செவ்வாய், ஜனவரி 17, 2012

சந்திர கிரகணம் (10.12.2011) பற்றிய பதிவு




நமது நாட்டில் கடந்த வருடம் கடைசியாக (10.12.2011) காணப்பட்ட சந்திர கிரகணம் பற்றிய – பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்கள் முகநூலில் வெளியிட்ட கட்டுரையை அவரது அனுமதியுடன் – எனது பதிவாக இன்று வெளியிடுகிறேன்.  திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்களுக்கு எனக்கு மனப்பூர்வ நன்றிகள்.

படித்துப் பார்த்து உங்களது கருத்துகளை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  மிக்க நன்றி.

இந்த ஆண்டின் கடைசி கிரகணம்.. முழு சந்திரகிரகணம்..2011 , டிசம்பர் 10 



 நிலவோடு புவி இன்று( டிசம்பர் 10 ) விளையாடுதே..!

நண்பர்களே... !நாம் தினமும் வானில் சூரியன், சந்திரன், விண்மீனகள் வருவதை அதன் நகர்வுகளைப் பார்த்து மகிழ்ந்து பதிவும் செய்கிறோம். ஆனால் இவர்களுடன் பூமியும் இணைந்து ஓடிப் பிடித்து விளையாடும் நிகழ்வு வருடத்தில் ஓரிரு நாட்கள்தான் நடக்கின்றன.  அப்படி ஓர் அற்புதமான தருணத்தை..அரிய வான்காட்சியை, வான் நிகழ்வை. ,  2011 , டிசம்பர் 10 ம் நாள், சனிக்கிழமை அன்று சந்திக்கப் போகிறோம். அப்போது பூமியும் நிலவும் ஓடிப்பிடித்து விளையாடும் அற்புதத்தை நாம் கண்டு,  ரசித்து படம் பிடித்து மகிழலாம்., சனிக்கிழமை அன்று இந்த ஆண்டின் கடைசி விளையாட்டை நிகழ்த்தும் சந்திரகிரகணமும் நம்மைச் சந்திக்க காத்திருக்கிறது.  இந்த சந்திர கிரகணம் , டிசம்பர் 10 ம் நாளான்று, சுமார் 5 மணி நேரம் இரவு வானில் அற்புதமாகத் தெரியும்.


இந்தியா, அலாஸ்கா,  வட கனடா,  வட அமெரிக்கா,  ஆஸ்திரேலியா, நி்யூசிலாந்து,  மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஆசிய,  நாடுகளில் இந்த முழு சந்திரகிரகணத்தைக் காணமுடியும்.  மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ளவர்கள் தான் கொடுத்து வைத்தவர்கள் எனலாம்.   இவர்கள்தான் இதனை அற்புதமாக படம் எடுக்க முடியும்.    வட அமெரிக்க மற்றும் ஹவாய் தீவுகளில் உள்ளவர்கள் கிரகணத்தை காலையில் சந்திரன் மறையும் வரை காண்பார்கள். இந்த டிசம்பர் 10ம் நாள் நடைபெற உள்ள விந்தைமிகு வானின் விளையாட்டை, உலகின் 1,50௦ கோடி மக்கள் கண்டு களிக்க முடியும்.  இதனை பொதுமக்கள் வெறும் கண்களால் எந்த வித பாதுகாப்பு கவசமும் இன்றி பார்க்கலாம் . கண்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது


முழுக்கிரகண நீட்டிப்பு. நேரம்..! 




இந்தியாவில் உள்ளவர்களுக்கு இந்த முழு சந்திர கிரகணம் நமது கண்களுக்கு ஓர் அருமையான வான்வெளி விருந்தாகும்.   இந்த விருந்தை இந்தியாவில், சுமார் 51 நிமிடங்கள் முழு கிரகணத்தை உங்களின் கண்களால் ஆசை தீர பருகலாம் .ஆனால் கிரகணம் நீடிப்பது சுமார் 5 மணி நேரமாகும்.  இந்த ஆண்டின் கடைசி கிரகணமும்,  இந்த ஆண்டின் சந்திர கிரகண எண்ணிக்கையில் இரண்டாவது கிரகணமும் இதுவே.  சென்ற ஆண்டும் இதே போலவே,  சரியாக ஓர் ஆண்டுக்கு முன் ஒரு முழு சந்திர கிரகணம் 2010 ,டிசம்பர் 20ல்,  மிக நீண்ட இரவு நாளன்று ஏற்பட்டது.. .அடுத்த சந்திரகிரகணம் 2014, ஏப்ரல், 14-15 ல்தான் நிகழும். வட அமெரிக்க மக்கள் இதனை முழுமையாக காண்பார்கள்.  ஆனாலும் கூட இந்தியாவில் அனைவரும் பார்க்க முடியாது.

கிரகணம் என்றால் என்ன?  

    

   பொதுவாக ஓர் ஆண்டில் 2 -7 கிரகணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.  இந்த ஆண்டில் 4 பகுதி சூரியகிரகணங்களும் ,2 முழு சந்திர கிரகணங்களும் ஏறபட்டுள்ளன.  கிரகணம் (Eclipse) என்பதற்கு மறைப்பு என்பது பொருளாகும், எக்லிப்ஸ் என்பது ஒரு கிரேக்க சொல்.  இதன் பொருள், வான் பொருள் கருப்பாவது ("the darkening of a heavenly body") என்பதே.   சூரிய கிரகணம் என்பது,  அமாவாசை நாளிலும்,  சந்திர கிரகணம் முழு நிலா நாளிலும் உண்டாகிறது. கிரகணம் என்பது சூரியன்,  சந்திரன்,  பூமி மூன்றுக்கும் இடையிலுள்ள கண்ணாமூச்சி விளையாட்டு ஆகும்.  சூரிய கிரகணத்தின் போது சூரியன் மறைக்கப்பட்டு கொஞ்ச நேரம் காணாமல் போகிறது.  கடந்த ஆண்டில், ஏற்பட்ட 6 கிரகணங்களில் ,  4 பகுதி சூரிய கிரகணம்.   மீதி 2 சந்திர கிரகணம். ஆனால் இதே போல் 2009 ஆண்டும்,  6 கிரகணங்கள் ஏற்பட்டன. ஆனால் அவை 2011 ம் ஆண்டு கிரகணங்களின் உல்டாதான்.   அவற்றில் 4 சந்திர கிரகணம். மீதி இரண்டும் சூரிய கிரகணங்கள்.   இந்த ஆண்டு ஏற்பட்டது போலவே,  21 ம் நூற்றாண்டில் 6 முறை இதே போல 4:2  விகிதத்தில் ( 4 சந்திர கிரகணம் இரண்டு சூரிய கிரகணங்கள்)  ஏற்பட உள்ளன.  அவை 2011 , 2029 , 2065 , 2076 & 2094 வருடங்களில் உண்டாகும் என்று கணிக்கப் பட்டுள்ளது.  .இப்படிப்பட்ட நிகழ்வில் எப்போதும் ஜனவரியில் முதல் கிரகணமும்,  டிசம்பரில் கடைசி கிரகணமும் உண்டாகும்.

கிரகணத்தில் சிவக்கும் சந்திரன்..!


இப்போது உருவாக உள்ள சந்திர கிரகணம் மையக்கோட்டில் நிகழவில்லை. ஆனால் முழுமறைப்பு/முழுக்கிரகணத்தின் காலக்கெடு 51 நிமிடங்கள்.   இனி இதைப் போனற நீண்ட முழு சந்திரகிரகணத்தைக் காண இன்னும் 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆம். அடுத்த முழு சந்திர கிரகணம் இந்தியா முழுமைக்கும் அனைவரும் பார்க்கும்படி நிகழும் ஆண்டு 2018 ஜூலை 27 . அதன் முழு மறைப்பு நேரம் 103 நிமிடங்கள்.  அதனால் விஞ்ஞானிகளும், ஆர்வலர்களும், வான்நோக்கர்களும் ஆவலுடன், புவியின் தொடலால் நாணிச் சிவந்த சந்திர பிம்பம்/முகத்தைக் காண, காணொலி மற்றும் படம் பிடித்து படம் காட்ட பல்வகை ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளனர்.   இந்த முறை அவ்வளவாக கருப்பாக இல்லாமல் சிவந்து செம்பு வண்ணத்தைப் பூசிக்கொண்டு ஜொலிக்குமாம். பார்த்து ரசியுங்கள் நிலவின் பேரழகை..! என்ன விலை அழகே.. உன்னை படம் எடுத்து மகிழ்வேன் என்று பாடுங்கள்.

 கிரகண நேரம்..!

    

  இந்தியா முழுமைக்கும், சந்திரன் முழு நிலா நாளான, டிசம்பர் 10 ம் நாள், சுமார் 5 மணி நேரம் புவியின் நிழல் மறைவில் தன்னை மறைத்து தொட்டுப் பிடித்து விளயாடிக் கொண்டிருக்கும்.   இந்த தொடல்/தழுவல் விளையாட்டுத் துவங்கும் நேரம்,  மாலை மணி 6.15.சந்திரன் முழுமையாக பூமியின் நிழலில் தன்னை ஒளித்துள்ள நேரம் துவங்குவது இரவுமணி:7.35 .    இந்த மறைப்பு விளையாட்டு 8.28 மணிவரை நீடிக்கும்.   புவியின் நிழல் சந்திரனை பகுதியாக மறைப்பது முடியும் நேரம். இரவு மணி. 9.48 .  ஆனால் சந்திரன் பூமியின் நிழல் மறைப்பில் முழுமையாக இருட்டாக/கருப்பாகத் தெரியும் கால நேரம், நம இந்திய நேரப்படி மணி 8.27 க்குத்தான்.

சந்திர கிரகணம் துவங்கும் & முடியும்  7 நிலைகளாவன: 




1. சந்திரன் பெனும்பரா ( penumbra) என்னும் அரி நிழலில் நுழையும் நேரம் மாலை:  

17:03: 3

2. சந்திரன் அம்பரா (umbra) என்னும் கருநிழலில் நுழையும் நேரம்:  மாலை:18:15:13

3. சந்திரனின் முழுமறைப்பு/முழுக் கிரகணம் (totality) துவங்குதல் :இரவு 19:36. 29

4. கிரகணத்தின் முழுமை நேரம் (maximum eclipse ): இரவு 20:01:50

5. முழுமறைப்பு/முழுக் கிரகணம் முடிவடையும் நேரம்: இரவு 20:27:16

6. கருநிழலிருந்து (umbra) சந்திரன் வெளியே தலைகாட்டும் நேரம்: இரவு: 21:48:09

7. அரிநிழலிருந்து ( penumbra) சந்திரன் முழுமையாக வெளிவரும் நேரம்:இரவு: 22:00:12

 ஒளி மங்கும் நிலா..!   

டிசம்பர் 10 , முழு கிரகணம் நிகழும் நேரத்தில் நிலா, வானின் உச்சிக்கு வந்து கொண்டிருக்கும்.  பூமியின் நிழலில் நிலா ஒளிந்துள்ள போது நிலவின் ஒளி அவ்வளவாக இருக்காது.  மேலும் முழு சந்திர கிரகண நிலா நாணிச் சிவந்தது போல் இருக்கும்.  கர்ணன் படத்தில் வரும் ”நாணிச் சிவந்தன மாதர்தம் கண்கள்”  என்ற பாடல் இங்கு தான் பொருந்துமோ?  அப்பாடா ஒருவழியாக சந்திர கிரகணம் முழுமையாக பார்த்து முடித்து விட்டது போன்ற் உணர்வு ஏற்பட்டு விட்டதா? அந்த நிறைவினை நேரில் பார்த்து மகிழுங்கள் நண்பா..!


     சுற்று..சுற்றல்..அனைவரும்..சுற்றல்.!



சூரியன்,  பூமி,  சூரியனை வலம் வரும் 8 கோள்கள், அவைகளின் துணைக்கோள்கள்,  குள்ளக் கோள்கள்,  அவைகளைத் தாண்டி இருக்கும் குயூப்பியர் வளையம், அதற்கு அப்பால் உள்ள ஊர்ட் மேகம்., அவற்றிலிருந்து உரு எடுத்து சுற்றும் வால்மீன்கள் என இவ்ளோ..பேரை உள்ளடக்கியது நம் சூரிய குடும்பம். இந்த குஞ்சு குளுவான்கள் படை சூழ சூரியன் தனது தாய் வீடான பால்வழி மண்டலத்தை நொடிக்கு சுமார் 250 -270 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது.  ஆனால் இந்த சூரிய குடும்பம்,  பால் வழி மண்டலத்தில் (milky way galaxy) ஒரு சிறு மணல் துகள் அளவுதான். இந்த துகள் ஒரு முறை பால்வழி மண்டலத்தைஒரு முறை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம். 22 1/2 கோடி ஆண்டுகள். அது மட்டுமல்ல.  இந்த நிகழ்வினை ஒரு பிரபஞ்ச ஆண்டு என்று சொல்கிறோம்.  சாதாரணமாய் பூமி,  தன் துணைக் கோளான சந்திரனையும் இழுத்துக் கொண்டே சூரியனைச் சுற்றிகொண்டிருக்கிறது.  சந்திரனும் தனது கோளான பூமியை, பூமியை 29 1/2 நாட்களில் சுற்றுகிறது.   நம் கண்களுக்கு கண்ணாமூச்சி காட்டும் நமது சூரிய குடும்ப தாய்வீடான, பால்வழி மண்டலம், முழு சந்திர கிரகணத்தின் போது, முழு மறைப்பின் பின்னணியில் அதி அற்புதமாய் தெரியும்.  இம்முறை நீங்களும் பார்த்து மகிழுங்கள் இந்த் அழகிய காட்சியினை..!.

சந்திர கிரகணம் நிகழுமிடம்..!     

 

 இந்த முழு சந்திர கிரகணம் மேஷ ராசியில் நிகழ்கிறது. மேஷ ராசி என்றதும், சோசியத்துக்கு ஓடிவிடவேண்டாம். சந்திரன் மேஷராசி விண்மீன் படலத்தில் (Taurus constellation) காணப்படுகிறது.  அதுவும், குளிர்கால முக்கோணம் எனப்படும் விண்மீன் கூட்டங்களுக்கு மத்தியில் அழகாக காட்சி அளிக்கிறது.  குளிர்கால முக்கோணத்தில் முக்கியமாக, மேஷராசியின் சிவந்த செம்பூத விண்மீனான ரோகிணி, வேட்டைக்காரன் விண்மீன் படலத்தின் திருவாதிரை,  போன்றவை அருமையாய் தெரியும்.  பொதுவாக, முழு நிலா நாளில், சந்திரன் வெண்பளிங்காய் ஒளி வீசிக்கொண்டிருப்பதால்,  அருகிலுள்ள விண்மீனகள், அதன் ஒளியில் ஒளிந்து கொள்ளும்.  இப்பொது சந்திரன் இருண்டு,  ஒளி மங்கி காணப்படுவதால்,  அனைத்து விண்மீனகளையும், வேட்டைக்காரன் விண்மீன் படலத்தோடு இணைந்து காணப்படும் பால்வழி மண்டலத்தையும் காண முடியும்.  


பிரபஞ்சத்தில்..அனைத்தும்..சாய்வே..!

  

பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியனும் கூட 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரன், 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது.  எனவே பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவதுதான் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, அவைகளில் ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுவே கிரகணம் ஆகும்.. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. ஏனெனில் சூரியன்,பூமி, சந்திரன் மூன்றும் தன் அச்சில் வெவ்வேறு பாகையில் சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் சாத்தியக் கூறு எல்லா அமாவாசை/முழுநிலா நாளிலும் ஏற்படுவது கிடையாது. எனவே, எல்லா முழு நிலா நாளிலும்/ அமாவாசை தினத்திலும் கிரகணம் ஏற்படுவதில்லை.


ஏன் சூரியன், சந்திரன் ஒரே அளவில்..!


நமது தாயான சூரியன் ரொம்ப ரொம்ப பெரிசு. சூரியனுடன் ஒப்பிடும்போது, சந்திரன் ரொம்ப பொடிசு. குட்டியூண்டு. புள்ளி.. அதன் விட்டம், 384,400 கி.மீ மட்டுமே.  சூரியன் சந்திரனைவிட 4,00 மடங்கு பெரியது. அதைப் போல பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம்,  பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 400 மடங்கு அதிகம். இந்த அரிதான ஒற்றுமையால் தான், குட்டியூண்டு நிலவும்,  இம்மாம்.. பெரிய் ..ய் ..ய சூரியனும்,  பூமியிலிருந்து பார்க்கும்போது, ஒரே அளவில் தென்படுகின்றன. ௦௦குட்டியூண்டு ..சின்ன நிலா, நம் குடும்ப தலைவரான, மிகப் பெரிய சூரியனை மறைத்து,முழுங்கி,கபளீகரம் செய்து முழுசூரிய கிரகணம் ஏற்படச் செய்வதும் இதனாலே தான்

.கிரகண நேர நிர்ணயிப்பு..!

பூமியில் நிழல் சந்திரனைத் தொடுவதிலிருந்து,  அதன் எதிர் முனையில் விடுவது வரை உள்ள நேரம் சுமார் 5 மணி நேரம் வரை நீட்டிக்கலாம்.  பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்தான் கிரகண நேரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி. ஏனெனில்,  சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றுகிறது.  சில சமயம் அண்மையிலும், சில சமயம் சேய்மையிலும் காணப்படும்.  சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் (சேய்மையில்) இருந்தால், அதன் சுற்று வேகம் மெதுவாக இருக்கும்.  எனவே, முழு மறைப்பு நேரத்தின் கால அளவும் இதனால் அதிகரிக்கும்.   இம்முறை நிகழவுள்ள கிரகணமும் அத்தன்மைத்தே..! இப்போது நிகழவுள்ள சந்திர கிரகணம்..135 வது சாரோஸ் வகையைச் சேர்ந்தது.

   கிரகணத்தின் வரலாறு..!


 ஏதேனியர்கள் போரில் தோல்வி 


records of eclipses which took place thousands of years ago. This bit of cunieform speaks the history of eclipse

பழங்காலத்தில், கிரகணம் என்பது, ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர்.  கிரேக்கத்தில் சூனியக்காரர்கள்,  நாங்கள் எங்களது அற்புத சக்தியால் வானிலுள்ள சந்திரனின் ஒளியை உறிஞ்சி விடுவோம் என சவால் விட்டனர் .முழு கிரகணத்தின் போது ஒளி ஓடிப்போயிற்று.  மக்களும் அவர்கள் விட்ட புருடாவை..நம்பினர்.  இது கி.மு. 425 , அக்டோபர் 9 ம் நாள் நிகழ்ந்தது.  அதற்கு முன்னால், கி.மு.413 , ஆகஸ்ட் 28 ம் நாள் முழு சந்திரகிரகணம் ஏற்பட்டது.  இந்த கிரகணம், சைரகுயுசின் இரண்டாம் போரின்போது வந்தது.  அப்போது ஏதென்ஸ்காரர்கள் (Athenians) வீடு நோக்கி செல்ல திட்டமிட்டனர்.  அவர்கள் துசிடிடெஸ்(Thucydides) என்ற மதகுருவிடம் என்ன செய்வது என்று கேட்டனர்.  அவர் இன்னும் 27 தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றார்.  மதகுருவின் சொல்படி ஏதெனியர்கள் நடந்தனர்.ஆனால் சைராகுசன்ஸ்(Syracusans ) இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு,  திட்டமிட்டு ஏதேனியர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டனர்.  ஏதேனியர்கள் போரில் தோல்வியுற்றனர்.  யூரிமேடான் மாய்ந்தார்.  சந்திர கிரகணத்தின் மேலுள்ள மூட நம்பிக்கையால், ஓர் போர் ஆழ்ந்த அழிவைச் சந்தித்தது.

கிரகணத்தில்.நம் கோயில்கள்..!

  



  இப்படி பல்வேறு கதைகளும் சரித்திரங்களும் நடந்தது பழங்காலத்தில் என்றால்,  தற்போது நவீன முறையில் மூடநம்பிக்கைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.  இந்த சந்திர கிரகணத்தின் போது டிசம்பர் 10 ம் நாள், சபரி மலையில் மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை,  இரண்டு மணி நேரம் ஐயப்பசுவாமி கோவிலின் நடை அடைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.  கிரகணம் முடிந்து பரிகாரம் நடத்திய பிறகு மீண்டும் நடை திறக்கப்படுமாம் . அன்று ஒரு நாள் மட்டும் புஷ்பாபிஷேகம் நடைபெறாதாம். அது என்ன இரண்டு மணி நேரம் என்பது என்று தெரியவில்லை.  கிரகணம் ஐந்து மணி நேரம் அல்லவா? திருச்செந்தூர் முருகன் கோவில்,  பழனி முருகன் கோயில்,  திருப்பதி பாலாஜி கோயில் என அனைத்து கோயில்களின் கதவுகள் மூடப்படுகின்றன.   அது சரி..கிரகண காலத்தில் வானிலிருந்து யாராவது நஞ்சை,  அனைத்துக் கோயில்கள் மேலும் கொட்டுகிறார்களா?  கிரகணத்துக்கு கடவுள் எதிரியா/பிடிக்காதவரா? என்ன நடக்கும் கிரகணத்தின் போது என்பது முழுமையாகத் தெரிந்தும், எப்போதும் மக்களை ஏதாவது ஒரு வகையில் மூடராக வைத்திருக்கவே..ஒரு பகுதியினர் விரும்புகின்றனர்.

சோதிடர்கள் அறிவிக்கும் தகவல்:

 

   “டிச., 10ல் முழு சந்திரகிரகணம் ஏற்படுகிறது.  இதையொட்டி, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் குறித்து பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. டிச., 10 மாலை 6.14 மணிக்கு தொடங்கும் கிரகணம் 9.47 மணி வரை இருக்கும். பவுர்ணமியும், ரோகிணியும் கூடிய நேரத்தில் ராகு கிரஸ்தமாக, வடகிழக்கே பிடித்து வடமேற்காக கிரகணம் நகரும்.முழு கிரகணமாக இருப்பதால் நிலாவின் ஒளி குறைந்து மங்கலாகும்.  பவுர்ணமியில் தொடங்கும் கிரகணம் பிரதமை வரை நீடிக்கிறது.  இரவு 10 மணிக்கு மேல் சந்திரனைத் தரிசனம் செய்ய வேண்டும்.  சனிக்கிழமை பிறந்தவர்களும், கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தினரும், ரிஷபராசியில் பிறந்தவர்களும் மறுநாள் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்”.என இடைவிடாமல் ஜபிக்கின்றனர். 

    கிரகணங்களும்,..ஊடகங்களும்..அறிவியல் மையங்களும்..!  

   


  



மேலே குறிப்பிட்ட தகவல் இரண்டும் நாளிதழ்களில் வந்தவைதான். கிரகணம் தொடர்பான, கட்டுக்கதைகளையும், மூட நம்பிக்கைகளையும், ஊடகங்கள் சும்மா, சகட்டு மேனிக்கு கட்டு கட்டாய், அறிவியலில் தோய்த்து அவிழ்த்துவிட்டுக் கொண்டே இருக்கின்றன.  கிரகணம் எப்படி வருகிறது என்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே, கிரகணம் முடிந்ததும்,  குளித்து,  தர்ப்பணம் செய்கிறார்.  இது எப்படி இருக்கு? அது கூட பரவாயில்லை. வானுக்கு விண்கலத்தை அனுப்பி,  அறிவியலை ஆராயும் பணியைச் செய்யும் இஸ்ரோ விண்வெளி நிலையத்தில் கூட, சாமி கும்பிட்டு,  சூடம் ஏற்றி,  தீபாராதனை செய்த பின் தான், விண்கலம் அனுப்பும் பட்டனைத் தட்டுகின்றனர்.  இப்படி ஒரு கும்பலும் அறிவியல் தளத்தில் அறிவியலுக்குப் புறம்பாய் அலைந்து கொண்டு இருக்கின்றனர் என்பதை அறிவு சால் மக்கள் அறியவேண்டியது காலத்தின் கட்டாயம்.  இன்று அறிவியல் உலகின், பல அறிவியல் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்திக் கொண்டு, அதனுடனே மூட நம்பிக்கைகளையும் போர்த்திக் கொண்டு வாழ்வது என்ன நியாயம்.?

அடுத்த ஆண்டு நிகழ உள்ள கிரகணங்கள்:



  1. 2012 , மே  20,  வளைய சூரிய கிரகணம்.
  2.  2012, ஜூன் 04, பகுதி சந்திர கிரகணம்
  3. 2012,  நவம்பர் 13,  பகுதி சந்திர கிரகணம்.
  4. 2012,  நவம்பர் 28  பகுதி சந்திர கிரகணம்.








இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். 



Google Widget
இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். 



உங்களது Email id ஐ அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். 
மிக்க நன்றி.

திங்கள், ஜனவரி 16, 2012

சர்க்கரை – சர்க்கரை – சர்க்கரை நோய்


பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்கள் சர்க்கரை நோய் & உணவு முறைகள், மருத்துவம் பற்றி : சர்க்கரை – சர்க்கரை – சர்க்கரை நோய் : என்று ஒரு அருமையான கட்டுரை அவர்களது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார்கள்.  அவர்களது அனுமதியிடன் எங்களது பதிவாக வெளியிடுகிறோம்.  படித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  ஏதாவது விளக்கம் வேண்டும் என்றால் அவர்களுக்கு அனுப்பி பதில் வாங்கி பதிவு செய்கிறேன்.
 சர்க்கரை...சர்க்கரை...சர்க்கரை நோய்...
-பேரா.சோ.மோகனா



வாப்பா பாலா,  கையிலே என்ன பொட்டலம்?

அட .எல்லாம் ஒனக்கு பிடிச்ச அயிட்டம் தான்பா.

அட போப்பா, டாக்டர் என்ன சர்க்கரை பக்கமே போகக் கூடாதூன்னுட்டார்.

சரி சரி.  கவலைப்படாத. சக்கரையை ஒம்பக்கம் அனுப்பிடலாம்,  நீ போக வேண்டாம்.




இங்க பாரு நானே நொந்து நூலாயிருக்கேன். நீ வேற நக்கல் பண்றியே.. சரிப்பா...சரிப்பா.. இனிப்புன்னு எப்படி வளைச்சு மண்டுவே. இப்ப அதெல்லாம் போச்சா.  சரி. அண்ணனுக்கு ஒரு டீ வாங்கிடு வா தங்கம்.  சர்க்கரை இல்லாம. நமக்கெல்லாம் 4 டீ வாங்கிடு...






அண்ணே... இங்க தம் டீ தாண்ணே!  சர்க்கரை போடாம கெடக்காது.

சரி பாலா... இன்னிக்கு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க...தம் டீ சாப்பிடு.. சரிப்பா...


 

இப்படிப்பட்ட உரையாடல்களை எல்லாம் நாம் அனைவரும் சமீபகாலமாக அடிக்கடி கேட்க நேரிடுகிறது. இதன் காரணம்..? சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது வெகுவேகமாக... விலைவாசியைப் போல் உயர்ந்து கொண்டே செல்கிறது. எதிர்காலத்தில், கி.பி.. 2030 களில் சர்க்கரை நோயாளிகளின் உலகத் தலைநகர் இந்தியாவாகத்தான் இருக்கப்போகிறது என அறிஞர்கள் கணிக்கின்றனர் நண்பா...! சந்தேகமே வேண்டாம்.எதில் முன்னேறுகிறோமோ இலலையோ, சர்க்கரை நோயாளிகளை உற்பத்தி செய்வதில் பயங்கரமாக முன்னேறி உயரத்தில் நிற்கிறோம். உலக நல நிறுவனம் (World Health Organisation)தான் இப்படி ஒரு உண்மையைப் பேசி, நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறது...!


சர்க்கரையின்... நிலை....! 

  
 



கி.பி. 2000க்குள் உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 17.8 கோடி; மக்கள் தொகையில் 2.8%.2003ல்-18.9 கோடி; இது கி.பி.2030ல் இருமடங்காகி 35 கோடியைத் தாண்டும் என்ற தகவல் நம்மை ஏகமாய் மிரட்டுகிறது . அது போகட்டும்.. இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா?
  •  1995ல்..1.9கோடி; 
  • 2005ல்-3.5கோடி;
  •  2007ல்..4கோடி;
  •  2008 ஜுன் 8ம் நாளின்படி... 4.1கோடி(உலகஅளவில் 24.0கோடி).
  • கி.பி.2025ல், வெற்றிகரமாக 7கோடியை எட்டும் 
என உலக நல நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அப்போது உலகில் இந்தியா, சீனா, அமெரிக்கா மூன்று நாடுகளுமே சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில் முன்னணியில் இருக்குமாம்...!

ஏன்...சர்க்கரை நோய்...! 




அதெல்லாம் சரி..! சர்க்கரை நோய் என்றால்..என்னப்பா.. என்கிறீர்களா? நாம் உட்கொள்ளும் அனைத்து உணவும்,  உணவு மண்டலத்தில் செரிமானம் ஆகிறது. உட்கிரகித்தல் மூலம் இரத்தத்தில் சர்க்கரையாக கலக்கிறது. ஆமப்பா; நீங்கள் இட்லி சாப்பிட்டாலும் சரி, நெய் உருண்டை தின்றாலும் சரி, அல்வா முழுங்கினாலும் சரி...மட்டன், மீன்.. என எது போட்டு தாக்கினாலும் சரி, அது இறுதியில் சர்க்கரையாக மாற்றப்பட்டே,  இரத்தத்தில் கலக்கிறது. இரத்தம் மூலம்தான் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் வேண்டிய சக்தி அளிக்கப்படுகிறது.  இந்த சுழற்சியில், இரத்ததில் உடலுக்குத் தேவையானது போக அதிகப்படியான சர்க்கரை இருந்தால் என்ன ஆகும் தெரியுமா?  நம் வயிற்றுப் பகுதியில் வயிற்றுக்குக் கீழே கணையம் என்ற சுரப்பி உள்ளது.



இந்த சுரப்பியில் ’இன்சுலின்’ என்ற ஹார்மோன் சுரக்கிறது.   இது இரத்தததில் காணப்படும் அதிகமான சர்க்கரையை, கிளைகோஜனாக மாற்றி, எதிர்கால சேமிப்பு களனாக வைத்துவிடுகிறது. இந்த இன்சுலின் போதாவிட்டாலோ, சரிவர வேலை செய்யாவிட்டாலோ..நமக்கு தாங்கமுடியாத ரோதனைதாம்பா! அதன்பெயர்தான் ...சர்க்கரை வியாதி..! என்ன அருமையான பேருப்பா.இது. . நாம சர்க்கரை சாப்பிட முடியாத நிலைமைக்கு இப்படி ஒரு பெயராம். ..!

சர்க்கரையின்...காரணி..! 



சர்க்கரை நோய். நமது வாழ்க்கை முறை தொடர்பான வியாதியாகிவிட்டது இப்போது? பொதுவாக சர்க்கரை நோய் பரம்பரை நோய் என்று கூறப்பட்டாலும், பரம்பரையாக வரும் என்றாலும் இன்று அதையெல்லாம் தாண்டி
  •  குண்டாக இருப்பவர்களுக்கும்
  •  நவீன உணவு & துரித உணவு உட்கொள்பவர்களுக்கும்
  •  மற்றும் வாழ்க்கை முறையும்தான் முக்கிய காரணிகள
என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். நாம முன்னெல்லாம், எல்லா இடத்துக்கும் நடந்தே போவோம். இப்போது காலம் வெகுவாக மாறிவிட்டது. இன்றைக்கு மக்களிடம் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் வந்துவிட்டன. பொதுவாக இன்றைக்கு யாரும் நடப்பதே இல்லை. வாகனங்கள் நம் நடையை குறைத்துவிட்டன. நாம் நடக்க சோம்பேறிகளாகிவிட்டோம். அதுவும் கூட சர்க்கரைநோய்க்கான காரணிகளில் ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமில்லேப்பா.. இன்றைய வாழ்க்கைச் சூழல், அனைவருக்கும் எல்லா சூழலிலும் பல்வேறு வகையான மனவழுத்தங்கள், மன இறுக்கங்கள் உள்ளன. அதுவும் கூட சர்க்கரை நோய் வருவதற்கான காரணமாம்பா..! அதுமட்டுமல்ல.. நகர்மயமாதல், தொழில் மயமாதல், சமுக, பொருளாதார வளர்ச்சி மற்றும் மாற்றங்களினால் வாழ்வியல்...அவசர கதியால் செயல்படுவதால்...என ஏராளமான உணவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால்உருவான நோய்களில் முக்கியமானது சர்ககரை நோயப்பா..!

உணவும்..சர்க்கரைநோயும்...!  

  

சர்க்கரை நோய் பணக்காரருக்கு மட்டுமல்ல...பாட்டாளிகளுக்கும் கூட வருகிறது. உணவு முறையும்.. மனவழுத்தமும் தான்..இதற்கு முக்கிய காரணம் நமது பாரம்பரிய உணவுபழக்கங்கள் மாறியதும், மக்கள் துரித உணவுகளை நாடுதலும், நவீனத்துக்கு தாவிவிட்டலும் கூட இதன் காரணங்கள்தான், .இப்படிப்பட்ட சர்க்கரை நோய் நம்மைவந்து கவ்விக்கொள்கிறது என மருத்துவர்கள் கணிக்கின்றனர். அதிகமாக குளிர்பானங்களை அருந்துபவர்களுக்கும் இந்நோய் வருகிறதாம் நகர்ப்புறங்களில் வாழ்பவர்களில், 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் 11% மக்களுக்கு சர்க்கரைநோய் உள்ளதாம். சென்னை வாழ் மக்களில் 50% பேருக்கும்,கிராமபுறங்களில் வாழ்பவர்களிடம் 30% பேருக்கும் சர்க்கரை வியாதியுள்ளது.

மருத்துவர்களின்...கணிப்பு...!




நம்மை வாட்டி, வதைத்து, சித்திரவதைப் ப்டுத்தி மிரட்டும் சர்க்கரை நோய் மூன்று வகைப்பட்டது 
  • சிலருக்கு பிறவியிலேயே,  இன்சுலின் சுரக்காமல் இருப்பதும் உண்டு.  இவர்கட்கு குழந்தையிலிருந்தே சர்க்கரை நோய் பாதிக்கிறது. சிலருக்கு அவர்கள் உடம்பில் சுரக்கும் இன்சுலின் அளவு போதாது. இவர்களிடம் 40 வயதுக்குள் சர்க்கரைநோய் சரணடையும். இது முதல்வகைச் சர்க்கரை நோய்.
  •  உடல்பருமன், பரம்பரை, உடல்செயல்பாடு குறைதல், நகர்மயமாதலும், உணவுப்பழக்கமும், மன அழுத்தம், போன்றவற்றால் பலர்க்கு நடுத்தர வயதைக் கடந்தும், சர்க்கரைநோய் குஷியுடன் உடலில் தங்கி ஓய்வெடுக்கிறது. இது இரண்டாம் வகையாகும்.
  • உலகிலுள்ள சர்க்கரை நோயாளிகளில் 90% பேர் இந்த வகையினரே! முன்றாவது வகை கருவுற்றிருக்கும் பெண்களிடம் மட்டும் தாய்மை பேறு காலத்தில் எட்டிப்பார்த்துவிட்டு, பிறகு ஓடியே போய்விடும். இவர்களுக்கு முதுமையிலும், இவர்களின் குழந்தைகளுக்கும் பிற்க்காலத்தில் சர்க்கரை வியாதி வரும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

உண்மை...அறியாத...மக்கள்..!    



நம் இந்திய நாட்டில், குடிமக்களில் சுமார் 50% பேருக்கு எவ்வித மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படுவது இல்லை...நகர்ப்புறங்களில் வாழ்பவர்களுக்கும் கூட, 25% பேருக்கு சர்க்கரைநோய் பற்றிய விழிப்புணர்வே இல்லை.ஆனால் இப்போது வாழும் மக்களில் அவர்கள் நினைத்தால் 40% பேருக்கு, சர்க்கரை நோய் வராமல் தடுக்கமுடியும், அவர்க்ளும் கூட கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பது இப்போது அறியப்படுகிறது. சர்க்கரை வியாதி பற்றிய விழிப்புணர்வு,முன்பைவிட அதிகரித்திருந்தாலும், பட்டமேற்படிப்பு படித்தவர்கள், தொழில் முனைவோர், மருத்துவர் உட்பட, 42.6% பேருக்கு மட்டுமே இந்நோய் தடுக்கக்கூடியதே என்ற சரியான கணிப்பு உள்ளது. இதனால் ஏற்படும் அபாயகர விளைவுகள் பற்றிய உண்மைத் தகவல்கள் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. 1.9% பேரின், உடல்பருமன், மற்றும் உடல் செயல்பாடு குறைவால், சர்க்கரைநோய் வருகிறது எனத் தெரிந்து வைத்துள்ளனர். சர்க்கரை நோய் வந்துள்ளவர்களில் கூட 40% பேருக்கு மட்டுமே, சர்க்கரை நோய், உடலின் மற்ற உடல் பாகங்களுக்கும், . வேறு பிரச்னைகள் சர்க்கரைவியாதி மூலம் வரும் என்றே தெரிந்து வைத்துள்ளனர்.

உறுப்புகளை...சிதைக்கும்...சர்க்கரை நோய்...! 

வெள்ளி, ஜனவரி 13, 2012

மகரிஷி மகேஷ் யோகி பற்றி ஒரு பதிவு

எனது முகநூல் நண்பர் திரு ராம சுப்ரமணியம் நாகேஸ்வரன் இன்றைய முகநூலில் ‘மகரிஷி மகேஷ் யோகி’ பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார்.  மனவலிமை, பிரார்த்தனையால் என்னென்ன சாதிக்க முடிந்த்து என்று எழுதியிருக்கிறார்.  படித்துப் பாருங்கள்.  எனது பதிவாக வெளியிட அனுமதி அளித்த எனது இனிய நண்பர் திரு ராம சுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி.  இந்த மாமனிதர் எனக்கு நண்பராக நான் பெற்றது நான் செய்த புண்ணியம் தான்





1962 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டது. சீனப்படையினர் இந்திய வீரர்களையும்,ஆயுதங்களையும் கைப்பற்றி முன்னேறிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் இங்கிலாந்தில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வந்தார்.அங்குள்ள மக்களிடம்,
“போரின் காரணமாக எனது இந்திய‌ நாடு சண்டையில் ஈடுபட்டுள்ளது. எனவே உடனடியாக நான் இந்தியா போக வேண்டும்” என்று சொல்ல,அங்குள்ள மக்கள் மகரிஷியிடம்,“உங்கள் ஞாபகார்த்தமாக ஏதாவது ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும்” என்று கேட்டனர்.உடனே அவர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு டேப் ரெக்கார்டரை எடுத்து வருமாறு பணித்தார்.



Science of being and art of Living என்ற தலைப்பின் கீழ் ஆன்மீக சொற்பொழிவாற்றி அவர்களுக்கு அளித்தார்.பின்னர் அச்சொற்பொழிவைப் புத்தக வடிவில் Penguin என்ற நிறுவனத்தினர் வெளியிட்டனர்.அது அவர்களுக்குக் கோடிக்கணக்கில் டாலர்களைச் சம்பாதித்துக் கொடுத்தது என்பவை செய்திகள்.!


இந்தியா வந்த மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,இந்திய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களை சந்தித்து,“இப்போரை என்னால் தடுத்து நிறுத்த முடியும்.ஆனால்,நான் சொல்கிறபடி சில செயல்களை போர் நடக்கும் இடத்தில் செய்ய உங்களால் முடியுமா?” எனக் கேட்டார்.!


அதற்கு இந்திய ஜனாதிபதி, “முடியாது...எங்கள் அரசு ஒரு சாமியார் பின்னால் போய்விட்டதாக மற்ற கட்சிகள் அவதூறு கூறுவார்கள்.ஆகவே,அரசு சம்பந்தப்படாமல் தாங்களே தனியாக எதுவும் செய்து போரைத் தடுத்து நிறுத்த முடியுமா என்று பாருங்கள்” என தனது இயலாமையை வெளியிட்டார்.



உடனே,மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,தனது செயலாளர் தேவேந்திராவுடன் போர் நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் சென்றார். அவ்விடம்,“இந்தப் போர் நடப்பதற்கு சீனாவில் உள்ள ஒரு மனித மூளையே காரணம்.அவர் மனதை மாற்றிவிட்டால் போதும். அதை தியானம் செய்து மாற்றப் போகிறேன்.நான் வெளியில் வரும்வரை காவலாக இரு.யாரையும் உள்ளே விடாதே” என்று கூறி உள்ளே சென்றுவிட்டார்.




பின்,24 மணி நேரம் கழித்து வெளியே வந்த மகரிஷி மகேஷ்யோகி பக்கத்திருந்த ஊருக்குச் சென்று தினசரிப் பத்திரிகை வாங்கி வா என்று அனுப்பி வைத்தார்.பத்திரிகை வங்கிப்படித்த மகரிஷியின் செயலாளருக்கு ஆச்சரியமாக இருந்தது.ஆம்,சீனா சண்டையை நிறுத்தி விட்டது.தன் படைகளை இந்தியாவின் எல்லையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டது.



இதைப் படித்ததும் அவரால் நம்ப முடியவில்லை; ‘இப்படியும் நடக்குமா?’ என்று ஆச்சரியத்தில் அதிர்ந்து போனார். என்னாலும் நம்ப முடியவில்லை. எனவே தான் கீழே அதன் ஆதாரங்களை கொடுத்திருக்கிறேன்.!

நன்றி:மகரிஷியின் ஆழ்நிலை தியானம்,பக்கம்71,72.வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,சென்னை 4.விலை:ரூ.80/-




யோகக்கலை “ஆழ்நிலை தியானம்” எனும் Transcendental Meditatior (T.M.) இதன் செயல் முறையை எளிமையாக செய்யக்கூடிய மந்திர ஜபமாக மாற்றி உலகப்புகழ் பெறுமாறு வளர்த்தவர் மகரிஷி மகேஷ் யோகி (1917 – 2008) அவரால் 1955 ல் ஆழ்நிலை தியானம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1957 ல் மகரிஷி உலக சுற்றுப்பயணம் செய்து இந்த தியான முறையை பரப்பினார். 1959 ல் அவர் ‘அகில உலக தியானஸ்தாபனம்’ என்ற அமைப்பை துவங்கி, 1961 லிருந்து ஆழ்நிலை தியானத்தை பயில்விக்க, பல ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். வேகமாக பரவிய ஆழ்நிலை தியானம் குறிப்பாக அமெரிக்கர்களை மிகவும் கவர்ந்தது. 1998 ல் மகரிஷியின் ஸ்தாபனத்தால் 1000 பயிற்சி கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. 40 லட்ச ஜனங்கள் இந்த தியான முறை கற்றனர். மகரிஷியின் ஸ்தாபனத்தின் சொத்துக்கள் / பண இருப்பு – 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஒரு பில்லியன் என்றால் இலட்சம் கோடி! சுமார் மூன்றரை இலட்சம் கோடி அமெரிக்கன் டாலர்கள். எம்பூட்டுன்னு தெரியலையே...! அனேகமா ரவி சாருக்கு Ravi Nag..தெரிந்திருக்கும்.!


ஆழ்நிலை தியானம் பிரசித்த பெற்ற யோக முறை மட்டுமல்ல. மிக அதிகமாக ஆராய்ச்சிகள் நடத்தப்பெற்ற தியான முறையாகும். பல ஆய்வுகள் இதனால் குறிப்பிடும்படியான பயன் ஏதுமில்லை, தவிர மற்ற தியான முறைகளை விட இது சிறந்ததல்ல என்கின்றன. ஏனைய ஆய்வுகள் ஆழ்நிலை தியான மந்திரங்களால் பலனுண்டு என்கின்றனர். உண்மையில் நமக்கு ஒன்றுமே இது பற்றி தெரியாது.! எனவே அந்த சங்கதிகளுக்குள் நாம் செல்ல வேண்டாம்.


மகரிஷி மகேஷ் யோகி: ஜனவரி 12...1917...பிரவரி 5...2008. (91ம் அகவை) ...இன்று (நேற்று) அவரது 95ம் பிறந்தநாள். ஒரு சிறு நினைவு கூறல்.


இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். 

உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். 

உங்கள் அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல்  வாழ்த்துகள்.


மிக்க நன்றி.