முகநூல் எனக்கு தந்த மற்றுமொரு கொடை எனது அருமை மகள்
திருமதி தீபா நாகராணி ராமமூர்த்தி.
அவர்கள்
மதுரையைச் சேர்ந்தவர்கள். எனது முகநூல் நண்பர்
மாமனிதர் திரு ஈரோடு கதிர் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வரும்போது
அவருடன் பேசும் போது
எனக்கு திருமதி தீபா நாகராணியை அறிமுகப்படுத்தினார்கள். அதன் பின் அவர்கள் எங்கள் வீட்டிற்கு குடும்பத்திடன்
வந்தார்கள்.
அவர்கள் முகநூலில் இருக்கிறார்கள். அருமையாக பயணக் கட்டுரைகள் எழுதுகிறார்கள். இது அவர்கள் நாகர்கோவில் வந்த அனுபவம் – முகநூலில்
எழுதியது. நான் அவர்களை பதிவு எழுத வரும்படி
வேண்டினேன். அவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் நாகர்கோவில் அனுபவங்களை எனது பதிவில்
வெளியிடுகிறேன்.
இனி திருமதி தீபா நாகராணி பேசுகிறார்.
மாடு மேச்ச மாதிரியும்
ஆச்சு, மச்சினனை பார்த்த மாதிரியும் ஆச்சு"
என்ற பழமொழிக்கேற்ப ஓரிரு முறை மட்டும் பேசிப் பழகியுள்ள எனது கணவர் திரு ராமமூர்த்தியின் தோழியின் திருமணத்திற்காக ஏப்ரல்
18 ஆம் தேதி நாகர்கோவில் சென்று அப்படியே திருவனந்தபுரத்தையும் சுற்றிப்
பார்க்க கிளம்பிட்டோம்.
நாகர்கோவிலில் நிறைய இடங்களுக்குப்
பின்னால் ஜங்ஷன் ஒட்டி கொண்டிருக்கும். செட்டிக்குளம் ஜங்ஷன், கோட்டாறு ஜங்ஷன் என்று. ஒரே ஊரில் இத்தனை ஜங்ஷன்களா
என்று குழம்பி, உள்ளூர்வாசியிடம் கேட்ட பொழுது, அவரின் பதில், நகர் என்ற
அர்த்தத்திலேயே இந்த ஜங்ஷன் உபயோகிக்கப்படுகிறது என்று விளக்கினார்.
நாகர்கோவிலில் பெண்கள்
கேரளப் பெண்களைப் போலவே தளர்வாய் தலை வாரி இருந்தனர். பெரும்பாலும், வயிற்றைத் தொடும் டாலர் சங்கிலிகளை
அவர்கள் அணிந்திருந்தது வித்தியாசமாகப் பட்டது.
பார்க்கும் ஆண்களில் பாதி பேருக்கும் மேல் வேட்டி அணிந்திருந்தனர்.
ஒரு மாவட்டத்தின் தலை நகரில், இது போன்று பார்ப்பது அரிது.
கூர்ந்து கவனித்தால் ஒழிய, அம்மக்கள் பேசும் மொழி தமிழ் என்பது தெரியாது. கேரள
ராகத்துடன் சிற்சில மலையாள வார்த்தை கலப்புடன்
வசீகரிக்கிறது நாஞ்சில் வட்டார வழக்கு.
சென்ற முதல் நாள், திருமண உணவு
விருந்தில் - ரசம் முதல் பாயசம் வரை, அனைத்திலும் சுக்கு சேர்க்கப் பட்டிருந்தது.
செரிமானத்திற்கு நல்லது என்றாலும், அந்த நேரம் சாப்பிட முடியவில்லை. 'சுக்குக்கு மிஞ்சின சொக்குப் பொடி இல்லை' என்பதை
கடை பிடிக்கும் சமையல் போல. படு
இனிப்பாக பரிமாறப்பட்ட பருப்பு பாயாசம்,
அதன் மேலேயே , இனிப்பற்ற பால் பாயாசம் ஊற்றி சென்றது வித்யாசமாக இருக்கிறதே என்று எண்ணி
முடிக்கும் வேளையில், என்ன ஏது என்று கேட்கும்
முன்னரே, அதில் இனிப்பு பூந்தியை தூவி சென்றனர்.
அனைத்தையும்
கலந்து சாப்பிட வேண்டுமாம்.
ஒரு வழியாக உணவை முடித்துக்
கொண்டு அறைக்கு திரும்பினோம்.
நாங்கள் தங்கி இருந்த விடுதியில், ஐம்பது வயதிற்கு மேற்பட்டோரே ரூம் சர்வீஸ்களில் ஈடுபட்டது
மனதை சங்கடப் படுத்தியது.
சமமான சாலைகளிலேயே பயணப்
பட்ட எனக்கு, அரை கிலோமீட்டர் கூட சமமில்லாத,
ஏற்ற இறக்கம் நிறைந்த சாலைகள், அதில் ஒழுங்காக
கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், சீராக செல்லும் வாகனங்கள் வியப்பேற்றியது. இன்னொரு
குறிப்பிடப்பட்ட வேண்டிய அம்சம், காணும் வீடுகள்
அனைத்திலுமே ஏதேனும் செடிகள், மரங்கள் சூழ
காணப்பட்ட பசுமை சூழல். ஒவ்வொரு வீட்டிலுமே, மா, பலா, தென்னை மரங்கள், குறைந்தபட்சம்
இருந்தன. ஊர் மொத்தமும் வெக்கை குறைவாக இருந்ததற்கு
இதுவும் ஒரு முக்கிய காரணம்.
அடுத்த நாள், காலை ஆறு மணிக்கெல்லாம், வாடகைக்கு
அமர்த்திக் கொண்ட வண்டியில் கிளம்பி, திற்பரப்பு அருவிக்கு அதீத எதிர் பார்ப்போடு
சென்றோம். நாகர்கோவிலிருந்து நாற்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில்
இருந்தது. ஒரே மாதிரியான வேகத்துடன் குறைவான அளவு உயரத்தில் இருந்து கொட்டிக்
கொண்டிருந்த தண்ணீர், பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.
கீழே போய் நின்றவுடன், சிறு சிறு கற்களை தாங்குகிற
வலியில் எறிந்தால் ஏற்படும் உணர்வு, களைப்பை களைவது போல உணர்வை தந்தது. கூட்டம்
மிக குறைவாக இருந்ததால், அதிக நேரம் அருவியின் நீரை மேலே வாங்கி கொண்டு அமைதியாக
நிற்க முடிந்தது.
அங்கிருந்து கிளம்பி மாத்தூர் தொட்டிப்பாலம்
அருகில் செல்லும் பொழுதே வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
தரையில்
இருந்து முப்பது மீட்டர் உயரத்தில் அமைந்திருந்த ஒன்றரை கிலோமீட்டர் நீளமான பாலம்,
சுற்றில் நிறைந்து காணப்படும் மரங்கள், மலைகள்,
கீழே இருந்த பூங்கா என்று வேறு ஒரு உலகத்திற்கு வந்து விட்ட உணர்வை அளித்தது.
திருவனந்தபுரம் நோக்கி சென்ற வழி எங்கும் ரப்பர் தோட்டங்கள்,
இடை இடையே வீடுகள், குளிர்ந்த காற்று என்று அனுபவித்துக் கொண்டே சென்ற சாலையில், ஏகப்பட்ட
திருப்பங்கள், வளைவுகள், சில இடங்களில் மிக
குறுகலான சாலைகள் என்று திக் திக் பயணத்தை சாமர்த்தியமான ஓட்டுனரால் பாதுகாப்பாகத்
தொடர்ந்தோம்.
மார்த்தாண்டத்திலிருந்து சாலைகள் அகலமாக இருந்தன,
அதே ஏற்ற இறக்கங்களோடு இருந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த
பல விதமான கடைகள், கட்டிடங்கள் போன்றவை நாகர்கோவிலுக்கு அடுத்த பெரிய ஊர் கன்னியாகுமரி
மாவட்டத்தில் மார்த்தாண்டம் என்பதை சொல்லின.
எல்லைப் பகுதியில் இருக்கும் இடங்களில்
உள்ள நல்ல விஷயங்களில் ஒன்று, அங்கு வசிக்கும் மக்கள் குறைந்தபட்சம் இரு மொழியில் திறமைப் பெற்றவர்களாக
இருப்பர். களியக்காவிளை
என்ற பகுதியில் பல இடங்களில் ஆங்கிலத்தையும்
சேர்த்து மும்மொழிகளில் விளம்பரப் பலகைகள் இருந்தன. குழித்துறை
என்ற இடத்தை தாண்டியதும், கேரளாவின் பாரசாலா ஆரம்பாகிறது. இது வரை தமிழுக்குப்
பழகி கொண்டிருந்த கண்கள் சடாரென மலையாளத்தை சந்திக்கின்றன, சில கிலோமீட்டர்கள்
தூரத்தில், அரைகுறையாக அறிந்திருக்கும் மொழியை, எங்கு நோக்கினும், சரி பார்த்துக் கொள்வது
நம்மில் அநேகருக்கு இருப்பது போல, கீழே இருந்த ஆங்கிலத்துடன் தவறை சரி செய்து
கொண்டே திருவனந்தபுரம் மிருக காட்சி சாலைக்கு சென்றோம்.
மிருக காட்சி சாலையில் அதிக கூட்டம்,
உள்ளே செல்ல எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை,
ஆனால், இவ்வளவு தூரம் வந்து விட்டு, இதனைப் பார்க்காமல் போனால் நன்றாக இருக்காது என்ற
ஒரே காரணத்திற்காகவே உள்ளே போனேன். விரிந்த பரப்பில், சீரான இடைவெளியில், காட்டில்
இருப்பது போன்ற அமைப்புடன், விலங்குகளின் அரிய வகைக்கு ஏற்ப அமைக்கப் பட்டிருந்த கூண்டுகளின்
வரிசையில் சிங்கம், புலி போன்றவை கடைசியில் இருந்தன.
கூண்டில் அடைபட்டிருந்த புலி ஒன்று சில நிமிடங்கள் எங்களுக்காக
பூனை நடை (Cat Walk) நடந்து போனது, பிரத்யேக பயிற்சி இல்லாமல், வெகு அழகாக.
உள்ளே பாதி தின்று போட்ட இறைச்சியின் எச்சம் ஓரத்தில் கிடந்தது. என்ன சிங்கம்,
புலி என்று இருந்து என்ன செய்ய, மொத்த சுதந்திரமே
இந்த ஐம்பது அடிக்குள் தான் அதற்கு என்று எண்ணிய பொழுது பரிதாபமே மேலோங்கியது.
அப்படியே சற்று தொலைவு சென்றால் வரவேற்கிறது வேலி பார்க்
....
சிற்பங்கள், பூச்செடிகள், தோட்டத்தால்
ஆனது. நடந்தால் கடல் மணல் கால் எங்கும் பரவுகிறது, நேராகச்
சென்றால் படகு சவாரி செல்லலாம், இடது புறத்தில்
கொஞ்சம் நடந்தால், சிறுபாலம், அதனை கடந்தால்,
மிகக்குட்டி தீவு, அங்கு குதிரை சவாரி உட்பட, கடற்கரைக்கு உரிய அனைத்து அம்சங்களும் அனுபவிப்பதற்கு
உண்டு.
சீரற்ற சாலைகள், சீரான
கட்டிடங்கள், பார்க்கும் இடமெல்லாம் மரங்கள் செடிகள் என்றுத் தொடர்ந்த பயணத்தின்
அடுத்த கட்டமாக கோவளம் கடற்கரை;
மிக அழகாக
இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நெட்டு குத்தலான
பாதையில் இறங்கினால் அடையலாம். (ஓட்டுனர் அந்த வழியில் தான் சென்றார்) அங்கு
ஒரு புறம், பாறை, மரம், செடி, மலை உடன் எல்லையற்ற
கடலில் இருந்து வந்து கொண்டே இருக்கும் அலைகள், குதித்து ஆட்டம் போடும் மக்கள்
என்று வண்ணமயமாக இருந்தது. லேசாக தூறல் ஆரம்பிக்க,
சட்டென்று மாறிய வானிலை அனுபவிக்க ஆரம்பித்தோம்.
கேரளாவில் நிறைய இடங்களில் காணப்பட்டது
கம்யூனிஸ்ட் கட்சி சம்பந்தமான விளம்பரப் பலகைகள், கொடிகள். சிறிய அளவில் காங்கிரஸ் கட்சியின் விளம்பரங்களும்
காணப்பட்டன. கோவளம் கடற்கரை செல்லும் வழியில் கார்ல் மார்க்ஸ் சிலை. இவை எல்லாமே நாம் தமிழ் நாட்டில் இல்லை என்பதை நினைவுபடுத்தின.
திரும்பிய சில இடங்களில்
ஒட்டப்பட்டிருந்த திரைப்பட சுவரொட்டிகளில்,
மம்மூட்டி, மோகன்லால், ப்ருத்வி ராஜ், கலாபவன் மணி உள்ளிட்டோருடன், நம்மூர் சசி குமாரும்
சிரித்து கொண்டிருந்தார். ஒரே ஒரு போஸ்டரில்
மட்டுமே அழகான நடிகையின் படம் இருந்தது, யார் அது என்று உற்று நோக்கும் பொழுதுதான்
தெரிந்தது, அது நடிகர் திலீப் பெண் வேடமிட்டு
நடித்த படம் என்று. என்ன ஆயிற்று கதாநாயகிகளுக்கெல்லாம்? ஊர்,
உலகத்துக்கே (சிறந்த!?) கதாநாயகிகளை வழங்கிக் கொண்டிருக்கும் கேரளாவில், அவர்கள் ஊரில் வெளியாகும் படத்தில் ஒருவரைக் கூட
காணவே காணோமே... எல்லாரும், கோலி வுட், பாலி வுட் , என்று பரபரப்பாக இருக்கின்றனரோ?
கோவளம் கடற்கரையில் கண்ட அரபிக்கடலும்
சரி, கன்னியாகுமரியில் பார்த்த இந்து
மகாசமுத்திரமும் சரி, சென்னையில் காணும்
வங்காள விரிகுடாவும் சரி, நீர், குணம்
எல்லாம் ஒன்று தான். பேர் தான் வேறு வேறு வைத்திருக்கிறோம். எந்த மாநிலத்தில், நாட்டில் இருந்தாலும் மக்கள் அனைவரும் ஒன்று
தான்.
நீராய் இல்லாமல் போனதாலோ,என்னவோ
பல காரணிகளால் மாற்றப்பட்ட மக்களின் மனங்கள்.
மகிழ்ச்சியாக/வசதியாக இருப்பதற்காக என்று பிரித்து வைக்கப்படும்
சில விஷயங்கள், சில நேரங்களில் சங்கடத்திலே கொண்டு போய் நிறுத்தி விடுகின்றன. சற்றே கனத்த இதயத்துடன் ஊர் திரும்பினேன்.
இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.
உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.
மிக்க நன்றி.