ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் மலை மேல் அமைந்த திருவண்ணாமலை கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் (நின்ற கோலத்தில்) கோவில் இருக்கிறது. அந்த கோவிலைப் பற்றி எழுதும்படி திரு ரவீந்திரன் கிருஷ்ணசாமி (ரிஷி ரவீந்திரன்) அவர்கள் அன்புக் கட்டளையிட்டார்
அது பற்றி விபரங்கள் சேகரிக்க, புகைப்படங்கள் எடுக்க நாங்கள் 17.7.2011 அன்று சென்றோம். கேமரா சற்று பழுதாகி விட்டது. அனைத்து புகைப்படங்களும் எடுப்பது இயலாது என்று நினைத்தோம். எனவே முதலில் மற்றவைகளை எடுப்போம் என்று முடிவு செய்தோம். முதல் கட்டமாக நரிப்பாறை என்ற குகைக்கோவிலுக்கு சென்றோம். திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் சற்று விலகி இருக்கிறது. நிறைய வருடங்களுக்கு முன்பு பள்ளிக் குழந்தைகள் (நடந்து செல்லும் காலத்தில்) சுற்றுலா செல்வதற்கு கூட்டிச் செல்வார்கள். நல்ல சோலை மாதிரி இருக்கும். பக்கத்தில் உள்ள பம்ப்செட் கிணற்றில் நீர் இருக்கும். குடிப்பதற்கு அங்கு எடுத்துக் கொள்ளலாம்.
நான் அங்கு சென்று நிறைய வருடங்கள் இருக்கும். முன்பு செல்லும்போது ஒரு குகை இருக்கும். யாரும் அங்கு செல்வதில்லை.
தற்போது நிறைய மாற்றங்கள். சோலை போன்ற தோற்றங்கள் போய் விட்டன. சுற்றிலும் கட்டடங்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் செங்கல் சூளைகள். புகை நாற்றம் நிறைய. ஒரே ஏமாற்றம். ஏக்கப் பெருமூச்சு.இனிமேல் கோவிலுக்கு செல்வோம். நரிப்பாறை குகைக் கோவிலுக்கு செல்லும் வழி என்று ஒரு தகவல் பலகை இருக்கிறது. வழியில் சிறு தெய்வங்கள் இருக்கின்றன.

நான் இது வரை அந்தக் கோவிலுக்குள் சென்றதில்லை. உயரம் கம்மி. எனவே குனிந்து தான் செல்ல வேண்டியிருந்தது.
அங்கு ஸ்ரீதர் சுவாமிகள் படம் நிறுவப் பட்டிருக்கிறது. நாகராஜருக்கு ஒரு சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. குகையின் ஒரு மூலையில் அகஸ்தியருக்கும், ஸ்ரீ ராமனுஜருக்கும் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
அதற்கு எதிர் மூலையில் ஒரு சின்ன குகை போன்ற அமைப்பு இருக்கிறது. அந்த இடத்தில் நல்ல காற்று வருகிறது. அங்கு தீபம் வைக்க சொன்னார். அந்த பெரியவரால் அந்த இடத்திற்கு போக முடியவில்லை. மிகவும் குறுகலான இடம். எனது தங்கை மகன் அருண் அங்கு சென்று தீபம் ஏற்றினான்.

அந்த குகையில் நான், எனது மனைவி திருமதி உமா காந்தி, எனது தங்கை மகன்கள் (இரட்டையர்கள்) அருண், அஷோக், எனது செல்லப் பேரன் தீபன் சக்கரவர்த்தி (எங்களது மகள் ஜெயசுதாவின் மகன்(மதுரை)), எங்களது ஆட்டோ ஓட்டுனர் அனைவரும் தரிசனம் செய்தோம். எங்களுக்கு இது ஒரு பெரிய கொடுப்பினையாக கருதுகிறோம். திரு ரிஷி ரவீந்திரன் அவர்களுக்கு எனது நன்றி. இந்த பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். (கேமரா சரியாக இருந்தால் இங்கு வந்திருக்க மாட்டோம் - எனவே எந்த இடையூறும் இடையூறு அல்ல).
அந்த பெரியவரைப் பற்றி:
அவரது பெயர் என்ன என்று கேட்டோம். அவரது பெயர் பிள்ளையார் என்று சொன்னார். பத்து வருடங்களாக பேச்சு வராமல் மௌனமாக இருந்ததாகவும் அதனால் மௌன சாமிகள் என்று சொல்வார்கள் என்றும் சொன்னார். இயற்பெயர் வெள்ளைச்சாமி என்று சொன்னார். எங்களது சத்தம் கேட்டு வந்ததாக சொன்னார். அவர் வந்திராவிடில் எங்களுக்கு இந்த குகை அனுபவம், தரிசனம் கிடைத்திருக்காது.
பின்பு அருகில் உள்ள கோவிலுக்கு கூட்டி சென்றார். அங்கு நித்தியானந்த சுவாமிகள், ஸ்ரீதர் சுவாமிகள், பழனி மூட்டை சுவாமிகள் படங்கள் இருந்தன. ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. நல்ல தரிசனம் செய்தோம். சற்று கீழே பிள்ளையார் கோவில் இருந்தது. அங்கு சென்றோம்.
உள்ளே நுழையும்போது புதிதாக மலை மேல் ஒரு கோவில் தெரிந்தது. அங்கு செல்வோம்.
பாலசுப்ரமணிய கோவில் என்று இருக்கிறது. செல்வதற்கு நிறைய படிக்கட்டுகள் இருக்கின்றன. இந்த கோவில் ஸ்ரீ வில்லிபுத்தூர் சாலியர் சமுதாயத்தினரால் நன்கு பராமரிக்கப்பட்டு வழிபாட்டு வருகிறது. கோவில் மூடியிருந்தது.
நரிப்பாறையிலிருந்து பார்த்தால் ஒரு பெரிய கட்டிடம் தெரிந்தது. என்ன என்று விசாரித்தோம். அது ஒரு கிறிஸ்தவ கோவில் என்று சொன்னார்கள். இந்த பத்து வருடங்களுக்குள் தான் வந்திருக்க வேண்டும். அங்கு சென்றோம்.
அவர்களிடம் அனுமதி கேட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
புனித வனச் சின்னப்பர் ஆலயம் என்று சொன்னார்கள். கோவில் நல்ல அமைப்பில் இருந்தது. நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து பாதைகளும் நன்கு சீராக உள்ளன. அந்த புகைப்படங்களை தொகுத்திருக்கிறோம்.

இங்கு முடித்து விட்டு தரகுமலை மாதா கோவில் ஒன்று மலை மேல் இருக்கிறது. செல்லும் வழியில் சித்தர் பீடம் என்று ஒரு அமைப்பு இருக்கிறது. இவைகளை புகைப்படம் எடுக்கிறோம். விபரங்களை அடுத்த பதிவில் தருகிறோம்.
இந்த பதிவை படித்து விட்டு நிறை குறை எழுதுங்கள். Google Connect Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரியை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் புதிதாக பதிவிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே வந்து விடும்.
இந்த பதிவிற்கு புகைப்படங்கள் எடுக்க உதவிய அருண், அசோக் அவர்களுக்கும், இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவிய திருமதி ரமாமணி அவர்களுக்கும் நன்றி.
மிக்க நன்றி