செவ்வாய், ஜூன் 28, 2011

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
(EMPLOYEES PROVIDENT FUND)
பிரச்னைகளும் தீர்வுகளும்.
பாகம்-3
இது இன்னொரு மிகவும் பரிதாபத்திற்குரிய கேஸ்.இந்த பகுதிகளில் படிப்பறிவு குறைவாக இருந்த சமயங்களில் பெண் பிள்ளைகளுக்கும், பையன்களுக்கும் மிக சிறிய வயதிலே திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.  பெண் பிள்ளைகளுக்கு பதினைந்து, பதினாறு வயதிலும், பையன்களுக்கு 20, 21 வயதிலும் திருமணம் அநேகமாக முடிந்து விடும்.இப்போது கல்வி விழிப்புணர்வு கூடினதும் சிறிய வயது திருமணங்கள் மிகவும் குறைந்து விட்டன.இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.  எங்களது ஆண் தொழிலாளர் ஒருவர் தனது இருபத்தொன்பது வயதில் அகால மரணமடைந்து விட்டார் (விபத்து அல்ல). இறந்த தேதி - 14.11.2000.அப்போது அவரது மனைவியின் வயது 23 (இருபத்து மூன்று) , அவருக்கு அப்போது இரண்டு பெண் குழந்தைகள் - மூத்த குழந்தையின் வயது 2 - பிறந்த தேதி (8.2.98) - இரண்டாவது குழந்தையின் வயது 1 - பிறந்த தேதி (16.8.99).அவர் இறக்கும் போது மனைவி மூன்றாவது குழந்தையை கர்ப்பமாக இருக்கிறார்.  எவ்வளவு துயரமான நிலைமை - நினைத்துப் பாருங்கள்.

இந்த பெண்மணி தனது தகப்பனார் இருக்கும் ஊரில் தான் இருக்கிறார்.  மாப்பிள்ளை வழி ஆள்கள் துக்கத்திற்கு வந்து விட்டு இவரை பார்த்து விட்டு இங்கேயே விட்டு விட்டு சென்று விட்டார்கள்.  அதற்குப் பிறகு எந்த ஆதரவும் இல்லை.

கிளைம் பற்றிய விஷயத்திற்கு வருவோம்.  கிளைம் அனுப்புவதற்கு கீழ்கண்ட விஷயங்கள் வேண்டும்.
 1.  தொழிலாளரின் மரண சான்றிதழ்.
 2.  வாரிசு சான்றிதழ்
 3. குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்
 4. தொழிலாளரின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வங்கியில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்து பாஸ் புத்தகங்கள்.

மேற்கண்டவை எல்லாம் வாங்குவதற்கு குழந்தைகளுக்கு 'நகராட்சியில் பிறப்பு பதியப்படவில்லை'. சிக்கல் ஆரம்பமாகி விட்டது.நாங்கள் பெண்ணின் தகப்பனாரை கூப்பிட்டு நீதி மன்றத்தை அணுகி பிறப்பு சான்றிதழ் கொடுக்க நகராட்சிக்கு உத்தரவிட மனு செய்ய சொன்னோம். நல்ல வேளை அவர் குழந்தைகளின் பிறந்த தேதிகளை குறித்து வைத்திருந்தார். அதை வைத்து இரண்டு பெண் குழந்தைகளுக்கும் 'ஜாதகம்' பக்கத்திலுள்ள பெரிய ஜோஸ்யர் ஒருவரை வைத்து தயார் செய்ய சொன்னோம். அவர் பெரிய மனசு வைத்து தயார் செய்து கொடுத்தார்.பணம் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.பிறகு அந்த தெருவிலுள்ள பெரிய மனிதர்கள் இருவர், வார்டு கவுன்சிலர் ஆகியோரிடம் குழந்தை பிறந்தது உண்மை தான் என கடிதம் வாங்கினோம்.பிறகு நீதிமன்றத்தை அணுகி, இந்த விஷயங்களில் செய்தித்தாளில் அறிவித்து சிரமப்பட்டு நகராட்சியில் இரண்டு பெண் குழந்தைகளும் பிறப்பு சான்றிதழ் வாங்கினோம்.இவ்வளவு சிரமங்களும் பெண்ணின் அப்பா தான் செய்தார் - அவரும் வயது முதிர்ந்தவர், இருதய நோயாளி. பையனின் அப்பா கண்டு கொள்ளவேயில்லை.

கர்ப்பமாக இருக்கும் குழந்தையையும் நாம் காண்பிக்க வேண்டுமே.  எனவே பெண்ணின் தகப்பனாரை கூப்பிட்டு - மகளை அரசாங்க மருத்துவர் ஒருவரிடம் அழைத்து சென்று 'மறைந்த இன்னாரது மனைவி கர்ப்பமாக இருக்கிறார்' என சான்றிதழ் வாங்க சொன்னோம்.  ஒரு இளம் விதவைக்கு என்னவெல்லாம் கஷ்டம் பாருங்கள்.  

இதற்கிடையில் 'Tamilnadu Labour Welfare Board' லிருந்து மனுச்செய்து Rs.1,500/.. வாங்க ஏற்பாடு செய்தோம். இந்த தொகை 'இறுதி செலவு பணம்'. தமிழ்நாடு அரசாங்கம் தொழிலாளர்கள் பணியிலிருக்கும்போது ஏற்படும் மரணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கலாம்.  தலைவனை இழந்து திண்டாடும் குடும்பத்திருக்கு ஆதரவாக இருக்கும்.அதே மாதிரி 'இறுதி செலவு பணம்' ஐயாயிரம் ரூபாய் கொடுக்கலாம்.  இதெல்லாம் இனாம் அல்ல.செய்ய வேண்டிய உதவிஇதற்கு அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் முயற்சி செய்ய வேண்டும்.

இதற்கிடையில் குழந்தைகளுக்கு 'கிராம நிர்வாக அதிகாரியிடம்' பிறந்த சான்றிதழ் வாங்கி கிளைம் படிவங்களை அனுப்பி வைத்தோம்.  ஆனால் 'நகராட்சி பிறந்த சான்றிதழ்' வேண்டும் என அனைத்து படிவங்களும் திரும்பி வந்து விட்டன.  அந்த படிவங்கள் அனுப்பும்போது அந்த பெண்மணி "மூன்றாவது குழந்தையை கர்ப்பமாக இருக்கிறார்" என்று அரசு மருத்துவரிடமும் வாங்கிய சான்றிதழும் சேர்த்து அனுப்பி தகுந்த இடத்தில் எழுதி விட்டோம். மூன்றாவது பெண் குழந்த 28.2.2001 பிறந்தது.அதை நகராட்சியில் பதிந்து விட்டார்கள்.

27.1.2001 தேதியன்று இரண்டு பெண் குழந்தைகளுக்கு கிடைத்த நகராட்சி சான்றிதழ்களை சேர்த்து மனு செய்தோம்.அந்த பெண்ணின் தகப்பனார் தான் நன்கு அலைந்து எங்களது வழி காட்டுதலின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்தார்.வருங்கால வைப்பு நிதி பணம் 14.2.2001 தேதி அனுப்பியதாக கடிதம் வந்தது.எல்லா இடங்களிலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் உங்களது படிவங்கள் முழுமையாக இருந்தால் சீக்கிரம் கணக்கு முடிந்து பணம் வந்து விடும். நீங்கள் நேரில் செல்ல வேண்டியதில்லை.எந்த செலவும் கிடையாது.  இது மிகவும் போற்றப்பட வேண்டிய விஷயம்.  நான் இது வரை அந்த அலுவலகத்திற்கு சென்றதில்லை.  செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் பணியை நான் மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.

8-8-2001 தேதியன்று பென்ஷன் அனுமதிக்கப்பட்டு கடிதம் வந்தது.இதற்கிடையில் சில விஷயங்கள் கேட்டு கடிதம் வந்தது.நாங்கள் உடனுக்குடன் விபரங்கள் கொடுத்து விட்டோம்.எங்களுக்கு ஒரு மன நிறைவு.மூன்றாவது குழந்தையை குடும்ப விபரத்தில் சேர்க்க வேண்டுமே. எனவே பென்ஷன் வந்த பிறகு எழுதுவோம் என்று இருந்து விட்டோம்.  இன்றேல் ஏதாவாது சிக்கல் ஆகி விடும் என்று பயம். 24.9.2001 தேதியன்று அந்த பெண்மணியை கடிதம் எழுதச்சொல்லி பிறப்பு சான்றிதழுடன் குடும்ப பட்டியலில் இணைக்க சொல்லி அனுப்பினோம்.27.2.2002 தேதியன்று மூன்றாவது பெண் குழந்தை பெயரையும் இணைத்து வங்கிக்கு கடிதம் அனுப்பி இந்த பெண்மணிக்கும் கடிதம் வந்து விட்டது.

எங்களது பெரிய கடமை முடிந்தது.  மன நிறைவு.
இந்த பென்சனின் சிறப்புகள்.  
 • மனைவிக்கு அவரது ஆயுள் காலம் முடிய (மறு மணம் செய்யாமலிருந்தால்) பென்சன் வரும்.
 • இரண்டு குழந்தைகளுக்கு அவர்களது இருபத்தைந்து வயசு முடிய (அவர்கள் மணமாயிருந்தாலும்) பென்சன் வரும்.
 • இப்போது முதல் இரண்டு குழந்தையில் மூத்த குழந்தைக்கு இருபத்தைந்து வயசாகி விட்டால் அடுத்த குழந்தைக்கு பென்சன் வர ஆரம்பிக்கும்.
 • பெண் குழந்தைக்கு மணமாகவில்லை என்றால், ஊனமுற்றிருந்தால் (அரசாங்க சான்றிதழ் வாங்கி சமர்ப்பிக்க வேண்டும்) அதன் ஆயுள் காலம் முடிய பென்சன் வரும்.

இது ஒரு அருமையான திட்டம்.  மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும்.அவர்கள் கேட்கும் ஆவணங்களை சரியாக கொடுக்கவேண்டும்.எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.


இந்த பதிவை படித்து பார்த்து உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக எழுதுங்கள்.

இந்த பதிவை அழகுற அமைத்த, இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவிய திருமதி.ரமாமணி அவர்களுக்கு மனப்பூர்வ நன்றி
.

மிக்க நன்றி.

செவ்வாய், ஜூன் 21, 2011

புளியங்குடியில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் - ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கப்பெருமாள் தனி சன்னதி


  
புளியங்குடியில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய  சுவாமி திருக்கோவில் மிகப்பழமையானது.   எங்களது குடும்ப நண்பர் மரியாதைக்குரிய திரு பாலகுரு - சூரியவடிவு அவர்களது மகள் நாகப்பிரியா திருமணம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 6.6.2011அன்று  நடைபெற்றது.கோவிலில் நிறைய சுவர்
ஓவியங்கள் தீட்டப் பட்டிருக்கின்றன. 

நிறைய வாகனங்கள் அற்புதமான வடிவமைப்பில் உள்ளன.


 நல்ல உயர்ந்த மதில்கள் உள்ளன.  சுற்றுப்பிரகாரம், சுற்றில் உள்ள பரிவார தெய்வங்கள் உள்ளன.  கோவில் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு   வருகின்றது.தற்போது உள்ள தேர்  பழுதடைந்த நிலையில் இருக்கிறது.  புதிய தேர் பணி துவங்குவதற்காக அறிவிப்பு கோவிலில் இருக்கிறது

அருமையான தெப்பம் வெளியில் இருக்கிறது.  பக்கத்தில் பீடம் ஒன்று காணப்படுகிறது. கோவிலுக்கு வெளியில் 'அறிவியல் - ஆன்மீக பாடசாலை' ஒன்று  இருக்கிறது. 
 


இந்தக் கோவிலுக்கு அருகிலே பெருமாள் கோவில் ஒன்று இருக்கிறது .
ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கப் பெருமாளுக்கு தனி கோவில் இருக்கிறது. நாங்கள் இதுவரை  இப்படி தனி சன்னதி பார்த்ததில்லை.


சிறிய கோவிலாக, பழமையானதாக, உள்ளே  நந்தவனத்துடன், அருமையாக
பராமரிக்கப்பட்டு வருகிறது.  
இந்தக்கோவிலிலும் சுவர் ஓவியங்கள் 
அருமையாக இருக்கின்றன. 
புகைப்படங்களை 
தொகுத்தளித்திருக்கிறோம். 
 

புளியங்குடி எலுமிச்சம்பழ வியாபாரத்திற்கு புகழ் பெற்றது என்றார்கள் ( ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா போல) .  நாங்கள் சென்ற நேரம் கொஞ்சம் முன்னாடியே சென்று விட்டோம்.  எலுமிச்சம்பழங்கள் வரவில்லை.  ஒரு பேட்டை போல் இருக்கின்றது.  கிட்டத்தட்ட நாற்பது கடைகள் இருக்கும்.  எண்ணிக்கைக்கு வியாபாரம் என்றார்கள்.  மற்ற ஊர்களில் எடை போட்டு வியாபாரம் - இங்கு எண்ணிக்கை வியாபாரம் என்றார்கள்.

ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலும், ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கப் பெருமாள் தனி சன்னதியும் எங்களை மறுபடியும் ஈர்க்கிறது.  அடுத்து செல்லும்போது 'எலுமிச்சம்பழ வியாபாரம்' பற்றி படங்களுடன், வியாபாரிகளிடம் விபரம் கேட்டு தனி பதிவு எழுதுகிறேன்.

புளியங்குடியில் இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரத்தில் 'கற்பகாம்பாள் கோவில்' மலையில் அமைந்திருக்கிறது என்று சொன்னார்கள்.  எங்களுக்கு முன்பே தெரியாது.  அடுத்து செல்லும்போது விபரங்கள் தொகுத்தளிக்கிறோம்.
இந்த பதிவுக்கு புகைப்படங்கள் எடுத்து உதவிய எனது மனைவி திருமதி உமாகாந்திக்கு நன்றி.

அடுத்து, எனக்கு பதிவை கணினியில் ஏற்ற, புகைப்படங்கள் எடுத்து கணினியில் ஏற்ற உதவி செய்த எனது பாசப்பிள்ளை ராஜவேல் வேலை கிடைத்து சென்னை சென்று விட்டான்.  அவனை மனசார வாழ்த்துங்கள்
எங்களது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய குடும்ப நண்பர் திருமதி ரமாமணி அவர்கள் தான் இந்த பதிவிற்கும் இனிமேல் நாங்கள் இடும் பதிவுகளுக்கும்  எங்களுக்கு ஆலோசனைகளும் உதவிகளும்.
 
இந்த பதிவை படித்து நிறை குறை எழுதுங்கள். Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.

மிக்க நன்றி.சனி, ஜூன் 18, 2011

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
(EMPLOYEES PROVIDENT FUND)
பிரச்னைகளும் தீர்வுகளும்.

பாகம்-2
  இது இன்னுமொரு பிரச்னையும் தீர்வும்.  
எங்களது தொழிற்சாலையில் வேலை பார்த்த பெண்மணி (இளம் விதவை) 29.5.98 ஆம் நாள் இறந்து விட்டார். (கணவன் இறந்த நாள் 16.7.95). இறக்கும்போது அந்த பெண்மணியின் வயது 27. அப்போது அந்த பெண்மணிக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள் -
 ஆண் குழந்தை வயது 5      (பிறந்த தேதி: 2.6.93)
 பெண் குழந்தை வயது 3      (பிறந்த தேதி: 22.1.95)
.அந்த குழந்தைகளின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.  அப்பா அம்மா இல்லை.  குழந்தைகளின் வயது ஐந்து, மூன்று.  அப்பா வழியில் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள ஆட்களும் இல்லை, வசதி வாய்ப்பும் இல்லை.  இறந்த பெண்மணியின் தாயார் ( மகள் இறக்கும் போது தாயாரின் வயது ஐம்பத்தி இரண்டு) சிறிய பெட்டிக்கடை தான் வைத்திருக்கிறார்.  வேறு வசதி வாய்ப்பு கிடையாது.

நாங்கள் இறந்த பெண்மணியின் தாயாரை எங்களது அலுவலக நண்பர் மூலம் அணுகி பென்ஷன் பெறுவதற்கு இருக்கும் ஆவணங்கள் (documents) கொண்டு வரும்படி கேட்டோம்.  அவர்கள் மகளின் இறப்பு சான்றிதழ், இரண்டு குழந்தைகளுக்கு பாட்டியை கார்டியனாக நியமித்து தாலுகா அலுவலகத்திலிருந்து பெறப் பட்ட 'வாரிசு சான்றிதழ்' முதலியவைகளை கொடுத்தார்கள்.நாங்கள் கிளைம் படிவங்களை மதுரை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தோம்.
மதுரை அலுவலகத்திலிருந்து அனைத்து படிவங்களும் கீழ்கண்ட விபரங்கள் கேட்டு திரும்பி வந்து விட்டது.
 1. குழந்தைகளுக்கு கார்டியனாக பாட்டி இருப்பதற்கு 'நீதி மன்றத்திலிருந்து பெறப்பட்ட ஆணை'
 2. குழந்தைகளின் தகப்பனார் இறந்ததற்கான 'மரண சான்றிதழ்'
 3. குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்
 4. இறந்த பெண்மணிக்கு அசல் மரண சான்றிதழ் (Original Death Certificate)

நாங்கள் குழந்தைகளின் பாட்டியை எங்களுக்கு தெரிந்த வக்கீல் ஒருவரை அணுகச்சொன்னோம்.  அவர் நீதிமன்றத்தை அணுகி எதிர்தரப்பினருக்கு (குழந்தைகளின் தகப்பனார் வழி உறவினர் தெரிந்த பெயருக்கு) நோட்டீஸ் அனுப்பினார்கள்.  அவர்கள் யாரும் வரவில்லை.  எனவே பாட்டியை கார்டியனாக நியமித்து சான்றிதழ் வழங்கி விட்டார்கள்.
குழந்தைகளின் பிறந்த சான்றிதழ் (குழந்தைகள் மதுரையில் பிறந்தன) அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வாங்கினோம்.  இந்த தாமதத்தில் குழந்தைகள் இரண்டும் பள்ளியில் சேர்ந்து விட்டன.  எனவே பள்ளியில் இரண்டு குழந்தைகளுக்கும் அவர்களது 'லெட்டர் பேடில்' சான்றிதழ் வாங்கினோம்.  கணவன் மனைவி இருவரது இறந்த நாட்களை 'மதுரை கார்ப்பரேஷனுக்கு' எழுதி அதற்கான கட்டணத்தை சேர்த்து அனுப்பினோம்.பாருங்கள் - நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். நேரில் போகாமல், மேற்கொண்டு எந்தசெலவும் இல்லாமல் தபாலில் வந்து விட்டது.  எங்களுக்கு பெரிய ஆச்சரியம்.எல்லோருக்கும் நன்றி.

பிறகு பாட்டியை - அவர் பெயருக்கும், குழந்தைகள் பெயருக்கும் (பாட்டி கார்டியனாக இருந்து) - இந்தியன் பேங்கில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்து பாஸ் புக் கொண்டு வரச்சொன்னோம்.

இவ்வளவும் முடிந்து 6.11.2002 தேதியன்று கிளைம் படிவங்களை அனுப்பி வைத்தோம்.19.2.2003 தேதியன்று பென்ஷன் 'இறந்த தேதியிலிருந்து' வழங்கப்பட்டது.இதற்கு எல்லோரது ஒத்துழைப்பும், பொறுமையும் முக்கியம். மற்ற அரசாங்க ஊழியர்களுக்கு பென்ஷன் அப்போதைக்கப்போது கிராக்கிப்படி போன்று உயர்த்தப்பட்டு கொடுக்கப்படுகிறது.ஆனால் வருங்கால வைப்புநிதி முதலில் என்ன வழங்கப்பட்டதோ (ஆரம்பத்தில் 338, இன்னும் அதே தொகை தான்) அதே தான் கடைசி வரை வழங்கப்படுகிறது.
இதற்கு அரசாங்கமும், தொழிற்சங்கங்களும், வருங்கால வைப்பு நிதி அதிகாரிகளும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டுகிறேன்.

இந்த பதிவை படித்து பார்த்து உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக எழுதுங்கள்.
இந்த பதிவை அழகுற அமைத்த, இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவிய திருமதி.ரமாமணி அவர்களுக்கு மனப்பூர்வ நன்றி
.

மிக்க நன்றி.

வியாழன், ஜூன் 09, 2011

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
(EMPLOYEES PROVIDENT FUND)

பிரச்னைகளும் தீர்வுகளும்.

பாகம்-1

நான் ஒரு தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறேன்.  அதில் உள்ள பல்வேறு பணிகளில் எனக்கு ஆத்மார்த்தமாக பிடித்த பணி 'தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி' சம்பந்தப்பட்ட பணி.  இது தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டது.  நாம் செய்யும் வேலை நேரடியாக தொழிலாளர்களுக்கு கூடிய சீக்கிரத்தில் உதவிகள் கிடைக்கும்.

நான் ஒரு உறுப்பினருக்கு அவர் 2005 இல் வேலை முடித்து போகும்போது அவருக்கான கிளைம் படிவங்களை தயார் செய்து அனுப்பினோம்.  அவருடைய பணிக்காலம் இருபத்திரண்டு வருடங்களுக்கு மேற்பட்டது.  அவரது வயது அப்போது ஐம்பதுக்கு கீழ்.  எனவே பணிக்காலத்திற்காக' படிவம் பத்து சி' நிரப்பி அனுப்பினோம்.  அவரது குடும்ப விபரங்கள், அவரது மூன்று பையன்களுக்கு பிறந்த தேதி கொடுப்பதற்காக 'பள்ளிச் சான்றிதழ்கள்' சேர்த்து அனுப்பி வைத்தோம்.

அவருக்கு வைப்புநிதிக்கான கிளைம் கணக்கு முடித்து வந்து விட்டது.  பென்ஷனுக்கு அவர்கள் [SCHEME CERTIFICATE] வழங்க வேண்டும்.  அவர்களுக்கு சில சந்தேகங்கள்.  விபரத்தை பாருங்கள்.  நாங்கள் அவருடைய பையன்களுக்கு கொடுத்த பிறந்த தேதி விபரங்கள்.
மூத்த பையன்              19.3.1985
 இரண்டாவது பையன்           5.10.1990
 மூன்றாவது பையன்           6.3.1991
அலுவலகத்திலிருந்து க்ளைம் படிவங்களை திருப்பி அனுப்பி விட்டார்கள்.  அவர்களது சந்தேகம் என்ன என்றால் 'இரண்டாவது பையனுக்கும் மூன்றாவது பையனுக்கும்' உள்ள இடைவெளி ஆறு மாதங்கள் தான்.  அவர்களது சந்தேகம் நியாமானது தான்.  நான் உறுப்பினரைக் கூப்பிட்டு விபரம் கேட்டேன்.  அவர் ஜாதகக் குறிப்பு இருப்பதாகவும், பள்ளியில் அவர்களாக பிறந்த தேதி போட்டுக்கொண்டார்கள் எனவும் கூறினார்.  அவர் சொன்னது சரி தான்.  முன்பு பிறந்த விபரம் நகராட்சிகளிலோ கிராமத்து பஞ்சாயத்திலோ பதிவது கிடையாது.  எனவே பள்ளிக்கு செல்லும்போது அங்கு உள்ளவர்களே குத்து மதிப்பாக வயது போட்டுக் கொள்வார்கள்.  எல்லோருக்கும் அநேகமாக பிறந்த தேதி ஜூன் அல்லது மே கடைசியில் தான் இருக்கும்.  ஆனால் நமக்கு சிக்கல் வந்து விட்டதே.அவரது ஜாதகத்தில் உள்ள தேதிகளை வாங்கினேன்.  விபரங்களை பாருங்கள்.
             பள்ளி சான்றிதழ் படி     ஜாதகப்படி 
இரண்டாவது பையன்     5.10.1990         18.6.1990
மூன்றாவது பையன்      6.3.1991          7.8.1991
அந்த உறுப்பினரிடம் ஒரு கடிதம் வாங்கி வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு நாங்கள் அவரது மனுவை நாங்களும் கையெழுத்திட்டு அனுப்பினோம். மனுவின் சாராம்சம்.

நான் படிக்காதவன். நாங்கள் விவசாய சூழலில் வளர்ந்தவர்கள். எங்களது கிராமப்புறங்களில் 'ப்ரீ கேஜி' , 'எல் கேஜி' போன்ற வகுப்புகள் கிடையாது. அதனால் ஓரளவு வயது வந்தவுடன் முனிசிபல் அல்லது பஞ்சாயத்து பள்ளிகளுக்கு அனுப்புவோம். நாங்கள் பிறந்த விபரங்கள் பதிவது பழக்கம் இல்லை என்ற படியால் பள்ளிகளிலும் 'பிறப்பு சான்றிதழ்' கேட்க மாட்டார்கள். ஜூன் மாதம் என்றால் ஒரு ஐந்து வருடங்கள் கழித்து போட்டுக் கொள்வார்கள். விஜய தசமி சமயம் என்றால் அதே மாதிரி ஐந்து வருடங்கள் கழித்து போட்டுக் கொள்வார்கள். இது தவிர அவர்கள் எந்த தேதி போட்டிருக்கிறார்கள் என்ற விபரமும் தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விபரமும் எங்களுக்கு தெரியாது. இப்போது தான் பள்ளியில் வாங்கி வந்தோம். எனவே இந்த இரண்டு தேதிகளையும் கொடுத்திருக்கிறேன். நீங்கள் பதிந்து கொடுத்து 'ஸ்கீம் சர்டிபிகேட்' கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என எழுதி இருந்தார்.

பின்பு பள்ளி சான்றிதழ் படி பிறந்த தேதிகளை போட்டு 'திட்ட சான்றிதழ்' வழங்கினார்கள். ஒரு பெரிய பிரச்னை தீர்ந்தது.

இந்த அரசாங்க திட்டங்கள் எல்லாம் நல்ல திட்டங்கள். இதில் மக்களது ஒத்துழைப்பு முழுமையாக இருப்பதில்லை. பிறந்த தேதி சரியாக தர மாட்டார்கள். அதனால் தான் மேற்படி சிக்கல். பெயரை முழுமையாக சொல்ல மாட்டார்கள். தகப்பனார் பெயரை, தாயார் பெயரை முழுமையாக சொல்ல மாட்டார்கள். புகைப்படங்கள் கேட்டால் தர மாட்டார்கள். ஏதாவது பிரச்னை வந்தால் நிர்வாகத்தையும், அரசாங்கத்தையும் குறை சொல்லிக் கொண்டு திட்டிக் கொண்டு செல்வார்கள். எல்லோருடைய ஒத்துழைப்பும் முக்கியம்.

மிக்க நன்றி.

வெள்ளி, ஜூன் 03, 2011


                                        
                      

 புத்தகங்களை பற்றி 

                                            திருவாங்கூர் அடிமைகள்

பேரா.முனை.சா.குமரேசன், M.A.,M.Phil.,M.Ed.,D.J., D.L., Ph.d.,
விரிவுரையாளர், தமிழ்த்துறை,
நாடார் மகாஜன சங்க காமராஜ் கல்வியியல் கல்லூரி,
பழவிளை, குமரி மாவட்டம்.

     இந்த புத்தகம் திருவிதான்கூரிலிருந்து கன்யாகுமரி பகுதி பிரிந்து தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்ட வரலாறு, மக்கள் அனுபவித்த அவதிகளை பற்றிய விபரங்கள் அடங்கிய புத்தகம்.  நாடார் மக்களின் வரலாறு அருமையாக தொகுக்கப்பட்டிருக்கிறது.படித்து பாது காக்கப்பட வேண்டிய புத்தகம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் எந்தெந்த புத்தகங்களில், அரசாங்க ஆவணங்களில் இருந்து விபரங்கள் திரட்டப் பட்டன என்ற விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.இந்த புத்தகத்தின் விலை ரூபாய் நூறு.


                                                  தென்னாட்டு மாமணிகள்

டாக்டர் பி.எஸ்.ராஜ். M.Com.,M.A., Dip.in Hindi, D.Lit.,
    இந்த புத்தகம் - அகத்தியர், மாவீரன் அனந்த பத்மநாபன் நாடார், ஐயா வைகுண்ட சுவாமிகள், மார்ஷல் நேசமணி ஆகியோரைப் பற்றிய அருமையான வரலாற்றுத் தொகுப்பு. கடல்கோளுக்கு முந்தைய தென் தமிழ்நாட்டின் வரலாறும் அருமையாக தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த புத்தகத்திலும் நாடார் மக்களின் வரலாறு ஆதாரப் பூர்வமாக தொகுக்கப் பட்டிருக்கிறது. இந்த புத்தகம் படித்து பாது காக்கப்பட வேண்டிய புத்தகம். இதன் விலை ரூபாய் நூற்றி இருபத்தைந்து.

  
                                                            சமுதாய நண்பன் 
ஆசிரியர் - டாக்டர் பி.எஸ்.ராஜ். M.Com., M.A., Dip.in Hindi., D.Lit.,

           மாதமொருமுறை வரும் இதழ் - வருட சந்தா ரூபாய் நூற்றி இருபத்தைந்து. 

   இந்த புத்தகம் பல்சுவை இதழ். கதைகள், கட்டுரைகள், கவிதைகள், மொழிப் பயிற்சி என பல்வேறு விஷயங்கள் அடங்கிய புத்தகம். வாங்கி படிக்கலாம்.அனைத்துப் புத்தகங்களும் கிடைக்கும் இடம்.

 டாக்டர் பி.எஸ்.ராஜ்,
1348,  சிங்காரத்தோப்பு, பார்வதிபுரம்,
வெட்டூர்ணிமடம் அஞ்சல்,
நாகர்கோவில். 629 003. (குமரி மாவட்டம்).
தொலைபேசி: 04652 231578 அலைபேசி : 94438 44734தங்கள்

தேவைக்கு மேற்கண்ட முகவரிக்கு பணம் அனுப்பி புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

              நல்ல முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
                                                                 மிக்க நன்றி