திங்கள், ஜனவரி 30, 2012

சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை


எனது முகநூல் நண்பர் டாக்டர் திரு M.K.முருகானந்தன் அவர்கள் ‘சிறுநீரக கற்களை தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை என்று எழுதிய கட்டுரையை அவரது அனுமதியுடன் எனது பதிவாக வெளியிடுகிறேன். டாக்டர் திரு M.K.முருகானந்தன் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படித்துப் பார்த்து தங்களது கருத்தை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இன்று உணவு உண்பதென்பது போதைப் பொருள் போலாகிவிட்டது.
இனிப்புகள், பொரித்த உணவுகள், மாமிச வகைகள் போன்றவற்றிற்கு நாக்கு அடிமையாகிவிட்டது.
அத்துடன் நவீன சமையல் முறைகள் கண்களைக் கவர்கின்றன.
நாசியைத் துளைத்து வாயில் எச்சில் ஊற வைக்கின்றன.
சுவையும் அதிகம்.
போதாக் குறைக்கு காதும் தனது பங்கிற்கு ஆசையைத் தூண்டுகின்றது.
உதாரணமாக கொத்து ரொட்டி அடிப்பது காதில் விழுந்ததும் சிலருக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை பசியற்ற போதும் எழுகிறது.

நாம் ஏன் உணவு உண்கிறோம்?

நமது அன்றாட வேலைகள் மற்றும் செயற்பாடுகளுக்கான சக்தியைப் பெறுவதற்காகவே எமக்கு உணவு தேவைப்படுகிறது.
நோய் வாய்ப்படாமல் தடுப்பதற்கும்,  நோயினால் பழுதடைந்த உடற் கலங்களை சீர்திருத்தம் செய்யவும் உணவு தேவை.
அத்துடன் வளரும் இளம் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கும் உணவு அத்தியாவசியமாகும்.
ஆனால் இன்று உணவானது உடற் தேவைக்காக என்றில்லாது ஆசைக்காக என மாறிவிட்டது.
தேவைக்கு மீறி உண்பதால் நீரிழிவு,  உயர் இரத்த அழுத்தம்,  கொலஸ்டரோல்,  இருதய நோய்கள்,  அதீத எடை,  புற்று நோய் போன்ற பலநோய்களும் ஆரோக்கியக் கேடுகளும் மனிதனை சிறுகச் சிறுக கொல்லுகின்றன.

ஆரோக்கியமான உணவு முறை

இவை வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவு முறை முக்கியமானதாகும்.

உணவின் அளவு


ஆரோக்கியமான உணவின் முதல் அம்சம் உணவின் அளவாகும். எத்தகைய நல்ல உணவானாலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான்.
இதனால் தான் சென்னை இருதய நோய் நிபுணரான சி.சொக்கலிங்கம். அரை வயிற்றிற்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றை நீரினால் நிரப்புங்கள். மிகுதி கால் வயிற்றை காலியாகவே வைத்திருங்கள் என்று சொன்னார்.

வெற்றுக் கலோரி வேண்டாம்


இரண்டாவது அம்சம் உணவில் வெற்றுக் கலோரி நிறைந்தவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான போஷாக்குள்ள உணவுகளையே உண்பதாகும்.


எவை ஆரோக்கியமானவை?

உங்கள் உணவின் பெரும் பகுதி பழவகைகள், காய்கறிகள், விதைகள் ஆகியவனவாக இருக்க வேண்டும். அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற அனைத்துத் தானிய வகைகளையும் தவிடு நீக்காமல் சாப்பிடுங்கள். கொழுப்பு நீக்கிய அல்லது குறைந்தளவு கொழுப்பு மட்டுமே உள்ள பாலுணவு வகைகளையே உணவில் சேருங்கள்.
ஆரோக்கியமான உணவுமுறை என்பது நல்ல உணவுகளை அதிகம் சேர்ப்பது மட்டுமல்ல தவறான உணவுகளை முற்றாகத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவதும் ஆகும்.
கோழி போன்ற பறவையின இறைச்சிகளை உட்கொள்வதுடன், ஆடு, மாடு, பன்றி போன்ற கொழுப்புள்ள இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். அல்லது அளவோடு உட்கொள்ள வேண்டும்
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், இனிப்பு ஊட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
உணவில் உப்பை மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும்.
இவ்வாறான உணவு முறையைக் கைக் கொண்டால் மேற் கூறிய நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது பலரும் அறிந்த சேதியாகும்.
புதிய ஆய்வு


ஆனால் இப்பொழுது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வானது சிறுநீரகக் கற்கள் உண்டாவதையும் தடுக்கும் என்கிறது.
கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேரை உள்ளடக்கிய மூன்று வெவ்வேறு ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு எட்டப்பட்ட முடிவு இதுவாகும்.
Brigham and Women’s Hospital லில் உள்ள Maine Medical Center சேர்ந்த டொக்டர் எரிக் டைலர் மற்றும் உதவியாளர்களும் செய்த ஆய்வு இதுவாகும்.
சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கு காரணமாகக் கூடிய ஒருவரின் வயது, எடை, அருந்தும் நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் எடுத்தபோதும் அதற்கு மேலாக ஆரோக்கிய உணவானது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறதாம்.


எமது சூழலில் அதிகம்


எனக்கு சிறுநீரகக் கற்கள் இல்லையே நான் ஏன் கவலைப்பட வேண்டும் என எண்ணாதீர்கள்.
எமது நாட்டு சூழலில் பலருக்கு இது ஏற்படுகிறது. இவை பொதுவாக கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்துவதால் நோயாளர்களை அச்சம் கொள்ள வைக்கிறது.
வலி என்பதற்கு மேலாக உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக வழுவல் போன்ற பல பார தூரமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் ஆதலால் அதிக கவனத்தில் எடுப்பது அவசியம்.
சிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியில் முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்வதே.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். 

உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். 

மிக்க நன்றி.


>

செவ்வாய், ஜனவரி 24, 2012

அயொடின் – தைராய்டு பற்றிய பதிவு – பாகம் 2

பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந்தரம் தைராய்டு பற்றிய விழிப்புணர்வு கட்டுரை முகநூலில் எழுதியிருக்கிறார்கள்.  அவர்களது அனுமதியுடன் எனது பதிவாக வெளியிடுகிறேன். 


நான் வளர்கிறேனே மம்மி..அயொடின்.!


உங்கள் வளர்ச்சியில்.. அயொடின்


நான் வளர்கிறேனே மம்மி..என்று உங்கள் அம்மாவிடம் தமிழில் கொஞ்சினாலும், கொஞ்சாவிட்டாலும், உங்களின் வளர்ச்சிக்கு அயொடின் அவசியத் தேவை. சார். நீங்கள் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வளர்கின்றன.   வளர்ச்சிதான் உயிரோடு  இருப்பதை நினைவூட்டும் விஷயம். அந்த வளர்ச்சிக்கு தூண்டுகோல் எது தெரியுமா? அயோடின்  தான் உயிருக்கு உயிரான  முக்கிய  கனிமம்.  ஆனால்  பூமியில்   
கிடைக்கும் தனிமங்களில்  மிகவும் அரிதானதும், அதிக   கனமானதும்  இதுதான் . ஆனால் இது  பொதுவாக கடல் உணவிலும் சில காய்கறிகளும் உள்ளது. இருப்பினும் அயொடின் உயிரிகளின் உயிர்வாழ்தலுக்கும், உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் மிக  மிக இன்றியமையாதது. அது மட்டுமல்ல. இது உடல்நிலை வெப்பம் தக்க வைக்கவும், முடி, தோல், பல் மற்றும் நகங்களை நல்ல நிலையில் பாதுகாக்கவும் உதவுகிறது.

எங்கெங்கு அயொடின் உள்ளது.? 

     
    நம் உடலில் கழுத்துப் பகுதியில் தைராய்டு என்ற சுரப்பி ஒன்று இருக்கிறது. அது தான் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் முக்கிய காரணி. தைராய்டு சுரப்பில் சுரக்கும் தைராய்டு ஹார்மோன் தான் வளர்ச்சியைத் தூண்டுகிறது.  தைராய்டு  ஹார்மோனின் அடிப்படைப் பொருள் அயொடின் (Iodine). 15 -20 மி.கி அயோடின் தைராய்டு சுரப்பியிலும், மீதி 65 % உடலின் அனைத்து திசுக்களிலும் உள்ளன.  உடலின் தற்காப்புத் திறன் உருவாக மிகவும் அயொடின் உதவுகிறது.  அயொடின் பல தளங்களிலிருந்து கிடைத்தாலும் கூட, எளிதில் கிடைக்குமிடம் உப்பு மட்டுமே.  அயொடின் ரொட்டி,  கடல் உணவு மற்றும் கடல் தாவரங்களின் திசுவுடன் பிரிக்க முடியாத இணைப்பாக உள்ளது.

அயொடின் என்றால் என்ன?

அயோடின் ஒரு வேதியல் தனிமம்.  இதன் குறியீடு  "I". அயோடின் என்ற சொல் கிரேக்கத்துக்கு சொந்தமானது.  ஐயோடேஸ் (Iyodes) என்ற கிரேக்க சொல்லுக்கு வயலட்/கருநீலம் நிறம் உள்ளது என்று பொருள். இதன் நிறத்தை ஒட்டியே அயொடின் எனற  பெயர் இதற்கு சூட்டப்பட்டது.  சூரிய குடும்பத்திலேயே இது ஓர் அரிதான தனிமம்.  இதன் அணு எண் 16.  அதன் அணு எடை :126.9045 g.mol -1இது புவியில் கிடைக்கும் அரிதான தனிமங்களில்  47 வது  இடத்தில் உள்ளது .  இது 114 °C யில்    உருகும். ஆனால் திட நிலையிலிருந்து நேரிடையாக வாயு நிலைக்குப் போய்விடும். இதற்கு பதங்கமாதல் நிகழ்வு என்று பெயர்.  இதன் உப்புக்கள் நீரில் கரையக் கூடியவை. அதன் மூலம்தான் அயோடின் கரைசல் கிடைக்கிறது.


அயொடினின் குணங்கள்.!
  அயொடின் ஒரு கலப்பில்லாத அலோகத் (non-metallic) தனிமம். இது கருஞ்சாம்பல்/கரு நீலம் கலந்த பளபளப்பான வனப்பு மிகு அலோகத் தனிமம். இது ஹாலோஜன் (halogen) குடும்பத்தைச் சேர்ந்தது.  இது  பல உலோகங்களுடன்  இணைந்து  காணப்படுகிறது.  இது இயல்பாகவே காற்று,  நீர் மற்றும் நிலத்தில் காணப்படுகிறது. அயொடின் நச்சுத்தன்மை வாய்ந்தது. இதன் வாயு கண்ணையும்  நுரையீரலையும் எரிச்சலடையச் செய்யும். ஆனால் முக்கியமாக அதிக அளவு அயொடின் பெருங்கடலில்தான் உள்ளது.   ஒவ்வொரு ஆண்டும் உத்தேசமாக, 400.000  டன்கள் அயொடின் அயோடைடு, ஹைடிரோ குளோரிக் அமிலம் மற்றும் மீத்தைல் அயொடைடு என்று கடல் உயிரிகள் மூலம் உற்பத்தியாகி கடலில் பரவிக் கிடக்கிறது. இவற்றில் பெரும்பான்மையானவை அங்கேயே நிலத்தில் படிந்து உயிர்ச் சுழற்சியின் பிரிக்க முடியா பங்காளியாகி விடுகிறது. அயொடின் 131 என்ற அதன் ரேடியோ நியூக்ளிடைடுகள் (radionuclides) வான்வெளியில் வெடிக்கும் அணு ஆயுதகருவிகள் உறபத்தியில் பங்கு பெறுகின்றன. அதன் பயன்பாடு 1945ல் துவங்கி 1980 ல் சீனா சோதனை செய்ததுடன் அதன் சரித்திரம் முடிந்துவிட்டது. அயொடின் 131 புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.


அயொடின்  கண்டுபிடிப்பும்  பயனும்.!


பூமியிலிருந்து அயோடின் கிடைத்தாலும்,  முதன் முதலில் இந்த தனிமத்தைக் கண்டறிந்தவர் பிரெஞ்சு விஞ்ஞானியான பெர்னார்டு கூர்டாய்ஸ் (Bernard Courtois ) என்பவர் தான். பெர்னார்டு கடல் பாசியுடன் கந்தக அமிலத்துடன் கடல்பாசி சாம்பலைக் கலந்தபோது, 1811 ம ஆண்டு இந்த தனிமத்தைக் கண்டுபிடித்தார்.  உலர்ந்த கடல் பாசிகள், குறிப்பாக, லிமினரியா (Liminaria) குடும்பத்தைச் சேர்ந்தவைகளில் அதிகம் அயொடின் உள்ளது.   இதில் ௦. 0.45 % அயொடின் உள்ளது. அயொடின் மருத்துவத்துறையிலும், புகைப்படக் கலையிலும், சாயம் தோய்க்கவும் பெரிதும் பயன்படுகிறது. அயொடின் இயற்கையாக, கடல் நீரில் சூழலுடன் இணைந்து கரைந்த நிலையில் உள்ளது. சில சமயம் இது சில தாது உப்புக்களுடன் கலந்து நிலத்திலிருந்தும் கிடைக்கும்.  அயொடின்  சொல்லும்  கதை..!


ஒவ்வொரு தனிமத்தின் கண்டுபிடிப்பும் சுவை நிரம்பியதும், கதை நிரம்பியதும் தான்.   ஒருக்கால் அப்போது நோபல் பரிசு இருந்திருந்தால், பெர்னார்டு நிச்சயம்  இரண்டு  நோபல்  பரிசினை  வாங்கி
இருப்பார். இதிலுள்ள கூத்து என்னவென்றால் மனிதனைக் கொல்வதற்கான வெடிமருந்து செய்துகொண்டிருந்த கூர்டாய்ஸ், மனிதனின் உயிரைக் காப்பாற்றும் அருமருந்தான அயொடினைக் கண்டு பிடிக்க நேர்ந்தது ஒரு எதிர்பாராத விபத்துதான். பிரெஞ்சு இளைஞரான விஞ்ஞானி பெர்னார்டு கூர்டாயஸ் பாரிஸிலுள்ள தன் ஆய்வகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு புது வகையான தனிமம் தன் செயல்பாட்டில் குறுக்கிட்டதைப் பார்த்து அசந்து பிரமித்து போனார். அவரது குடும்ப பண்ணையினர் நெப்போலியனின் போருக்காக சால்ட் பீட்டர் என்னும் வேதிப்பொருளைத் தயாரித்தனர். இது  துப்பாக்கி மருந்துக்கானது. சால்ட் பீட்டர் என்பது பொட்டாசியம் நைட்டிரேட் (potassium nitrate)ஆகும். அப்போது மரச்சாம்பலையே சால்ட் பீட்டர் தயாரிப்புக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் அது போர்க் காலமாகையால்,  மரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

எதிர்பாராத  கண்டுபிடிப்பான  அயொடின்..!


பிரான்சில் சால்ட் பீட்டர் தயாரிக்க, மரத்திற்கு மாற்று தேடினர். அப்போது கிடைத்ததுதான் பிரான்சின் வடக்குக் கடற்கரையில் ஏராளமாய் மண்டிக்கிடக்கும் கடல் பாசிகள்.  இந்த கடல்பாசியை எரித்து அந்த சாம்பலுடன், அடர் கந்தக அமிலத்தையும் சேர்த்தனர். அடர் கந்தக அமிலம், கடல் பாசி சாம்பல் துகளுடன் இணைந்த மாத்திரத்திலேயே, கூர்டாய்ஸ் ஓர் அற்புதமான அபார  நிகழ்வைச் சந்தித்தார். எதிர்பாராவிதமாக, கருநீல வண்ணத்தில் ஒரு புகை அதிலிருந்து எழுந்தது. அது செம்பு குடுவைகளின் ஓரத்தில் படிகமாகப் படிந்தது. அது மட்டுமல்ல.  செம்பு பாத்திரத்தை அரிக்கவும் செய்தது. இதனைப் பார்த்து வியந்து போய், ஆச்சரியத்தில் பேசக்கூட  மறந்து போனார்.  கூர்டாய்ஸ்  பின்னர் தான் கண்டுபிடித்த அதிசயப் பொருளை பாட்டிலில் அடைத்து, இதன் குணங்களை அறிய தனது நண்பர்களான நிக்கொலஸ் கிளமெண்ட் (F .Nicolas Clement (1779–1841) மற்றும் பெர்னார்டு டெசோர்மெஸ்ஸுக்கு (J. Benard Desormes (1777–1862) க்கும் அனுப்பினார். பின்னர் அதனை நிரூபணம் செய்ய  ஜோசப் கே லூஸ்ஸாக் (Joseph Gay-Lussac) என்பவரின் தலைசிறந்த ஒரு வேதி நிறுவனத்திற்கும் இந்த புதிய பொருளை அனுப்பி வைததார். அதனையே, இயற்பியலாளர் ஆண்ட்ரே மேரி ஆம்பியருக்கும் (physicst Andre-Marie Ampere (1775–1836) அனுப்பினார்.  அனைவருமே . இந்த தனிமத்தின் பெயர் அயொடைடு/அயொடின் எனறு சொன்னார்கள். கூர்டாய்ஸ் கண்டுபிடித்த புது பொருளுக்கு கிரேக்க வழியிலேயே அயொடின் (அயோடின்) என்ற பெயரும் சூட்டப்பட்டது .கிளமெண்ட்டும், டெசோர்ஸஸும் கூர்டாய்ஸ் தான் அயொடினின் கண்டுபிடிப்பாளார் என 1813, நவம்பர் 29 அன்று கூர்டாய்ஸின் கண்டுபிடிப்பை உலகறிய அறிவித்தனர்.

 அயொடினின் ஆபத்திலிருந்து தப்பித்த கூர்டாய்ஸ்.!


 இளைஞரான கூர்டாய்ஸ் கொஞ்சம் ரொம்பத்தான் புதிய தனிமத்துடன் விளையாடிப் பார்த்தார். ஆனால் அவர் அதன் மூலம் அதிர்ச்சி அடைந்ததுதான் மிச்சம்.  இந்த அயொடினை அம்மோனியாவுடன் சேர்த்துப் பார்த்தார். விளைவு? ஒரு சாக்லெட் வண்ண திடப்பொருள் கிடைத்தது. அதன்பெயர் தான் நைட்டிரஜன்-டிரை –ஆக்சைடு என்ற வெடிமருந்து. கூர்டாய்ஸ் இப்படி அயொடினுடன் விளயாடிய போது அது பயங்க்ரமாய் அதி வேக சத்தத்துடன் வெடித்தது. அதிர்ஷ்ட வசமாய் குறைந்த காயங்களுடன் தப்பித்துவிட்டார் கூர்டாய்ஸ்.  ஆனால் அவரின் சம காலத்தவரான பியரி டூலாங் (Pierre Dulong) கொஞ்சம் அதிர்ஷடக்கட்டை என்றுதான் சொல்ல வேண்டும்.  இந்த அயொடின், அம்மோனியா இணைப்பு விளையாட்டில் ஒரு கண்ணையும், கையின் ஒரு பகுதியையும் இழந்தவர். பயங்கரமான வெடிமருந்தின் நீண்ட பலியாளர்கள் பட்டியலின் முதல் போணி பியரி டூலாங் தான்.
மருத்துவ குணங்கள் மலிந்த அயொடின்..!


    அயொடின் மோசமான நச்சு குணம் உடையது தான். ஆனால் அதன் ஆல்கஹாலுடன் சேர்த்து டிங்க்சர் அயொடின் என்ற மஞ்சள்-பழுப்பு நிற திரவமான  கிருமி நாசினி தயாரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இது பரவலாகப் பயன்படுத்தவும் படுகிறது.  இன்றும் கூட, பெரும்பாலும் பொதுவான நீர் சுத்திகரிக்க  அயொடின் அடிப்படையிலான மாத்திரைகளே பயன்படுகின்றன. அயொடின் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, இது மிகவும் முன்னேறிய வேதி தொழில்நுட்பத்தில் பரவலாகப் பயன்படுகிறது.

தினமும், நமக்கு வேண்டிய அயொடின்: 


 • ஆண்களுக்கு ............. 150..மைக்ரோ கிராம்
 • பெண்களுக்கு................. 120 மைக்ரோ கிராம்
 • தாய்மையுற்ற பெண்கள்:... 150..மைக்ரோ கிராம்
 • பாலூட்டும் பெண்களுக்கு.. 170  மைக்ரோ கிராம்
 • குழந்தைகளுக்கு.............. 70-150....... மைக்ரோ கிராம்
 • சின்ன குழந்தைகளுக்கு 50-60   மைக்ரோ கிராம் 
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. 


 • அயொடின் அளவு அதிகரித்தாலும் கூட முன்கழுத்து கழலை நோய் வரும்.

 • அயொடின் பாதிப்பு உள்ளவர்கள் தினம் 300 மைக்ரோகிராம் அயொடின் உட்கொள்ள வேண்டும்.

 • கிராம் கடல்உணவில் உள்ள அயொடின் 60 மைக்ரோ கிராம்

 • ஒரு தேக்கரண்டி அயொடின் கலந்த உப்பில் 150 மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது.

 • 100 கிராம் காய்கறி/மாமிசம்/முட்டையில் உள்ள் அயொடின் 25 மைக்ரோ கிராம்

 • 100கிராம் பால்பொருள்/ரொட்டி/தானியத்தில் மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது


Table 1: Recommended Dietary Allowances (RDAs) for Iodine]

Age.....................................Male....................................Female...............................

Pregnancy.........................Lactation

Birth to 6 months............110 mcg*..........................110 mcg*
7–12 months..................130 mcg*..........................130 mcg*
1–3 years......................90 mcg.............................90 mcg
4–8 years......................90 mcg.............................90 mcg
9–13 years....................120 mcg............................120 mcg
14–18 years..................150 mcg.............................150 mcg...................220 mcg.......................290 mcg
19+ years.....................150 mcg.............................150 mcg...................220 mcg......................290 mcgTable 2: Selected Food Sources of Iodine Food.................................................Approximate Micrograms (mcg) per serving........................Percent DV*
Seaweed, whole or sheet, 1 g.......16 to 2,984  ..................................................................11% to 1,989%
Cod, baked, 3 ounces..................99  .................................................................................66%
Yogurt, plain, low-fat, 1 cup............75  .................................................................................50%
Iodized salt, 1.5 g (approx. 1/4 teaspoon)..71...........................................................................47%
Milk, reduced fat, 1 cup..................56 ................................................................................37%
Fish sticks, 3 ounces......................54 .................................................................................36%
Bread, white, enriched, 2 slices.........45 .................................................................................30%
Fruit cocktail in heavy syrup, canned, 1/2 cup...42.......................................................................28%
Shrimp, 3 ounces.........................35 ...................................................................................23%
Ice cream, chocolate, 1/2 cup .........30 ...................................................................................20%
Macaroni, enriched, boiled, 1 cup......27...................................................................................18%
Egg, 1 large ..............................24  ...................................................................................16%
Tuna, canned in oil, drained, 3 ounces...17  ................................................................................11%
Corn, cream style, canned, 1/2 cup....14 ....................................................................................9%
Prunes, dried, 5 prunes...................13 ...................................................................................9%
Cheese, cheddar, 1 ounce................12 ...................................................................................8%
Raisin bran cereal, 1 cup..................11 ...................................................................................7%
Lima beans, mature, boiled, 1/2 cup.....8 ....................................................................................5%
Apple juice, 1 cup..........................7  ....................................................................................5%
Green peas, frozen, boiled, 1/2 cup....3  ...................................................................................2%
Banana, 1 medium........................3 .....................................................................................2%
அயொடின் பாதிப்பால்l...! 
 உடலில் அயொடின் குறைபாடு இருந்தால், முன்கழுத்துக்கழலை (goiter) என்ற நோய் வரும், குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது. உலக நலன் கருதும் நிபுணர்கள், அயொடின் போதாமை என்பது தடுக்கக் கூடியது தான். ஆனால், அயொடின் போதாமையால், உலகம் முழுவதும் சுமார் 1,500,000,000 மக்கள் மூளை பாதிப்பு அடையும் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கின்றனர்.  அதே போல உலகம் முழுவதும் 50,000,000 குழந்தைகள் அயொடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கருவுற்ற பெண்களுக்கு அயொடின் போதவில்லை என்றால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது. கருச்சிதைவு ஏற்படும். மிகக் குறைவான அயொடின் பற்றாக்குறை கூட, குழந்தைகளின் அறிவுத்திறனைப் பாதிக்கும்; மூளை வளர்ச்சியையும், கற்றல் திறனையும் அழிக்கிறது.. இந்தியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் தரும் தகவல் படி, ஆண்டில், கோடிப் பேர் அயொடின் பற்றாக்குறையால் அவதிப்படப் போகின்றனர் என்று இரண்டு மாதம்(நவம்பர்) முன்பு தெரிவித்துள்ளார். 
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். Google Widget
இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். உங்களது Email id ஐ அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்

எனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தைராய்டு பிரச்னை இருப்பதால் எனது ஆத்ம திருப்திக்காக இந்த பதிவை வெளியிடுகிறேன்.மிக்க நன்றி. வெள்ளி, ஜனவரி 20, 2012

திரு சி.ஜெயபாரதன் – ஒரு அணு விஞ்ஞானி – ஒரு அறிமுகம்

திரு சி.ஜெயபாரதன் ஒரு அணு விஞ்ஞானி.  நமது மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர்.  எனது முகநூல் நண்பர்.  அவரைப் பற்றிய அவரே எழுதிய ஒரு அறிமுகம்.  அவர் எல்லா துறைகளிலும் நல்ல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  அவரது கட்டுரைகளை எனது பதிவில் வெளியிட அனுமதி கொடுத்திருக்கிறார்.  இனி மேல் அவரது கட்டுரைகளை தொடராக வெளியிடுகிறேன்நெஞ்சின் கதிரலைகள் நின்றுவிட்டால் என்வாழ்வில்
துஞ்சிடும் ஆத்மீகத் தொண்டு !ஆணும் பெண்ணும் ஒன்றல்ல !
ஏசுவும், புத்தரும் இரண்டல்ல !
இந்து, இசுலாம், கிறித்துவம் மூன்றல்ல !சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada
(பிறப்பு :  பிப்ரவரி 21, 1934)

அண்டத் தலைவனை, ஆதி முதல்வனைத்
தொண்டன் பணிந்து துதிக்கிறேன் – விண்டுபோய்
இற்றுவிழும் மாந்தர் இணைந்து பணிபுரிய
வற்றாத் திறன் ஊட்ட வா.
++++++++
போர் வாளை எல்லாம் நெளித்து
ஏர் முனை ஆக்கு !
+++++++
சிலைகள் சுமப்ப  தில்லை
கோபுரத்தை !
வலைகள் பிடிப்ப தில்லை
முத்துச் சிப்பியை !
கலைகள் நிரப்பு வதில்லை
பசி வயிற்றை !
அலைகள் அசைப்ப தில்லை
ஆழ்கடலை !
++++++++
தோல்விகள் தோள்வரை
ஏறினும் வெற்றி
கால் பாதம் வரை
வராதா ?
மேல் சென்று சிகரம் தொட
மூச்சு வாங்கும் !
நாள் செல்லும் வெற்றியின்
நறுமணம் நுகர !
++++++++++
அணுவினைப் பிளந்த நான்
அன்பையும் பிளந்து
நுணுகி நுணுகி
நோக்கினேன் ! அங்கும்
அன்னை சக்தி
என்னை மயக்கி
முறுவல் செய்தாள் !
சிறுவன்
பணிந்தேன் அதன் திருப்
பாதங்களில் !
சி. ஜெயபாரதன்
+++++++++++
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன்.  பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக் கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன.  எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன.  இதுவரை மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி.  இரண்டு நூல்கள் அச்சில் உள்ளன : விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.


எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர்.  ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே.  “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கிங்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
டிசம்பர் 17, 2011  (புதுப்பிக்கப் பட்டது)


இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.


Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.உங்களது Email id ஐ அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.


தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.