பேராசிரியர் மோகனா சோமசுந்தரம்
அவர்கள் ஒரு வீரப்பெண்மணி. அவர்களது
பன்முகத்துறைகளில் உள்ள ஆளுமை வியக்க வைக்கிறது.
அம்மா, உங்களை
நினைத்து பெருமைப் படுகிறோம், வியக்கிறோம்.
வணங்குகிறோம். உங்களை நாங்கள்
பார்க்க வேண்டும். மதுரை அல்லது இந்த
பகுதி வந்தால் சொல்லுங்கள்; நாங்கள் உங்களைப் பார்க்க வேண்டும். மகிழ்ச்சி அம்மா.
அவர்கள் Breast
Cancerஇலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் மருத்துவமனைக்கு சென்று வந்ததை –
பள்ளியில், கல்லூரியில் – இன்னொரு பாடம் படிக்கச் சென்றதைப் போல், மிகவும் எளிதாக,
அருமையாக சொல்கிறார்கள். அவர்கள்
வார்த்தைகள் மூலமாக கேட்போம்.
திரும்பிப் பார்க்கிறேன்.. இது நிஜமா? கனவா?
வணக்கம் நண்பர்களே.
இன்று ஆகஸ்ட் 25 , இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் இந்த நாளில் எங்கிருந்தேன்?.
ம்.ம். ஒரு ICUஅறையில் மோட்டுவளையைப்
பார்த்துகொண்டு நிச்சலனமாய் படுத்திருந்தேன் . நான்
மட்டும் மனத்தளவில் , தனியாய், சுற்றிலும் 50 பேர் படுத்திருந்தனர்.
இருந்தும் கூட நான் தனிமையில்தான் இருந்தேன்.. இப்போது, நிலைமை எவ்வளவு மாறி உள்ளது. உடல் நிலை எவ்வளவு தேறி உள்ளது, டாக்டரே வியக்கும்படி.
உங்களைப்பார்த்தால் புற்று நோய் வந்து தொடர் சிகிச்சையில் இருப்பவர் போலவே நான்
இல்லையாம். என் டாக்டரின் சர்டிபிகேட்.
. அது மட்டுமா? நான் முன்பை விட நன்றாக, படு ஸ்மார்ட்
ஆக இருக்கிறேனாம். டாக்டர் சொன்னது. மனதில் ஏராளமான விஷயங்கள் சடசடவென வந்து விழுகின்றன.
நினைவுகளின் ஏடுகள் படபடவெனப் புரட்டப்படுகின்றன.

நெஞ்சம் படபடக்க வாசலுக்குச் சென்று, ஊஞ்சலில் அமர்கிறேன். இரவு மணி 11
.30 தெரு வாசலில், மனதை மயக்கும்
ரம்யமான மணம் மிதந்து வந்த நம்மை மயக்குகிறது. அப்படியே நெஞ்சாம் கூட்டுக்குள், என்னைக் கேட்காமலே நுழைந்து, பின் உட்கார்ந்து
அரசாட்சி செய்யத் துவங்கிவிட்டது. என்ன
அநியாயம் இது அனுமதி இன்றி உள்ளே நுழைவது.
இதுதாங்க வாசனையோட தன்மை, எதிர்
வீட்டிலிருந்து, எங்கள் வீட்டை நோக்கி
எட்டிப்பார்க்கும் பவள மல்லிகையின் மனம் இது. மரத்தில், அந்த இரவிலும், ஒற்றை ஒற்றையாய், கொத்து
கொத்தாய் பளீரென்று தெரியும் பவள மல்லியின் வெள்ளைப்
பூக்கள். இவை அடுத்த நாள் காலை நாலு
மணிக்கே, பூமித்தாய்க்கு
சமர்ப்பணம். ஆம், அனைத்து மலர்களும் கீழே கவிழ்த்து வைக்கபட்டிருக்கும். அருகே, கும்மென்ற இருட்டில் வேகமாய் பிஸ்கட் மரத்திலிருக்கும்
சூப்பர் இனிப்பு பழத்தை லபக் என்று கவ்விச் செல்லும் பெரிய பழந்தின்னி வௌவால்.
அம்மாடி.. எந்தா பெரிசு.. இந்த மரத்தை வெட்டச் சொல்லி தெரு முழுவதும் ஒரே
கம்ப்ளெயின்ட். எதற்கு மரத்தை வெட்டச் சொல்கிறார்கள்
என்கிறீர்களா? இரவில் மரத்தில் பழம் தின்ன வௌவால் வருகிறதல்லவா, அது வீட்டிற்குள்
நுழைந்துவிட்டால் வீட்டிக்கு ஆகாதாம். அதனால், நான் முடியாது என்று மறுத்ததுடன்,
நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போங்கள். நான் சட்டத்தின் மூலம் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.
அந்த மரத்தில் ஏராளமான வௌவால்கள் வந்து தன் பசியைப்
போக்கி கொள்கின்றன. காற்று தரும், உணவு தரும், நிழல் தரும், வெம்மை
தடுக்கும் மரத்தை வெட்டுவதா, முடியவே
முடியாது என்று இருக்கிறேன். இதில் என்
அம்மாவுக்கும் அண்ணிக்கும் கூட கொஞ்சம் வருத்தம்தான். எங்கள் வீட்டின் முகப்பு சுவர்களை
வௌவால் தன் எச்சத்தால் பாழாக்குகிறதாம். இருந்துவிட்டுப் போகட்டுமே
என்கிறேன் நான். . இப்படிப்பட்ட நினைவுகளும், சின்ன சின்ன உணர்வுகளும்தான் என்னை
உற்சாகப்படுத்தி ஊக்குவித்து, இந்தளவுக்கு இயக்கிக்
கொண்டும், மனந்தளராமல் செயல்படவும், , மனதை இளமையாகவும், வைத்திருக்க உதவுகின் றதோ?
அந்த நாளை (2010 ஜூலை
) கொஞ்சம் அருகில் சென்று, தள்ளி நின்று
எட்டிப்பார்க்கிறேன். ம்.ம். மருமகள் சீக்கிரம் புறப்பட்டு அமெரிக்கா வாங்க,
கொஞ்ச நாள் இங்க சுத்திப்பாத்துட்டு, டிஸ்னி
உலகம் போகலாம் என்று ஒரே அனத்தல் கடந்த இரண்டு மாதமாய்.. எனக்கோ இந்த
அமெரிக்க வாசம் அவ்வளவாக விருப்பமில்லை. மருமகளுக்கு சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு,
பயணத்தை ஏதேதோ காரணம் சொல்லி தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறேன். .
முடிவில் அவளின் படுத்தல் தாங்காமல் அமெரிக்க பயணத்துக்கு டிக்கட்டும் எடுத்தாகி
விட்டது. பயணதேதியும் குறித்தாகி விட்டது. செப்டம்பர் 8, 2010 இரவு பயணம். லுப்தான்சா விமானத்தில்.
தினப்படியும் இரவு உறக்கம் அர்த்த சாமத்தில்தான். அதான்பா, நடுநிசி ஆகிடுது
படுக்க. பன்னெண்டு மணிக்குமேலத் தான் உறக்கம்.. அதான்பா பேய்கள் நடமாடும்
நேரத்தில் தான், நமக்கு படுக்கை. . . அன்றும் வழக்கம் போல சென்று வெறுந்தரையில்
படுக்கிறேன். படுத்தால், இடது பக்கம் மார்பகத்துக்கு மேலே,
இதயம் ஆட்கொண்ட இடத்தில் லேசாக சுருக்
சுருகென்று வலி, என்ன இது சனியன் இப்படி வலிக்குது
என்று நெஞ்சுக்குள் லேசாய் நெருடல். நெஞ்சு வலியோ. ?
U .S க்குப் போகும்போது, மறக்காமல்
மாத்திரை வாங்கிக் கொண்டு போகவேண்டும்.. இல்லாவிடில் கதை கந்தலாகி விடும். அங்கு
எதுவும் கிடைக்காது. அங்குபோய் எதுவும் இன்றி திண்டாட க்கூடாது
என்று மனம் எச்சரித்தது. அத்துடன் இந்த இடது பக்கம் வேறு
வலிக்கிறது, ஏதோ சின்ன கட்டி போலவும்
தெரிகிறது. மூன்று மாதமாய் இந்த தேசிய குழந்தைகள் மாநாட்டு வேலையினால், டாக்டரிடம்
போய் காட்டக்கூட நேரமில்லை. இது என்ன சனியனோ.. வயது வேறு ஆகிவிட்டது. எதுவாக
இருந்தாலும் கேன்சராக மட்டும் இருந்திடக் கூடாது என மனம் வைராக்கியமாய் நினைத்தது.
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்ற இளங்கோவடிகளின்
பாட்டும் அப்போது , சம்பந்தமே இல்லாமல் நினைவில் எட்டிப்பார்த்தது.. என்ன இது இப்படி எதற்கும் நேரமின்றி
அலைகிறேன். ஒரு நாளில் இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தால் எவ்வளவு நன்றாக
இருக்கும்.. அறிவியல் படித்த மனம், இன்னும் பத்தாயிரம்
ஆண்டுகள் ஆனால் ஒரு நாளைக்கு இருபத்தி ஆறு நாட்கள் இருக்கலாம் என்று நையாண்டி
பண்ணியது. நேரத்தைப் பற்றி காலம் கடந்து சிந்தனை
பிறந்திருக்கிறது.ம்ம்,சரி பார்த்துக்கொள்ளலாம் என்று படுத்து கண்ணை மூடினால், அடுத்த ஐந்தாவது நொடி சொர்க்கலோகம்தான். ஆமாம், என்ன பிரச்சினை என்றாலும் அது என் உறக்கத்தில் மட்டும் கை வைப்பதில்லை.
இப்படியே ஒவ்வொரு நாளும்
ரெக்கை கட்டிக் கொண்டு ஓடிற்று. டாக்டரிடம் செல்ல நேரமே ஒதுக்க முடியவே இல்லை. ஒரு
வழியாக தேசிய குழந்தைகள் மாநாட்டின் மாநில முகாம் முடிந்தது. அப்பாடா
என்றிருந்தது. சரி டாக்டரிடம் போவோம் என்று முடிவெடுத்து, என்
மகனின் நண்பனும், என் நண்பனும், மகனுமான கோகுலிடம், சொல்லி ப ழநியிலேயே உள்ள ஒரு மருத்துவரிடம், ஸ்கேன்
செய்தோம். அவர் ஏதோ கட்டி போல இருக்கிறது. ஒன்று பெரிதாய் தெரியவில்லை. கட்டியை
மட்டும் எடுத்துவிடுவார்கள் என்றார். நான் அமெரிக்க போகவேண்டும், இதனை எடுத்த பின் போக முடியுமா? எல்லாம் போகலாம்,
கவலைப்படாதீர்கள், நீங்கள் மதுரை சென்று, புற்று நோய் நிபுணர் பிரகாஷிடம் போய் டெஸ்ட்
செய்யுங்கள், ஆனால் மகன் அமெரிக்காவில் இருப்பதை சொல்லிவிடாதீர்கள். அவர் நல்ல மருத்துவர். மோசமாய் பணம் பிடுங்குவார் என்றார். எப்படி
இருக்கிறது கதை? அவரிடம் அப்பாய்ன்மென்ட் வாங்கவே அப்படி
இப்படி என்று ஒரு வாரம் ஆயிற்று. இதற்கிடையில் எனக்கு நெருக்கமான மருத்துவ
நண்பர்களைக் கேட்டேன். எல்லோரும் சிபாரிசு செய்தது பிரகாஷ் பெயரைத் தான். ஆனால் பணவிஷயத்தில் மோசம் என்றனர். கடைசியில்
ஜூலை கடைசி வாரம் அப்பாய்ன்மென்ட் வாங்கி அவரைப் பார்க்கச் சென்றோம். அது ஒரு நல்ல
சுகாதாரமான மருத்துவ மனையாகவே தெரியவில்லை. முன் அந்த அறையில் டாக்டரைப் பார்க்க வந்தவர்கள் வரிசையாக,
அந்த அறையிலே சும்மா கச கச என்று எங்கு திரும்பினாலும்
தினத்தந்தி, தினமலர், தினமணி என்று ஒரே பேப்பர் நியூசும் போட்டோக்களும் தான்.
டாக்டர் பற்றி அவர் செய்த அறுவை சிகிச்சைகள் பற்றிய, தற்புகழ்ச்சி தாங்கவே முடியவில்லை. கச கச என்று ஒரே எரிச்சலாக
இருந்தது. டாக்டரின் அறைக்கு எதிரிலேயே கழிப்பறை, கணவன் மனைவி இருவரும்
மருத்துவர்கள். மனிதர்களை உட்கார வைத்தார்கள். அவ்வளவுதான். காத்திருந்தோம், ஏழு மணியிலிருந்து,
இறுதியில் டாக்டர் ஒரு எட்டரைக்கு வந்தார். பெயர் கூப்பிடப்பட்டது. டாக்டரின் அறைக்கு அல்ல. மேஜை மேல் போய் படுக்கச் சொல்லி, டாக்டரின் மனைவி எனது ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்தார். அவ்வளவே, தூக்கிப் போட்டுவிட்டார். அந்த நர்ஸ் என்னைப் போய் ஒரு மேஜை மேல் படுக்கச் சொன்னார். சட்டையைக் கழற்றச் சொன்னார்கள். சொன்னதைச் செய்தேன், என் மேல் ஒரு வெள்ளைத் துணி போர்த்தப்பட்டது. டாக்டர் வந்தார். கண்ணை மூடு, எந்தப் பக்கம் என்றார். இதுதான் எனக்கும் டாக்டருக்கும் இடையே நடந்த உரையாடல். அதன் பிறகு அவருடன் எந்த பேச்சும் நான் பேசவில்லை. எந்தவித மயக்க மருந்தும் கொடுக்கப் படவில்லை. ஒரு பெரிய குழாய் ஊசியை எடுத்து அவரே தொட்டுப் பார்த்து ஆடு மாட்டை அறுப்பது போல, சரக்கென மார்பகத்துக்குள் இறக்கினார். வலிக்கிறது என்றேன். கொஞ்சம் சும்மா இரும்மா என்று ஒரு கடி கடித்தாரே பார்க்கலாம். ஒரு முறை மார்பகத்திலிருந்து திசு +திரவம் எடுத்தாயிற்று, நர்ஸ் கொஞ்சம் இருங்கள், இன்னொரு ஊசி இருக்கு அது கொஞ்சம் வலிக்கும் என்றார். மனசு உடனே, இன்னொரு ஊசியா இதைவிட வலிக்குமா என்றது. சரி பொறுத்துக்கொள்வோம் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். வேறு வழி? பின் என்ன செய்ய? அவர் பிடியிலிருந்து எப்படி தப்பித்து, மேசையிலிருந்து இறங்கி மேலே உடையின்றி வெளியே ஓட.. ? இதெல்லாம் நடக்கிற காரியமா, ம்.ம். பொறு மகளே பொறு, என்று எனக்குள்ளே சொன்னேன். அடுத்து முன்பை விட பெரிசா ஒரு மாட்டு ஊசி சைசுக்கு ஒரு குழாய் வந்தது. இப்போ டாக்டரம்மா, கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோங்கோ என்றார். இதைவிடவா, அட கடவுளே, என்னை யாரும் காப்பாற்ற, திரௌபதிக்கு கண்ணன் வந்து சேலை கொடுத்தது போல என்னை யாராவது தூக்கிச் சென்றுவிட மாட்டார்களா? இந்த கொலை பாதகர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று மனதிற்குள் ஒரே எண்ண ஓட்டங்கள். அதுவரை டாக்டர் பொறுப்பாரா? கிடைத்த கிராக்கியைத்தான் விடுவாரா? டபக்கென்று ஆழமாய் ஒரு குத்து, பின் ஊசியை ஒரு சுழற்று சுழற்றி சுற்றி திருப்பி எடுத்தார். வலி தாங்க முடியவில்லை. வலிக்குதே என்றேன். (அது ட்ரூ கட் டெஸ்ட்டாம். பின்னர் மருத்துவ நண்பர்கள் சொன்னார்கள்). அந்தப் பக்கத்தில் எந்த சலனமும் இல்லை. எனக்கு மனதிற்குள், இவர்கள் மனுஷனுக்கு ஆசுபத்திரி நடத்துகிறார்களா? கசாப்புக் கடை நடத்துகிறார்களா என்று ஒரு யோசனை கூடவே ஓடி வந்தது, வலியோடு கூடவும், குத்திய இடத்தில் இரத்தம் கசிந்தது. நர்ஸ் அதில் கூட்டல் குறி வடிவத்தில் ஒரு பிளாஸ்திரி ஒட்டி, ரெண்டு நாளைக்கு அதனை எடுக்கக் கூடாது என்றார். நீ சொன்னா கேட்டுக்கத்தானே செய்யணும், எடுத்தா அந்த அவஸ்தையையும் நான் தானே படணும், எதுக்கும்மா நான் எடுக்கப் போறேன் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.
இறுதியில் டாக்டர் ஒரு எட்டரைக்கு வந்தார். பெயர் கூப்பிடப்பட்டது. டாக்டரின் அறைக்கு அல்ல. மேஜை மேல் போய் படுக்கச் சொல்லி, டாக்டரின் மனைவி எனது ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்தார். அவ்வளவே, தூக்கிப் போட்டுவிட்டார். அந்த நர்ஸ் என்னைப் போய் ஒரு மேஜை மேல் படுக்கச் சொன்னார். சட்டையைக் கழற்றச் சொன்னார்கள். சொன்னதைச் செய்தேன், என் மேல் ஒரு வெள்ளைத் துணி போர்த்தப்பட்டது. டாக்டர் வந்தார். கண்ணை மூடு, எந்தப் பக்கம் என்றார். இதுதான் எனக்கும் டாக்டருக்கும் இடையே நடந்த உரையாடல். அதன் பிறகு அவருடன் எந்த பேச்சும் நான் பேசவில்லை. எந்தவித மயக்க மருந்தும் கொடுக்கப் படவில்லை. ஒரு பெரிய குழாய் ஊசியை எடுத்து அவரே தொட்டுப் பார்த்து ஆடு மாட்டை அறுப்பது போல, சரக்கென மார்பகத்துக்குள் இறக்கினார். வலிக்கிறது என்றேன். கொஞ்சம் சும்மா இரும்மா என்று ஒரு கடி கடித்தாரே பார்க்கலாம். ஒரு முறை மார்பகத்திலிருந்து திசு +திரவம் எடுத்தாயிற்று, நர்ஸ் கொஞ்சம் இருங்கள், இன்னொரு ஊசி இருக்கு அது கொஞ்சம் வலிக்கும் என்றார். மனசு உடனே, இன்னொரு ஊசியா இதைவிட வலிக்குமா என்றது. சரி பொறுத்துக்கொள்வோம் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். வேறு வழி? பின் என்ன செய்ய? அவர் பிடியிலிருந்து எப்படி தப்பித்து, மேசையிலிருந்து இறங்கி மேலே உடையின்றி வெளியே ஓட.. ? இதெல்லாம் நடக்கிற காரியமா, ம்.ம். பொறு மகளே பொறு, என்று எனக்குள்ளே சொன்னேன். அடுத்து முன்பை விட பெரிசா ஒரு மாட்டு ஊசி சைசுக்கு ஒரு குழாய் வந்தது. இப்போ டாக்டரம்மா, கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோங்கோ என்றார். இதைவிடவா, அட கடவுளே, என்னை யாரும் காப்பாற்ற, திரௌபதிக்கு கண்ணன் வந்து சேலை கொடுத்தது போல என்னை யாராவது தூக்கிச் சென்றுவிட மாட்டார்களா? இந்த கொலை பாதகர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று மனதிற்குள் ஒரே எண்ண ஓட்டங்கள். அதுவரை டாக்டர் பொறுப்பாரா? கிடைத்த கிராக்கியைத்தான் விடுவாரா? டபக்கென்று ஆழமாய் ஒரு குத்து, பின் ஊசியை ஒரு சுழற்று சுழற்றி சுற்றி திருப்பி எடுத்தார். வலி தாங்க முடியவில்லை. வலிக்குதே என்றேன். (அது ட்ரூ கட் டெஸ்ட்டாம். பின்னர் மருத்துவ நண்பர்கள் சொன்னார்கள்). அந்தப் பக்கத்தில் எந்த சலனமும் இல்லை. எனக்கு மனதிற்குள், இவர்கள் மனுஷனுக்கு ஆசுபத்திரி நடத்துகிறார்களா? கசாப்புக் கடை நடத்துகிறார்களா என்று ஒரு யோசனை கூடவே ஓடி வந்தது, வலியோடு கூடவும், குத்திய இடத்தில் இரத்தம் கசிந்தது. நர்ஸ் அதில் கூட்டல் குறி வடிவத்தில் ஒரு பிளாஸ்திரி ஒட்டி, ரெண்டு நாளைக்கு அதனை எடுக்கக் கூடாது என்றார். நீ சொன்னா கேட்டுக்கத்தானே செய்யணும், எடுத்தா அந்த அவஸ்தையையும் நான் தானே படணும், எதுக்கும்மா நான் எடுக்கப் போறேன் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.
இப்படி
கட்டியிலிருந்து திசு எடுக்கும் சடங்கு ஒரு வழியாக முடிந்தது. இப்ப டாக்டர் கூப்பிட்டு என்ன சொல்லப் போறாரோ
என்று காத்திருந்தேன். காத்திருந்து, காத்திருந்து, காலங்கள் போனதடி கதைதான்.
நாங்கள் உட்கார்ந்து இருக்கிறோம். அவர்
கூப்பிடவே இல்லை. எனக்கோ ஊசி குத்தி பிடுங்கிய வலி வேறு, பிடுங்குகிறது பசி வேறு குடலைப் பிடுங்குகிறது. காலையில்
எதுவும் சாப்பிடாமல் வரச் சொல்லி இருந்தார்கள். ஒரு வழியாக கூப்பிடும் படலமும்
வந்தது என்னை அல்ல; கோகுலை அழைத்தார். கூப்பிட்டு, "கேன்சர்தான், அடுத்த வாரம் ஆபரேஷன் செஞ்சிடலாம். பணம் ரெடி
பண்ணிட்டு வந்துடுங்க". என்று சொல்லிவிட்டு அவனிடமே, எனக்குத் தரவேண்டிய மாத்திரை, இரத்த சோதனைகள்
இத்தியாதி, இத்யாதி எல்லாம் கொடுத்தார். எவ்வளவு பணம் தெரியுமா? 1 .5 லட்சம் வேண்டுமாம் அறுவை சிகிச்சைக்கு. திசு சோதனை ரிசல்ட் ஒரு வாரம் கழித்து வாங்கிக்
கொள்ளுங்கள் என்றார். இரத்தம் கொடுத்தேன். பணம் ஆயிரம்
ரூபாய் அழுதாயிற்று. மாத்திரை வாங்கிக்
கொண்டு வந்தேன். ஆனால் திரும்பவும் அந்த மருத்துவ மனைக்கு செல்வதில்லை என்ற
இறுதியான முடிவுடன். அவர் கேன்சர் என்று சொல்லிய விபரத்தை கடைசி வரை கோகுல்
என்னிடம் சொல்லவே இல்லை. மனதிற்குள்ளேயே
போட்டு புழுங்கி இருக்கிறான், யாரிடம் சொல்வதென
தெரியாமல், சொன்னால் நான்பயந்துவிடுவேன் என்று எண்ணி. நான்
கல்லுளி மங்கி என்பது அவனுக்கு தெரிந்தும் ஏனோ சொல்லவில்லை. .
வீட்டுக்கு
வந்து என் மருத்துவ நண்பர்களிடம் கேட்டால், அனைவரும் சிபாரிசு செய்வது அந்த ஆளைத்தான். சரியான பணம் பிடுங்கி பிசாசு!.
அவரிடம் எதற்கு செல்ல?
ஒரு நோயாளி ஒருபெரிய அறுவை சிகிச்சைக்கு/பிரச்சினைக்கு வருகிறார் என்றால், அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசாத டாக்டர் என்ன
டாக்டர்?
மனிதனே இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். வரும் வழியெல்லாம்
ஒரே யோசனை..! வேறு ஒரு டாக்டரின் கருத்து வாங்கவேண்டும். நிஜமாகவே என்ன உள்ளது
என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், என் மனதுக்குள் துளியும் பயமோ அச்சமோ ஏற்படவில்லை. எது வந்தாலும் சமாளிப்போம்
என்ற உறுதி இருந்தது. வீட்டுக்கு வந்ததும் தான், முதல் முறையாக,
மகனுக்கும், மருமகளுக்கும் தகவல் சொல்கிறேன்,, கேன்சராக
இருக்கலாம் என்கிறேன்.. மருமகள் கொஞ்சம்
பதறுகிறார். அவரின் அன்னையையும் புற்று நோய்தான் பலி கொண்டது. மகன் இந்த டாக்டர் வேண்டாம் அம்மா,, வேறு டாக்டரைப் பாருங்கள் என்கிறார். யார்
உங்களுக்கு துணைக்கு இருப்பார்கள், நான் உடனே புறப்படுவதில் சிக்கல் உள்ளதே என்றான். ” நீங்கள் யாரும் வரவேண்டாம். வந்து என்ன
செய்யப் போகிறீர்கள், நானே
பார்த்துக் கொள்கிறேன். கோகுல் இருக்கிறான் டாக்டரிடம் அழைத்துச் செல்ல. பிரேமாவை
வந்து துணைக்கு சில நாட்கள் இருக்கச் சொல்லப்போகிறேன். நீ எதற்குவருகிறாய்? வரவேண்டாம். பேசாமல் இருங்கள். ஆறு மாதம்
கழித்து வரலாம்”.
என்கிறேன். இந்த புற்றுநோய் சிறப்பு அறுவை
சிகிச்சை மருத்துவர் பற்றியும் சொல்லிவிட்டு, இனி இவரிடம் செல்லப்போவதில்லை என்பதையும் தெரிவிக்கிறேன். மகனும் இவர் வேண்டாம். வேறு ஒருவரிடம்
செகண்ட் ஒப்பீனியன் வாங்கிக்கொண்டு
செய்யுங்கள் என்கிறான்.
அடுத்த இரண்டு
நாட்களில் சிறப்பு மருத்துவரைத் தேடினேன். என் நண்பரும் மருத்துவருமான, தேவ் ஆனந்தை, கோவை சென்று இரண்டாம் கருத்து வாங்கி வரவா என்றேன். அவர் அது சரி, ஆனால் மதுரையிலேயே நீங்கள் அறுவை சிகிச்சை
செய்யலாம் என்றார். நான் மாட்டேன் தேவ, அவர் மனிதனே அல்ல, கசாப்புக் கடைக்காரர், வேறு ஒரு
டாக்டர் இல்லாமலா போய்விடுவார் என்றேன். உடனே தேவ, சரி நீங்கள் கோவை சென்று பார்த்து விட்டு வாருங்கள். பின்னர் பார்க்கலாம்.
நானும் கோவை ராமகிருஷ்ணாவில் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தேன். நல்ல ஆசுபத்திரிதான்
என்றார். அடுத்த நாள் கோவை செல்வதென முடிவு. அங்கு கோவை சென்றால் முதலில் பொது மருத்துவத்தில் நுழைந்து சர்வேஸ்வரன் ஒரு
அறுவை சிகிச்சை டாக்டரிடம் காட்டியதற்கு, அவர் சோதனை செய்து பார்த்தும், நாங்கள் கொண்டு போயிருந்த ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்தும் சின்ன மாஸ் இருக்கிறது
எடுத்துவிடலாம்,மேலும், அவர் லக்ஷ்மி ஆய்வகத்தில் போய் திசு சோதனை
செய்ய வேண்டும். இன்று அவர்கள் விடுமுறை. இரண்டு நாள் கழித்து வாருங்கள் என்றார் . இப்படியே
இரு நாட்கள் கடந்தன. ஒரே எரிச்சல். என்ன ஒரு
விஷயமும் இல்லாமல் நாட்கள் இப்படி ஓடுகிறதே..!

அடுத்த நாள் காலை என் நண்பரும் தோழருமான த.வி.வெங்கடேஸ்வரனுக்கு அலைபேசியில்
தொடர்பு கொண்டு பேசினேன். நாங்க அவரை அழைப்பது டிவிவி என்ற
செல்லப்பெயரில்தான். இந்தியத் தலைநகரில்
வாழும் ஓர் அறிவு ஜீவி, விஞ்ஞானி. டிவிவி, அவரும் அறிவியல் இயக்கத்தில் இருந்தவர், இருப்பவர்,
நெருங்கிய தோழர். டிவிவி எனக்கு ஒரு
பிரச்சினை, அதற்கு அறுவை சிகிச்சைசெய்ய வேண்டி இருக்கலாம்,
என தகவலை சொன்னேன். உடனே,
அவர், மோகனா, நம்ம
டாக்டர் நளினி கோவையில் இருப்பது தெரியுமா என்றார். தெரியாதே, நளினி மேலே
எம்டி பண்ணிக்கிட்டு இருங்காங்க. இப்பத்தான் அவங்க அம்மாவுக்கும் இப்படி ஒரு
பிரச்சினை என்று ஆறு மாதத்துக்கு முன் ஆபரேஷன் பண்ணினாங்க. அவர்களைத் தொடர்பு
கொண்டு பேசுங்க என்றார். அவங்க நம்பர் இருந்தா
கொடுங்க டிவி. என்றதும், அவர் சொல்ல நான் மனதிற்குள்
குறித்துக் கொண்டேன். சரிப்பா, நான் நளினியிடம் பேசுகிறேன், என்று சொல்லி முடித்து
விட்டு, போனை அணைக்கிறேன். உடனேயே , அதன்
அழைப்பு என்னைக் கூப்பிட்டது. வணக்கம்
மோகனா என்பதற்குள், மோகனா நான் நளினி பேசுகிறேன். டிவி எல்லாம் சொன்னார். நீங்க உடனே புறப்பட்டு வாங்க என்றார். நான் சரி நளினி, இந்த ஆபரேஷனை முடிச்சிட்டு அடுத்த மாசமே யு எஸ் போகலாமா என்றேன். அதற்கு அவர், மோகனா யு எஸ்
ட்ரிப்பை கேன்சல் செய்துட்டு உடனே புறப்பட்டு கோவை வாங்க நான் பாத்துக்கிறேன்
என்றார், அறிவியல் இயக்கம் மூலம் எங்களின் இருபதாண்டு நண்பராகிய டாக்டர் நளினி. இடையில் அவர் கோவைக்கு படிக்க வந்ததை நான் விட்டுவிட்டேன்.

மறுநாள் காலை மீண்டும் கோவை பயணம் நானும் கோகுலும்
மட்டும். போனால் அங்கு எனக்காக காத்துக்
கொண்டு என் நண்பர் டாக்டர் நளினி. எனது சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஓடிப்போய்
அவர் கைகளைப் பிடித்துக் கொள்கிறேன். சரி வாங்க டாக்டர் கார்த்திகேஷிடம் போகலாம். அவர்தான் அறுவை சிகிச்சை டாக்டர். எங்க அம்மாவுக்கும் அவர்தான் ஆபரேஷன் செய்தார். எனக்கும் நண்பர் என்கிறார். சரி நளினி போகலாம் என்றதும், உடனே கார்த்திகேஷை சந்திக்கிறோம். நளினி கார்த்திகேஷிடம், என்னப்பற்றி அறிமுகம் செய்கிறார், கல்லூரிப் பேராசிரியர், அறிவியல் இயக்கம், அறிவொளி இயக்கம் என்று பெரிதாக பில்டப் உடுகிறார். டாக்டர் என்னை ரொம்பவும் மரியாதையுடன்
நடத்துகிறார். வயது கேட்கிறார். நான் என்
வயது அறுபத்து மூன்று என்றதும் தெரியலியே, நாப்பது பிளஸ் போல
இருக்குது என்கிறார். நான் மெல்ல
சிரித்துக் கொள்கிறேன். பின்னர் அவர் என்னை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை
செய்கிறார். பின் அவரே ஒரு முறை திசு எடுத்து லக்ஷ்மி ஆய்வகத்துக்கு அனுப்புகிறார். ஆனால் இம்முறை
மதுரையில் வலித்தது போல வலியே இல்லை.
மென்மையாய் இருந்தது . இது எப்படி? சில மருத்துவர்கள்
ராட்சசர்களோ ? திசு எடுத்து
முடிந்ததும், நீங்க
புதன் கிழமை வாங்க, என்னவா இருந்தாலும் ஆபரேஷன்தான்
செய்யணும், கேன்சராக இருந்தாலும் இருக்கலாம் என்கிறார். நான் சரி செய்துடலாம் என்றதும் அவரும், நளினியும் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள். நாளைக்கே செய்யலாமே
டாக்டர். நாங்க செவ்வாய்க்கிழமை
ஆபரேஷன் செய்றது இல்லே. ஏன் டாக்டர், அது ஆபரேஷனுக்கு உகந்த நாள்
இல்லியா என நான் நக்கலடிக்கிறேன். நாங்கள் தொழில் ரீதியா சில தர்மம்
கடைப்பிடிக்கிறோம். அதுல இது ஒண்ணு என்கிறார். நான்
வெளியில் வந்து என்ன நீங்கள் இருவரும் சிரித்தீர்கள்
என்றதற்கு நளினி, நான்
கார்த்திகேஷிடம், நீங்கள் எதற்கும் பயப்பட மாட்டீர்கள் அது
கேன்சர். அறுவை
சிகிச்சை எதுவாக இருந்தாலும் சரி சாதாரணமாய் எடுத்துக்
கொள்வீர்கள் என்று கூறி இருந்தேன். அவர்
உங்களை டெஸ்ட் பண்ணி விட்டு ஆபரேஷன் என்றதும், நீங்கள் நான் கூறியபடியே சரி
என்றீர்கள், அதற்காகத்
தான் நான் டாக்டரைப் பார்த்து சிரித்தேன் என்றார். பின் நாங்கள் புறப்பட்டு ஊர் வந்து
சேர்கிறோம். இதற்கிடையில் மதுரையில் அந்த
திசுவின் சோதனை முடிவுகளை வாங்க நாங்க பிரம்ம பிரயத்தனம் பட்டோம். அந்த முடிவை கடைசி வரை கோகுல் என்னிடம் காட்டவே
இல்லை. காரணம் அதில்
எனக்கு கேன்சர் இருக்கிறது என்ற தகவலைச் சுமந்து வந்த கடிதம் அது. அதனால் நான் பயந்து
போவேன் என்று அவன் என்னிடம் சொல்லவே இல்லை. ஆனால் நளினியிடம் கூறிவிட்டான்.
இதுவரை நான் சொன்னது, இந்த புற்று நோய் பாதிப்பின் முன்னுரை மட்டுமே.. இன்னும் என்ன கொடுமைடா இருக்கு என்கிறீர்களா? இருக்கு கண்ணா இருக்குதே. அடுத்து
ஆபரேஷனுக்கு, நான் என் தங்கை பிரேமா, கோகுல், இன்னும் எனது மகன் போன்ற இளைய நண்பர்களான கமர், அன்வர், கனகராஜ்
மட்டுமே போயிருந்தோம். வீட்டில் அம்மாவிடம், தம்பிகளிடம் என யாருக்கும் சொல்லவே இல்லை. பயந்து கொள்வார்கள். மேலும் ஒரே அழுகாச்சி சீன்தான்
நடக்கும். இதெல்லாம் தேவையா? பக்கத்தில் இருப்பவர்கள் வந்து இலவசமாய்
போதனை, ஆலோசனை
வழங்கி விட்டுப் போவார்கள். போதுமடா சாமி என்று உலகமே வெறுத்து விடும். இதனைத்
தவிர்க்கத்தான் யாரிடமும் சொல்லவில்லை. செவ்வாய்
மாலை போய் இராமகிருஷ்ணா மருத்துவ மனையில் அட்மிஷன். பெரிசாய் ஏதும் பணம் கட்ட சொல்லவில்லை. மறுநாள் காலை ஆபரேஷன். அப்பவும் கூட, காலையில்
எட்டு மணிக்கு முன் 30,000 ரூபாய் கட்டுங்கள்
என்றார்கள். கமரிடம்
ஏ டி. எம் கார்டு கொடுத்து பணம் எடுத்துவரச் சொன்னேன். மதுரையாக இருந்திருந்தால் இந்நேரம்
கட்டு கட்டா நோட்டு கிழிஞ்சிருக்கும்.

விடிகாலை அறுவைச் சிகிச்சைக்கு, மருத்துவமனையில் இரவிலிருந்தே
படு பயங்கரமான தயாரிப்புகள். காலை சப்தமின்றி மிக மௌனமாகிப் பிறந்தது. நான் நாலு மணிக்கு எழுந்து குளித்து தயாராகி விட்டேன்.
இது தெரிந்த என் மாணவர் கோகிலா விடிகாலையே
மருத்துவ மனைக்கு வந்து விட்டார். எனக்கு
குடிக்க தண்ணீர் கூட கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள் சுற்றிலும்
உள்ள இரக்கமற்றவர்கள்.. பின்னர் எனக்கு அறுவை சிகிச்சைகான தேவதை போன்ற வெள்ளை உடை மாட்டப்பட்டது. என்னை
அறுவை சிகிச்சை அறைக்கு எடுத்துச் சென்றார்கள். கொஞ்ச நேரத்தில் நளினி வந்தார். ஆனால் மயக்க மருந்து மருந்து கொடுக்க ரொம்ப
நேரம் ஆயிற்று. அதுவரை கூடவே நளினி
இருந்தார்கள். மயக்க டாக்டர் வரும் வரை
இருவரும் பழமை கதை எல்லாம் பேசி சிரித்துக்கொண்டே இருந்தோம். பின் மயக்க மருந்து டாக்டர் வந்து நளினியை வெளியே அனுப்பினார்கள். என்னை
இறங்கி வந்து வேறு கட்டிலில் படுக்கச் சொன்னார்கள். படுத்ததும், இப்ப உங்களுக்கு ஆக்சிஜன்
கொடுக்கறேன் நல்லா இழுத்து மூச்சு விடுங்க, என்றார். என் பேர் கேட்டார். ஒண்ணு, இரண்டு
சொல்லச் சொன்னார். நான் மனதிற்குள் நான் எனக்கு இந்த
சயின்ஸ் எல்லாம் தெரியாது என்று நினைத்து சொல்கிறீர்கள் என மனதிற்குள்
முணுமுணுத்தேன். என்னை இழுத்து மூச்சு
விடச் சொன்னதை நான் செய்தேன். அட மிக ரம்யமான மணம். மனதிற்குரொம்ப சந்தோஷமாக இருந்தது. உடனே
உள்ளுக்குள்ளே உள்ள படித்த மனசு, ஏய் இது நைட்ரசஸ் ஆக்சைடு வாயு என்று சொல்லியது. எல்லாம்
படிச்சிருக்கோம்ல ..கொ ஞ்சம்
சந்தோஷம் அனுபவிக்கு முன்னே, நினைவிழந்து போனது. எனக்கு. நான் ஐந்து வரை எண்ணியது நினைவில்
இருக்கிறது. பின் என்ன நடந்தது என்று
எனக்கு தெரியாது, நடந்ததாக சொன்னதுதான் தெரியும்.
நான் விழித்தபோது, கோகுலும்
தேவியும் என்னருகில் நின்றார்கள். கோகுல் எஸ் எம்
என்றான். அவன் என்னை பெயர்
சொல்லித்தான் அழைப்பான்.ம் ம் என்றேன். மணி என்ன என்றேன். 10 .45 என்றார்கள். எனக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டது என்பதை உணர்ந்தேன். ஆனால்
வலி ஏதும் இல்லை, அறுவை சிகிச்சை
அறையிலிருந்து வெளியே ஐ சி யு அறைக்கு கொண்டு வந்து படுக்க வைத்திருந்தனர். தேவி லேசான
பழுப்பு நிறத்தில் சுடிதார் போட்டிருந்தாள் . சாப்பிடுகிறீர்களா
என்று தேவி கேட்டாள். நான்.. ம்.. தான் பதில். ரெண்டு மொடக்கு காப்பித் தண்ணி கொடுத்தார்கள். அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை. தூக்கம் கண்ணைச் சுழற்றுது. அதான் மயக்க
மருந்தோட வேலை இன்னும் மிச்ச சொச்சம் இருக்கும்லே. பகல் முழுவதும் தூக்கமும் விழிப்புமாகவே
இருந்தது. பெரிசா வித்தியாசம் எதுவும்
தெரியலே. ஆப்பரேஷன் பண்ணுன வலியும் இல்லே.
ஒருக்கால் ஆபரேஷனே பண்ணாம இங்க கொண்டு
வந்து படுக்க வச்சுட்டான்களோ.. அப்படி எல்லாம் இருக்காது. இதெல்லாம் எனக்குள்
நடந்த நேர்காணல்கள். கல்வியில், பள்ளியில் குழந்தைகள், ஆசிரியர்களுக்கிடையே
நடக்க வேண்டிய உரையாடலகள் எல்லாம். நடப்பதே இல்லை. குழந்தைகளை வாந்தி எடுக்கும் மிஷின்
ஆக்கிவிட்டனர் இந்த ஆசிரியர்களும், இந்த கல்வி அமைப்பும். அதை விட, மனித
உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவமனைகளிலும் உரையாடல்கள் நடப்பதே இல்லை, பணப் பரிவர்த்தனைதான் நடக்கிறது. வார்த்தைப் பரிமாற்றம்
நடப்பதே இல்லை நண்பா. ஆனால் நம் நெஞ்சுக்குள் நடக்கும் உரையாடலை யாரும்
கட்டுப்படுத்த முடியாதே..

ஒரு நாள் முழுவதும் தூக்கமும் விழிப்புமாகவே ஐசியு அறையில் நாள் கழிந்தது. பெரிசா பசிக்கவும் இல்லை. தனிமை எதுவும் செய்யவில்லை. சும்மா விச்ராந்தியாய் படுத்து இருந்தேன். யாரும் என்னை வந்து பார்க்கவும்
இல்லை. ஒருக்கால் அவர்கள் வந்தபோது நான்
மயக்கத்திலும் தூக்கத்திலும் இருந்தேனோ தெரியாது. மறுநாள் காலை ஐந்தரை மணி விழிப்பு தட்டியது. எழுந்து கண்ணைத் திறந்து பார்க்கிறேன். சிஸ்டரை அழைக்கிறேன். அவர் பேஸ்ட் கொண்டு வந்து பல் தேய்த்து விட
முயற்சி செய்கிறார். நான் வேண்டாம் சிஸ்டர், நானே பார்த்துக்
கொள்கிறேன் என்றாலும் அவரே எனக்கு, அறுபது வயது கழுதைக்கு
பல் தேய்த்துவிட்டார். நல்ல வேளை கழுதை
உதைக்கவோ, கடிக்கவோ இல்லை. காலையில் எதுவும்
குடிக்க கொடுக்கவில்லை தண்ணீர் தவிர. டாக்டர் கார்த்திகேஷ் விசிட் வந்தார். எப்படி இருக்கிறீர்கள் ? குட் மார்னிங் டாக்டர். நல்ல
இருக்கேன் டாக்டர். சிஸ்டர், இந்த மேடத்தை ஸ்ட்ரெச்சரில் வைத்து வார்டுக்கு எடுத்துக்கிட்டுப் போகவேண்டாம். நாற்காலியில்
உட்கார வைத்து கூட்டிப் போங்க. வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு போனதும் கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். பின்னர் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு
மடிக்கணியைக்குடைந்து அன்றைய கண்டுபிடிப்பான கடுகு எண்ணெய் பற்றிய தகவலை முக நூல்
நண்பர்களுக்குப் போட்டேன். என்னைப்
பார்க்க கோவை பாலா சார் துணைவியுடன் வந்தார். நான் உட்கார்ந்து
கொண்டு வேலை செய்வதைப் பார்த்து அவருக்கு ஒரே மகிழ்ச்சி. அவரும் நான் ஏதோ கஷ்டப்பட்டு படுத்திருப்பேன்
என்று நினைத்துவந்தவர், நான் ஆபரேஷன் முடிந்து படுத்துக் கிடக்காமல் உட்கார்ந்து மடிக்கணினியில் பணி புரிந்ததும் சந்தோஷப்பட்டு விட்டு போனார்.
ஓசை செல்லாவும் என்னைப் பார்க்க வந்தார்

மறு நாளிலிருந்து ஒரு நாற்காலி போட்டு அமர்ந்து முகம்மதிய வரலாறு புத்தகம் படிக்கத் துவங்கிவிட்டேன் 600 பக்கத்துக்கு மேலுள்ள புத்தகம்.
விசிட் வரும் டாக்டருக்கு நான் உட்கார்ந்து படிப்பதைப் பார்த்து ஒரே
சந்தோஷம். நான் டாக்டரிடம், நீங்கள் ஆபரேஷன்
செய்துவிட்டீர்கள். மீண்டும் வருவதற்கான சாத்தியக் கூறு உள்ளதா என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, இந்த புற்று நோய் ஆபரேஷனுக்குப்
பிறகு 85 % prognosis . அதற்காக நான் அந்த பாக்கி 15 % என்று கேட்காதீர்கள்., ஆபரேஷன் பண்ணிய இடத்தில்
வலி எப்படி இருக்கிறது என்றார். நான்
வலிக்கவில்லை என்றேன். தினமும் இதே
கதைதான். டாக்டரும் நர்சும் என்ன எப்ப
கேட்டாலும் வலிக்கல தான் ஒரே பதில். வலிக்கலன்னு
சொல்றிங்க நெசமாவே வலிக்கலையா? டாக்டர்
நீங்க வேணா, வலிக்கறதுக்கு ஒரு மாத்திரை கொடுங்கள். பின்னர்,
வலி குறைய அப்புறமா ஒரு மாத்திரை கொடுங்க என்றேன். டாக்டர் சிரித்தார். நண்பர்களே,
நெசமாவே எனக்கு வலிக்கவே இல்லைப்பா. பெரிய மேஜர் ஆபரேஷன்தான் இருந்தாலும் ஒரு நாள்
கூட நான் வலி பற்றிய உணர்வு இல்லாமலே இருந்தேன். அட நெசன்தாம்பா, எனக்கு
ஆபரேஷன் பண்ணிய இடத்தில் இன்று வரை ஒரு நாள் கூட வலி தெரியவில்லை. நான் சொல்வதை நீங்க நம்பக்கூட
மாட்டிங்க. பசங்க வந்தவங்க ஒரே
கூத்துதான். சந்திரகலா, சூரியகலா வாங்கிக் கொண்டு வந்து கலாய்த்து
சாப்பிட்டு மகிழ்ந்தனர். எனக்கும்
விதம் விதமாய் கொழுக்கட்டை, அடை, அது இது என்று மாலை நாலு மணிக்கு டிபன் வாங்கி வந்து
கொடுத்தனர். இதற்கிடையில் கட்சியில் இருந்தும், சி.ஐ.டி.யூவில் இருந்தும் தோழர்களும், நண்பர்களும் வந்து
பார்த்துவிட்டுச் சென்றனர். நான் தினம் காலை மாலை இரு நேரமும் வாக்கிங் வேறு
போனேன். அந்த கூத்தைக் கேட்கிறீர்களா?
எனக்கு அறுவை சிகிச்சை
செய்த இடத்திலிருந்து ஒரு நீளமான குழாய்
தொங்கும், அது
முடியும் இடத்தில் அறுவை சிகிச்சை இடத்தில் உருவாகும், கழிவு சீழ், இரத்த நீர் இத்யாதிகளைச் சேகரிக்க ஒரு டப்பா இருக்கும்,
நான் என்ன செய்வேன் தெரியுமா, ஒரு மெல்லிய
ஜோல்னாப்பை வைத்திருந்தேன். அதில் இந்த டப்பாவைப் போட்டுவிட்டு, நான் பாட்டுக்கு
ஜாலியாக நடப்பேன். பார்ப்பவர்களுக்கு
வேடிக்கையாய் இருக்கும், நான் எதற்கும் கவலைப் படுவதில்லை. இதில் சுற்றிலும் உள்ள
இடங்கள் , மனிதர்கள் என்று படம் வேறு எடுத்து தள்ளிக்
கொண்டிருந்தேன். இடையில் டெல்லி வாலா த.வி.
வேங்கடேஸ்வரனும் பார்க்க வந்தார். தினம் பாட்டும், மகிழ்வுமாய்
நாட்கள் நகர்ந்தன. மருத்துவ மனையில் இருப்பது போல ஒரு
சோகமோ, இறுக்கமோ, துக்கமோ எனக்கும் இல்லை யாருக்கும் இல்லை. சந்தோஷமாகவே ஓடின நாட்கள்.

நான்
தினமும் நாட்குறிப்பும் எழுதினேன், என் உணர்வுகளை மறக்காமல் பதிவு செய்யவேண்டும் என்று. ஏனெனில் அறுவை சிகிச்சைக்கு முன்பே, நானும் டாக்டர் தேவ் ஆனந்தும், இந்த நிகழ்வின்
ஒவ்வொரு விஷயங்களையும் படு ஜாலியாகப் பதிவு செய்து ஓர் ஆவணமாக்கி அடித்தட்டு
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வழி செய்ய வேண்டும் என்றும் பேசி இருந்தோம். எனது அறுவை சிகிச்சை செய்த பின் அனைத்தையும் படம்
எடுத்தேன். நண்பா ஒரு கஷ்டமும் இல்லை. நாட்கள் ஜாலியாவே கழிந்தன. ஆனால் உணவு எனபது கடையில்
சாப்பிடுவதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. என் மாணவி கோகிலா ஒரு வாரமும் மதிய உணவு கொண்டு
வந்து கொடுத்தார். அவரோ/ அவர்
துணைவரோ சாப்பாடு கொண்டு வருவார்கள், ஒரு நாலு பேருக்கு உணவு. இது
எப்படி இருக்கு. மாணவர் கொண்டு வருகிறார்
என்றால் எங்களுக்குள் உள்ள உறவு எப்படி இருந்திருக்கும்.? 12
ஆண்டுக்கு முன்னால் என்னிடம் படித்தவர் அவ்வளவுதான். எனக்கு கவுன்சிலிங் கொடுக்க ஒரு மருத்துவரை அனுப்பினார்கள். அவர் நான் இருந்த நிலைமையையும், சூழலையும் பார்த்து விட்டு, மேடம் நீங்க நாலு
பேருக்கு கவுன்சிலிங் கொடுப்பிங்க போலிருக்குது, நான் வர்றேன் என்று
ஓடியே போய் விட்டார். பொதுவாக
புற்றுநோய், அறுவைசிகிச்சை செய்தவர்கள், ரொம்பவும்
மனம் தளர்ந்து, சோர்வாக, பிடிப்பில்லாமல்
இருப்பர்கள். அதனால்தான் கவுன்சிலிங்.
ஆனால் நான்தான் சும்மா தூள் கிளப்பிகிட்டு இருக்கேனே எனக்கு எதுக்கு கவுன்சிலிங்கும், கத்தரிக்காயும்.
இனிய நண்பர்களே, படித்து உங்கள் பின்னூட்டத்தை பதியுங்கள். இன்னும் 2 பகுதிகள் இருக்கின்றன, மறுபடியும் வருகிறேன்.
நன்றி. வாழ்த்துகள்.
wow..amazing mohana mam.. thank u rathna velu sir..
பதிலளிநீக்குஅன்பின் ரத்னவேல் - பேராசிரியர் மோகனாவிற்கு புற்று நோயா ? அந்நோயினை அவர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது - அவர் உண்மையிலேயே வீரப் பெண்மணி தான். அவர் பூரண நலமடைய பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - பகிர்வினிற்கு நன்றி ரத்னவெல் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குthanks, nice
பதிலளிநீக்குவணக்கம். பேராசிரியரின் மன உறுதி கண்டு வியந்தேன். உண்மையிலேயே வீரப் பெண்மணிதான். எனது வாழ்வில் நான் சந்தித்த மருத்துவம் தொடர்பான அனுபவங்களை, பிப்ரவரி2012 ல் மருத்துவமும் மனித நேயமும் என்னும் பெயரில் பதிவு செய்துள்ளேன். நேரமிருக்கும் போது படிக்க வேண்டுகின்றேன்.
பதிலளிநீக்குபேராசிரியர் மோகனா அவர்களின் இந்தக்கட்டுரை நிச்சயம் அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கை அளிக்கும். அதனைப் பதிவாக்கித்தந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள். அவர் உயிரோடு போராடி இப்போது அவர் பலபேருக்கு கவுன்சிலிங் கொடுக்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டு இருப்பது பாராட்டுதலுக்கு உரியது.
பதிலளிநீக்குஅன்பின் ரத்னவேல் ஐயா,
பதிலளிநீக்குஇந்த கட்டுரை கண்டிப்பா பலபேருக்கு ஒரு முன்னுதாரணமா இருக்கும்... அதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு பணிவான அன்பு நன்றிகள் ஐயா..... நான் மோகனா அம்மாவுக்கு பகிரும் வரிகளை தயவு செய்து மோகனா அம்மாவிடம் காண்பியுங்கள் ஐயா...
அன்பின் மோகனாம்மா,
இந்த கட்டுரை படிக்கும்போதே நான் முன்பே இந்த கட்டுரையை படித்தது போல் ஒரு உணர்வு இருந்தது. பின்னூட்டம் போட்டது போல ஒரு நினைவு கூட.....
அம்மா உங்களின் தன்னம்பிக்கை, தைரியம், எதையும் எதிர்க்கொள்ளும் மனோதிடம், இந்த பகிர்வு நீங்கள் பதியும்போதே இடை இடையே நகைச்சுவை இழையோட பதிந்த விதம் என்னை வியப்பின் உச்சிக்கே அழைத்துச்சென்றதும்மா...
கேன்சர் என்றாலே எல்லோரும் பயந்தது போலவே தாங்களும் வலி என்றதுமே பயந்து அப்படி இருக்கக்கூடாது என்று நினைத்தது படிக்கும்போது நான் என் மன உணர்வுகளை படித்தது போலிருந்தது...
உங்க வீட்டின் ரம்யமான மணத்தை பற்றி விவரிக்கும்போது வௌவால்களின் பசியை தீர்க்க நீங்கள் யாருடனும் காம்ப்ரமைஸ் பண்ணிக்காத விஷயம் உங்க நல்ல மனதினை உணர்த்தியது....
அதே போல் அமெரிக்காவுக்கு அழைத்த உங்கள் மருமகளுக்கு நீங்கள் பலவிதமாக சொல்லி ஒத்திப்போட்டதும் அதற்கு காரணம் சொன்னதும் சிறப்பான விஷயம் அம்மா....
மதுரையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே எங்களுடன் பகிர்ந்தது எங்களுக்கு கண்டிப்பாக இது மற்ற யாவரும் ஏமாந்துவிடாமல் இருக்க தங்களின் இந்த உதவி போற்றுதலுக்கு உரியது....
கோவையில் தங்களின் ஆபரேஷனுக்கு முந்திய தினத்திலிருந்து துவங்கி இதோ இன்றுவரையான உங்கள் மனநிலையினை, உங்கள் மழலை சிரிப்பினை, உணர்வுகளை, ஆபரேஷனுக்குப்பின்னர் வலியில்லாத நிலையில் மனோதிடத்துடன் மடிக்கணிணி எடுத்து பதிவுகள் ஆரம்பித்ததும், புத்தகம் (600 பக்கங்கள் நிறைந்த முகம்மதிய வரலாறு) படித்ததையும், பொதுவாக இது போன்ற ஆபரேஷன் நடந்தபோது கௌன்சிலிங் கொடுக்க யாரேனு வருவார்.. அவரையும் உங்கள் மகிழ்ச்சியும், சுறுசுறுப்பும், மனோதிடமும், தன்னம்பிக்கையும் தொற்றிக்கொள்ளவைத்த விதமும் ரசிக்க மட்டுமல்ல நீங்க ஒரு ரோல்மாடல் என்று புரியவைத்தது அம்மா...
நளினி உங்க மாணவி அதுவும் முன்னாள் மாணவி மட்டுமே என்றும் உங்களுக்காக மட்டுமல்லாமல் உங்களுடன் சேர்த்து நால்வருக்கு நளினியும் அவர் கணவரும் உணவு கொண்டு வந்து கொடுத்ததை வாஞ்சையுடன் நீங்கள் பகிர்ந்தது பாராட்டக்கூடியது அம்மா....
வலி இல்லை என்று நீங்கள் சொன்னதுடன் மட்டுமல்லாமல் உங்களை சுற்றியிருப்போர் என்ன சொல்வார் என்பதைப்பற்றி கவலைப்படாமல் வாக்கிங் போன விதம் பற்றி சொன்னபோது ரசிக்கவைத்தது... ( என்ன ஒரு தைரியம் அம்மாவுக்கு என்று வியக்கவும் வைத்தது )
எனக்கு ஒரு சின்ன ஜுரம் வந்து கை கால்கள் அசைக்கமுடியாதபோது பயங்கரமாக அழுது ஊரைக்கூட்டினது வெட்கத்துடன் தலைகுனிந்து நினைவுக்கொள்கிறேன் அம்மா...
உங்களின் தன்னம்பிக்கை நிறைந்த சிரிப்பை முதல் படத்தில் பார்த்தேன்... கட்டுரை முழுக்க வாசித்தபோது ஏனோ எனக்கு அழுகை வந்துக்கொண்டே இருக்கிறது.. அட சந்தோஷத்துல கூட மனிதனுக்கு அழுகை வருகிறதே.... ஆமாம்மா... நீங்கள் எமனுடன் போராடி அவனை எட்டி உதைத்து இதோ இன்றும் மற்ற எல்லாருக்கும் ஒரு முன்னோடியாக திகழ்ந்து உங்கள் மனதில் உள்ளவைகளை ஒரு வரி கூட விடாமல் ரசிக்கும் அளவுக்கு பகிரமுடிந்ததே....ஹாட்ஸ் ஆஃப் அம்மா....
தனிமை, முதுமை, நோய் இதெல்லாம் மனிதனின் பலவீனங்கள்... விதியை காரணம் காட்டி மனிதன் தன்னைத்தானே முடக்கிக்கொள்ளும் வேலிகள்.... சோர்ந்துப்போகவைக்கும் போதைமருந்து... இதையெல்லாம் தகர்த்தெறிந்து அடி எடுத்து வைக்கும் நீங்கள் என்றும் நீடுழி வாழ்க அம்மா, உங்கள் தைரியமும் தன்னமிக்கையும் மனோதிடமும் எங்கள் எல்லோருக்கும் கொடுத்திருக்கீங்க பகிர்ந்து....அதற்கு என் மனம் நிறைந்த அன்புநன்றிகள் அம்மா...
உங்கள் உடல்நலம் பூரண குணம் பெற்று ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இறையிடம் அன்பு பிரார்த்தனைகள் அம்மா....
அன்புடன்
மஞ்சுபாஷிணி
இறுக்கமோ, துக்கமோ எனக்கும் இல்லை யாருக்கும் இல்லை.
பதிலளிநீக்குதன்னம்பிக்கை தரும் வரிகள்..
உண்மையிலேயே தன்னம்பிக்கை மனுசிதான்! வாழ்த்துக்கள்! உங்களின் இந்த பதிவு வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளது! வாழ்த்துக்கள்! நன்றி!
பதிலளிநீக்கு