வியாழன், ஜனவரி 12, 2012

பற்களைப் பற்றிய ஒரு பதிவு


திரு இராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் எனது முகநூல் நண்பர்.  அவர் மருத்துவம் சம்பந்தமாக நிறைய அருமையான கட்டுரைகள் எழுதி வருகிறார்.  பற்களைப் பற்றிய ஒரு அருமையான கட்டுரை முகநூலில் எழுதியிருக்கிறார்.  எனது வேண்டுகோளின் பேரில் எனது பதிவாக வெளியிட அனுமதி கொடுத்திருக்கிறார்.  எனவே ‘பற்கள் பற்றிய கட்டுரையை’ எனது பதிவாக வெளியிடுகிறேன்.  படித்துப் பார்த்து தங்களது கருத்துகளை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.


ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி...நாலும், இரண்டும் சொல்லுக்கு உறுதி என்பது சொலவடை. பேஸ்புக்கின் சொல்லின் செல்வர்களாகிய நாம், நமது பற்களைப் பற்றிய சில முக்கிய குறிப்புகளையும், பாதுகாப்பினையும் தெரிந்து கொள்வோம். படிக்க 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

பற்கள்:

1. பற்களின் தோற்றம் : ஆரோக்கியமான மற்றும் முழுமையாக உருவாகிய பற்கள் வெள்ளை நிறமாக இருக்காது. இருக்கவும் கூடாது. சிறிது பழுப்பு நிறமாகத்தான் இருக்கும். உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? பலமான பற்கள் சிறிது பழுப்பு நிறமாகவே இருக்கும். அதனால் கவலைப்படாதீர்கள்.!

2. வளர்ச்சி: குழந்தைப் பருவம் முதல்...!

அ. கீழ் முன்வெட்டுப் பற்கள் – 6 மாதம் முதல் 15 மாதம் வரை

ஆ.பக்கவாட்டு வெட்டுப்பற்கள் – 9 மாதம் முதல் 15 மாதம் வரை

இ. கீழ்த்தாடை முதல் அரைக்கும் பற்கள் – 12 மாத அளவில்

ஈ. கீழ்த்தாடை இரண்டாம் அரைக்கும் பற்கள் -20 மாத அளவில்

உ. கீழ்த்தாடை அரைக்கும் பற்கள் – 16 மாத அளவில்

ஊ. நிரந்தரப் பற்கள்:

மைய வெட்டுப்பல் – 6-7 வயதில்

பக்க வெட்டுப்பல் – 7-8 வயதில்

கோரைப் பற்கள் – 9-10 வயதில்

முதல் "முன்" கடைவாய்ப் பற்கள் – 10-12 வயதில்

இரண்டாம் "முன்" கடைவாய்ப் பற்கள் – 11-12 வயதில்

முதல் கடைவாய்ப் பற்கள் – 6-7 வயதில்

இரண்டாம் கடைவாய்ப் பற்கள் – 11-13 வயதில்

மூன்றாம் கடைவாய்ப் பற்கள் – 17..18 வயதில். சில சமயம், இந்தப் பற்கள் சுமார் ஓரிரு ஆண்டுகள் தாமதமாக முளைக்கலாம்.

பற்களில் ஏற்படும் காரை மற்றும் இன்பெக்ஷன்: உமிழ் நீரில் உள்ள ஜீலீ 7 ன் அளவு குறையுமானால், அதிலுள்ள கால்சியம் மற்றும் உப்புச்சத்து...பற்கள், மேல் படிந்து காரையாக மாறிவிடும். இது ஆரம்பத்தில் படிமமாக்கப்பட்டு, கடினமாகும். ஈறு உள்ள இடத்தில் தங்குவதால், ஈறினை உறுத்தி வலியை ஏற்படுத்தும். இந்தக் காரை..மஞ்சளாகவும், கருப்பாகவும், இளநீலமாகவும் இருக்கும். இது பற்களின் மேல் படிவதால் பயோரியா வியாதி ( பாக்டீரியல் இன்பெக்ஷன்) ஆரம்பிக்கிறது. அதுமட்டுமல்ல, பற்களை சரியாகச் சுத்தம் செய்யாதவர்களின் பற்களிலும் கரை படியும்!

பல் பிடிங்கிய பிறகு :பற்கள் எடுத்த இடத்தில் வைக்கப்பட்ட பஞ்சினை சுமார் ஒரு மணி நேரம் கழித்து நீக்கிவிட வேண்டும்.நாக்கையோ, விரலையோ பயன்படுத்தி பல் எடுத்த இடத்தை நோண்டக் கூடாது. டாக்டரின் ஆலோசனையில்லாமல் ஐஸ்கட்டி வைப்பதை தடுக்க வேண்டும்.பற்கள் எடுத்த ஆறு மணி நேரத்திற்குப் பின், வெந்நீரில் சிறிது சமையல் உப்புக் கலந்து வாய் கொப்பளிக்கலாம். தொடர்ந்து இரத்தக் கசிவு இருக்குமேயானால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். 

உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். 

உங்கள் அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல்  வாழ்த்துகள்.


மிக்க நன்றி.

திங்கள், ஜனவரி 09, 2012

ஆண்களுக்கும் மார்பக புற்று நோய்! (நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி)



SUNDAY, NOVEMBER 06, 2011

ஆண்களுக்கும் மார்பக புற்று நோய்!(நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி)


பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்கள் ‘ஆண்களுக்கும் மார்பக புற்று நோய்’என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள்.  அதை அவர்களது அனுமதியுடன் எங்களது பதிவாக வெளியிட்டிருக்கிறோம்.  படித்துப் பார்த்து உங்களது கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.  அவர்களது பதிலை வாங்கி வெளியிடுகிறோம்.

புற்றுநோய் என்பது ஒரு நோயல்ல. சாதாரண செல்கள் தனது வளர்ச்சியின்போது செல் பிரிதல் நடைபெறுகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஒரு மரபணுவும் உண்டு. சில செல்களில் சில சமயம் பிரிதலில் வளர்ச்சி கட்டுப்பாட்டை இழந்து வெகு வேகமாக குண்டக்க மண்டக்க என்று இஷ்டம் போல் பிரிகின்றன. அவை தனக்கு வேண்டிய உணவையும் கூட பக்கத்திலிருக்கும் செல்களிடம் இருந்து அநியாயமாகப் பிடுங்கி, சாப்பிடுகின்றன. இதுவே புற்றுநோய் என்பது. உலகில் சுமார் 200 வகை புற்றுநோய்கள் உள்ளன. இதில் சுமார் 10௦-15 வகைகளே பரவலாக காணப்படுகின்றன. அதில் முக்கியமானவை பெண்களுக்கு மார்பகம், கருப்பையின் வாய் & வயிறு போன்ற இடங்களிலும், ஆண்களுக்கு ஆண் இனப்பெருக்க உறுப்புக்கு உற்பத்தி செய்து தரும் பிராஸ்டேட் சுரப்பி (Prostate gland) என்ற உறுப்பிலும், வயிறு, சிறுநீரகம் போன்ற இடங்களிலும் பொதுவாக வருகிறது.
புற்றுநோய் பற்றிய சில குறிப்புக்கள்:
• சாதாரண செல் பிரிதல் நிகழ்வு கட்டுப்பாடின்றி நடந்தால் அதுதான் புற்று நோயாகிறது. இதிலுள்ள செல்கள் அண்டை வீட்டையும், அதன் பக்கத்து இடங்களையும், யாருடைய அனுமதி இன்றியும் எட்டிப் பார்க்கும்.
• இது ரொம்ப சேட்டைக்கார செல். அந்த இடத்தில் உள்ள திசுக்களை சத்தமின்றி அழித்துவிடும்.
• இதில் உள்ள செல்கள் முதிர்நிலைக்குப் போய்விட்டால், அவை நாம் ஊர் சுற்றிப் பார்க்கப் புறப்படுவது போல், அவையும் உடலின் மற்ற இடங்களை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டு விடும்.!
• அவை ஏறிச் செல்ல ஓர் ஊர்தி வேண்டுமல்லவா? அதுதான் நிணநீர் நாளங்களும், இரத்தக் குழாய்களும். கட்டணம் ஏதுமின்றி இவற்றை ஏற்றிக்கொண்டு போய் உடலில் அவை விரும்பும் பகுதிகளில் இறக்கி விடும்.
•  எங்கு இவைகட்கு விருப்பமோ அங்கு போய் இறங்கி அங்கேயும் தன் குஞ்சு குளுவான்களை பெருக்கும்.. அபரிதமாய். இவைதான் புற்றுநோய் செல்களின் சிறப்பு செயல்பாடு.
•  துவக்க நிலையிலேயே கண்டுபிடிக்கப் பட்டால், இதனை முற்றிலும் குணப்படுத்த முடியும். .
• சுமார் 200 வகை புற்று நோய்கள் உள்ளன.
• புற்றுநோய் பாரபட்சமற்ற நோக்கம் கொண்டது என்றே கூறவேண்டும். குழந்தை, இளையோர், முதியோர், ஏழை, பணக்காரர், ஆண், பெண் பேதமின்றி அனைவரையும் தொட்டுத் தொட்டு துன்புறுத்தி இன்பம் காண்பது புற்று.
• வளர்முக நாடுகளில் ஏற்படும் இறப்பின் முக்கிய காரணிகளில் ஒன்று புற்றுநோய்.
• புற்றுநோய் ஒரு கொடுமைக்கார வியாதி என்றாலும் கூட, கொஞ்சம் கவனத்துடன் இருந்தால், கவனத்துடன் கையாண்டால், இதனால் உண்டாகும் இறப்பின் பெரும்பகுதியைத் தவிர்க்கலாம். 30% புற்று நோய் இறப்பு தவிர்க்கக்கூடியதே..!
• மற்றவற்றை துவக்க காலத்திலேயே, கண்டறிந்து, சிகிச்சை அளித்தால் முழுமையாக குணப்படுத்த முடியும்.
புற்றுநோயின் காரணிகள்
• புற்று நோய் உண்டாவதற்கான துல்லியமான காரணி இதுவரை க்ண்டறியப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணி உள்ளது.
• புகையிலை பயன்படுத்துவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் காற்று மாசு மற்றும் கதிர்வீச்சு காரணமாகவும் நுரையீரல் புற்று வரும் வாய்ப்பு உண்டு.
• புற்றுநோய் என்பது முக்கியமாக 90-95% சூழல் தொடர்பான ஒரு நோய்தான். 5-10% மட்டுமே பாரம்பரிய மரபணுக்கள் மூலம் வருகிறது.
• இதற்கான காரணிகள் என புற்று நோய் ஆராய்ச்சி மையங்கள் அறியப்பட்டவை:
1.புகையிலை: 25-30%
2.உடல் பருமன்:30-35%
3.கதிர்வீச்சு:10% வரை
4.மனழுத்தம், உடல் பயிற்சி இன்மை & சூழல் மாசு..15-20%
2011 பிப்ரவரி கணக்குப்படி, இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.2 கோடிப்பேர். இதில் புகையிலையால் ஏற்பட்ட பாதிப்பே அதிகம்.
இந்த எண்ணிக்கையில் 55% புற்றுநோய் தடுக்கக் கூடியது. 65% புற்று நோயாளிகள் இதன் 3& 4 ம் நிலையில் கண்டறியப்பட்டுள்ள‌ன‌ர். இந்த நிலையில் அறியப்படும்போது, அவற்றின் சிகிச்சை என்பது சிரமமானதே.
குழந்தைப் பருவத்தில் தாக்கும் புற்றுநோய்கள்
பொதுவாக குழந்தைப்பருவ புற்று என்பது அரிதுதான். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1/600 பேருக்கு புற்றுநோய் வருகிறது. ஆனால் அதற்கான காரணிகள் இன்னும் சரிவரத் தெரியவில்லை. உலக அள்வில் இது 1% மட்டுமே.
பெரியவர்களுக்கு வரும் நுரையீரல், மார்பகம், வயிறு மற்றும் மலக்குடல் புற்று இவர்களுக்கு வராது. கடந்த 10 ஆண்டுகளாக இதற்கான சிகிச்சையும் அதிகரித்து அவர்களின் வாழ்நாள் காப்பாற்றப்பட்டிருக்கிறது.
புற்றுநோய் வரக்கூடிய இடங்கள்
1.மார்பகம்
2.நுரையீரல்
3.ஆண் இனப்பெருக்க உறுப்பு
4.மலக்குடல்
5.பெண் இனப்பெருக்க உறுப்பு
6.சிறுநீர்ப் பாதை
7.சிறுநீரகம்
8.உணவுப்பாதை
9.தலை
10.கழுத்து
11.தோல்
12.இரததம்
13.மூளை
14.எலும்பு
15.நாளமில்லா சுரப்பிகள்
எளிதில் குணப்படுத்தக் கூடிய மார்பகப் புற்று
மார்பகப் புற்று என்பது சிகிச்சைக்கு கட்டுப்படும் ஒன்றாகிவிட்டது. இதன் முக்கிய காரணம் தற்போது அதிகரித்துள்ள விழிப்புணர்வும்,அதனை சோதிக்க mammograms and CT ஸ்கேன் இருப்பதுதான்.
இதனை எளிதில் பிரச்சினை இன்றி அறுவை சிகிச்சையால் அகற்றிவிடலாம். இதனை துவக்க காலத்தில் அறிந்தால், அறுவை சிகிச்சை செயத பின்னர் வேதிசிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் குணப்படுத்தி விட முடியும்.
கள்ளனைக் கண்டுபிடிப்பது எப்படி..?
புற்று நோய் இருப்பதாக சந்தேகம் வந்தால், மருத்துவ சோதனை மூலம் அதனை அறிவது மிக எளிது. அந்தப் பகுதியிலிருந்து எடுத்த செல்களை ஆராய்ந்தால் அவற்றின் தன்மை தெரியும். புற்று நோயை, அது வளர்ந்திருக்கும் நிலை அறிந்து, அதனை வேதி சிக்ச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.
அதனை சரியாக்குவது என்பது நீங்கள் எவ்வளவு தைரியமாய் உள்ளீர்கள் என்பதும், அது எந்த இடத்தில் இருக்கிறது மற்றும் அதன் வளர்நிலை என்ன என்பதைப் பொறுத்துமே அமைகின்றன.
புற்று நோயின் அறிகுறிகள்
பொதுவாக புற்று நோயின் அறிகுறிகள் அந்தந்த புற்று நோய்க்குத் தகுந்தபடி வேறுபடுகின்றன. இருப்பினும், சில பொதுவான அறிகுறிகளும் உண்டு.
பொதுவாக அனைத்து புற்றுநோய்களுக்கும், எடை குறைவு, ஏதாவது ஒரு இடத்தில் கட்டி/மதமதப்பு இருக்கும். சில சமயம் காய்ச்சல், இரத்த சோகை மற்றும் இரவில் வியர்த்தல் போன்றவையும் தென்படும்.
உலகத்திலேயே டென்மார்க்கில்தான் அதிக அளவு புற்று நோய் காணப்படுகிறது. இந்தியாவில் வருடந்தோறும் சுமார் 1,00,000 பெண்கள் கருப்பை புற்று நோயால் இறக்கின்றனர்
மார்பக புற்றுநோய்
cancer_360இந்தியாவின் நகர் & கிராமப் புறங்களில் பெரும்பான்மையாக மார்பகப் புற்றுநோயே அதிகமாகக் காணப்படுகிறது. சென்னை, பெங்களூரு, அகமதாபாது, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் காண்ப்படும் புற்று நோய்களில் மார்பகப் புற்றே.. 28%-35% உள்ளது.
இதில் முக்கியமாக வயது இடம் மாறுதல்/குறைப்பு ஏற்பட்டுள்ளது. முன்பு 50-60 வயதுக்காரர்களுக்கு வந்தது போய் இன்று 30-40 வயதுக்காரர்களுக்கு வருவது மிகவும் கவலையளிக்கும் மற்றும் கவனத்தில் கொள்ள் வேண்டிய தகவல்.
நிறைய புற்றுநோய் மையம் இல்லாத மருத்துவமனைகள மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை தருவதால், இதில் பல பிரச்சினைகளும், தரக் குறைவான அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டு, நோயாளியின் வாழ்நாள் குறைய வாய்ப்புள்ளது.
புற்றுநோய் பற்றிய கற்பனையும் தவறான கருத்துக்களும்
புற்று நோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு ஒட்டும் வியாதியல்ல. புற்று நோய என்பது முழுக்க முழுக்க உடலியல் சார்ந்தது. உள்ள நிலைபாடு மூலம் புற்று உருவாகாது. தவறான் உணவு உட்கொள்ளும் முறைதான் புற்றுக்கு காரணம் என்பது தவறான கருத்து. ஒழுங்கான உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கும் கூட புற்று நோய் வரலாம்.
புற்று நோய் வராமல் தடுக்க செய்ய வேண்டியவை..!
1. முதலில் வாழ்க்கையைப் பற்றிய மட்டற்ற, நெகிழ்வற்ற, உறுதியான நம்பிக்கையுடன், நல்ல உணர்வுடன் இருங்கள்.
2.நிறைய தாவர உணவுகள், பயறு வகைகள் சாப்பிடுங்கள்.
3.நிறைய நீர் அருந்துங்கள்.
4.இயற்கைப் பொருள்களையே வீட்டிலும் வெளியிலும் பயன்படுத்துங்கள்.
5.உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.
6.குறைவான மது அருந்துங்கள்.
7.அதிகமாக உடற்பயிற்சி செய்யுங்கள்.
மார்பகப் புற்று..
தற்போது பிறக்கும் பெண் குழந்தைகளில் 14 குழந்தைக்கு ஒன்று, எதிர்காலத்தில் புற்று நோய் வரும் வாய்ப்பு உண்டு எனற தகவல் கசப்பான உண்மையே..! ஆணுக்கும் கூட மார்பக புற்று வருவதுண்டு. அதன் அறிகுறி, மற்றும் அனைத்து சிகிச்சையும் பெண்ணைப்போன்றதே.
மார்பகப் புற்று என்பது மார்பகத் தசைகளிலிருந்து உருவாகிறது. பொதுவாக மார்பகப் புற்று பால் சுரப்பிகளிருந்தும்/சுரப்பி மடல்/மடிப்புகளிளிருந்தும் உருவாகிறது. மார்பகப் புற்று மனிதன்/பாலூட்டிகளிடம் வரும் நோயாகும். ஆண்,பெண் இருவருக்குமே வரும் நோய் என்றாலும், உலகம் முழுவதும் மார்பகப் புற்றுநோயால் 22.9% பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். 2008ம் ஆண்டு மட்டும் 458,503 பெண்கள் புற்று நோய்க்கு உயிர்ப் பலி ஆகி இருக்கின்றனர். இது உலகில் புற்று நோயால் சாவினைத் தழுவும் பெண்களில் 13.7% ஆகும்.
ஆண்களில் 1 % பேருக்கு மார்பக புற்று வருகிறதாம். ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவில் 300௦௦ பேரும், அமெரிக்காவில் 1,910 பேரும் புதிய மார்பக புற்று நோயாளிகள் எண்ணிக்கையில் அதிகரிக்கின்றனர். இந்தியாவில் காணப்படும் ஆண் புற்று நோயாளிகளில் 0௦.7% பேருக்கு மார்பக புற்று காணப்படுகிறதாம். பெண்களின் மார்பக புற்றுநோய் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 12% அதிகரித்துள்ளது. அதுபோலவே, ஆண்களிலும் மார்பக புற்றுநோயின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 2011 பிப்ரவரியில் இந்நோய் ஆண்களிடம், குறிப்பாக நகர்ப்புற ஆண்களிடம், 1.5- 2% அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
  ஆண்களுக்கான மார்பகபுற்று நோய் என்பது எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் பொதுவாக, 60 -70 வயதில் வருகிறதாம். 2011, பிப்ரவரியில், ஈரோடு நண்பர் ஒருவர் 40 வயதில் இந்த நோய் வந்து, உயிரைப் பறி கொடுத்தார். அதிகமான கதிர்வீச்சும், அதிகம் ஈஸ்ட்ரோஜென்(பெண்களுக்கான ஹார்மோன்) என்ற ஹார்மோன் சுரப்பும், குடும்பத்தில் இரத்த உறவில் யாருக்காவது மார்பக புற்று வந்திருத்தல் என்ற கொஞ்சம் பாரம்பரிய காரணிகளும் உண்டு. அதிக ஈஸ்டிரோஜென் ஹார்மோன், மருந்துகள், உடல் பருமன், ஈரல் வியாதிகளால் உருவாகிறது. மேலும் ஆண் மார்பக புற்று என்பது, மோசமான, நாள்பட்ட மதுப் பழக்கத்தாலும் உருவாகிறதாம். பெரும்பாலான ஆண் மார்பக புற்று, கிளின்பெல்டர் சிண்ட்ரோம் (Klinefelter syndrome,a genetic disorder, having XXY chromosomes)என்ற நோயாலும், BRCA வின் எதிர்பாரா மரபணு மாற்றத்தாலும் ஏற்படுகிறது. ஆனால் அனைத்து புற்றுநோய்களுக்கும் பெரும்பாலும் எதிர்பாரா மரபணு மாற்றத்தால் உருவாவதாகவே, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  
  ஆண் மார்பக புற்றுநோயின் அறிகுறிகள், அறுவை சிகிச்சை, வேதி சிகிச்சை, கதிர் வீச்சு சிகிச்சை மற்றும் மாற்று மருந்துகள் எல்லாம் பெண்களின் மார்பக புற்று நோய்போலவேதான். ஆண்களுக்கு பால் சுரப்பிகள் இல்லை. வியர்வை சுரப்பிகள்தான், மார்பக திசுக்களில் பால் சுரப்பியாக செயல்படுகிறது. அது செயல்பட, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் தூண்டுதல் வேண்டும். ஆண்களுக்கு அவர்களின் விந்தகத்திலிருந்து சுரக்கும் ஆண்டிரோஜென் என்ற ஹார்மோன், மார்பக திசுவை வளர விடாது. எனவேதான் ஆண்களுக்கு மிகக் குறைவாக மார்பக திசு உள்ளது. குறைவான மார்ப‌க திசுவால், அவர்களுக்கு ஏற்படும் மார்பக புற்று, அருகிலுள்ள உறுப்புகளில் விரைவாகப் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. 
 ஆண் மார்பக புற்று, பெண்களுக்கு போலவே, மார்பகத்தில் கட்டி, நீர் வடிதல், மார்பகம் உள்நோக்கி இழுக்கப்படுதல், அந்தப் பகுதியில் நாள்பட்ட வீக்கம் மற்றும் அக்குளில் கட்டி போன்ற அறிகுறிகளால் அறியலாம். இதன் சிகிச்சையும் பெண்களுக்கு கொடுப்பது போலவே. ஒருவரின் தாய், சகோதரி போன்றவர்களுக்கு மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் வந்தால், அவருக்கும் மார்பக புற்று ஏற்பட வாய்ப்பு உண்டாம்.
2011, செப்டம்பர் இன் மருத்துவ ஆய்வுத் தகவல்படி, ஆண்களுக்கான புற்று நோய் எண்ணிக்கை என்பது முன்பை விட அதிகரித்துள்ளது. அது மட்டுமல்ல, பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயை ஒப்பிடும்போது ஆண்களுக்கு வரும் மார்பக புற்று என்பது மிகவும் முற்றிய நிலையிலேயே கண்டு பிடிக்கப்படுகிறதாம். இந்த தகவலைச் சொன்னவர் ஹூஸ்டன் நகரின் ஆண்டர்சன் புற்று நோய் நிறுவனத்தில், ஆராய்ச்சி செய்யும் பெண் புற்றுநோய் நிபுணர் சார் ஜியார்டானோ (Dr .Sharon Giordano) தெரிவிக்கிறார். மேலும் கடந்த 25 வருடத்தில், ஆண்களுக்கான மார்பக புற்று 25% அதிகரித்துள்ளது என்றும் கூறுகிறார். ஆண்களுக்கு வரும் மார்பக புற்று அங்கு பாலூட்டுவதற்கான தசைகள் இல்லாததால் புற்று நோய் என்பது படபடவென பரவி, எல்லா இடங்களுக்கும் போய்விடுகிறதாம். எனவே பொதுவாக ஆண்கள் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவரிடம் செல்கின்றனர் என்கிறார்.
- பேரா.சோ.மோகனா ( mohanatnsf@gmail.com)
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.  மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.
மிக்க நன்றி.


வெள்ளி, ஜனவரி 06, 2012

மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை

உண்மைக்கதை
திரு இராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் எனது முகநூல் நண்பர். அவர் ‘மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை '– என ஒரு சிறுகதை அவரது முகநூல் பக்கத்தில் 21.12.2011 நாள் எழுதியிருக்கிறார். இது உண்மைக்கதை. ஒரு மருத்துவரின் வாழ்வில் நடந்த்து. நண்பரின் அனுமதி வாங்கி பதிவாக வெளியிடுகிறேன். திரு இராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.

மருத்துவமனை ஒன்றில்...தொலைபேசி அழைப்பின் பேரில் மிக அவசரமாக நுழைந்த அறுவை சிகிச்சை நிபுணர்...தனது உடைகளை அதற்கேற்ப மாற்றி கொண்டு...அறுவை சிகிச்சை அரங்கினுள் நுழையும் போது...ஒரு இளைஞர் மேஜை மீது சிகிச்சைக்கு தயாராக காத்துக் கொண்டிருப்பதையும், வெளியே உள்ள வராந்தாவில் மிக வேகமாக நடந்து கொண்டிருந்த அவரது தந்தையையும் கண்டார்.!

இளைஞரின் தந்தை மருத்துவரைப் பார்த்தவுடன்...மிகவும் கோபமாக...உங்களுக்கு எல்லாம் பொறுப்பே இல்லையா...!எனது மகனின் உயிர் ஆபத்தில் உள்ளது...!ஏன் இவ்வள‌வு தாமதமாக வருகிறீர்கள்.! என்று கத்தினார்.

மருத்துவர் அவரைப் பார்த்து புன்னகையுடன்..."என்னை மன்னித்து விடுங்கள்".! நான் மருத்துவமனைக்கு வெளியே இருந்த படியால், தொலைபேசி அழைப்பின் பேரில் மிக விரைவாக வந்துள்ளேன். தாங்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்தால்..நான் எனது சிகிச்சையை தொடங்கலாம்...என்றார்.!

மீண்டும் கோபமாக இளைஞரின் தந்தை...டாக்டரிடம்..என்னை பொறுமையாக இருக்கச் சொல்கிறீர்களா.! இதே உங்களது மகனாக இருந்தால்..அல்லது உங்கள் மகன் இது போன்ற தாமத்தால் இறந்து விட்டால், இதே பொறுமையுடன் தான் இருப்பீர்களா...! என்று கேட்ட்டார்.

மருத்துவர் மீண்டும் புன்னகையுடன்...அவரிடம்.."நாங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழிப்படி நடந்து கொள்வோம்"...(சில வரிகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பது கடினம் என்பதால், அப்படியே அளித்திருக்கிறேன்)...

“I will say what Job said in the Holy Book “From dust we came and to dust we return, blessed be the name of God”. Doctors cannot Prolong Lives. We only Treat the Patient...God Heals them..!

இப்போது நீங்கள் உங்கள் மகனுக்காக சிறிது நேரம் பிரார்த்தனை செய்யுங்கள். அதற்குள் நான் சிகிச்சையை தொடங்கி விடுகிறேன்...என்றார். மீண்டும் இளைஞரின் தந்தை.."அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்வது சுலபம்", நாம் அந்த நிலையில் இருந்தால் தான் புரியும் என்று கோபமாக முணுமுணுத்தார்.! பின்னர்...சிகிச்சையை தொடங்கிய மருத்துவ நிபுணர்...சில மணி நேரங்களுக்கு பின்னர்...அரங்கிலிருந்து வெளியே வந்து...அதே புன்னகையுடன் இளைஞரின் தந்தையிடம்..சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விட்டது...உங்கள் பிரார்த்தனை பலித்திருக்கும்...மற்ற விஷயங்களை உதவியாளரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு, அவரது பதிலை எதிர்பார்க்காமல் மிக வேகமாக வெளியேறினார். 

தொடர்ந்து...இளைஞரின் தந்தை உதவியாளரிடம்...ஏன் இவர் இப்படி மோசமாக நடந்து கொள்கிறார். ஒரு சில நிமிடங்கள் கூட தாமதிக்க முடியாதா.! நான், எனது மகனுடைய உடல் நிலை பற்றி கேட்டுக் கொள்வேன் அல்லவா என்றார்!...அதே கோபத்துடன். அந்த இளம் உதவியாளர், கண்களில் நீர் பெருக கூறினார்...இளைஞரான அவரது மகன் நேற்று ஒரு சாலை விபத்தில் அகால மரண‌மடைந்து விட்டார். தொலைபேசி தகவலுக்கு பிறகு, உங்களது மகனுடைய சிகிச்சைக்காக அவர், தனது மகனின் இறுதி சடங்குகளை நிறுத்தி விட்டு...வந்து...சிகிச்சை அளித்து...உங்கள் மகனது உயிரை காப்பாற்றிய அந்த தந்தை ( டாக்டர்) தனது மகனுடைய இறுதி சடங்குகளை நிறைவேற்ற செல்கிறார் என்றார்.!!!

1. "உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்".
2. "நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு"... என்பவை தெய்வப் புலவரின் வாக்கு அன்றோ.




இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். 

உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். 

உங்கள் அனைவருக்கும் எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.


மிக்க நன்றி.

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

தைராய்டு பற்றிய பதிவு


டாக்டர் K.M.முருகானந்தம், கொழும்பு (ஸ்ரீலங்கா) நகரைச் சேர்ந்தவர்.  எனக்கு முகநூல் நண்பர்.  டாக்டர் முருகானந்தம் அவர்கள் நிறைய நோய்கள் பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறார்.  எனது வேண்டுகோளுக்கிணங்க அவரது பதிவுகளை எனது பதிவில் வெளியிட அனுமதி கொடுத்திருக்கிறார்.
எனவே தைராய்டு நோய் பற்றிய அவரது கட்டுரையை எனது பதிவாக வெளியிடுகிறேன்.  டாக்டர் K.M.முருகான்ந்தம் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி.

தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?

"கை கால் உளைவு, களைப்பு, உடம்பு நோ, சோம்பல், தூக்கக் குணம், மலச்சிக்கல், உடம்பு பாரமாக இருக்கு, தசைப்பிடிப்பு ...." என்று சொல்லிக் கொண்டே போனாள்.


அந்தப் பெண்மணியின் நோய் அறிகுறிகள் தண்டவாளம் போல முடிவின்றி நீண்டு கொண்டே போயின. அவரை நோட்டமிட்டேன்.

வயது அய்ம்பது இருக்கும். 'வதனமே சந்திரபிம்பமோ' என்பது போல உருண்ட வட்ட முகம், கொழுத்த உடம்பு, வரண்ட தோல், சற்றுக் கரகரத்த குரல், அதிகம் கொட்டியதால் அடர்த்தி குறைந்த தலை முடி.
அவர் கூறிய அறிகுறிகளையும், நான் அவதானித்த குறிகளையும் இணைத்துப் பார்க்கும் போது இவருக்கு தைரொயிட் சுரப்பியின் செயற்பாடு குறைவாக இருக்கலாமோ எனத் தோன்றியது.
இவற்றுடன்

·                     குளிர் சுவாத்தியத்தைத் தாங்க முடியாத தன்மை, 
·                     மறதி, 
·                     மனச் சோர்வு, 
·                     தசைப் பிடிப்பு போன்ற அறிகுறிகளும் சேர்ந்திருப்பதுண்டு. 
நாடி பிடித்துப் பார்த்தபோது நாடித் துடிப்பு சற்றுக் குறைந்திருந்தமை எனது சந்தேகத்தை வலுப்படுத்தியது. இளம் பெண்களுக்கு மாதவிடாய்க் குழப்பங்களும் ஏற்படுவதுண்டு.
"
உங்களுக்கு தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பி வேலை செய்வது குறைவு போல இருக்கு. இரத்தம் பரிசோதித்துப் பார்ப்போம்" என்றேன்.
"
எனக்கு தொண்டையில் வீக்கம் ஒன்றும் கிடையாதே. ஏன் தைரொயிட் நோய் என்கிறீர்கிறீர்கள்?" என என் முடிவில் சந்தேகம் எழுப்பினார்.
தைரொயிட் என்பது எமது தொண்டைப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி. இதனால் தைரொயிட் நோய் என்றாலே தொண்டைப் பகுதியில் கழலை என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணமாயிருக்கிறது.
பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்த அயடின் குறைபாட்டால் வரும் தொண்டைக் கழலை (Goitre) தான் பலரின் ஞாபகத்திற்கு வரும். எனவே அவரது சந்தேகத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது.
சுரப்பியில் வீக்கம் எதுவும் இல்லாமலே பல தைரொயிட் நோய்கள் வருவதுண்டு. அது

·                     குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் கைபோதைரொயிடிசம் (Hypothyroidism),
·                     அதிகம் சுரப்பதால் ஏற்படும் கைபேர்தைரொயிடிசம் (hyperthyroididm) ஆகியவை இத்தகையவே.
தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பியில் வீக்கம் (கழலை)இருந்தால் அது முன்பு குறிப்பிட்ட

·                     அயடின் குறைபாட்டால் ஏற்படும் கட்டியாகவோ, அல்லது 
·                     நீர்க் கட்டியாகவோ (Cyst) இருக்கலாம். 
·                     புற்று நோயாலும் அவ்விடத்தில் கட்டி தோன்றலாம். 
எனவே தைரொயிட் சுரப்பியில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படலாம் என்பதை நாம் உணர வேண்டும். அவற்றிற்கு வெவ்வேறு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. எத்தகைய சிகிச்சை தேவையென வைத்தியர்தான் தீர்தானிக்க முடியும்.
மேற் கூறிய பெண்ணுக்கு இரத்தப் பரிசோதனைகள் செய்தபோது அது சுரப்பியின் குறைச் செயற்பாட்டால் வரும் நோய் (Hypothyroidism) என்பது தெளிவாகியது. தைரொக்சின் (Thyroxine) மாத்திரைகள் கொடுத்தபோது அறிகுறிகள் நீங்கிக் குணமாகியது.
ஆயினும் அம் மருந்தை அவர் பெரும்பாலும்

·                     வாழ்நாள் முழுவதும் உபயோகிக்க வேண்டி நேரிடும். 
·                     காலையில் வெறும் வயிற்றில் போட வேண்டிய மாத்திரை அது. 
·                     மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து மருந்தின் அளவை தீர்மானிக்க வேண்டியிருக்கும்.
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.  மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.
மிக்க நன்றி.