) கொடுத்து வருகிறார்.  இந்தச் செலவு இவருக்கு பெரிதல்ல. 

இவரது பொன்னான நேரமும், இவர்களது குடும்பத்தினரின் ஒத்துழைப்பும், இவரது அர்ப்பணிப்பு உணர்வும் தான் போற்றத் தக்கது.  நாங்கள் இவரையும் இவரது குடும்பத்தினரையும் சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறோம்.

மற்றுமொரு செய்தி - ஒரு ஊனமுற்ற காக்கை வாடிக்கையாக வந்து நீர் அருந்தி செல்கிறது.

  சில நேரம் நோயுற்ற காக்கை, அணில்கள் அந்த சின்டெக்ஸ் தொட்டி அருகில் வந்து இருக்குமாம்.  இவர் அதற்கு தனியாக தண்ணீர், உணவு வைப்பாராம்.  இரண்டு மூன்று நாட்கள் கூட தொடர்ச்சியாக இருக்குமாம்.  சரியானவுடன் சென்று விடுமாம்.  மரணமடைந்து விட்டால் அப்புறப் படுத்தி விடுவாராம்.  பறவைகளுக்கும் அணில்களுக்கும் இவருக்கு பாசப் பிணைப்பு அப்படி இருக்கிறது.

இந்த பதிவு ஒரு ஞாயிறு மாலைப் பொழுது முழுவதையும் எங்களுக்கு ஒதுக்கி எங்களுக்கு வசதி செய்து கொடுத்த திரு தங்கராஜ் குடும்பத்தினருக்கும், எனது மனைவி திருமதி உமாகாந்திக்கும்,

 எனது மனவோட்டத்தை புரிந்து புகைப்படங்கள் எடுத்த (கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் அந்த கதவிற்கு பின்னால் நின்று) எனது பாசப்பிள்ளை ராஜவேலுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

உங்களுக்கு ஒரு வேண்டுகோள் - முடிந்தால் நீங்களும் உங்களது வீட்டு மொட்டை மாடியில் ஒரு சிமின்ட் தொட்டியில் நீர் வைத்து உணவுகளும் கொடுத்து (தான்யங்கள் அல்லது சோறு) பறவைகளை பராமரியுங்கள்.  ஏதாவது விபரங்கள் தேவைஎன்றால் என்னை தொலைபேசியிலோ மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.  நான் அவரிடம் கேட்டு உங்களுக்கு முடிந்த உதவி செய்கிறேன்.

இந்த பதிவை படித்து நிறை குறை ஆலோசனைகள் எழுதுங்கள்.

                                                                    மிக்க நன்றி.



வியாழன், மே 19, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரில் சந்தனமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா


  
 ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு சிறப்பு சந்தனமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா.  இந்த திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் (அநேகமாக ஏப்ரல் அல்லது மே மாதம் வரும்) அமாவாசை அன்று நடைபெறும்.  கிட்டத்தட்ட 5000  பேருக்கு மேல் அன்று பூக்குழி இறங்குவார்கள்.  
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்தும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் மம்சாபுரம், மீனாட்சிபுரம், ரெங்கநாதபுரம், திருமலாபுரம், வத்திராயிருப்பு, மற்றும் ராஜபாளையம் போன்ற இடங்களிலும் இந்த ஊர் மக்கள் வெளியூரிலிருந்தால் அங்கிருந்து வந்து கலந்து கொள்வார்கள்.  யாதவ பெருமக்கள், தேவர் இன மக்கள், விஸ்வகர்மா இன மக்கள், பிள்ளைமார் இன மக்கள், சாலியர் இன மக்கள் ஆகிய மக்கள் இந்த பூக்குழி இறங்குவதில் கலந்து கொள்கிறார்கள்.

   பூக்குழி திருவிழாவிற்கு 13  நாட்கள் முன்னால் கோவிலில் கொடி ஏற்றுகிறார்கள்.  அன்றிலிருந்து திருவிழா தொடங்கி விடுகிறது.  தினந்தோறும் அம்மனை அலங்காரம் செய்து வீதி உலா எடுத்து செல்கிறார்கள். இந்த திருவிழாக்கள் அனைத்தும் யாதவ பெருமக்களால் நடத்தப்பெறுகிறது. இந்த பூக்குழி திருவிழா 2.5.2011 அன்று நடைபெற்றது.  
உங்களை திருவிழாவிற்கு அழைத்து செல்கிறோம்.  பொதுவாக மாரியம்மன் கோவில்கள் எல்லாம் நீர்க்கரை ஓரங்களிலும் வயல்களிலும் கண்மாய்க்கரை (a big water tank - in some areas they call it us ஏரி) ஓரங்களிலும் அமைந்திருக்கும் என்று திருமதி.தேச மங்கையர்க்கரசி தங்களது சொற்பொழிவுகளில் சொல்வார்கள். இந்த கோவிலும் பெரியகுளம் கண்மாய் கரையில் அமைந்திருக்கிறது.  

   பூக்குழி அன்று காலை இதற்காக விரதம் இருந்தவர்கள் கோவிலில் வந்து காப்பு கட்டி செல்வார்கள்.  

பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் ரதவீதிகளை சுற்றி திருமுக்குளம் வழியாக கோவிலுக்கு செல்வார்கள்.  கோவிலில் எந்நேரம் பூக்குழி இறங்க வேண்டும் என்று குறித்திருக்கும்  நேரம் வரும் வரை காத்திருந்து பூக்குழி இறங்குவார்கள்.
   பூக்குழி இறங்க வரும் ஜனத்திரளை பாருங்கள். வயது வித்தியாசம் இல்லை. கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள், குழந்தைகளைக் கொண்டு ஆண்கள், முதியவர்கள், இளைஞர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் சிறுவர்கள், சிறுமிகள் செல்வது கண் கொள்ளக் காட்சியாக இருக்கும்.
திருவிழா என்றால் கலகலப்பு தான் வியாபாரமும் கலக்குகிறது.இளநீர் வியாபாரம், பனை நுங்கு வியாபாரம்
 (நகர்ப்புறத்தில் இருப்பவர்களுக்காக ஒரு புகைப்படம் சேர்த்திருக்கிறோம்).
பூ வியாபாரம்சிறுவர்கள் சிறுமிகளை கவர்வதற்காக பொம்மைஐஸ் பலூன் வியாபாரம் களை கட்டுகிறது

 

  வழியில் பார்வையற்றோர் ஒரு வேனில் வைத்து பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள்.













   இங்கு மக்கள் பூக்குழி இறங்க செல்வதற்காக காத்திருக்கிறார்கள்.  பூக்குழி திடலில் காவலர்களும் கோவிலை சேர்ந்த இளைஞர் குழுக்களும் நின்று கூட்டத்தை ஒழுங்குபடுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அனுப்புகிறார்கள்.  இதில் காவல்துறையின் பணி மகத்தானது  மிகவும் போற்றத் தக்கது.  கோவில் பகுதியில் இரு சக்கர வாகனம். ஆட்டோ, கார் போன்ற வாகனங்களை முற்றிலும் தடை செய்து விட்டார்கள்.  அதனால் பொதுமக்களுக்கு கோவில் வரை சென்று வருவது சிரமில்லாமல் இருந்தது.  

  பூக்குழியை பார்ப்பதில் இளைஞர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை பாருங்கள்.  
பேனர் கட்டுவதற்கான சாரங்களிலும், வீடு கோவில் மாடிகளிலும் ஏறி நிற்கிறார்கள்.  காவல்துறையிலிருந்து இறங்குமாறு அறிவிப்பு செய்து கொண்டே இருந்தார்கள்.

                   இளங்கன்று பயமறியாது...  

   வாழை மரங்கள் இரண்டு கட்டி இருக்கின்றன.  அவை பூக்குழி திடலின் முன்பு இருக்கின்றன.  
 பூக்குழி இறங்கிய மக்கள்  பின்பு கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்து விட்டு வெளியில் வருகிறார்கள்.  உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்று விரதம் முடிக்கிறார்கள்.  இந்த ஊரின் பாதி அளவாவது இந்த திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். 

கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு முன்பு வீட்டை வெள்ளையடித்து சுத்தம் செய்து விரதம் இருக்கிறார்கள்.  இதனால் எல்லாத் தரப்பு மக்களுக்கும் வேலை வாய்ப்பு, வியாபாரம் உருவாகிறது.  நல்ல பணப்புழக்கமும் , பணச்சுழற்சியும் ஏற்படுகின்றன.  மக்களும் வெயில்காலத்திற்கு வரும் கிருமித் தொற்றுக்கு முன்பு தங்களை தயார் செய்து விடுகிறார்கள். உறவினர் வருகை நல்ல நட்புறவு ஏற்படுகிறது.திருவிழாக்கள் மக்களை தொடர் வேலைப்பளுவிலிருந்து இலகு படுத்துகிறது (relaxed mood). 

   பூக்குழிக்கு மறுநாள் கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது.  நாங்கள் காலையில் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. எனவே முடிந்த தேரை புகைப்படம் எடுத்து சேர்த்திருக்கிறோம். 
 கோவில் வெளியே பொங்கல் வைக்கிறார்கள்.  பொங்கல் பொங்குகிறது - அந்த அழகை பாருங்கள்.
கோவிலின் உள்ளே நேர்த்திக்கடனுக்கு மாவிளக்கு எடுக்கிறார்கள்.  வில்லடிக் கச்சேரி நடைபெறுகிறது.
 அம்மன் முன்பு அலங்காரத்தில் இருக்கிறார்.  அற்புதம்.  கண்கொள்ளக் காட்சி.  நாங்கள் இந்தக் காட்சியை இந்த வருடம் தான் பார்த்திருக்கிறோம்.  உங்களுக்காக சென்றோம்.  இது உங்களுக்கு புண்ணியம். 
 கோவிலுக்கு தேர் செய்வதற்காக அறிவிப்பு ஒன்று இருக்கிறது.  கோவிலின் கல்வெட்டு தோற்றம்.
 இந்த கோவிலை ஒரு படப்பிடிப்புக்கு உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்(வெடிகுண்டு முருகேசன் படம்).

திருமதி தேச. மங்கையர்க்கரசியை பற்றி:

   அவர்களுக்கும் எங்கள் ஊருக்கு பெரிய பாசப் பிணைப்பு இருக்கிறது.  அவர்கள் சிறுமியாக இருக்கும்போதிலிருந்து எங்கள் ஊர் பெரிய மாரியம்மன்கோவில் திருவிழாவிற்கு சொற்பொழிவுக்கு வருகிறார்கள். தற்போது திருமணமாகி இரட்டைக்குழந்தைகள் (பையன்கள்) இருக்கின்றன.  ஒரு வருடம் திருவிழாவில் சொற்பொழிவு நடக்கும் திடலில் உண்டியல் வசூலுக்கு இணையாக அவர்களும் காணிக்கை செலுத்தினார்கள் (10000 வசூல் என்றால் அவர்களும் 10000). 

   இந்த ஊரிலிருந்து அவர்கள் கல்யாணத்திற்கு சைக்கிள் கடை மணி அவர்கள் மன்றத்தின் சார்பாக சென்றிருந்தார்கள். அதை அவர் இந்த வருடம் மேடையில் சொல்லும்போது - உங்கள் ஊர் சார்பில் திரு மணி கலந்து கொண்டார்கள், பெண் வீட்டில் சார்பில் சீதன சாமான்கள் அவர் தான் எடுத்து சென்று மாப்பிள்ளை வீட்டில் ஒப்படைத்தார் என்று சொன்னார்கள்.  அது எங்கள் ஊர் மக்களுக்கு பெருமை.  மறு வருடம் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு வருவதாக சொல்லி இருக்கிறார்.


   இந்த பதிவை புகைப்படம் எடுத்து கணினியில் ஏற்ற உதவி செய்த ராஜவேலுக்கும் புகைப்படம் எடுத்த எனது மனைவி  திருமதி உமா காந்திக்கும் எனது நன்றி.

இந்த பதிவை படித்து நிறைகுறை சொல்லுங்கள்.  பின்னூட்டத்தை (comments) தமிழில் எழுதுவது சிரமம் இருந்தால் ஆங்கிலத்தில் எழுதுங்கள்.  அதனால் ஒன்றும் இல்லை.  நமது மக்கள் புரிந்து கொள்வார்கள்.
                            மிக்க நன்றி.

இணைப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் நாற்பது வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதற்கு திரு சுவாமிநாதன் நிறைய பதிவுகள் எழுதியிருக்கிறார்.  அத்தனையும் அற்புதமாக இருக்கிறது.  நீங்களும் படித்துப் பார்த்து அவருக்கு பின்னூட்டம் எழுதி பாராட்டு செய்யுங்களேன்.