சனி, மே 05, 2012

பேராசிரியர் மோகனாவின் புற்று நோய் மருத்துவ மனை அனுபவங்கள்

‘உள்ளத்தைக் கசக்கிப் பிழியும்  மலர்கள்’


பேராசிரியர் மோகனா அவர்கள் புற்று நோய்க்காக கோவை இராமகிருஷ்ணா மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து பூரண குணமடைந்தார்கள்.

  அது பற்றி ஏற்கனவே பதிவிட்டிருக்கிறோம்.  அவர்கள் அங்கிருக்கும் போது இருந்த சிறுவர்கள், சிறுமிகள் சிகிச்சை பெற்றதை ‘உள்ளத்தைக் கசக்கிப் பிழியும்  மலர்கள்’ என எழுதியிருக்கிறார்கள்.  அந்த பதிவை அவர்களது அனுமதியின் பேரில் வெளியிடுகிறேன்.  பேராசிரியர் மோகனா அவர்களுக்கு எங்கள் மனப்பூர்வ நன்றி 

 அன்பு நண்பர்களே.. வணக்கம்.
 நான்  முகநூலில் நமது நிலை பற்றிப் போடும் இடத்தில் நேற்று கோவை இராம கிருஷ்ணா மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனை செய்து முடித்த பின் எனக்கு ஏற்பட்ட ஓர் அனுவத்தை லேசாகக் குறிப்பிட்டேன், ஒரு நண்பர் என்ன பிள்ளைகளுக்கு என்றார். அதை ஒட்டி விரிவாக அந்த குழந்தைகள் பற்றி எழுதவேண்டியதாகிவிட்டது.


இராமகிருஷ்ணா மருத்துவ மனை வலைத்தளத்தில் இருந்த படம்


  நண்பர்களே,
 எனக்குத் தெரிந்து கோவை இராம கிருஷ்ணா மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையமும் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளது. நான் கடந்த 1 1/2 ஆண்டுகளாக அந்த மருத்துவ மனையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறேன். கொஞ்சம் குறைந்த கட்டணத்தில் நடுத்தர வர்க்க மக்களுக்கு இராமகிருஷ்ணா அறக்கட்டளை மூலம் சிகிச்சை செய்து வரும் ஒரு மருத்துவ நிறுவனம். இங்கு மற்ற இடங்களை விட கட்டணம் குறைவுதான்.

 எனக்கு வந்த மார்பக புற்று நோய்க்கான சிகிச்சைக்கு சுமார் 1 .25 லட்சத்துக்குள் தான் செலவாயிற்று. அறுவை சிகிச்சையும், வேதிசிகிச்சை மற்றும் மருத்துவமனை கட்டணங்களும் சேர்த்து.. ஓர் 6 மாதம் வரை. ஆனால் இதே சிகிச்சைக்கு பழனியில்  வேறு 3 பெண்கள் 32 -38  வயதுக்குள் உள்ளவர்கள் கோவை +மதுரையில் செய்துள்ளனர். கோவையில் வேறு மருத்துவமனையில் 3 .5 லட்சம் ஆயிற்றாம்.

மதுரையில் சிகிச்சை சுமார் தான். அறுவை சிகிச்சையில் புண் ஆறாமல் இருந்தது. கொஞ்சம் பிரச்சினையும் ஆனது. செலவு 3 -6 லட்சம் செய்துள்ளனர். ஒருவர் 2 மாதத்திலும், ஒருவர் 6 மாதத்திலும்...

 மதுரையில் நோயாளியின் மருத்துவ அறிக்கையும் விபரமாக இல்லை. என்ன வேதிசிகிச்சை, என்ன மருந்து என்பதும் குறிப்பிடப் படவில்லை.ஒரு மருத்துவர் என்ன அறுவை சிகிச்சை செய்தார், எப்படி செய்தார், பயன்படுத்திய மருந்துகள், வேதி சிகிச்சையின் போது நோயாளியின் உடல் நிலை, கொடுக்கப்படும் மருந்துகள், எத்தானையாவது வேதி சிகிச்சை போன்றவையும் குறிக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவை..  மிகவும் தவறான உதாரணங்கள் ஆகும். 


 இராமகிருஷ்ணா மருத்துவ மனை அனைத்து வகை புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறது.


 அறுவை சிகிச்சை நிபுணர்களும், வேதி சகிச்சை நிபுணரும், கதிர்வீச்சு சிகிச்சை நிபுணரும் சிறப்பாக சேவை மனப்பான்மையுடன், சிரித்த முகத்துடன் செயல் படுகின்றனர். 

நோய் குணமாக, மற்றும் மருத்துவர் மேல் நம்பிக்கை உண்டாகி நோய் விரைவில் குணமாக இதுவும் ஒரு காரணியாகும்.

இந்த மருத்துவமனை மிக மோசமாக உள்ள புற்று நோயாளிகளை இலவசமாக ஊர்தி அனுப்பியும் மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர், நீங்கள் தொலைபேசியில் தகவல் தந்தால். சமயத்தில் சிலருக்கு மிகக் குறைவான கட்டணத்திலும் சிகிச்சை செய்யப்படுகிறது. 

குழந்தைகளுக்கான புற்று நோய் பகுதியில், பொருளாதார ரீதியாக வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, முக்கிய மாக இரத்தப் புற்று நோய் உள்ள குழந்தைகளுக்கு எவ்வித கட்டணமும் இன்றி, இலவசமாகவே சிகிச்சை அளிக்கிறது.   இந்த நிறுவனமும்,இதன் அறக்கட்டளையும். குந்தைகளுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு உதவியாக வரும் அன்னை சகோதரி போன்றவர்களுக்கும் உணவு ,மற்றும் உறைவிடம் இலவசமாகவே வழங்கப்படுகிறது.

 2011 ஜனவரி மாதம் இராமகிருஷ்ணாவில் இந்த குழந்தைகள் பகுதியில் 30 குழந்தைகள் இருந்தனர். இந்த பகுதியில் பொதுவாக வேதி சிகிச்சையும், கதிர்வீச்சு சிகிச்சையும் மட்டுமே நடைபெறும் வாய்ப்பு உள்ளதால், புற்றுநோய் மையத்தின் நிர்வாகிதான் இதன் பொறுப்பாளர். இந்த பகுதியை இந்த குழந்தைகளை அன்புடனும், அக்கறையுடனும் செவிலியர்களும் நிர்வாகியும் கவனித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு விளையாட சைக்கிள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் அதன வயசுக்குத் தகுந்தாற்போல பொம்மைகளோ,  பேப்பரோ, பென்சில்/ பேனா கொடுக்கப்படுகிறது. சில குழந்தைகளுக்கு படம் வரைந்து வண்ணம் தீட்ட பேப்பரும், வண்ணப் பென்சிலும் கொடுக்கின்றனர். படிக்க புத்தகமும் கொடுக்கப்படுகிறது.

 நான் நேற்று எனது சோதனை முடிந்தபின் குழந்தைகளைப் பார்க்க குழந்தைகள் பகுதிக்குப் போனேன். நான் ஏற்கனவே அங்கு தங்கி சிகிச்சை எடுத்த போது, அந்த குழந்தைகளுடன் பழகிய/பேசிய அநுபவம் உண்டு, சிலர் பழைய குழந்தைகள், சிலர் புதிய முகங்கள். நேற்று நான் குழந்தைகள் பகுதிக்குச் சென்றபோது, அங்கு 19 மலர்கள் இருந்தனர்..

 2 -15 வயதில். ஒவ்வொருவரும் ஒவ்வொரு முகபாவத்தில், மன நிலையில்..! அந்த பிஞ்சுகளின் உடலில் புற்றுநோயை செலுத்திய கொடியவர் யார்?
 இயற்கைதான்.
எந்த நோய்க்கிருமியாலும் இல்லை.புற்று நோய் என்பது வளர்சிதை மாற்றத்தில், செல்கள் வளர்வதில் கட்டுப்பாடு இழப்பதில் உள்ள மாறுபாடு/செயலற்ற தன்மைதான்.சில பிஞ்சுகளுக்கு அம்மாவின் கருவரைக்குள் கரு  உருவானபோதே கூட அந்த மரபணுவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்தான். 
2 -6 வயது குழந்தை எங்கே சிகரெட் குடித்தது,
 புகையிலை குதப்பியது,
துரித உணவு சாப்பிட்டது..?
புகை மாசு, பருமனில் சிக்கியது. இவர்களுக்கு இயற்கையிலேயே மரபணுவில் உருவான திடீர் மாற்றம்தான் 
இந்த கொடிய நோயை/அரக்கனை இவர்களிடம் வீசி எறிந்தது.அதில் சிக்கி சீரழிகின்றனர் இந்த பிஞ்சு மலர்கள்.

 அந்தப் பகுதிக்குச் சென்று எப்படிப் பேசுவது, எதனை எப்படித் துவங்குவது என்று தெரியாமல் கொஞ்ச நேரம் நின்றேன்
ஓர் அன்னை தன் மகனுடன் வந்து செருப்பை கழட்டிவிட்டு வார்டுக்குள் நுழைகிறார். நான் எந்த ஊர் அம்மா என்றேன். அவர் பேச வில்லை. என்ன பிரச்சினை என மெதுவாகக் கேட்டேன். அவருக்கு கோபம் தலைக்கேறியது.

 இது என்ன வார்டு..யார் இங்க இருப்பாங்க என்றார். 

நான் மீண்டும் என்ன ஊர் அம்மா என்றேன். சொன்னார்
.நான் பல்வேறு காரணங்களால் ஊர் பெயர் குறிப்பிட விரும்பவில்லை.பின் மெதுவாக நாங்களே நொந்து போய் இருக்கிறோம். பிள்ளை எதிரிலேயே சிலர் என்ன வியாதி என்பார்கள். அதானால்தான் நான் யாரிடமும் பேச விரும்புவதில்லை என்றார்கள்.
உண்மைதான். அந்த தாயின் ரணம், வலி , தாயின் மனநிலை, குழந்தையின் மனநிலை,அவர்கள் தானே உணரமுடியும்.  பாவம், வாழ்க்கையின் விளிம்பு நிலையில் இருப்பவர்கள், எப்போது கீழே விழுவோம் என்ற அச்சத்துடன் உள்ளவர்கள்; ஓரத்தில் நின்று கொண்டிருப்பவர்கள்.
அந்தக் குழந்தை ஆண் குழந்தை.நோய் அதிகரித்து எலும்புக்குள் வந்துவிட்டது.நிலைமை அறியாத தாய்மை..!
தலையை வலிக்கிறது என்கிறார் அந்தக் குழந்தை. பேசவும் மறுக்கிறதுஅது. 9 வயதுக் குழந்தையை தாய் சுமந்து திரிகிறார் .

 அவர் கூலித்தொழிலாளி. அவருக்கு இன்னொரு 4 வயது பெண்குழந்தை கணவரிடம்... 
அப்பா மாதம் ஒருமுறைதான் குழந்தையைப் பார்க்க கோவை வருவார்.அடிக்கடி வர வசதியும் இல்லை, தூரமும் கூட..
7 மாதமாக அங்கு இருக்கின்றனர்.  என் எதிரிக்குக் கூட இந்த நோய் வரக்கூடாது என்றார். 
அவர்களுக்கு செலவுக்குக் கூட பிரச்சினைதான். என்ன செய்ய..? என்னால் முடிந்ததை அந்த தாய்க்குச் செய்தேன். 

 . .      அங்குள்ள  குழந்தைகளில் இருவர் இரட்டைக் குழந்தைகள். பெண்சிசுக்கள் ..!  3  வயது.இருவருக்கும் இரத்தப் புற்று நோய். அந்த தாய், அந்த குடும்பம் யாரிடம் போய் புலம்ப முடியும். இரண்டு குழந்தைகளும் கொஞ்சும் கிளியாக இருக்கின்றன

. எத்துணை எத்துனை வேதனை அவர்களின் மனத்துள் கொட்டிக் குவிக்கப்பட்டிருக்கும். யாரிடமும் பகிர முடியாத இடம் அது.. மனம் வலித்தால்  வேதனைப் பட்டாலும் கூட அவர்களால் அழக் கூடமுடியாது.
குழந்தைகள் எதிரில்.எத்தனை சோகம் வேதனை இது?

ஒரு குழந்தை சாப்பிட மறுக்கிறது. என்னை போட்டோ எடுக்கச் சொல்லி கேட்கிறது. அம்மா சீக்கிரம் சாப்பிடு படம் எடுப்பார்கள் என்கிறார்.
முதல் கட்டிலில் உள்ள குழந்தை நான்காம் வகுப்பு படிக்கிறது. முகமெல்லாம் வீங்கி வெளுத்துப் போய் இருக்கிறது. அவருக்கு நேற்றுப் பிறந்த நாள்.அவர் அப்பாவுக்காக காத்திருக்கிறார்.அவரை படம் எடுத்தேன்.

அவரிடம் அடுத்த 15 நாளில் கொண்டு வந்து தருவதாக உறுதி அளித்து வந்தேன். மீண்டும் அங்கு டிசம்பர் 15 போகும்போது படம் பிரின்ட் போட்டு கொடுப்பேன். ஆனால் எந்த படத்தையும் வெளியிட மாட்டேன். அவர்களின் தனி உரிமையில் நுழைய விரும்பவில்லை. அதனைப் பொதுச் சொத்தாக வேண்டாம் என்று நினைக்கிறேன்.

  நான் மருத்துவமனையில் அனுமதி வாங்கிக் கொண்டு, குழந்தைகளுக்கு பழம், பிஸ்கட், பேரீச்சை, கடலை பர்பி, மிட்டாய் என மனதுக்குப் பட்டதை வாங்கிப் போனேன்,
செவிலியர் நீங்களே போய் ஒவ்வொருவரிடமும்  கொடுத்து விடுங்கள் என்றார். 
நிறைய பொருட்கள் இருந்ததால் அவரையும் உடன் அழைத்தப் போய் கொடுத்தேன்.
ஒரு குழந்தை வாங்க மறுத்து விட்டது. அந்தப் பெண் மலர் கையில் பேப்பர் வைத்து ஆங்கிலத்தில் எழுத்துக்களும் வார்த்தைகளும் எழுதிக் கொண்டிருந்தது.நான் கொடுத்ததை வேண்டாம் என்று மறுத்துவிட்டது. நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
இன்னொரு பச்சிளம் சிசு இரு கைகளிலும்  வேண்டும் என கேட்டு வாங்கிக் கொண்டார்.
ஒரு சிறுமி 10 வகுப்பு படிப்பவர். பரீட்சைக்குப் போக வேண்டும் என்றார்.

 ஒரு குழந்தையின் உடல், கை,கால். பல் எல்லாம், ஒரே கருப்பு. வேதி சிகிச்சையின் கொடை இது. நானும் அனுபவித்திருக்கிறேனே .!. அங்கு இரண்டு குழந்தைகள் 10 ம் வகுப்பு. 
ஒரு குழந்தை எனக்கு இனிப்பு வேண்டாம் என்றது. 

. சொந்த அனுபவமே ஏராளமாக உள்ளதே..! 

  அந்த பகுதில் உள்ள அன்னைகள் யார் யாரிடம் என்ன வேதனையைப் பகிர்ந்து கொள்ள முடியும்..?

அங்கு சென்று அவர்களிடம் பார்த்துப் பேசி, வெளியில் வந்த போது சில அன்னைகள் என்னிடம் வந்தனர். அவர்களிடம் குழந்தைகளின் எதிரில் அழாதீர்கள். அவர்களிடம் positiveஆகப் பேசுங்கள்.அதுவே தற்காப்பு சக்தி வழங்கும் என்றேன்.

இந்தக் குழந்தைகளிடம் எப்படிப் பேசி தன்னம்பிக்கை வரவழைப்பது..! 2 -6 வயது குழந்தைக்கு என்ன தைரியம், தன்னம்பிக்கை தரமுடியும்? எதுவுமே தெரியாமல் அந்த சிட்டுக்கள் துவண்டு கிடக்கின்றன.நடந்து விளையாடுகின்றன. பொம்மை செய்கின்றன. வண்ணம் தீட்டுகின்றன. எழுதிப்பார்த்து மகிழ்கின்றன. மனதுக்குள் இன்னும் எத்தனை ஆண்டுகள் இவர்கள் என்று வினவிக்கொண்டே வெளியேறினேன்.
முன்பை விட இப்போது குழந்தைகள் சரியாகி படிக்கப் போகின்றனர் என எனது மருத்துவ நண்பர் ஒருவர் சொன்னார்.

எதுவாயினும் நல்லவையாக நடக்கட்டும்.
 மனம் கனத்து அழுந்தி தொங்கிப் போயிற்று. பேச வார்த்தைகள் வரவில்லை. நெஞ்சு கதறியது. வெளியில் தொலைவில் வந்து கழிப்பறையில் நின்று 5 நிமிடம் அழுதேன். வரும் வழியில் நானும் ரபீக்கும் அழுதோம் 20 நிமிடம். யாரும் யாருடனும் பேசவில்லை, நிமிடங்களும், இடமும் கனத்துக் கிடந்தன.
என் நண்பர் அருணந்தி மூளைப் புற்று நோயால் மறைந்த போது நான் அழுத நான், 6  ஆண்டுகளுக்குப் பின் அழுதேன்.

 நான் கொஞ்சம் கல் நெஞ்சுக்காரி..கலங்கா உள்ளம் கொண்டவள்.அதனால்தான். நெஞ்சை துவைத்துப் போடும் நிகழ்வுகளும், நெகிழ்வுகளும் அங்கே நிறைய...!

புதிய மருந்துகளும், மருத்துவர்களின் கனிந்த மனங்களும், தாய் தந்தையரின் நம்பிக்கைகளும், உங்களின் மந்த்தவிலான ஆதரவும், குழந்தைகளின் பிஞ்சு மான்களும் அவர்களை விரைவில் காப்பாற்றட்டும்..! 

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.



வெள்ளி, மே 04, 2012

உலக நடன தினம்




உலக நடன தினம் (29 ஏப்ரல்) என இலங்கை கண்டியைச் சேர்ந்த திரு பீர் முஹமது புன்னியாமீன் என்ற எனது நண்பர் ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார்.


  அவரது அனுமதியின் பேரில் அவரது கட்டுரையை எனது பதிவில் வெளியிடுகிறேன்.  திரு  பீர்முஹமது புன்னியாமீன் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகள்

ஏப்ரல் 29 – உலக நடன தினமாகும். International Dance Day (World Dance Day).

இந்திய, இலங்கை போன்ற நாடுகளில் நடனக்கலை முக்கியத்துவம் பெற்ற ஒரு கலையாகவும், சில சந்தர்ப்பங்களில் தெய்வீகத்தன்மை கொண்ட ஒரு கலையாக விளங்குகின்ற போதிலும் கூட உலக நடன தினம் (World Dance Day) என்ற அடிப்படையில் ஏனைய உலக தினங்களைப் போல இத்தினம் ஒரு முக்கியத்துவம் பெற்ற தினமாக அனுட்டிக்கப் படுவதில்லை. உலக நடன தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 29ம் திகதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது.

நடனம் (Dance ) எனும் போது நாட்டுக்கு நாடு, பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக பரதம் தென்னிந்தியாவுக்குரிய, குறிப்பாக தமிழ்நாட்டுக்குரிய நடனமாகக் கருதப்படுகின்றது. இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் ‘பரதம்’ என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல் ப – பாவம், ர – ராகம், த – தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.


இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம். ஆனால் மேற்கத்தேய நாடுகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள பாலே (மேற்கத்திய மரபு நடனம்), டிஸ்கோ, சல்சா, போல்கா, லம்பாடா, லிம்போ போன்ற நடனங்களில் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளைக் காண்பது அரிது.

பரத நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது

 சிவபெருமான் ஆடும் நடனம் ‘தாண்டவம்’ என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் ‘ஆனந்த தாண்டவம்’ என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் ‘ருத்ர தாண்டவம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் ‘லாஸ்யா’ என்று அழைக்கப்படுகிறது.

உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது ‘அடவு’ என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது ‘ஜதி’ எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன. பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.

இதேபோல இந்தியாவில் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் நடனக் கலை வேறுபட்ட வகைகளின் பிரபல்யம் அடைந்து காணப்படுகின்றது. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட நடனம் சிறப்பாக இருக்கிறது. உதாரணமாக கீழே மாநில வாரியாக புகழ் பெற்ற நடனங்களை பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

தமிழ்நாட்டில் –
பரதநாட்டியம்,

 கோலாட்டம்,

 கும்மியாட்டம்,

 தெருக்கூத்து,



கேரளாவில் -
சாக்கியார் கூத்து,
 கதகளி,
 மோகினிஆட்டம்,
 ஓட்டம் துள்ளல்,
 தாசி ஆட்டம்,
 கூடி ஆட்டம்,
 கிருஷ்ணா ஆட்டம்: 

ஆந்திராவில் –
 குச்சுப்பிடி,
 கோட்டம்,
 வீதி பகவதம்: 

கர்நாடகாவில்; –
 யக்ஷகானம்: 

 ஒரிசாவில் – 
ஒடிசி: 


மணிப்பூரில் – 
 மணிப்புரி, 

  லாய்-ஹரோபா:

பஞ்சாப்பில் –
 பாங்ரா,
 கிட்டா:

பீகாரில் –
 பிதேஷியா,  
ஜட்டா-ஜட்டின், 
லாகூய்,
 நாச்சாரி:

அஸ்ஸாமில்-
 பிகு :

 ஜம்மு-காஷ்மீரில் –
 சக்ரி,
 ரூக்ப் 

என்றவாறு அமைந்துள்ளன.

அதேபோல நடனக்கலையின் முக்கியத்துவம் கருதி இந்திய பாரம்பரிய நடனங்களை பின்வருமாறு சுருக்கமாக வகுக்கலாம்.  பரத நாட்டியம், குச்சிப்புடி, கதகளி, மோகினியாட்டம், ஒடிசி, மணிப்புரி.

இந்தியாவின் கிராமிய நடனங்களை பின்வருமாறு பிரித்தாரயலாம்.

தென்னிந்தியக் கிராமிய நடனங்கள் – 
தேவராட்டம்,

 தொல்லு குனிதா,
 தண்டரியா,

 கரகம்,


 கும்மி,


 கூட்டியாட்டம்,
 படையணி,
 கோலம் (நடனம்) இலவா, 
நிக்கோபாரிய நடனம்

வடஇந்தியக் கிராமிய நடனங்கள் –
 டும்ஹால் இரூவ்ப்,
 லாமா நடனம்,
 பங்கி நடனம், 
பங்காரா,
 ராஸ், 
கிட்டா,
 தம்யால் டுப்,
 லகூர், 
துராங்,

 மாலி நடனம், 


தேரா தலி .

கிழக்கிந்தியக் கிராமிய நடனங்கள்
 நாகா நடனம், 
ஹஸாகிரி, 

மூங்கில் நடனம்,

 நொங்கிறேம், 
பிகு,
 தங்-டா,

 கர்மா, 


பொனுங், 
பிரிதா ஓர் வ்ரிதா, 
ஹுர்க்கா பாவுல்,
 காளி நாச்,
 கண்ட பட்டுவா,
 பைக்,
 தல்காய் . 

மேற்கிந்திய நடனங்கள்
கெண்டி,
 பகோரியா நடனம்,
 ஜாவார் இகர்பா,
 தாண்டியா,


 காலா டிண்டி, 
மண்டோ

இனி உலக நடன தினம் பற்றி சற்று நோக்குவோம்.

பொது மக்களிடையே நடனத்தின் முக்கியத்துவம் பற்றிய அறிவினை அதிகரிக்கச் செய்வதுடன் ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள அரசாங்கங்கள் நடனத்திற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதுடன் முறையான நடனக்கல்வியை நாடுகளின் ஆரம்பக்கல்வியிலிருந்து உயர்கல்வி வரை வழங்குவதற்குத் தூண்டுவதும் அவற்றின் அவசியத்தை வலிறுறுத்துவதும் சர்வதேச நடனதினத்தின் முக்கிய இலக்காகும்.

1982ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாசார ஊக்குவிப்பின் கீழ் சர்வதேச நடன சபை International Dance Council (CID) ஏற்படுத்தப்பட்டது. இச்சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் 2003ம் ஆண்டிலிருந்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. 2003ம் ஆண்டு நடன தினம் பற்றிய செய்தியை வெளியிட்ட சர்வதேச நடன சபையின் International Dance Council (CID), தலைவர் பேராசிரியர் அல்கீஸ் ராப்டிஸ் Prof. Alkis Raftis அவர்கள் ‘உலகிலுள்ள இருநூறு நாடுகளின் அரைவாசிக்கும் மேற்பட்ட நாடுகளில் நடனத்திற்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. பொதுவாக அரசாங்கங்கள் வரவு செலவு திட்டத்தில் நடனக்கலையை ஊக்குவிக்கும் வகையில் எத்தகைய நிதி ஒதுக்கீடுகளையும் செய்யப்படுவதுமில்லை. மேலும் தனிப்பட்ட அல்லது நிறுவன ரீதியான நடனக்கல்விக்கு அரச நிதி உதவிகள் கிடைப்பதில்லை” என்றார்.

2005ம் ஆண்டில் நடன தினத்தின் கவனம் ஆரம்பக் கல்வியின் ஊடாக நடனத்தைப் போதிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தனிப்பட்ட நடனப்பயிற்சியாளர்கள், நடன நிறுவனங்கள் தமது பிரேரணைகளுடன் தத்தமது நாடுகளின் கல்வி, கலாசார அமைச்சுகளை தொடர்பு கொண்டு பாடசாலைகளில் நடன தின விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் நடனம் பற்றிய கட்டுரைகள் எழுதுதல், நடனம் பற்றிய புகைப்படங்களை காட்சிப் படுத்துதல், வீதி நடனங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்தல். நடனம் பற்றிய கருத்தரங்குகள் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தல் போன்றன இத்தினத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

2006ம் ஆண்டில் சர்வதேச நடன சபையின் International Dance Council (CID), தலைவர் தனது நடன தின உரையில் குறிப்பிட்ட விடயம் இங்கு கவணத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது ‘நடனக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் நிறுவன ரீதியில் ஒன்றுபடாமையும், இது விடயமாக அக்கரை செலுத்தாமல் இருப்பதுமே சர்வதேச ரீதியில் நடனக்கலை அங்கிகரிக்கப்படாமைக்கான காரணங்கள் என்றும் இதற்காக நடனக்கலைஞர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டு”மென அழைப்பு விடுத்திருந்தார்.

2007ம் ஆண்டில் நடன தினம் பிள்ளைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

2008ம் ஆண்டில் நடன தினத்தின் போது மேற்குறித்த விடயங்களை சுட்டிக்கட்டி அரசாங்கங்களும், அனுசரணையாளர்களும், ஊடகங்களும் இது விடயமாக ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 2009ம் ஆண்டிலும் நடனக் கலையை பிரபல்யப்படுத்துவதற்கு ஊடகங்களின் பங்களிப்பு வேண்டப்பட்டுள்ளது.

நடனதினத்துடன் இணைந்த வகையில் இது விடயமாக விழிப்புணச்சியை ஏற்படுத்து முகமாக ஐக்கிய அமெரிக்காவில் தேசிய நடன வாரத்தை National Dance Week (NDW) பிரகடனப்படுத்தி நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 1981ல் நடனத்திற்கு முறையான அங்கிகாரத்தப் பெறுவதற்காக வேண்டி நடனங்கள் தொடர்பான ஒரு நிறுவனம் தேசிய நடனவாரத்திற்கான கூட்டு ஒன்றியமொன்றினை Coalition for National Dance Week உருவாக்கியுள்ளனர்.

இந்திய இலங்கை போன்ற நாடுகளில் வாழும் நடனக் கலைஞர்கள், பயிற்சியாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், நடன அமைப்புகள் இவ்விடயத்தை எதிர்காலத்திலாவது கவனத்தில் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்

குறிப்பு: இந்த பதிவிற்கான நடன படங்கள் Google இல் இருந்து பயன்படுத்தியிருக்கிறேன். THANKS GOOGLE.

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.