சனி, அக்டோபர் 08, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவண்ணாமலை (ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில்)

ஸ்ரீனிவாசப் பெருமாள்
  இந்த மலை 350 படிக்கட்டுக்கள் மேல் அமைந்த்துள்ளது.  படிக்கட்டுக்கள் மேல் வெயிலுக்காக மேற்கூரை கற்பலகைகள் பரப்பி அமைக்கப் பட்டுள்ளது. இது சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப் பட்டுள்ளது.  படிகள் எண்ணிக்கை அதிகம் என்பதால் வயதான பக்தர்கள், ரத்த அழுத்த, இருதய நோய் உள்ளவர்கள் படி ஏறுவது சிரமம் என்பதால் ஏறும் தூரத்தை கணக்கிட்டு பிரித்து இடையில் பக்தர்கள் இளைப்பாறிச் செல்ல மூன்று மண்டபங்கள் அமைக்கப் பட்டுள்ளன.  இது ஒரு ஆச்சரியமான, புதிய தகவல்.  


 திருவண்ணாமலை வருவதற்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து  நகரப்பேருந்துகள், சிற்றுந்துகள் (அரை மணிக்கு ஒரு முறை), ஆட்டோக்கள் இருக்கின்றன.  மலை அடிவாரத்தில் ஒரு காலி இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் இருக்கிறது.  அடிவாரத்தில் ஒவ்வொரு சமூகத்திற்கான மடங்கள் இருக்கின்றன.  மலையில் கல்யாணங்கள் நடக்கும்போது சமையல், சாப்பாடு நடப்பதற்கு இந்த மடங்கள் பயன்படுகின்றன.  பூ, பழங்கள், துளசி மாலைகள் விற்பதற்கு சின்ன சின்ன கடைகள் இருக்கின்றன.  சின்ன தேநீர் , காபி, குளிர்பான கடைகள் இருக்கின்றன.  உணவு அருந்தும் அளவு உணவு விடுதிகள் கிடையாது.  குழந்தைகளுக்கு பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்கு புரட்டாசி சனிக்கிழமைகள் மட்டும் தற்காலிக கடைகள் இருக்கின்றன.  எனவே வரும் பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்தே தண்ணீர், சிற்றுண்டிகள், தேவைப்பட்டால் உணவு கொண்டு வந்து விட வேண்டும்.  இங்கு அடிவாரத்தில் சிறு குழந்தைகளுக்கு எதுவும் வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பது  நல்லது. புரட்டாசி சனிக்கிழமைகளில் அரசினரால் நிறைய அளவில் சிறப்பு பேருந்துகளும், காவல் துறையினரால் பாதுகாப்பும் அருமையாக செய்யப்படுகிறது.  இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய அம்சம்.

  இனி கோவிலுக்கு செல்வோம்.  நுழைவில் முடி காணிக்கை மடம் இருக்கிறது.  சுற்றி உள்ள கிராமங்களுக்கு ‘திருவண்ணாமலை பெருமாள் தான் குல தெய்வம்.  நிறைய மொட்டை போடுவது காது குத்துவது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்.  செல்லும் பாதையில் கருப்பணசாமி கோவில் இருக்கிறது.  இவர் தான் இந்த கோவிலுக்கு காவல் தெய்வம் என்கிறார்கள்.  அடிவாரத்தில் பெரிய ஆலமரத்தினடியில் வினாயகரும், நாகரும் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறார்கள். 


 தவிர நேர்த்திக் கடனுக்காக நூற்றுக் கணக்கில் வினாயகர் சிலைகளும், நாகர் சிலைகளும் அடித்து வைக்கப் பட்டிருக்கின்றன.  அருகில் ஆதி வினாயகர் கோவில் இருக்கிறது.  இவரது உயரம் பனிரெண்டு அடி, அகலம் எட்டு அடி.  நல்ல உயரம், ஆஜானுபாவமான, கம்பீரமான தோற்றம்.   

 சுமார் 47 வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து திருவண்ணாமலையின் கிழக்கே கலிசலிங்க ஐயனார் கோவில் அருகில் உள்ள ஊரணியில் ஒரு வினாயகர் சிலை உள்ளது.  எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று உத்தரவு கொடுத்தார்.  அதன் பின் சாலியர்கள் சமுதாயத்திலிருந்து சென்று எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து, பிரமாண்டமான கோவில் கட்டி அருமையாக பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார்கள். 
  திருவண்ணாமலையின் அடிவாரத்தில் ஒரு தெப்பம் அமைந்துள்ளது.  அது கோனேரி என அழைக்கப் படுகிறது.  மழைக்கு மலை அடிவாரத்திலிருந்து தண்ணீர் வந்தால் நிறையும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.  முன்பு கோவில் பூஜைக்கு, இங்கு நடக்கும் கல்யாணங்களுக்கு சமையலுக்கு, குடி நீர் தேவைக்கு, இங்கிருந்து தான் தண்ணீர் எடுக்கப் பட்டு பயன்படுத்தப் பட்டது.

  மலை நுழைவு வாசலில் பெரிய மண்டபம் இருக்கிறது.  அங்கு ஒவியங்கள் இருக்கின்றன.  விழாக்காலங்களில் சாமி வந்து வீற்றிருக்க, பக்தர்கள் தரிசனத்திற்கான மண்டபம்.  இப்போது பிரசாத கடைகள் இருக்கின்றன.
  இங்கு பக்தர்கள் உட்கார்ந்து இளைப்பாறி செல்லலாம்.ஒரளவு படிகளைக் கடந்து சென்ற உடன் முதல் மண்டபம் வருகிறது.  திண்ணை அமைப்புகள் இருக்கின்றன.  பக்தர்கள் இளைப்பாறி செல்லலாம்.  அருகில் ஒரு அறை இருக்கிறது.  அது அர்ச்சகர்கள் தங்குவதற்காக இருக்கலாம்.
  இன்னும் ஒரளவு படிகளை கடந்து சென்றால் இரண்டாவது மண்டபம் இருக்கிறது.  அருகில் சக்கரத்தாழ்வார் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறார்.  இங்கும் திண்ணைகள் இருக்கின்றன.  பக்தர்கள் இருந்து இளைப்பாறி செல்லலாம். நமது முன்னோர்களின் முன்னேற்பாடு, யோசனைகள், மனித நேயம் ஆச்சரியப் பட வைக்கின்றன. 
  இன்னும் ஒரளவு படிகளை கடந்து சென்றால் மூன்றாவது மண்டபம் சற்று பெரிதாக நிறைய சிலைகளுடன், நிறைய ஒவியங்களுடன் இருக்கின்றது.  இங்கும் இருந்து செல்வதற்கு வசதியாக நிறைய இடம் இருக்கிறது.  இங்கும் குளிர் பான கடைகளும், பிரசாத கடைகளும் அமைந்திருக்கின்றன.

இப்போது திருவண்ணாமலை உயரே வந்து விட்டோம்.  பிரகாரம் சுற்றி வருவோம்.  சுவர் முழுக்க அழகு சித்திரங்கள்.  தேவஸ்தான அனுமதியுடன் (அதற்கான கட்டணம் செலுத்தியிருக்கிறோம்) அனைத்தும் புகைப்படங்கள் எடுத்து இணைத்திருக்கிறோம்.


  பிரகாரத்தின் வட மேற்கு மூலையில் பெருமாளுக்கு நேர்த்திக் கடனுக்காக செய்து போட்ட பாதுகைகள் (செருப்புகள்) கிடக்கின்றன.  
அதை எடுத்து பக்தர்கள் மார்பிலும், தோளிலும் அடித்துக் கொள்கிறார்கள்.  அது ஒரு நம்பிக்கை.
ஸ்ரீனிவாசப் பெருமாள் சன்னதிக்கு வருகிறோம்.  கருடாழ்வர் முன்பு இருக்கிறார்.  பெருமாள் நின்ற கோலம்; கிழக்கு பார்த்த கோலம்; நன்கு உயரமாக, ஆஜானுபாவமான தோற்றம்.  காணக் கண் கோடி வேண்டும்.  ஆரத்தி எடுக்கும் போது பார்த்தால் பெருமாள் நம்மைப் பார்த்து புன்னகை புரிவது போன்ற தோற்றம்.  நேரில் அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.  திருப்பதி பெருமாளை விட உயரம் மிக அதிகம்.  மிகவும் கம்பீரம்.

  சன்னதிக்கு வெளியே மலையின் ஒரு பகுதியில் பெருமாள் பாதம் அமைக்கப்பட்டிருக்கிறது.  இங்கு அவசியம் தர்சனம் செய்ய வேண்டும்.
அங்கு நின்று பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில்மிகு, கம்பீரமான தோற்றம் காணலாம். 

   முன்பு மலைக்குப் பின்புறம் ஓடையில் மணல் நிறைய இருக்கும்.  மணலில் நடந்து செல்வது தனி அனுபவம்.  இப்போது  மணல் எல்லாம் எடுத்து மேடாக்கி விட்டார்கள்.  இரண்டு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையாக இருக்கிறது.   

 உட்பக்கங்களிலும் மண் தோண்டி ஆழப்படுத்தி விட்டார்கள்.  இங்கு உள்ள செழுமை போய் விட்டது.  வேதனையாக இருக்கிறது.இந்த மலையைப் பாருங்கள்.  வெட்டிக் கரைத்து விட்டார்கள்.


திருப்பதிக்கு நேர்ந்து செல்ல முடியாதவர்கள், காணிக்கை அங்கு சென்று செலுத்த முடியாதவர்கள் இங்கு செல்லலாம், செலுத்தலாம் என்பது ஒரு நம்பிக்கை.  இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் நல்ல கூட்டம் இருக்கும்,  மற்ற மாதாந்திர சனிக்கிழமைகளிலும் நல்ல கூட்டம் இருக்கும்.  எல்லா சனிக்கிழமைகளிலும் வரும் பக்தர்கள் இருக்கிறார்கள்.  சனிக்கிழமைகளில் காலை ஐந்து மணிக்கு சன்னதி திறந்து விடுவார்கள்.  சாலியர் சமுதாயத்திலிருந்து – குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் வருவார்கள்.  அவர்கள் மலை ஏறும் வேகத்தை பார்த்தால் நம்மை ஆச்சரியப்பட வைக்கும், வெட்கப் பட வைக்கும்.  ஒவ்வொரு வாரமும் இந்த மலை ஏறி சென்றால் எந்த நோயும் நம்மை அணுகாது.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு தொடர்ந்து வந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

பெருமாளை தரிசனம் செய்து விட்டோம்.  கீழே இறங்கி வருகிறோம்.  வரும் போது சற்று படி இறங்கிய உடன் வலது புறத்தில் உட்புறத்தில் அலர்மேல் மங்கை சன்னதி சிறு வடிவக் கோவில் ஒன்று இருக்கிறது.

  
அதற்கு கவுரவ நாயுடு வகையினர் தொண்டு புரிகிறார்கள்.  தரிசனம் செய்பவர்களுக்கு ஒற்றை நாமம் அணிவித்து விடுகிறார்கள்.  நாம் திருவண்ணாமலை சென்றதுக்கு அடையாளம். இங்கு பொங்கல் வைப்பதற்கு இட வசதி இருக்கிறது.  பொங்கல்  வைப்பவர்கள் இங்கு பொங்கல் வைக்கிறார்கள்.

வெளியே வருகிறோம்.  சில படிகள் இறங்கி இடது பக்கம் திரும்பினால் ‘வேணு கோபால சாமி திருக்கோவில் இருக்கிறது.
  முன்பு சின்ன சன்னதியாக இருந்தது.  இங்கு பெருமாள் குழல் ஊதி நிற்கும் அழகு தோற்றம்.  சுற்றிலும் நிறைய ஓவியங்கள், தசாவதார ஓவியங்கள் இருக்கின்றன.  தரிசனம் செய்து விட்டு இந்த கோவிலிருந்து படிக்கட்டுகள் வழியே இறங்கினால் கோனேரி அடிவாரத்திற்கு சென்று விடலாம்.


  இந்த வருடத்திலிருந்து ஒவ்வொரு பௌர்ணமி அன்று  மாலை கிரிவலம் செல்ல ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

  முன்பு திருவண்ணாமலை வந்தால் சாலையின் இரண்டு பக்கங்களிலும் விவசாயம் இருக்கும்.  பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.  இப்போது சாலை வசதி நன்றாக இருக்கிறது.  இரு பக்கங்களிலும் முழுவதும் செங்கல் சூளைகள், ஒரே புகை மயம், மூச்சு திணறுகிறது.  காலங்கள் மாறுகின்றன.  காட்சிகளும் மாறுகின்றன.


  இந்த பதிவு நிறைவு செய்வதற்கு நிறைய பேர்களுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.  இந்த பதிவை எழுத, புகைப்படம் எடுக்க, எல்லா முயற்சிகளிலும் நிறைய தடைகள் ஏற்பட்டன.  அனைத்தும் மேலும் சிறப்பு சேர்க்கத்தான் போலும்.  புகைப்படம் எடுக்க சென்ற அன்று காமிராவில் பாட்டரி சக்தி தீர்ந்து விட்டது.  எனவே அடுத்த வாரம் செல்லலாம் என்று தள்ளி போட்டோம்.  மறு வாரம் எதிர்பாராத விதமாக எனது அருமை மகன் ராஜவேல் விடுமுறைக்கு சென்னையிலிருந்து வந்து விட்டான்.  எனது மன ஓட்டத்திற்கு ஏற்ப அருமையாக எடுத்திருக்கிறான். நன்றி ராஜவேல்.

 அடுத்து, முன்பு ஜிமெயிலில் தட்டச்சு செய்து பதிவில் ஏற்றினோம்.  பகுதிகளை ஒழுங்கு படுத்துவதில் சிரமம் இருந்தது.  அதற்கும் ஒரு தீர்வு கிடைத்து விட்டது.  ‘அழகி நிறுவி வைத்திருந்தேன்.  அதை உபயோகிப்பதில் தெளிவு இல்லை. 
 பதிவுலகில் எனக்கு கிடைத்த அருமை மகன் திரு ராம்குமார் (சிவகாசிக்காரன் பதிவு) இகலப்பை நிறுவி தருகிறேன் என்று வந்தார்; நிறுவினார்; அதில் ஏதோ சிக்கல்.  தீர்வு அழகியில் கிடைத்து விட்டது.  எப்படி தட்டச்சு செய்வது என்று எனக்கு கற்று கொடுத்து விட்டார் (சுவாமி நாதனோ). நன்றி ராம்குமார்.

  திருவண்ணாமலை பற்றி எழுத என்னை நினைவு படுத்தி ஊக்கப்படுத்தி கொண்டிருந்து திரு ரிஷி ரவீந்திரன் அவர்களுக்கும், திரு கென்யா ராகவன் அவர்களுக்கும் மனப்பூர்வ நன்றி.
  ஆங்கிலத்தில் திருவண்ணமலை பற்றி ஒரு பதிவு இருக்கிறது.  அதன் இணைப்பு: http://nachiarpatti.blogspot.com/அதிலிருந்து தான் இதன் முகப்பு படத்தை இணைத்திருக்கிறோம்.  அவர்களுக்கு மிக்க நன்றி.



இந்த பதிவிற்கு நிறைய விபரங்கள் கொடுத்து, நேரில் விளக்கம் சொல்லி அவர் எழுதிய ‘தென் திருப்பதி திருவண்ணாமலை பிரசுரமும் கொடுத்து உதவிய  எங்கள் ஊர் எழுத்தாளர் திரு எஸ்.எஸ்.மணியம் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.
இந்த பதிவு பிரசுரமாகி திரும்பவும் எனது தவறுதலால் டிராப்டுக்கு வந்து விட்டது.  சில திருத்தங்கள் செய்து இன்று புரட்டாசி 3வது கிழமை என்பதால் மறுபடியும் வெளியிட்டிருக்கிறேன்.  

                         மிக்க நன்றி.





66 கருத்துகள்:

  1. ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவண்ணாமலை
    (ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில்) //
    இதை டைட்டிலாக போட்டு விடுங்கள்.UNKNOWN என வருகிறது.

    பதிலளிநீக்கு
  2. படங்களுடன் கூடிய பதிவு என் அம்மாவிடம் காட்டினேன்.அவங்களுக்கு ரொம்ப புடிச்சது.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ருமையான பதிவு
    படங்களும் விளக்கங்களும் நேரடியாகப்
    பார்ப்பதைப் போன்ற உணர்வினை
    உண்டாக்கிப் போகிறது
    இந்தப் பதிவு மிக சிறப்பாக அமைய
    ஒத்துழைத்த் அனைவருக்கும்
    எனது மனமார்ந்த நன்றி
    த.ம 1

    பதிலளிநீக்கு
  4. ரத்னவேல் சார்!

    நல்ல அருமையான பகிர்வு! நேரமெடுத்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    இந்தக் கோயில் குறித்து வெள்ளிக்கிழமையன்றுதான் பேசிக் கொண்டிருந்தோம். திருவில்லிப்புத்தூர் அருகில் உள்ள கிராமம் ஒன்றில் மாமனார் வீடு அமையப் பெற்ற என் அலுவலக நண்பர் சமீபத்தில் இங்கு சென்று வந்தது பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். உடன் இக்கோயில் பற்றிய பதிவு படிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    மீண்டும் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  5. இந்த பதிவு மிக அழகாக வந்திருக்கிறது ஐயா. புரட்டாசி மாதம் பிரசன்ன வெங்கடாசலபதி தரிசனம் மிக அருமை. தென் திருப்பதி என கருதப்படும் பாதுகை வேண்டுதல் திருப்பதியிலும் உண்டு. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான பதிவு. விரிவான விளக்கங்களுக்கு தெள்ளிய புகைப்படங்கள் அணி சேர்க்கின்றன.

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான பதிவு. படங்களும் விளக்கங்களும் கொடுத்து எங்களையும் இக்கோவிலுக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்... மனதுக்கு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

    மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  8. தங்களின் கடின உழைப்பை மனதார பாராட்டுகின்றென் ஐயா..

    கோயிலுக்கு நேரடியாய் சென்று வந்தது போன்ற உணர்வு படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம்.

    நன்றி நல்லதோர் பகிர்விற்க்கு.பதிவிர்க்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    பதிலளிநீக்கு
  9. மிக அருமையான, பல புதிய தகவல்களுடன் கூடிய வழிபாட்டுத்தலக் கட்டுரை. பதிவுக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. திருவண்ணமலை ஸ்ரீநிவாச பெருமள் கோவிலை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்.நேரில் சென்று தரிசித்ததில்லை. உங்க பதிவை படித்து படங்களை பார்த்தவுடன் நேரில் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது ஐயா. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. நல்ல பதிவு. தமிழில் எழுத நான் உபயோகிப்பது tamileditor.org.

    பதிலளிநீக்கு
  12. இருபதுவருடங்களுக்குமுன்னாள் ஒரே மூச்சில் ஓடிப்போய் மலை உச்சியில் நின்ற நினைவுகள் வருகிறது.கோயிலின் பின்புறத்து மலையும் காடுகளும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.அந்த தரகுப்புல் வாசனையை உள்வாங்கியபடி.மூன்று அடி நீளமுள்ள தோல்ல் செருப்புகளை பார்த்து பயந்த அனுபவமும் நினைவுக்கு வருகிறது.அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  13. தங்களின் தகவலுக்கு மிக்க நன்றிகள். புகை படங்கள் அத்துணையும் அருமை.

    பதிலளிநீக்கு
  14. Meenakshi Sundaram Somaya காசு செலவில்லாமல்ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலை இன்று காலையிலேதரிசனம் செய்ய வைத்த திரு ரத்தினவேல் அவர்களுக்கும் ,பார்த்த உடனே ஆட்கொண்ட ஸ்ரீனிவாச பெருமாளுக்கும்.....எனது உளமார்ந்த நன்றி ........................................................................................................................ ஸ்ரீ வில்லிபுத் துருக்கு மா ர்கழியில் வந்து ஒருவாரம் தங்கி சுற்றியுள்ள ஊர்களை பார்க்க வேணும் என்று எண்ணம் கொண்டு இருந்தேன் உங்களது அற்புதமான உளமார்ந்த ஸ்ரீ வில்லிபுதுர்ரில் உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவசபெருமாள் கோவில் பற்றிய பதிவு அந்த எண்ணத்தைஉறுதிசெய்துவிட்டது....................................................கோயில் தோன்றிய காலம்,கல்வெட்டுகுறி ப்பு திருவண்ணாமலை என்று பெயர் வர காரணம் பற்றிய விபரங்களை இயன்றால் சேர்க்கவும்...................................................................அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
    பன்னு திருப்பாவைப் பல்பதியம்
    இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை
    பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

    சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை
    பாடி அருளவல்ல பல்வளையாய்
    நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
    நாங்கடவா வண்ணமே நல்கு. என்ற ஆண்டாள் புகழ் சொல்லி பெருமாளை பணிகிறேன்......

    பதிலளிநீக்கு
  15. அருமையான பதிவு;வாழ்த்துகள் திரு.ரத்தினவேல்.உங்கள் உள்ளூர் வரலாறு எழுதுங்கள்.எங்களுக்கு பயன்படும்

    பதிலளிநீக்கு
  16. ''...இடையில் பக்தர்கள் இளைப்பாறிச் செல்ல மூன்று மண்டபங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இது ஒரு ஆச்சரியமான, புதிய தகவல்....''
    மிக நல்ல விடயம். நீண்ட நாளின் பின் வந்த ஆக்கம். மகிழ்ச்சி ஐயா. கூகிள் குறொம் பாவித்து முயற்சிக்கிறேன் கருத்திட. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் பற்றிய படங்கள் தகவல்களுக்கு நன்றி படங்கள் நேரில் பார்ப்பது போல் உள்ளது

    பதிலளிநீக்கு
  18. அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இந்தத் திருவண்ணாமலை பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன். படங்களும் விவரங்களும் நேர்த்தி.

    பதிலளிநீக்கு
  19. அருமையான பகிர்வு. ஒருமுறை வரவேண்டும் இந்த திருத்தலத்திற்கு.

    பதிலளிநீக்கு
  20. பொதுவாக நான் கடவுள் மறுப்பாளன் இருந்தாலும் எல்லா கோவில்களுக்கும் சென்று பார்ப்பவன் உங்களின் இந்த இடுகை உண்மையில் பாராட்டுகளுக்கு உரியன சிறப்பான படங்களும் நீவீர் எழுதிய குறிப்புகளும் பாராட்டும் படியாக இருக்கிறது .

    பதிலளிநீக்கு
  21. அன்பு திரு ரத்னவேல், இதே திருவண்ணாமலைக் கோயிலில் தம்பிக்கு முடி கொடுத்த நினைவு இருக்கிறது. அப்பொழுது வண்டி கட்டிப் போனோம். சாப்பாடு எடுத்துப் போயிருந்தோம். ஆலமரத்தடியில் விளையாடிய நினைவும் இருக்கிறது. மிகவும் நன்றி., என்னால் வந்து பார்க்க முடியவிலையே என்ற ஏக்கம் அதிகரிக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. பதிவும் படங்களும் அருமை வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  23. அன்பு ரத்னவேல் அவர்களுக்கு,
    நீண்ட நாள் ஆசை இது... திருவண்ணாமலை பற்றி நீங்கள் எழுத வேண்டும் என்பது... அது இன்று கை கூடி இருக்கிறது... படங்கள் வழக்கம் போல அருமை.

    எனக்கு நிறைய மாறி இருப்பது தெரிகிறது... நான் திருவண்ணாமலை ஏறும் போது... முன்னூறு சொச்சம் படிகள் இருந்தது வாஸ்தவம் தான் ஆனால் ஒழுங்கான படிக்கட்டுகள் இருக்காது... அகலமான பாறைகளில் செதுக்கியது போன்ற படிக்கட்டுகள்... மேலே கூரை கிடையாது... ஆனால் இளைப்பாற மண்டபங்கள் அப்போதும் இருந்தன... வருவோர் போவோருக்கெல்லாம் திருச்சூர்ணம் இடும் பெரியவர், அவரின் குடும்பம் இப்போது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை... பஸ் ஸ்டேன்ட் என்று எதுவும் அப்போது இல்லை. ஆராயசிப்பட்டியில் இருந்து நடந்தே தான் பெரும்பாலும், சைக்கிள் அப்புறம் கொஞ்சம் காலத்திற்கு... டிவிஎஸ் பிப்டி அது தான் போக்குவரத்து. மாட்டு வண்டிகளும் போகும் சில சமயம். இருபக்கமும் அப்போதும் செங்கல் சூளைகள் இருந்தன. ரமேஷ் தியேட்டரே எனக்கு பிற்பாடான வளர்ச்சி என்று தான் தோன்றுகிறது. திரு.வி.க பள்ளி போகும் வழியில் இருக்கும். அப்புறம்... தமிழக அரசின் பதநீர் உற்பத்தியாளர்கள் சொசைடி இருந்தது... இப்போது அது பிள்ளைமார்களின் மண்டபமாய் இருக்கிறது என்று நினைக்கிறேன். திருவண்ணாமலை ஒரு பர்லாங் முன்னாடியே, பனை மரங்கள் நிறைய இருக்கும்...காட்டிற்குள் நுழைந்து... மொந்தையில் கல்லும்... நுங்கு பதநீரும் சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது. அப்படியே கொஞ்சம் காட்டுக்குள்ளேயே போனால் ஒரு பம்ப் செட்டு உண்டு... சில சமயம் அங்கேயே குளிப்பதும் உண்டு.

    பிராயிலர் கோழிகள் அறிமுகமான புதிதில் செங்கல் சூளைகள் இருந்த இடத்தில் ஒரு கோழிப்பண்ணை வந்தது... மாதா கோழிப்பண்ணை என்று நினைக்கிறேன். அதன் பிறகும் பிள்ளையார், தாமரை குலம்... திருவண்ணாமலை அடிவாரத்தில் சிவந்து கிடக்கும் குளம். மலையில் இருந்து சறுக்கியபடியே குளத்தில் விழுவதும் உண்டு... நிறைய டவுசர்கள் கிழித்திருக்கிறோம். குளித்து முடித்து மலையேறி, அங்கே இருந்த எல்லா சனிக்கிழமைகளும்... தவறாமல் ஸ்ரீனிவாச பெருமாளை பார்ப்பது உண்டு. ராமர்பாதம், பிரகாரத்தை சுற்றி கிடக்கும், பெருமாளின் காலணிகள். அங்கே இருந்து பார்க்க கிடக்கும் செம்மண் பூமி, தென்னை மரங்கள், மாதாக்கோவில் மலை... ஸ்ரீவில்லிபுத்தூரின் ரம்மியம் எல்லாம் மேலே இருந்து ரசிக்கும் பறவை நோக்கு வந்து விடும். மண்டபத்தில் அமர்ந்து நான் நடத்திய காலட்சேபங்கள். மறக்க முடியாத ஒரு இடம் திருவண்ணாமலை. ஸ்ரீவில்லிபுத்தூரின் இத்தனை ஒட்டி கொள்வதற்கு காரணம், அத்தனை புரண்டிருக்கிறேன்... புழுதி நிறைய வாய் வழி, உடம்பு, புத்தி எல்லா இடத்திலும் புகுந்திருக்கிறது போல. எனக்கு முதல் மொட்டை இங்க தான்...

    "உற்றோமே ஆவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்!" என்று சடாரியும்,துளசி தீர்த்தமும், ராமர் பாதமும் அந்த புழுதியூடே கலந்து உள்ளே புகுந்திருக்கிறது...
    ரொம்ப நிறைவான நெகிழ்வான பதிவு.

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  24. படித்து முடித்ததும் அந்தக் கோயிலுக்கு நேரில் போய் வந்த திருப்தி ஏற்படுகிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  25. ஒவ்வொரு படத்தையும் பார்க்கும்போது... அங்கு இருப்பது போல ஒர் உணர்வு...

    நேரில் தரிசனம் செய்தது போலவும் இருந்தது... வழக்கமான எல்லா பதிவும் போல இந்தபதிவும் எனக்கு புதிய தகவலை தந்தது...

    மிக்க மகிழ்ச்சி ஐயா.. உங்கள் பணிக்கு என் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  26. அருமையாக இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் எழுதியிருப்பது மிகப் பொருத்தமாக உள்ளது.
    புகைப்படங்கள் தெளிவாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  27. அருமையான் பதிவு ஜி உங்கள் இறைபணி தொடரட்டும் வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  28. அற்புதமான விடயம் அழகுதமிழில் பெருமாள் பெருமையை கொண்டு வந்துள்ளீர்கள்!எனக்கும் கிரிவலம் பார்க்கனும் என்று நீண்டநாள் ஆசை இன்னும் தீரவில்லை உங்கள் பதிவு படங்கள் மூலம் இன்னும் கூடுதல் தகவல் அறிந்தேன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  29. ஆண்டாள் அவதரித்த திருத்தலத்தில் அண்ணாமலையா என்ற வியப்பும், அவசியம் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்தி விட்டீர்கள். கிரிவலம் வந்த மகிழ்ச்சி அடைந்தேன்! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  30. அய்யா ,
    தங்களின் பதிவு மிகவும் அருமையானது .படியாய் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே என்று குலசேகர ஆழ்வார் கூறுவது பூல் ,அங்குள்ள ௩௫௦ படிகளில் ,ஒரு படியாவது ,நாம் இருப்பதற்கு
    எம் பெருமாள் அருள் புரிய வேண்டும் .அதுவும் ,தாங்கள் ,புரட்டாசி மாதம், தாங்கள் அனுப்பிய
    பெருமாள் கோவில் பற்றிய செய்திகள் மிகவும் புண்ணியம் சேர்க்கும்.தங்களின் பதிவை ,படிப்பதற்கு ,நான் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறேன்.மிக்க நன்றி ,அய்யா .
    அன்புடன் ,
    தமிழ் விரும்பி.

    பதிலளிநீக்கு
  31. Could have made a note about that church on the opposite hill. My self and my friend used to go up on both these hills during week ends. The hill with the church will be a bit higher, but no proper steps to get to the top, will be a small hike. But the view you get and fresh air .... its all worth it.

    பதிலளிநீக்கு
  32. அழகான விவரங்கள் குறித்தை கையேடு இது நல்ல பதிவு தொடர்ந்து புதிய நல்ல ஆன்மிக பதிவை எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  33. உங்கள் வாழ்த்துக்கு நன்றி சார்!! இந்த கட்டுரையை நீங்கள் எழுதியிருக்கும் விதம் அருமை...நமது ஊரைப்பற்றி எழுதுதியதைப் பார்க்கும் போதே சந்தோஷம்தானே!நான் வலைப்பூவிற்கு புதியவன்.நான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. எனது Mail id : c.marimuthu1@gmail.com. வாய்ப்பு கிடைக்கும் போது தொடர்பு கொள்கிறேன்.மீண்டும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  34. நல்ல தரிசனம்.மற்றொரு திருவண்ணாமலை இருப்பதை தங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன்.பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  35. அருமையான பகிர்வு.. நேரில பயணம் போன திருப்தியைத் தந்தது. இயற்கை வளங்களை ஆங்காங்கே சூறையாடி வெச்சிருக்கறது வேதனை..

    பதிலளிநீக்கு
  36. ஆன்மிகப் பயணம் தந்த நல்லதோர் பதிவு

    பதிலளிநீக்கு
  37. http://vallinamguna.blogspot.com/2011/10/blog-post_11.html

    சினிமா , விளையாட்டு என்று எழுதினால் மட்டுமே அதிகம் படிக்கும் இந்த காலத்தில் .. இதை படித்து கருத்துரையிட்டதற்க்கு உங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  38. மிக அருமையான தரிசனம் சார். நல்ல பதிவு. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாள்தான் விஷேஷம். :)
    புரட்டாசி மாதத்தில் நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  39. ஆம் ஐயா, அற்புதமான ஸ்தலம். நான் இருமுறை தரிசித்துள்ளேன், எப்போதும் அங்கு காற்று மிக அருமையாக வீசுவது குறிப்பிடத்தக்கது.

    பதிலளிநீக்கு
  40. அண்ணே அருமையான பதிவுன்னே...படங்களும் விளக்கங்களும் அழகு நன்றிண்ணே!

    பதிலளிநீக்கு
  41. பதிவிற்கு புகைப்படங்கள் அழகு சேர்க்கின்றன.
    ஸ்தல விளக்கம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  42. அருமையான படங்களுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  43. Arumaiyana Srivilliputhur Round-up Uncle.Hard workil munneriyathu kurithu Makizhchi.I'm a FoodBlogger from Nazareth and Palayamkottai. Following Ur blog Uncle.

    பதிலளிநீக்கு
  44. இந்த திருத்தலத்துக்கு ஒருமுறை சிறுவயதில்
    சென்றிருக்கிறேன் ஐயா..
    நீங்கள் கொடுத்த விளக்கங்களும்
    படங்களும் அருள் பாலிக்கின்றன..
    நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  45. முன்பெல்லாம் அடிக்கடி ஊர் சுற்றப் பயணப் படுவேன். இப்போது மிகவும் குறைந்து விட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்திருக்கிறேன். அண்ணாமலைபற்றி அறிந்திருக்கவில்லை. அடுத்தமுறை கைகூடினால் தரிசிப்பேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  46. சிறப்பு சிறப்பு உங்களின் இந்த இடுகை மிகவும் சிறப்பு இன்னும் எனக்கு இந்த சுற்றுலா சென்று அழகாக இயற்கையை சுவைக்க நேரம் வாய்க்கவில்லை அதற்க்கு பதிலாக உங்களின் இடுகை வாய்ப்பே பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  47. ஐயா நன்றாகத்தான் எழுதுகிறீர்கள் .தொடர்ந்தும் புதிய பதுவுகளிற்குக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  48. Vijayan Madurai to me
    show details 11 Oct (8 days ago)
    Sir,

    A good work. I read it fully and next time I propose to visit there, Pl wirite some thing about ESIC if you like, since you had written about EPF.

    பதிலளிநீக்கு
  49. Venkat S to me
    show details 12 Oct (6 days ago)
    நூறு தடவைக்குமேல் ஸ்ரீவில்லிபுத்தூரைக் கடந்து சென்றிருப்பேன். ஆனால் இந்தக் கோவிலுக்குச் சென்றதில்லை. உங்கள் பதிவு இங்கு செல்ல என்னை ஊக்கப்படுத்துகிறது.
    நன்றி,
    வெங்கட்.

    பதிலளிநீக்கு
  50. krishnan s to me
    show details 11 Oct (8 days ago)
    Dear sir


    I have once visited this place,but i have not recorded it, you have done it very good work.Thanks for recording our cultural sports.
    The saliyar community is doing something wonderful in the viruthunagar dist. they provides 24 hours free food distribution at SATHURAGIRI MAHALIGAM MALAI.RED SALUTE to their service.
    I request you to have a visit to SATHURAGIRI MAHALIGAM MALAI and make a record on it.
    I hope you are the right person to do this.
    I hope the nature will help you to give strength to record all this things, have a long life to give as this kind of useful information to the future generation.மிக்க நன்றி.Madurai suki (Tamil typing is not known pls forgive me)
    - Show quoted text -
    --
    S.KRISHNAN- ORGANIZING SECRETARY TNGSSOA

    பதிலளிநீக்கு
  51. தங்களின் இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.நேரமிருப்பின் சென்று பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_23.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னக்கு மிகவும் பிடித்த கோவில்.. படிக்கும்போது மனதில் அளவில்லா மகிழ்ச்சி..

      நீக்கு
    2. எனக்கு மிகவும் பிடித்த கோவில்.. படிக்கும்போது மனதில் அளவில்லா மகிழ்ச்சி..

      நீக்கு
  52. அன்பின் ரத்னவேல்

    அருமையான பதிவு - ஸ்ரீவில்லி புத்தூர் - திருவண்ணாமலை - ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் - கட்டுரை அருமை.

    நேரில் சென்று பார்த்தது போன்றே இருக்கிறது - பொறுமையாகப் படித்து மகிழ்ந்தேன்.

    தங்களின் கடும் உழைப்பு இப்பதிவினில் தெரிகிறது - எத்தனை எத்தனை புகைப் படங்கள் - எவ்வளவு தகவல்கள் - மலை முழுவதும் சுற்றிப் பார்த்து - ஓரிடம் விடாமல் புகைப்படம் எடுத்து - விளக்கமாக எழுதியமை நன்று ரத்ன வேல்.

    பயனுள்ள தகவல்கள் - புதிதாகச் செல்பவர்களுக்கு ஆலோசனையும் - விளக்கங்களும் கொடுத்தமை பாராட்டுக்குரியது.

    கோவிலைன் தலபுராணம் துவங்கி இன்றைய நிலை வரை எழுதியது உண்மையிலேயே தங்களின் ஈடுபாட்டினைக் காட்டுகிறது.

    இன்று புரட்டாசி மூனறாம் சனிக்கிழமை. இன்று இப்பதிவு எங்கள் கண்களில் பட்டது நாங்கள் செய்த புண்னீயம்.

    நேரில் சில முறை ஆண்டாள் சந்நித்திக்கு வந்திருந்தாலும் இங்கு செல்ல வில்லை. செல்லும் வாய்ப்பு வர வில்லை.

    பக்ர்வினிற்கு நன்றி ரதனவேல்

    நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  53. Indru Sri Rengam Sendru vandhen. Purattasi third saturday... Thiruvannamalai Perumalai tharisiththathu pola irunthathu ungalathu pathivu.. indha virivaana pathivai nerthiyaga vazhangia sir avargalukku Perumal Anugraham endrum undu. nandri sir...

    பதிலளிநீக்கு
  54. அழகான படங்களுடன் அருமையான விளக்கங்களுடன் சிறப்பான பதிவு. அங்கு வந்து காண இயலாதவர்களுக்கு தரிசனம் முழுதும் கிட்டியது போன்ற உணர்வு கண்டிப்பாகக் கிடைக்கும். தங்கள் பணி மென்மேலும் தொடர என் மனமார்ந்த பிரார்த்தனைகள்!

    பதிலளிநீக்கு
  55. அழகான படங்களுடன் அருமையான விளக்கங்களுடன் சிறப்பான பதிவு. " கோவிந்தா கோபாலா" என்று படி ஏறி, ஒவ்வொரு சன்னிதியாக சென்று தரிசனம் செய்தது போல் இருந்தது ஐயா! அற்புதம்.. நன்றி..
    நேரில் வந்து காண இயலாதவர்களுக்கு தரிசனம் கிட்டிய மகிழ்ச்சி நிச்சயம் இருக்கும். தங்கள் பணி மென்மேலும் தொடர மனமார்ந்த பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  56. அருமையான் பதிவு உங்கள் இறைபணி தொடரட்டும் வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  57. அருமை அருமை. அழகிய படங்களுடன் ஆழ்ந்த விஷயங்களுடன் தேர்ந்த பதிவு.

    மேற்கூரை போட்ட பிறகு திருவண்ணாமலை வரவில்லை. ஒருமுறை வர வேண்டும். பிரகாரத்தின் உள்ளே சந்நிதிக்கு எதிரில் அமர்ந்திருந்தால் அங்கே காற்று வரும். மேலே ஏறிய பின் படிக்கட்டுகளின் மேலிருந்து நீங்கள் புகைப்படத்தில் அளித்திருக்கும் காட்சிகளை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

    நன்றி ரத்னவேல் ஐயா.

    எஸ்.எஸ். மணியம் சிறந்த ஆர்வலர்.

    பதிலளிநீக்கு
  58. மிகச் சிறந்த பதிவு.
    பல விடயங்களை அறியக் கூடியதாக இருந்தது.
    மிக்க நன்றி.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு