திங்கள், செப்டம்பர் 19, 2011

மருத்துவமனை - வியாபாரமா? சேவையா?


மருத்துவக் கட்டுரைகள் - பாகம் 2

பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் - புற்று நோய் அனுபவங்களை எழுதுகிறார்.


பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்கள் - வானியல் பற்றியும், பிளாஸ்டிக் பற்றியும் எழுதிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தோம். அவர்கள் 25.8.2010 இல் புற்று நோய்க்காக அறுவை சிகிச்சை செய்து அபாரமாக மீண்டு வந்திருக்கிறார். அதற்கு முன் மதுரை மருத்துவமனையில் ஏற்பட்ட அனுபவங்களையும், பின்பு கோவை மருத்துவமனைக்கு சென்றதையும், இடையில் ரேடியேசன் சிகிச்சைக்கு செல்லும்போது சிறுவர் சிறுமிகள் நோயினால் படும் அவஸ்தைகளையும் எழுதியிருக்கிறார். எனவே தொடர்ந்து படித்து விழிப்புணர்வு பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நாம் எவ்வளவோ, தைரியமாய், நன்றாக இருக்கிறோம் என்று தோணும்.சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அவதிப் படும் மனிதர்கள்..! சாப்பிடக் கூட தோன்றாது. வேதனை நெஞ்சை நெருடும். நேற்று 25 பெண்கள் அந்த வார்டுக்கு,,அறுவை சிகிச்சை, வேதி சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, சிகிச்சை முடிந்து பரிசோதனைக்கு என்று..!வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, இது ஒன்றும் இல்லை என்ற அறியாமையால்,எதுவும் தெரியாததால்  நோய் முற்றிய பெண்கள் அதிகம்.ஆண்களும் புற்று நோய் சிகிச்சைக்கு வந்திருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில், பெண்களின் மார்பக புற்று நோய், 12 % அதிகரித்துள்ளதாம். 

குறிப்பாக நகர்ப்புற பெண்களுக்குத்தான் அதிகம் வருகிறதாம்..! இந்த  மையம் இன்னொரு சிறப்பு சேவையும் செய்கிறது. அதுதான்,புற்று நோயால் வேதனைப் பட்டு பிரச்சினைக்குல்லாகும் போது, அலைபேசியில் தொடர்பு கொண்டால், அவர்களின் வீட்டு வாசலுக்கே போய் முதலுதவி செய்து, அழைத்து வருகிறது . என் நண்பர் அருணந்தியை மூளைப் புற்று நோய் சிகிச்சைக்காக 1 1 /2 வருடம் மதுரை அப்போல்லோவில் வைத்து பார்த்தோம். கோவை ராமகிருஷ்ணாவில் எனக்கு சிகிச்சை பார்த்தோம்.  மற்ற இடங்களைவிட் இங்கு குறைவாகவே பணம் செலவாகிறது.    பணமே பிரதானமாய் மருத்துவ மனைகள் இருக்கும் காலத்திலும், மனித நேயம் பார்க்கும், உயிர் காக்கும் ஒரு மருத்துவ மனை..கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை..!

  
மார்பக புற்று கட்டியிலிருந்து திசு/திரவம் எடுத்தல்


       
இன்னொரு கதை சொல்கிறேன். ஜூலை மாதம் கட்டி இருப்பது தொடர்பாக பழனியில்  ஒரு மருத்துவரைப் பார்த்து ஸ்கேன் எடுக்கப்பட்டது. கட்டி இருந்தது தெரிந்ததும், புற்று நோய் மருத்துவரிடமே செல்லலாம் என மருத்துவ நண்பர்களைக் கேட்டதும் மதுரையில் ஒரு பிரபலமான சிறப்பு புற்று நோய் மருத்துவர் ஒருவரைச் சொன்னார்கள்.ஒரு வார காலம் முயற்சி செய்து அவரிடம்  சந்திப்ப்பு தேதியை வாங்கி பார்க்கச் சென்றோம். அவரது உதவியால் பெயரை பதிவு செய்தார்.அவர் அறையின் முன்னே ராணி, தினத்தந்தி, தினமலர்,தினமணி என அவரைப் பற்றி வந்த விஷயங்கள் ஏராளமாய் ஒட்டப்பட்டு இருந்தன. அது மருத்துவ மனையா என்பதில் ஐயம் கூட வந்தது.  மருத்துவர் என்னைப் பார்க்கவோ, பேசவோ இல்லை. என்னை  நேராக சோதனை அறையில் போய் படுக்கச் சொல்லி பணிப்பெண் மூலம் தகவல் வந்தது. போய் படுத்தவுடன், முகத்தை மூடினார்கள். கட்டியிலிருந்து திசு எடுக்கப்பட்டது. எனது முந்தைய சோதனை முடிவுகளை அவர் பார்க்கவே இல்லை. அவர் என்னுடன் வந்த, என் மகனின் நண்பனும், என் மகன் போன்றவனுமான கோகுலை கூப்பிட்டு அடுத்த வாரம் அறுவை சிகிச்சைக்கு வரச் சொன்னார். கோகுலுக்கு ஒரே அதிர்ச்சி. என்ன செய்வது என்று தெரியவில்லை.என்னிடமும் தகவலை சொல்லவில்லை. சோதனை முடிவு தெரியட்டும் பார்க்கலாம் என்றான். அந்த டாக்டர் என்னை கடைசி வரை பார்க்கவே இல்லை. மேலும் அந்த மருத்துவ மனை சுகாதாரமானதாக,காற்றோட்ட மானதாகவும் இல்லை. மருத்துவர் நடந்து கொண்ட விதமும் பிடிக்கவில்லை.

    

    மருத்துவரின் இரண்டாவது ஒப்புதலக்காக, வேறொரு மருத்துவ மனையை நினைத்துப் பார்த்த போது, ராமகிருஷ்ணா மருத்துவ மனையைப் பற்றி எண்ணினோம். ஆனால் கோவை நகர் தமிழ் நாட்டிலேயே அதிகமான வாழ்க்கை செலவு/தரம் உள்ள நகரம்.. சென்னையைவிடக் கூட..!நமக்கு கட்டுபடி ஆகுமா என்ற நினைப்பு..! எதற்கெடுத்தாலும் மதுரைக்கே ஓடிய பழக்கம் வேறு.! மனம் தத்தளித்தது. ! இருக்கட்டும், வெறும் சோதனைதானே பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கோவை வந்தேன். இதற்கிடையில் மதுரை மருத்துவரை எப்படி தவிர்ப்பது என்ற குழப்பம் வேறு..! அவரின் மாணவரும், மருத்துவருமான ஒருவரை அணுகி, என் மகன் அமெரிக்காவிலிருந்து வந்ததும் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் என்று சொல்லவா என்றேன். உடனே அவர் தேள் கொட்டியது போல, ஐய்யய்யோ, அப்படி எல்லாம் சொல்லி விடாதீர்கள். ஒரே தீட்டாக தீட்டிவிடுவார் என்றார். அட.. மனிதா,, இப்படியா என நினைத்து, எப்படி சோதனை முடிவை  அவரிடமிருந்து வாங்க என்று யோசனை.! ஒரு வழியாக நேரில் போகாமலே வாங்கிவிட்டோம், இந்த நிலையில்தான், என் நண்பர் முனைவர் வெங்கடேஸ்வரனிடம் , எனக்குள்ள பிரச்சினையை சொல்ல, அவர்தான்,என்ன மோகனா, நம் நண்பரும், மருத்துவருமாகிய நளினி இருப்பது தெரியாதா? என்றார். அவரின் அலைபேசி என்னை வாங்கினேன். அதற்குள் என்னை நளினி அழைத்து, பழனியில் எடுத்த சோதனை முடிவைக் கேட்டு, உடனே கோவை புறப்பட்டு வாருங்கள், அமெரிக்க பயணத்தை உடனடியாக ரத்து செய்யுங்கள் என்றார்.சென்றேன்.அறுவை சிகிச்சை நடந்தது. நளினி அறுவை சிகிச்சையின் போது உடன் இருந்தார். கோகுல் அவனது  அனைத்து பணிகளையும் விட்டு விட்டு என்னுடன் 15 நாட்கள் இருந்தான். இப்படி நான் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வந்தது என்பது ஒரு விபத்துதான். ஆனால் மிக மிக நல்ல விபத்து.மதுரையில் நான் சிக்கி இருந்தால்/அல்லது வேறு  மருத்துவ மனைக்கு சென்றிருந்தாலும் இதைவிட பல மடங்கு பொருள் செலவு ஆகி இருக்கும். இப்போது நான் நன்றாக இருக்கிறேன்..!  நம்மை மொட்டையடிக்கும் மருத்துவ மனைகளுக்கு மத்தியில்,கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனை ,  ஒரு மனித உயிருக்கு சேவை செய்யும் ஆலயம்..!


Chennai:13-02-2011: The Cancer Survivours Day, celebrated at Sivagami Pethachi Auditorium, Alwarpet on Sunday. 100 survivors attend the function and light the lamp. Prominent citzens from Chennai participating in the function. Photo:R_Shivaji Rao


பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்கள் 25-08-2011 இல் எழுதியிருக்கிறார். வண்க்கம் இனிய நட்புகளே.. நான் மீண்டும் இன்னொரு மோகனாவாக பரிணமித்து இன்றுடன் ஓர் ஆண்டாகிறது.இன்று எனது ஓராண்டு நினைவு நாள். சென்ற ஆண்டு ஆகஸ்ட் 25 ல் தான் அறுவை சிகிச்சை, பின் வேதி சிகிச்சை என 365 நாட்களில், ஏராளமான பரிணாம மாற்றங்கள். பாருங்களேன் இடையில் என்னென்ன மாற்ற்ங்கள்,. போன டிசம்பரில் நான் பிழைக்க மாட்டேன் என சிலர் நினைத்தனர். எனக்கு அப்படி ஓர் எண்ணம் வரவே இல்லை. சாதாரணமாக நான் பழையபடி வளைய வருவேன், என்ற எனது ஆழ்ந்த நம்பிக்கை. மூன்று நாட்களுக்கு முன் எனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், நீங்கள் அசாதாரண மனத்துணிவுடன், மூளையின் பலத்துடன் மீண்டு, எதுவும் இப்போது பிரச்சினை இல்லை என்று சந்தோஷமாய் சொல்கிறீர்கள். இது அரிதானது.பொதுவாக எல்லோரும் இது பற்றி ரொம்ப கவலைப் படுவார்கள். நீங்கள் எங்களுக்கு பதிலாக விழிப்புணர்வும் தருகிறீர்கள்.பழைய படி மிகவும் புத்துணர்வுடன் வந்திருக்கிறீர்கள்.மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் என்றார்.இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  பின்னூட்டம் எழுதும்போது உங்கள் வலைத்தளமுகவரி அல்லது மின்னஞ்சல் முகவரியுடன் எழுதுங்கள். 

(Anonymous comments will not be published). 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.  உங்கள் பெயரை Google Connect Widget இல் பதிந்து கொள்ளுங்கள்.  உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு இடும்போது உங்களது மின்னஞ்சல் பெட்டிக்கு வந்து விடும்.


மிக்க நன்றி.


திங்கள், செப்டம்பர் 12, 2011

மருத்துவமனை - வியாபாரமா? சேவையா?

மருத்துவக் கட்டுரைகள் - பாகம் 1

பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் - புற்று நோய் அனுபவங்களை எழுதுகிறார்.

பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்கள் - வானியல் பற்றியும், பிளாஸ்டிக் பற்றியும் எழுதிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தோம். அவர்கள் 25.8.2010 இல் புற்று நோய்க்காக அறுவை சிகிச்சை செய்து அபாரமாக மீண்டு வந்திருக்கிறார். அதற்கு முன் மதுரை மருத்துவமனையில் ஏற்பட்ட அனுபவங்களையும், பின்பு கோவை மருத்துவமனைக்கு சென்றதையும், இடையில் ரேடியேசன் சிகிச்சைக்கு செல்லும்போது சிறுவர் சிறுமிகள் நோயினால் படும் அவஸ்தைகளையும் எழுதியிருக்கிறார். இது கொஞ்சம் பெரிய கட்டுரை. எனவே 2 பகுதிகளாக வெளியிடுகிறோம். எனவே தொடர்ந்து படித்து விழிப்புணர்வு பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.


 

மார்ச்..8 & 9ம் நாளின்..அனுபவ பகிர்வு..!

by Mohana Somasundram on Thursday, March 10, 2011 at 6:23pm
 வணக்கம். நேசமிகு நெஞ்சங்களுடன், நேற்றைய (2011,மார்ச்,9) அனுபவத்தின் நினைவுகள், உணர்வுகள், வேதனைகள், வியப்புகள் என  சில பகிர்வுகளை தர எண்ணுகிறேன். . பணமே குறிக்கோளாய் இயங்கிக் கொண்டிருக்கும்  இந்த உலகில் சில மனித நேய செயல்களும் நடப்பதுண்டு. உயிர்காக்கும் மருத்துவ மனையானாலும் கூட, பணம் இல்லை என்றால், ஒரு நாய் கூட நம்மை மதிக்காது; எந்த உயிரும் காக்கப்பட மாட்டாது. இது எல்லோருக்கும் தெரிந்த நிதர்சனம். நேற்று கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனையில் ஏற்பட்ட ஓர் அனுபவத்தில் நான் மயக்கம் போடாத குறைதான். மார்ச் 4ம் நாள், மருத்துவ பரிசோதனைக்காக , கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனை சென்றேன்.சோதனை முடிந்தது. எனது பல் வேதிசிகிச்சையால் மிகவும் பாதிக்கப்பட்டு, ஒரு வாரமாக  பல்வலி. பழனி பல் மருத்துவர்கள், புற்று நோய் நிபுணரின் ஒப்புதலின்றி, எதுவும் செய்ய முடியாது என்றனர். 


நிபுணர் பல் எடுக்க/வேர்க்கால் சிகிச்சை செய்ய ஓகே சொல்லிவிட்டார்..  எதற்கு பிரச்சினை என்று, ராமகிருஷ்ணா  மருத்துவ மனையிலேயே பல்லையும் ஒரு கை பார்த்து விடலாம் என எண்ணினேன்.பல் மருத்துவரைக் காண ரூ.150  ௦கட்டி, பல் மருத்துவரிடம் சென்றால், அவரும் சரி என்றார். வேறு சோதனைகள் முடிந்தால் தான், இதனை செய்ய முடியும், பாதி சோதனைகள்தான் முடிந்தன. முடிய ரொம்ப நேரம் ஆகி விட்டது. இரண்டு நாள் சென்று வரலாம் என்று திரும்பி விட்டோம். மீண்டும் மார்ச் 8ம் நாள், சோதனை எடுக்கப்பட்டது. அன்றும் பல்லைக் காண்பிக்க வெளி நோயாளி சீட்டு ரூ.150 க்கு வாங்கினேன். பார்க்கவில்லை, காரணம் சோதனை முடியவே நேரமாகிவிட்டது. மீண்டும் நேற்று கோவை படையெடுப்பு. பல் மருத்துவரிடம் போய், கோகுலின் சீரிய ஆலோசனையுடன், எடுத்தேவிடலாம் என முடிவாய் போனால், அவர் சொன்னதில் நான் மூர்ச்சையாகி, கீழே  விழாமல் இருந்தது ஆச்சரியமே..! அப்படி என்ன என்கிறீர்களா?

இந்த மருத்துவ மனையில், ஒரு முறை வெளி நோயாளி சீட்டுக்காக ரூ 150 கட்டிவிட்டால், அடுத்த 15    நாட்களுக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் அந்த மருத்துவரை நீங்கள் பார்க்கலாமாம். என்ன நம்பும்படியாகவா இருக்கிறது.? ஆனால் உண்மை நண்பா..! அது மட்டுமல்ல, அவர் சொன்னதில், அதிர்ச்சியில் இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது.! என்ன தெரியுமா? "பல்லைப் பிடுங்க ரூ.200/- வாங்குவோம். நீங்கள் ஏற்கனவே அதிகமாய் ரூ 150 கட்டிவிட்டதால், அதனை கழித்துக் கொள்கிறோம். பாக்கி 50 மட்டும், பல்லை எடுத்துவிட்டு போய் பணம் கட்டுங்கள்" என்றார். எப்படி இருக்கும்? என்னடா உலகம் இது ? உண்மைதானா..!   நம்பவே முடியவில்லை. மரத்துப் போவதற்கான ஊசி போட்டார். 2 நொடிக்குள் மரத்துப் போய்விட்டது. உடனேயே பல்லையும் பிடுங்கிவிட்டார்,  வலியும் தெரியவில்லை. அனைத்தும் அதிக பட்சம் 5நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டது. எவ்வளவு அவசரம், ஆபத்தான நிலைமை என்றால் கூட, கையிலே காசு, வாயிலே தோசை என்னும் மருத்துவ மனைகள் மத்தியில்,மக்களுக்காக, மனித நேயத்துடன் பணிபுரியும் .. இப்படி ஒரு மருத்துவ மையம்..! அதுவும், நேற்று  அதிகம் கட்டிவிட்டீர்கள், இன்று குறைத்து கட்டுங்கள் என்று..!

  

இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட இரட்டை பெண்குழந்தைகள். ரிது, ரிஷிகாவின் இரண்டாவது பிறந்த நாள், மருத்துவ மனையில்..      கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனை இன்னொரு உயிர் காக்கும்
சேவையையும் சத்தமின்றி செய்கிறது. பூவுலகின் பூத்த சில பிஞ்சுகளின் இரத்த புற்று நோய்க்காக இலவச மருத்துவம் செய்கிறது. ஆமாங்க..! இரத்த புற்று நோய் வந்த மலர்களின் பெற்றோர்கள்/உடனிருப்போருக்கும் சேர்த்து உணவு, உறைவிடம், பாலகர்களுக்கான  அனைத்து மருந்துகளையும், பணமின்றி கொடுக்கிறது இந்த மருத்துவ மனை நிறுவனம்.! இப்போது 9 குழந்தைகள் உள்ளன.

உலக புற்று நோய் தினத்தன்று, ஓவியம் தீட்டப்படும், பாதிப்புள்ள பிஞ்சு

அவர்களுக்கு பொழுபோக்கு பொருள்களும் உண்டு. அவர்கள் மிகவும் அன்புடனும், ஆதரவுடனும், கவனிப்புடனும் பார்த்துக் கொள்ளப் படுகிறார்கள். இதைப் பற்றிய தகவளும்  இந்த வார விகடனில் வந்துள்ளது. நேற்று 2 வயது பெண் குழந்தை ஒன்றை x கதிர் அறையில் பார்த்தோம். வாய்,மூக்கில் குழாய்கள்..! அருகிலிருந்த தந்தையிடம்,,என்ன சார் விஷயம் என்றால், அவர் கண்களில் நீர் ததும்ப, ஒரு வருடமாய் இரத்தப் புற்று என்கிறார் . நம் கண்ணிலும் நீர் திரண்டது.


பாவம் அந்த ஏதும் அறியாத குழந்தை..!நான் வேதிசிகிச்சைக்காக அங்கு தங்கியுள்ள சமயங்களில் அந்த குழந்தைப் பார்த்து படம் எடுக்க நினைப்பேன். பக்கத்தில் பெற்றோர்கள்..! எப்படி எடுக்க? மூன்று வயது சிறுவன், வேதிசிகிச்சை நடைபாதையில் ஓடியாடி விளையாடித் திரிகிறான்.
தலையில் முடி கொட்டி இருக்கிறது. இரத்தப் புற்று நோய்தான்..! புற்று நோய் சிகிச்சை மையம்/அந்த வார்டுக்குப் போனாலே, மனம் கனத்துப் போய்விடுகிறது.
 தொடரும்.....

இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவும், மற்றும் எங்களது பதிவு மேம்பாட்டிற்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றியும், வணக்கமும்.
 
 இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுதுங்கள். தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். உங்கள் பெயரை Google Connect Widget இல் பதிந்து கொள்ளுங்கள். உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு இடும்போது உங்களது மின்னஞ்சல் பெட்டிக்கு வந்து விடும்.
 
மிக்க நன்றி.