ஞாயிறு, அக்டோபர் 30, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு சிறப்பு ‘சதுரகிரி (சித்தர் மலை)’

சதுரகிரி மலையைப் பற்றிய பதிவு இது.  என்னால் அங்கு வரை பயணம் செய்ய முடியவில்லை.  எனது மகன் சரவணன் அடிக்கடி பயணம் செய்து நண்பர்களை அழைத்துச் சென்று (trekking),  அங்கு  எனது தம்பி இராமராஜனுடன் ‘டீசல் ஜெனெரேட்டர் மாட்டுவதற்கு என பள்ளியில் படிக்கும் போது, நிறைய ஈடுபாட்டுடன் சென்றிருக்கிறான்.  நான் திருவண்ணாமலை பற்றி எழுதும் போது ஒரு நண்பர் சதுரகிரி பற்றி எழுதும்படி கேட்டார்.  எனது உடல் நிலைமை அனுமதிக்காது என்று அவருக்கு பதில் எழுதினேன்.  அந்த நண்பரின் பிரார்த்தனை என்று நினைக்கிறேன். நேற்று எனது மகன் சரவணன் (29.10.11)  சென்னையிலிருந்து வந்திருந்தான்.  தாணிப்பாறை வரை அழைத்து செல்கிறேன் என்று சொன்னான்.  இது தான் கடவுள் கிருபை போலும்.  நான் தாணிப்பாறை வரை சென்றதை தனி பதிவாக எழுதுகிறேன்.

எனது மகன் சரவணனின் சதுரகிரி பயண அனுபவங்களையும் புகைப்படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  முதற்கண் சதுரகிரி சுந்தர மகாலிங்கத்திற்கு எங்களது பணிவான வணக்கங்கள்.  அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சுந்தரமகாலிங்கம் மலை கிட்டத்தட்ட நாற்பது கிலோமீட்டர் தொலைவு இருக்கும்.  ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வத்திறாயிருப்பு இருபது கிலோமீட்டர் தூரம் இருக்கும்.  அடிக்கடி பேருந்து, மினி பஸ் வசதி இருக்கிறது.  வத்திறாயிருப்பிலிருந்து தாணிப்பாறை செல்ல வேண்டும்.  பத்து கிலோமீட்டர் தூரம் இருக்கும்.  தாணிப்பாறையிலிருந்து அடிக்கடி மினி பஸ், ஆட்டோ வசதி இருக்கின்றன. 

தாணிப்பாறை


தாணிப்பாறையிலிருந்து சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மலைப்பாதை கால்நடையாக செல்ல வேண்டும்.  கிட்டத்தட்ட ஏழு முதல் பத்து கிலோமீட்டர் தூரம் இருக்கலாம்.  மனதிலும் உடலிலும் நல்ல வலு இருக்க வேண்டும்.  வயதானவர்கள், ரத்த அழுத்தம், இருதய பலவீனம் போன்ற நோயுள்ளவர்கள் தாணிப்பாறையில் இருக்கும் விநாயகரையும், ராஜேஸ்வரி அம்மன் கோவிலையும், கருப்பண சாமி கோவிலையும் தரிசித்து, உங்களது அதிர்ஷ்டம் இருந்தால் அருகிலுள்ள ஆற்றில் தண்ணீர் ஓடினால் அதில் உள்ள சின்ன அருவியில் குளித்து விட்டு அங்கிருந்தே மானசீகமாக ‘சுந்தர மகாலிங்கத்தை தரிசித்து விட்டு சந்தோஷமாக திரும்பி விடலாம்.  ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

தாணிப்பாறையிலிருந்து கிளம்புவோம்.  கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்கள் ஓரளவு கற்பாறைகள் நிறைந்த பாதை வழியே (ஓரளவு சிரமம் இருக்கும்) வந்தால் ‘செயின் பாறை (linked by Chain between two rocks)  என்ற இடம் வரும்.  இரண்டு பாறைகள் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கும்.  சில நேரங்களில்  தண்ணீர் அதிகம் ஓடும்.  அதனால் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு கடக்கலாம்.  அந்த புகைப்படங்களை இணைத்திருக்கிறோம். 

சங்கிலிப் பாறைசங்கிலிப் பாறையிலிருந்து ஒரு அரை மணி நேரம் நல்ல ஏற்றம் இருக்கும்.  இளைஞர்களே கிட்டத்தட்ட மூன்று நான்கு தடவை இடை தங்கி இளைப்பாறிச் செல்வார்கள்.  மூச்சு வாங்கிப் போகும்.  அடுத்து ஓரளவு நல்ல பாதை இருக்கும்.  ‘ பசுத்தடம் ‘ என்ற இடம் வரும். எனக்கு தெரிந்த வரலாறு.  காமதேனு பசு வழி தெரியாமல் இருந்த ஒரு பக்தருக்கு வழி காட்டியதாகவும், அந்த காமதேனு பசுவின் ‘கால் தடம் என்று சொல்கிறார்கள்.

அடுத்து ஒரு இறக்கம் இருக்கிறது.  அதற்கான புகைப்படம் இருக்கிறது.  அந்த இறக்கம் உப்புத்துறையிலிருந்து (தேனி மாவட்டம்) வரும் பாதை.  அந்தப் பாதை ஆடி அமாவாசைக்கு மட்டும் பயன்படுத்துவார்கள்.  மிகவும் ஏற்றம் என்பதால் அனேகமாக யாரும் உபயோகிப்பதில்லை.  அதனால் இந்த பாதையில் இறங்கி விடாதீர்கள்.  அது நமக்கான பாதை இல்லை. 


அடுத்து நாம் நேரே மலை ஏறுவோம்.  அடுத்து வருவது கோரக்கர் குகை.  அடுத்து வருவது ‘நாவல் ஊற்று என்ற ஊற்று இருக்கும்.  குடிநீர் அதில் எடுத்துக் கொள்ளலாம்.  நீர் இனிப்பாக இருக்கும்.  வருடம் முழுவதும் நீர் இருக்கும்.  இங்கு தண்ணீர் வற்றுவதில்லை.

அடுத்து ‘இரட்டை லிங்கம் இருக்கும்.  ஒரு லிங்கத்தில் சிவனும், ஒரு லிங்கத்தில் விஷ்ணுவும் இருப்பதாக நம்பிக்கை.  அதன் புகைப்படத்தை கீழே கொடுத்திருக்கிறோம். 
இரட்டை லிங்கத்தை தாண்டி ஓரளவு இறக்கம் இருக்கும்.  அங்கு ஒரு கேணியும், சிறு நீர்வீழ்ச்சியும் இருக்கிறது.  அங்கு நல்ல தெம்பாக இருப்பவர்கள் குளிக்கலாம்.  சற்று சரிவு பாதையில் இறங்க வேண்டும்.  இன்றேல் தண்ணீர் விழும் அழகை பார்த்து விட்டு கிளம்பலாம். 

இரட்டை லிங்கம்
ஓரளவு நாம் பயணத்தின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டோம்.  நல்ல ஏற்றம் இருக்கும்.  வழியில் பாதை நன்கு கற்கள் அடுக்கி, இரு பக்கங்களும் மரங்கள் நமக்கு தோகை பிடித்திருப்பது போன்று, ஒரு குகை போன்ற தோற்றமும் இருக்கும்.  நன்கு சில்லென்று இருக்கும்.  நம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம்.  எவ்வளவு வெயில் இருந்தாலும் அங்கு மட்டும் ஊட்டியில் இருப்பது போன்று (சென்னை வாசிகளுக்கு Air Condition இல் இருப்பது போல்) இருக்கும்.  இது அங்கு சென்று  அனுபவித்தால் தான் தெரியும்.  இந்த ஏற்றம் முடிந்தவுடன் ‘பிலாவடி கருப்பசாமி கோவில் இருக்கும்.  பலா மரத்தின் அடியில் கருப்பசாமி இருக்கிறார்.  காலங்கி நாதர் என்ற சித்தர் உலோகங்களை தங்கமாக மாற்றியதாகவும், அந்த தங்கங்களை ஒரு கிணற்றில் வைத்திருப்பதாகவும், அந்த கிணற்றுக்கு கருப்பசாமி தான் காவல் தெய்வம் என்றும் ஒரு நம்பிக்கை.  இங்கு கருப்பசாமியை தரிசனம் செய்து கொள்வோம்.


பிலாவடி கருப்பசாமி கோவில்


பிலாவடி கருப்பசாமி


நாம் கிளம்புவோம்.  கருப்பசாமி கோவிலுக்கு அருகில் உள்ள ஓடையில் குளித்து விட்டு செல்வோம்.  இன்னும் ஒரு பத்து நிமிஷ நேரம் ஏற்றம்.  அடுத்து ‘பெரிய பசுக்கடை என்ற ஒரு பெரிய சமதளம் வரும்.  அங்கு தான் ஆடி அமாவாசை சமயங்களில் கடைகள் இருக்கும்.  சமதள முடிவில் ஒரு ‘அடி பம்பு (Hand Pump) இருக்கும்.  குடி நீர் அங்கு சேகரித்துக் கொள்ளலாம்.  அருகில் ‘சிவகாசி நாடார் உறவின் முறைக்கு சொந்தமான அன்ன தான மண்டபம் இருக்கிறது. 

அடுத்து சற்று தூரம் சென்றால் ஒரு இடத்தில் இரண்டு பாதைகள் பிரியும்.  இடது பக்கம் உள்ள பாதையில் சென்றால் ‘சந்தன மஹாலிங்கம் கோவில் இருக்கும்.  வலது பக்கம் உள்ள பாதையில் சென்றால் ‘சுந்தர மஹாலிங்கம் கோவில் இருக்கும்.

சந்தன மஹாலிங்கம் கோவில்

நாம் படி ஏற ஆரம்பிக்கிறோம்.  முதலில் ‘அமாவாசை அன்ன தான மண்டபம் இருக்கிறது.  இந்த மண்டபம் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு A.K.C.கொண்டல் வண்ணன் அவர்களால் சிறப்பாக நிர்வகிக்கப் படுகிறது.  அடுத்து பௌர்ணமி அன்ன தான் மண்டபம் சிவகாசி நாடார்களால் நிர்வகிக்கப் படுகிறது.  அடுத்து கோவிலுக்கு வந்து விட்டோம்.  ‘சித்தர் தோரண வாயில் – கோவிலின் முகப்புக்கு வந்து விட்டோம்.  இங்கு பதிணெண் சித்தர்கள் சிலை இருக்கின்றது.  பதினெட்டு சித்தர்களுக்கும் ஒரே இடத்தில் சிலை இருப்பது இங்கு மட்டும் தான் – இது ஒரு தனி சிறப்பு.  எதிரே நவக்கிரகங்கள் இருக்கிறார்கள்.  அருகில் சட்ட நாதர் குகை இருக்கிறது.  அதன் அருகில் ஒரு இடத்தில் நீள் வட்டமான அமைப்பில் மூன்று கம்பிகளை வைத்து சமையல் செய்கிறார்கள்.  அதில் இருந்து விழும் சாம்பலை திருநீறாக வழங்குகிறார்கள். 

பௌர்ணமி அன்ன தான் மண்டபம்பதிணெண் சித்தர்கள் சிலை


நவக்கிரகங்கள்
சந்தன மஹாலிங்கம் கோவிலுக்கு வந்து விட்டோம்.  இங்கு சுயம்பு லிங்கம் சந்தனக் காப்பிடப் பட்டிருக்கிறார்.  இங்கு சந்தனமும், திருநீறும் பிரசாதமாக வழங்கப் படுகிறது.  சுயம்பு லிங்கத்தை பிரகாரம் சுற்றி வரலாம்.  முன்பு சந்தன மரம் இருந்திருக்கிறது.  இப்போது இல்லை.  பக்கத்தில் ஆகாச கங்கை அருவி இருக்கிறது.  அருவியிலிருந்து வரும் தண்ணீர் தான் இங்கு பூஜைக்கு, சமையலுக்கு, குடிநீருக்கு எல்லாம்.  அருவிக்கு அடுத்தாற் போல் வினாயகர், முருகன், சந்தன மஹா தேவி எல்லாம் இருக்கிறார்கள்.  அனைவரையும் தரிசனம் செய்து கொள்வோம்.  நாம் கிளம்புவோம்.

சந்தன மஹாலிங்கம் கோவில்ஆகாச கங்கை அருவிமற்ற விபரங்கள் – இங்கு மலை வாழ் மக்கள் (பளியர்கள்) கிட்டத்தட்ட ஆறு குடும்பங்கள் தங்கியிருக்கிறார்கள்.  மாடு வளர்க்கிறார்கள்.  இவர்களது வாழ்க்கைக்கு ‘தேன் எடுத்தல், சாம்பிராணி சேகரித்தல், மூலிகைகள் சேகரித்தல் போன்ற தொழில் செய்கிறார்கள்.  நயம் (original)  சாம்பிராணி அங்கு நம்பி வாங்கலாம்.  இங்கு மின் இணைப்பு கிடையாது.  டீசல் ஜெனரேட்டர் வைத்து தான் மின்சாரம் தயாரித்துக் கொள்ள வேண்டும்.  கோவிலுக்கு நல்ல வருமானம் வருகிறது.  அரசாங்கத்திற்கு நல்ல வருமானம்.  இந்த அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்ய வேண்டும்  இந்த மலை வாழ் மக்களுக்கு நல்ல வசதிகள் செய்ய வேண்டும்.  இவர்கள் தான் காட்டை பாதுகாக்கிறார்கள்.   

சுந்தர மஹாலிங்கம் கோவில்
சுந்தரனார் என்ற சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடம்.  இவர் சுயம்பு லிங்கம்.  சற்று சாய்வாக இருக்கிறார்.  இங்கு விபூதி பிரசாதம் வழங்கப் படுகிறது.  இங்கு பூஜை நேரத்தில் சங்கு ஊதப்படுகிறது.  லிங்கருக்கு மேலே செப்பு கலயம் இருக்கிறது.  நாள் முழுக்க நீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருக்கிறது.  இது ஒரு வித்தியாசமான அமைப்பு.  இது சற்று பெரிய கோவில்.  பிரகாரம் சுற்றி வரலாம்.

சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா.

மற்ற விபரங்கள்:
இங்கு நடக்க முடியாதவர்களை மலைவாழ் மக்கள் ‘டோலி கட்டி தூக்கி வருகிறார்கள்.  சமையலுக்கு வேண்டிய பொருட்கள் தூக்கி வரும் பணிகளையும் மலைவாழ் மக்கள் செய்கிறார்கள்.  அதற்கான கட்டணம் உண்டு.  மற்றும் வழித்துணையாகவும் (Guide) வருகிறார்கள்.  அவர்களை கூலி தானே என்று அலட்சியப் படுத்தாதீர்கள்.  கௌரவமாக நட்த்துங்கள்.  அவர்கள் தான் காட்டை அழியாமல் பாதுகாக்கிறார்கள்.  இது சம்பந்தமாக ஏதாவது உதவி தேவைப் பட்டால் எனது மகன் சரவணனின் Email id கொடுத்திருக்கிறேன்.  தொடர்பு கொள்ளுங்கள்.
Saravanan.Rathnavel@gmail.com

டோலி கட்டி தூக்கி வருகிறார்கள்பாலிதீன் கொண்டு செல்லாதீர்கள்.  மது பானம் அங்கு வைத்து அருந்தி அங்கு பாட்டில்களை உடைத்து சுற்றுபுற சூழ்நிலையை கெடுக்காதீர்கள்.  முடியா விட்டால் அங்கு செல்லாதீர்கள்.  உங்கள் கடவுளை வீட்டிலிருந்தே கும்பிட்டுக் கொள்ளுங்கள்.

வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்கு பணிந்து நடக்க வேண்டும்.  அங்கு செடி கொடிகளை பறித்து நாசம் செய்யாதீர்கள்.  அங்கேயே இருப்பது தான் அழகு.

இந்த பதிவை அருமையாக கணினியில் ஏற்ற, விபரங்கள், படங்கள் கொடுத்து உதவிய எனது அருமை மகன் சரவணனுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.  இந்த பதிவு எழுத முந்தைய பதிவுகளில் விபரங்கள் எடுத்திருக்கிறோம்.  அந்த முகம் தெரியா நல்ல உள்ளங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.  இந்த விபரங்களில் ஏதாவது தவறுகள் இருந்தால் எனக்கு சுட்டிக் காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்.  திருத்திக் கொள்கிறேன்.
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.  மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.
மிக்க நன்றி.

திங்கள், அக்டோபர் 24, 2011

இலவச தங்க நாணயம், இலவச வெள்ளி நாணயம் பரிசு - ஏமாறாதீர்கள்


திரு ரவி நாக் அவர்கள் நியூயார்க்கில் இருக்கிறார்.  எனது முக நூல் நண்பர்.  விழிப்புணர்வு கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கிறார்.  இப்பொழுது தீபாவளி மற்றும் விசேஷங்களுக்காக - தங்க நாணயம், வெள்ளி நாணயம் பரிசு என நிறைய அறிவுப்புகள் வருகின்றன.  அதைப்பற்றிய அவர் எழுதிய விழிப்புணர்ச்சி கட்டுரை முக நூலில் 24.10.2001 அன்று வெளியானது.  அவர் அனுமதியுடன் வெளியிட்டிருக்கிறேன்.  படித்துப் பார்த்து உங்களது கருத்தை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.


இப்பொழுதெல்லாம் ஒரு பெரிய ஃபேஷன் கோல்ட் காயின் கிப்ட், மற்றும் சில்வர் காயின் கிப்ட். மொபைல் போன் சேல்ஸிருந்து மாருதி கார் வாங்கும் வரை இந்த கோல்ட் அல்லது சில்வர் காயினுக்கு ஆசைபட்டு முதலுக்கு மோசம் கதை தான் இங்கு தமிழ் நாட்டில் நடக்கிறது. இரண்டு ரூவாய்க்கு வெத்திலை வாங்கினால் நம்மாளூங்க பார்த்து இளம் வெத்தலை வேணும்னு கில்லி கில்லி பார்த்து மற்றும் இருபது ரூபாய்க்கு வாங்கும் வெண்டைக்காயை இளசா வேனும்னு நுனியை ஒடிச்சு ஒடிச்சு வாங்கும்  நாம், அந்த அன்றாடகாச்சியை உண்டு இல்லை என ஆக்கி ஒரு வெற்றி சிரிப்புடன் வீட்டுக்கு வந்து அந்த புராணத்தை எபிஸொடு எபிஸொடாக ஸ்பான்ஸர்ஸிப் இல்லாமல் எல்லோரிடமும் சொல்லி பீத்திப்போம் ஆனால் கிடைக்கும் இந்த அல்ப வெள்ளி தங்க வெள்ளி காயினுக்கு அடிமை ஆகி முதலுக்கே மோசமாகி லட்சகணக்கில் ஏமாறுகிறோம். சரி கிடைத்த காயினாவது நல்லதா என டெஸ்ட் செய்யுங்கள் 50 - 60% டூப்ளிகேட் காயின்கள் தான். முக்கால் வாசி வெள்ளி காயின்கள் - அலுமினியத்தில் செய்யப் பட்டு வெள்ளி முலாம் பூசப்படுகிறது. அதே மாதிரி தங்க காயின்களும் லஷ்மி படம் போட்டு அம்பாள் பூசாரி கணக்கா சாமி படத்தில் ஒத்தி எடுத்து கொடுத்த உடன் நாம் மதி மயங்கி அப்படியே பூஜை ரூமில் அல்ல்து லாக்கரில் பதுக்கி வைப்போம். அரை கிராம், ஒரு கிராம் இரண்டு கிராம் வரை நாம் அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. என்றாவது அந்த காயினை எடுத்து நகை கடையில் கொடுத்தால் தான் நமக்கு சொல்லுவார்கள் சார் இது உண்மையான வெள்ளி தங்கமில்லை என்று. இவர்களின் மெயின் டார்கெட் புதிதாக முளைத்து இருக்கும் நவீன ஃபிராடு கல்ச்சர் - "அக்ஷய திருதி" இது நகை கடைக்காரகளின் நவின பிராட் ஆகும். அந்த ஒரு நாள் மட்டும் நம் வாழ்க்கையின் தரம் உயர்ந்து விடாதா என தங்கம் வாங்க வழியில்லாதவர்கள் கூட எப்படியாவது ஒரு கிராம் இரண்டு கிராம் என அவர்களின் சுளையாக பணத்தை கொடுத்து இந்த மாதிரி காயினை வாங்கி பூஜை அறையில் வைத்து என்றாவ்து அதை மாற்ற நினைக்கும் போது அந்த குட்டு வெளிப்படும். த்ங்க காயின் பிராடுகள் நான் கீழே இணைத்துள்ள  தங்க காயின் டிசைன் தான் ஒரிஜினல் டூப்ளிகேட் - இந்த சாமி படம் தவிர வேறு எந்த டீடெய்லும் இருக்காது. இது இவர்கள் மட்டுமல்ல ஐ சி ஐ சி ஐ, ரிலயன்ஸ் மற்றும் பெரிய தங்க வியாபாரிகளும் இந்த ஏமாற்று வேலையில் பங்குண்டு. உங்களூக்கு ஒருத்தர் வெள்ளி அல்லது கோல்டு காயின் கிஃப்டாக கொடுத்தால் தயவு செய்து நீங்கும் வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் அன்றைய தங்க வெள்ளி விலையில தயங்காமல் தள்ளூபடி செய்து பாக்கி பணம் பெற்று கொண்டால் அவர்கள் தான் உண்மையானவர்கள். ஆனால் 90 % வெள்ளீ மற்றும் கோல்டு காயின் கிப்டாக கொடுப்பவர்கள் வேண்டுமென்றால் கிப்ட் வாங்கி கொள்ளுங்கள் நாங்கள் உங்கள் விலையில் குறைக்க முடியாது என்று சொன்னால் தயவு செய்து அந்த பக்கம் கூட தலை வைத்து படுக்காதீர்கள். இந்த அரை, ஒண்ணு, இரண்டு கிராமுக்கு கூட உண்மை இல்லாத இவர்கள் எப்ப்டி உங்கள் லட்ச க்கணக்கான பர்சேஸ்க்கு உண்மையாக இருப்பார்கள். சரி இப்படியே இந்த தங்க ப்ர்ச்சேஸ் பற்றியும் பார்த்து விடலாம்

கோல்ட் காயின் எவ்வளவு இருந்தாலும் ஆத்திர அவசரத்திற்கு வங்கியில் அடகு வைக்கமுடியாது  - Thanks Madhan for the info

வந்தே வந்து விட்டது தீபாவளி. ஒரு காலத்தில் தீபாவளி பண்டிகை என்றால் புது துணி, பட்டாசு, பட்சணங்கள் எண்ணை குளியல், மற்றும் அசைவ பிரியர்களுக்கு கறி குழம்பு என்று எழுதபடாத தீபாவளி விதிகள் சமீப காலமாக ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகி போனது என்னமோ மறுக்கமுடியாத உண்மை. இதற்க்கு மூன்று காரணம்,

1.வருமானம் அதிகம்,
2.அடுத்தவரை பார்த்து கொண்டாடும் ஸ்டைல் 
3.தவறாக சம்பாதித்த பணம்

 இது மூன்றும் இந்த தீபாவளி பண்டிகையை டோட்டலாக மாற்றியது. மேல் கூறிய பர்சேஸ் போக புது அப்ளையன்ஸஸ் மற்றும் புது நகை ப்ர்சேஸ் இன்றியமையானது. நகை வாங்கும் கலை ஏனோ சில பரம்பரை ஷாப்பிங் ஜித்தர்களுக்கு மட்டுமே  எளிதாகிறது, மற்றவர்களுக்கு மைக்ரேன் வந்தவனை ரோலர் கோஸ்டரில் ஏற்றி விட்ட கதை தான் - இதை ஏன் கூறுகிறேன் என்றால் நூற்றில் மூன்று சதவிகித பேர் தான்  ரோலர்கோஸ்டரில் ஏறி இறங்கும் வரை சுற்றி என்ன நடக்கிறது என கண் இமைக்காமல் பார்ப்பார்கள், மீது உள்ள 97% சதவிகித மக்கள் ஏறியது தான் தெரியும், அது சுற்றி நிற்கும் வரை கண்ணை திறக்கவே மாட்டார்கள். அந்த கதை தான் நகை விற்கும் கடைகளின் அலிபாபா குகை எக்ஸ்பீரியன்ஸ். தங்கம் என்னை பொறுத்த வரை நிறைய பேர் டிசைனுக்கு கொடுக்கும் இம்பார்டன்ஸ் அதன் தரம், அதன் உண்மையான வேல்யு பற்றி கவலை படாமல் குருட்டாம் போக்கில் வாங்குகின்றனர். கடைக்குள் போன உடனேயே உலகத்தில் எங்கு பவர் கட் இருந்தாலும் இந்த தி நகர் திருட்டு அண்ணாச்சிகள், பாரிமுனை பஜன்லால்கள், புரசை பெர்னான்டோக்கல் ஒரு வசிய சக்தியை நம் மீது தெளித்து பக்ரீத்துக்கு ரெடியாகும் பலி ஆடுகளை போல் நடத்துவார்கள்.

Please CONSIDER THIS FACTS before you purchase. 
1. தங்கம் 16 கேரட் / 18 கேரட் / 20 கேரட் / 22 கேரட் / 24 கேரட் தரம் பற்றி நன்கு விசாரித்து வாங்குங்கள். 
2. மெஷின் கட் வாங்கவே வாங்காதீர்கள் சீக்கிரம் உடைந்து விடும்.
3. குறைந்த வெயிட்டில் பெரிதாக தோன்றும் நகைகள், மற்றும் தோடு, வளையல்கள் வாங்கவே வாங்காதீர்கள். அதற்கு உள்ளே மெழுகு, செம்பு மற்றும் வெள்ளி ஃபில்லிங் இருக்கும்.
4. கண்டிப்பாக கல் வைத்த நகைகளை வாங்க வேண்டாம், வாங்கினால் 30 - 45% உங்கள் பணம் பச்சா. 
5. தயவு செய்து ஒயிட் மெட்டல் நகைகளை தெரியாத கடைகளிடம் வாங்கவே வேண்டாம். பாதி ஒயிட் மெட்டல் நகைகள் ஒரிஜினல் அல்ல. 

6. சிங்கப்பூர், மலேஷியா, துபாய் மற்றும் நிறைய நாடுகளில் தங்கத்தின் விலையை வெளியே போட்டிருப்பார்கள். அந்த விலை மற்றும் எவ்வளவு கிராமோ அவ்வளவு தான் விலை, நம்மூர் கொள்ளை ஃபார்முலா கிடையாது, இங்கு தான் செய்கூலி / சேதாரம் / கல் சார்ஜ் அப்புறம் லொட்டு லொசுக்கு இத்யாதி இத்யாதி போட்டு தங்கத்தின் விலையில் 30 - 45% எக்ஸ்ட்ரா போட்டு ஒரு ஜெர்க் கொடுத்து உங்களுக்கு ஆபத்பாந்தவர் போல சரி பில் போட்டா இன்னும் காஸ்ட்லி என்று புருடா விட்டு 70% நகைகள் பில் இல்லாமல் தான் விற்பனை ஆகிறது. இதனால் விற்க அல்லது மாற்ற செல்லும் போது இன்னுமொரு 30 - 40% லாஸ். 916, கேடி எம், கடை சீல் எனும் அல்வாவை கண்டிப்பாக நம்பவேண்டாம், ஆக மொத்தம் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பத்தாயிர ரூபாய்க்கு மூனாயிரம் தான் ஹேன்ட் இன் வேல்யு. சோ கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆனாலும் பராவாயில்லை தயவு செய்து பிராப்பர் பில்லை வாங்குங்கள் அப்படி செய்யும் பட்சத்தில் அந்த நகை தரம் குறைந்தால், இல்லை உடைந்தாலோ அல்லது கலப்படம் இருந்தாலோ அவர்கள் உங்களுக்கும் அன்றைய தேதிக்கு முழு பணமோ அல்லது தங்கமோ தர வேண்டும் இல்லையென்றால் நீங்கள் கன்ஸுமர் கோர்ட்டுக்கு சென்றால் அவர்கள் நஷ்ட ஈடு தந்தே ஆகவேண்டும். வெள்ளை பேப்பரில் அல்லது ரப்பர் ஸ்டாம்பில் பில் போட்டு கொடுத்தால் கண்டிப்பாக வாங்க வேண்டாம். ஆஸ் இஸ் (AS  IS) என போட்டு கொடுத்தாலும் வாங்க வேண்டாம்.தங்கம் வாங்குவது ஒரு நல்ல சேமிப்பு ஆனால் பார்த்து வாங்கி உங்கள் முழு வேல்யு இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.  Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.
"எங்களது மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்"
மிக்க நன்றி.

வெள்ளி, அக்டோபர் 21, 2011

எட்டயபுரத்தில் உமறுப்புலவர் மணிமண்டபமும்


திருச்செந்தூர் அருகே அற்புத அந்தோணியார் கெபியும் (அடைக்கலாபுரம்)
திருச்செந்தூர் செல்வதற்காக தூத்துக்குடி வழியாக சென்றோம்.  எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபமும், பாரதியார் பிறந்த வீட்டையும் பார்த்தோம்.  அதை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

எட்டயபுரத்தில் ‘உமறுப்புலவர் மணிமண்டபம் அருமையாக அரசினரால் கட்டப்பட்டு பராமரிக்கப் பட்டு வருகிறது.  பாரதியார் வீடு இருக்கும் தெருவின் அருகில் அமைந்திருக்கிறது.  வழி காட்டும் பலகை சாலையில் இருக்கிறது.அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொகுத்திருக்கிறேன்.
உமறுப்புலவரைப் பற்றி

(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து):
உமறுப் புலவர் (17ம் நூற்றாண்டு) முகம்மது நபி அவர்களின் வரலாற்றை அடியொற்றித் தமிழ் இலக்கிய மரபிற்கேற்பச் சீறாப் புராணம் என்ற காப்பியத்தைப் பாடியவர்.


வாழ்க்கைக் குறிப்பு

உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சேகு முதலியார் என அழைக்கப்பெற்ற செய்கு முகம்மது அலியார் ஆவார். எட்டயபுர மன்னன் வெங்கடேஸ்வர எட்டப்ப பூபதியின் அவைப் புலவராக விளங்கிய கடிகைமுத்துப் புலவரிடம் உமறு தமிழ் பயின்று புலமை பெற்றார். தம் ஆசானுக்குப் பின் எட்டயபுர மன்னனின் அவைப்புலவராகப் பொறுப்பேற்றார்அந்தோணியார் புனித அற்புத கெபி (அடைக்கலாபுரம்)

திருச்செந்தூருக்கு சற்று முன்பு வீரபாண்டியன்பட்டினத்திற்கு அருகே அடைக்கலாபுரம் என்ற ஊரில் சாலையில் ‘மிகவும் அற்புதமான புனித அந்தோணியார் அற்புத கெபி அமைந்துள்ளது. 


அமைப்பு பிரமாதமாக, கண்ணைக்கவரும் விதத்தில் இருக்கிறது.  கடந்த வருடம் கட்டப்பட்ட தேவாலயம்.  அதைப் பற்றிய விபரங்கள் தெரியவில்லை.  செய்திகள் சேகரிக்க அங்கு ஒருவருமில்லை.  அதன் புகைப்படங்களை கொடுத்திருக்கிறோம்.
சாத்தூர் உடுப்பி உணவகம்

அன்று (12.10.2011) காலை உணவு சாத்தூர் பிரதான சாலையில் அமைந்துள்ள ‘உடுப்பி உணவகத்தில் சாப்பிட்டோம்.  காலை உணவு நன்றாக இருந்தது.  சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.  பரிமாறும் பாங்கும் நன்றாக இருந்தது.  அங்குள்ள கழிப்பறை நன்றாக பராமரிக்கப்படுகிறது.  (பொதுவாக உணவகங்களில் இருக்காது; இருந்தால் அதற்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்).  சாப்பிட்டு விட்டு வரும்போது பரிமாறும் ஊழியரிடமும், அங்கு இருந்த நிர்வாகியுடமும் பாராட்டும் நன்றியும் சொல்லி விட்டு வந்தோம்.
 இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவிய, எங்களது பதிவு சீர்திருத்தங்களுக்கு ஆலோசனைகளும், சரியான விமர்சனங்களும் கூறும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.  Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.

தமிழ் மணத்தில் ஓட்டு செய்யுங்கள்.

மிக்க நன்றி.வியாழன், அக்டோபர் 20, 2011

பார்வையற்றோருக்கான வெள்ளைக்குச்சி பற்றிய பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்களின் கட்டுரை

                                                                          
இந்த கட்டுரை பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்களால்
அக்டோபர் 15’ ‘உலக வெள்ளைக்குச்சி (பாதுகாப்பு) தினம் ‘World White Cane (Safety) Day & Lions World Sight Day” – இந்த நாளை நினைவு கூறும் வகையாக எழுதப்பட்ட, பார்வையற்றோர் உபயோகிக்கும் வெள்ளைக்குச்சியைப் (White Cane) பற்றிய விபரங்கள் அடங்கிய அற்புதமான கட்டுரை.  இதை நாங்கள் வெளியிட அனுமதி கொடுத்த பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.


 அக்டோபர்..15 ,உலக வெள்ளைக் குச்சி (பாதுகாப்பு) தினம்..!  world white cane (safety) day/ lions world sight day
Increasing Awareness of the "Symbol of Independence" 
வெள்ளைக் குச்சி..!


  அக்டோபர் 15 , உலக வெள்ளைக் குச்சி தினம், 1964 லிருந்து ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறதுநம்மில் நிறைய பேருக்கு வெள்ளை குச்சி என்றாலே புரியாது, இதில் வெள்ளை குச்சி தினம் என்றால்... தலையும் புரியாது, வாலும் புரியாது .  என்னப்பா உளறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்போம். . நாம் அத்துணை மேதாவிகள்.! நண்பா, பார்வைத்திறன அற்றவர்கள், தாங்கள் நடந்தது செல்வதற்குப் பயன்படுத்தும் வெள்ளைக் குச்சியைத்தான் அதன் முக்கியத்தைக் குறிப்பிடுவதற்கான , தினம் இதுவாம். நான் கூட நிறைய தடவை இதன் பயன் பற்றி முழுதும் அறியாமல் மனதுக்குள் நினைத்திருக்கிறேன்; வியந்திருக்கிறேன். எப்படி, இந்த பார்வைத் திறன் அற்ற சகோதரர்கள், இவ்வளவு துணிச்சலாய், மக்கள் நெருக்கம் மிகுந்த வீதியி்ல் பேருந்து செல்லும்  தடத்தில்  தைரியமாய்  நடந்தது செல்கிறார்கள்.. ஏதாவது.. ஏற்பட்டால் என்ன செய்வது, என பைத்தியக்கரத்தனமாய் வியந்திருக்கிறேன்,அந்த  குச்சியின் மகிமை  அறியாமல்..!.இப்போதுதான் அந்த வெள்ளைக் குச்சியின் முழு பயனையும் அறிந்து கொள்கிறேன்பார்வைத்திறன் அற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளைக் குச்சி அவர்களை ஒரு சுதந்திர மனிதராய் உலவ உதவுகிறது என்பதை இந்த நிமிடத்தில் தான் உணருகிறேன். . 
தனி மனிதராய்.. இயங்க.. வெள்ளைக் குச்சி..! 

  பார்வை திறனற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளைக்குச்சி முதல் உலகப் போரிலிருந்து பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.இந்த தினம் பார்வை திறனற்றவர்கள் பயன்படுத்தும் நீண்ட குச்சியின் முக்கியத்துக்காகவும், அது எப்படி அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உண்டாக்கி தருகிறது என்பதையும் பார்வைஉள்ள மனிதர்களுக்கு உணர்த்தும் நாள்.அது மட்டுமல்லவெள்ளைக் குச்சி பார்வைதிறனற்றவர்களை அவர்கள் யாரையும் சார்ந்திராமல், சுதந்திர மனிதராய் மாற்றிய ஒரு பெருமை மிக்க சாதனம்.
வெள்ளைக் குச்சி என்றால் என்ன?


வெள்ளைக் குச்சி என்பது, பார்வைத் திறன் அற்ற மனிதர்களால் பயன்படுத்தப் படுவதாகும். அந்த குச்சியானது, அவர்கள் யாருடைய துணையுமின்றி நடந்து, எளிதாய் இயங்கவும், மற்றவர்களை இவர்களை யார் என்று கருத்துரைத்துக் காட்டவும் பயன்படும் அற்புத சாதனம். இப்போது நவீனப் படுத்தப்பட்டுள்ள அனைத்து வெள்ளைக் குச்சிகளும் அனைத்து முக்கியாமான/அடிப்படைப் பண்புகளை பூர்த்தி செயவதாக இல்லை. ஆனால் முக்கியமாக இந்த சாதனத்தில் குறைந்த பட்சம் 5  வகைக் குச்சிகள் உண்டு. ஒன்றுக்கும் அடுத்ததிற்கும் மெலிதான வேறுபாடு உண்டு .இவை செயலாற்றும் விதத்தில். ஒவ்வொன்றும் அந்த தேவைகளை ஆற்றும்படி உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள பார்வைத் திறன் அற்றோர் பயன்படுத்தும்  குச்சி அடிப்பகுதியில் சிவப்பு பட்டையுடன்உருவாக்கப் பட்டுள்ளது.   


ஆயுதத்திறன்   ..ஒரு சிறு வெள்ளைக் குச்சியில்..!
 ஒரு பார்வைத்திறன் அற்றவரை அழைத்து நீங்கள்,அவரிடம் அவரின் கையில் வெள்ளைக் குச்சியைக் கொடுத்து நடக்கச் செய்து, அந்த கருவி கையில் இருந்தபோது,ம் இல்லாதபோதும்,உள்ள வித்தியாசத்தை சொல்லச் சொன்னால், அவர்கள் அதன் அத்தியாவசியத்தேவையை நன்கு உணர்த்து பேசுவார்கள். அது அவர்களுக்கு மிக மிகத் தேவையுள்ள மிகவும் மதிப்பு பெற்ற அற்புதமான உலகை அவர்களுக்கு மட்டும்,காட்டுகிறது.  தங்களின் பாதுகாப்பை, உத்திரவாதம் செய்யும் ஓர் மந்திரக்கோல் என்றும் கூட கூறுவார்கள். அப்படி அருமையாய் உருவாக்கப் பட்டிருக்கும் ஒரு சாதனம். அது.  இந்த வெள்ளைக் குச்சியானது, அவர்களுக்கு கட்டாயத் தேவையானது. அவர்களை யாருடைய உதவியும் இன்றி தானாக இயங்கச் செய்யும் சிறந்த ஆயுதம். சுதந்திர மனிதனாய்க் காட்டும் அற்புத சாதனம்.  
எந்த பொருள்.. வெள்ளாக் குச்சியாய்..!
வெள்ளைக் குச்சி கண்ணாடி இழைகளால்/கார்பன் இழை/உலோகத்தால் உருவாக்கப் பட்டது. இந்த குச்சியை ஒரு கரத்தால் கையாள முடியும். இந்த குச்சியை பார்வைத்  திரனர்றவள் கையை வீசி ஆட்டி நடக்கும்போது அந்த வெள்ளைக் குச்சியானது தனி ஊசல் போல் இருபக்கமும் அலைபாயும். இதன் மூலம், அந்த சகோதர்கள், சாலையில் எளிதாக யாருடைய உதவியும் இன்றி நடக்க முடிகிறது. அவர்களின் தடத்தை அறிய, , அதில் உள்ள பொருள்களை அறிய, மேடு பள்ளம் கண்டறிய, மாடிப் படிகள் மற்றும் கதவுகளையெல்லாம் அந்த குச்சி அவர்களின் ஆருயிர் நண்பனாய்  அவர்களுக்கு வழி காட்டுகிறது. இந்த வெள்ளைக் குச்சி பார்வைத்திறன் அற்ற ஒருவரின் கரத்தில் அஷ்டாவதானியாக செயல்படும். உதாரணமாக, அந்தக் குச்சி,  ஒருவருக்கு திறமையை அளிக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வும், ஆளுமைத்தன்மையையும் உருவாக்கித் தருகிறது. வெள்ளைக்குச்சி  பார்வையற்றவர்களின்    சுதந்திரம் மற்றும் பெருமை/பெருமிதம் அதுவே.   அதே சமயத்தில் வெள்ளைக்குச்சியை ஒருவர் கையில் வைத்திருந்தால் அவர் பார்வைத் திறன் அற்றவர் என்று நாம் எளிதாக அடையாளம் காண முடியும்.
குச்சியின் பிறப்பு..!
  இதனைக் உருவாக்கியவர் ரிச்சர்டு ஹோவர் (Dr Richard Hoover) என்பவர்தான். இதனால் பாரம்பரியமாக இது ஹோவரின்  குச்சி என்றே அழைக்கப் படுகிறது. ஆனால் இது பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது.
  ஜேம்ஸ் பிக்ஸ் என்ற நிழற்படக்காரர் 1921 ல் , ஒரு விபத்துக்குப் பின் பார்வை இழந்துவிட்டார். அதன் பின் அவர்க்கு கூட்டத்தில்  நடப்பதும்விட்டைச் சுற்றி வருவதும் மிகுந்த சிரமமாகிறது.அதனால் அவர் பயன்படுத்திய நடை குச்சிக்கு வண்ணம் தீட்டி வைத்திருந்தார் எளிதில் அடையாளம் கொள்ளும்ப்படியில் ..!
உலகம் முழுவதும்..வெள்ளைக் குச்சி..!
 பிரான்சில், 1932 ல் குல்லி ஹேர்பேமொன்ட் ( France, Guilly d'Herbemont )தேசிய வெள்ளைக் குச்சி இயக்கம் என்ற ஒன்றினைத் துவங்கிபார்வைத் திறனற்ற மக்களுக்கெல்லாம் வெள்ளைக் குச்சி அளித்தார். . பின்னர் 1931 , பிப்ரவரி 7 ல், இவரே, பிரான்சு அரசின் அமைச்சர்கள் முன்னிலையில்  அடையாளமாக, இரண்டு வெள்ளைக் குச்சிகளை பார்வைத் திறனற்ற மனிதர்களுக்குக் கொடுத்தார். அதன் பின், முதல் உலகப் போரில் பார்வையைப் பறிகொடுத்தவர்களுக்கும், பார்வை திறனற்ற  குடிமக்களுக்கும் என 5 000, வெள்ளைக் குச்சிகள வழங்கினார். பிறகு அமெரிக்கர்களும் அரிமா சங்கத்தின் மூலம் இதனை ஒரு இயக்கமாகச் செய்தனர்.அதற்குப் பின்தான் 1964 ல் இதனை உலக வெள்ளைக் குச்சி தினம் அக்டோபர் 15 ம் நாள் கொண்டாட முடிவு செய்யப் பட்டது.இந்த குச்சியே ஐரோப்பாவில் அடியில் இரண்டு சிவப்பு பட்டை இருந்தால் அது கேட்கும் திறனற்ற வர்களையும்  இணைத்துக் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது.
பார்வைத்திறனற்றோர்.. வாக்களிக்க.. வாக்குச்சீட்டு..
இப்போது2008  லிருந்து மோனிக் டெ வில்ட் ( Monique de Wilt,) உருவாக்கிய  GPS உள்ள global navigation satellite system   உள்ள வெள்ளைக் குச்சிகள்..பார்வைத்திறனற்றவர்களுக்கு பயன்படுத்தப் படுகிறது..இந்தியாவில் பார்வைத்திறனற்றோர்களை மதித்து முதன் முறையாக அவர்களுக்கும் வாக்களிக்க வசதி செய்யப் பட்டுள்ளது. எப்படி என்கிறீர்க்ளா? வருகின்ற  2011, அக்டோபர் 18ம் நாள்,   கோவாவில் இடைத் தேர்தல், நடைபெற உள்ளது. இதில்  பார்வைத் திறனற்றவர்களுக்கு பிரைலி வாக்குசீட்டுகள், வாக்களிக்கும் இடத்தில் வழங்கப்படஉள்ளன எனப்து பெருமையும், மகிழ்வையும், நெகிழ்வையும்  அளிக்கும் செய்தியாகும்..!. இந்த முறையினை மற்ற மாநிலங்களும் பின்பற்றினால்.. நமக்கெல்லாம் சந்தோஷம் தானே..!


BPA observes White Cane Safety Dayஇந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.  Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.

தமிழ் மணத்தில் ஓட்டு செய்யுங்கள்.

இந்த பதிவை கணினியில் ஏற்ற எனக்கு உதவி செய்த எனது தங்கை மகன் திரு அருண் ஸ்ரீ ராமுக்கு எனது மனப்பூர்வ நன்றியும் வாழ்த்துக்களும்.
மிக்க நன்றி.