வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை.


நாங்கள் 27.8.12 ஒரு திருமணத்திற்காக விருதுநகர் சென்றிருந்தோம்.  எனது மனைவி திருமதி அவர்களுக்கு விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்றால் தனி ஈர்ப்பு.  எனது மூத்த மகன் விஜயவேலுக்கு எங்கள் மூத்த மருமகள் திருமதி தில்லை நிவேதா அவர்களை அங்கு வைத்துத் தான் பெண் பார்த்தோம், ஒரே முயற்சியில் திருமணம் முடிந்து விட்டது (14.11.2005).

 எனது 2வது மகன் சரவணனுக்கு அங்கு சென்று வந்த பிறகு வியாழக்கிழமையில்  தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வந்த உடன் திருமணம் கைகூடி விட்டது.  எனவே 3வது மகன் பிரகாஷிற்கு 2010 ஜனவரியிலிருந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், இன்னும் திருமணம் தகையவில்லை, எனவே திருமணத்திற்கு செல்லும் போது விருதுநகர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வருவோம் என்று எனது மனைவி சொன்னார்.

எனக்கு – மனைவி சொல்லே மந்திரம்
(ஐயா, திரு சொல் கேளான் கிரி அவர்களே, கவனித்துக் கொள்ளுங்கள்).

நாங்கள் பொதுவாக கோவில்களுக்கு செல்வது மிகவும் குறைச்சல், அதுவும் திருவிழா என்றால் செல்வது அரிது, கூட்டம் என்றால் ஒரு ஒவ்வாமை, உடல் நிலை அனுமதிக்காது.

இந்த கோவில் 20.8.2012 அன்று காலை சுமார் 9.30 மணி இருக்கும் சென்றோம்.  லிங்கருக்கும், அம்பாளுக்கும் ஆரத்தி காண்பித்துக் கொண்டிருந்தார்கள், முடிந்த உடன் கோவிலை சுற்றி வந்தோம்.  அலங்காரங்களுடன் ரிஷப வாகனங்களில் – சொக்கர், பிரியாவிடை ஒரு வாகனத்திலும், மீனாட்சி ஒரு வாகனத்திலும் – விநாயகர் மூஞ்சூறு வாகனத்திலும் - வீற்றிருந்தார்கள்.  அலங்காரம் அற்புதமாக இருந்தது.  எங்களுக்கு ரயில் 12.20க்கு தான், எனவே ஏதோ நிகழ்ச்சி நடைபெறப் போகிறது இருந்து பார்த்து விட்டு போவோம் என முடிவு செய்தோம்.

முன்புறம் உள்ள மேடையில் -  சொக்கர், மீனாட்சிக்கு அபிஷேகம் நடைபெற்றது; பின் அலங்காரம் நடைபெற்றது.  எங்களுக்கு மிகவும் கொடுப்பினை போலும்.  அங்கு பார்த்துக் கொண்டு உட்கார்ந்த போது எனக்கு தோன்றிய எனது எண்ணங்களை எழுதியிருக்கிறேன்.

 

கனியைக் கேட்டோம், கனிச் சோலையைக் கொடுத்தாய் இறைவனே!


இது வரை மீனாட்சி நான் பார்த்ததில்லை.  எனது மகள் பெயர் மீனாட்சி.  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒன்று அல்லது இரண்டு தடவை போயிருக்கிறேன்.  ஒரு தடவை திருப்பணி நடந்து கொண்டிருந்தது, ஒரே தூசிமயம், மற்றொரு தடவை நல்ல வட இந்திய கூட்டம், நல்ல தரிசனம் கிடைக்கவில்லை.  அடிக்கடி செல்லவும் முடியவில்லை

இங்கு சொக்கர் லிங்க வடிவிலும், மீனாட்சி வெள்ளிக் கவசத்தில் நல்ல உயரமாக அற்புதமான அலங்காரத்தில் இருந்தார்கள்.  காணக் கண் கோடி வேண்டும்.  எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் முன்பு இருப்பது போல் உணர்ந்தேன்;

மிகவும் நெகிழ்ந்து விட்டேன்.  கிட்டத்தட்ட அரை மணி நேரம் அங்கு அமர்ந்திருந்திருப்போம்.

அலங்கார வாகனங்கள் அருகே ஏதோ நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றன.  நாங்களும் காத்திருந்தோம். 
‘சிவபெருமானின் பிட்டுக்கு மண் சுமந்த லீலை’
காட்சிகளாக நடைபெறும் என்றார்கள். 

 அந்த காட்சியை நாங்கள் பார்த்தோம்.  முழு ஈடுபாட்டில் பார்த்ததால் படம் எடுக்க வேண்டும் என தோன்றவில்லை; அனுமதிப்பார்களா என்றும் தெரியவில்லை.  எனவே தினமலர் பத்திரிக்கையில் வந்த படத்தை ஸ்கேன் செய்து போட்டிருக்கிறேன்.  எனக்கு முடிந்த அளவு எழுதுகிறேன்.

ஓரளவு ஈர மண் கொட்டி செடிகள் நட்டி ஆறு போன்ற அமைப்பு அமைத்திருக்கிறார்கள்.  முன்னால் ஒரு பாட்டி அமர்ந்திருக்கிறார், சிவபெருமான் தலையில் தட்டுடன் அருகில் நிற்கிறார்.  இனி மேல் நிகழ்ச்சிகளை நான் சொல்கிறேன்,

வாகனங்களில் அமர்ந்திருந்த தெய்வங்களுக்கு ஆரத்தி, பூஜை சிறப்பாக நடைபெற்றன.  இரண்டு சிவாச்சாரியார்கள் வாகனங்கள் அருகே நின்று ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ நிகழ்ச்சியை நடத்திக் காண்பிக்கப் போகிறோம் என்றார்கள்.  அவர்கள் இருவரும் கையில் புத்தகங்கள் வைத்திருந்தார்கள்.  அவர்கள் வாசிக்க வாசிக்க இங்கு காட்சிகள் நடைபெறுகின்றன.

சிவபெருமான் வேலையாளாக வேலை தேடி வருகிறார்.  இங்கு பாட்டி ஒருவர் இருக்கிறார், அவர் வீட்டில் அவரைத் தவிர வேறு ஆட்கள் கிடையாது.  மன்னர் உத்தரவுப்படி வீட்டுக்கு ஒருவர் சென்று ஆற்றை சரி செய்ய வேண்டும்.  வேலையாள் வேலை தேடி பாட்டியிடம் வருகிறார், பசியாக இருப்பதாக சொல்கிறார், பாட்டி வேலை செய்யும்படி கேட்கிறார்.  பாட்டி புட்டு தருவதாகவும், சாப்பிட்டு விட்டு வேலை செய்யும்படி கேட்கிறார்; சம்பளம் வேறு ஒன்றும் தர முடியாது என்கிறார்.  வேலையாளும் சரி என்கிறார்; புட்டு வாங்கி சாப்பிடுகிறார்.  சாப்பிட்டு விட்டு மண் வெட்டியை ஒரு ஓரமாக வைத்து விட்டு மரத்தடியில் வைத்து விட்டு உண்ட மயக்கத்தில் தூங்கி விடுகிறார்.


  மன்னர் யானையில் வருகிறார்.  நடந்த வேலைகளை மேற்பார்வையிடுகிறார்.  இந்த பாட்டியின் வேலை மட்டும் முடியாமல் கிடக்கிறது.  வேலையாளை கூப்பிடுகிறார்.  கேள்விகள் கேட்கிறார்.  அவரும் அவருக்கு தோன்றிய பதில் சொல்கிறார்.  வேலை செய்யாததிற்கு பிரம்பால் 3 அடிகள் அடித்து தண்டனை கொடுக்கிறார்.  அந்த 3 அடிகள் மக்கள் மீது விழுவதாக ஐதீகம்.

ஆஹா, மிகவும் அருமை.  மக்களுக்கு இப்படி நடத்தினால் தான் புரியும், எத்தனை பேர் படிக்கிறார்கள்?

இந்த நிகழ்ச்சியை நடத்திய கோவில் நிர்வாகத்தினர்களுக்கும், அந்த நிகழ்ச்சியை நடத்திய சிவாச்சாரியார்களுக்கும், இதர இசைக் கலைஞர்களுக்கும், மற்ற பணியாளர்களுக்கும், பொறுமையுடன், அமைதியாக, ஒரு ஒழுங்குடன் பார்வையிட்ட பொது மக்களுக்கு எனது வணக்கங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதிவை படிக்கும் உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்.  மிக்க நன்றி.

அன்னை மீனாட்சி நேற்றும் (30.8.2012) எங்களை அழைத்திருந்தார்.  நாங்கள் அன்னை மீனாட்சி சன்னதி முன்பு மனம் நெகிழ்ந்து அமர்ந்தோம்.  மன நிறைவாக இருந்தது.

விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பற்றி – மிக நேர்த்தியாக, சுத்தமாக பராமரிக்கப் படுகிறது.  எல்லா இடங்களிலும் ஒரு ஒழுங்கு, அருமையான நடைமுறைகள் கடைப் பிடிக்கப் படுகின்றன. 

தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஒரு அறிவிப்பு இருந்தது.  வழக்கமாக கொண்டைக்கடலைகளை ஊற வைத்து நூலில் கோர்த்து (பாசி மாலை கோர்ப்பது போல்) கொண்டு வந்து சார்த்துவார்கள்.  அந்த கொண்டை கடலை மாலை முடிந்தவுடன் கழற்றி கீழே தான் போகும்.  இந்த அறிவிப்பில் – கொண்டை கடலைகளை ஊற வைத்து கோர்த்து கொடுப்பதற்கு பதிலாக = ஊற வைக்காமல் அப்படியே ஒரு பொட்டலமாக (packet) போட்டு கொண்டு வந்தால் சாமி பாதத்தில் வைத்து கோவிலில் சேர்த்து விடுகிறோம் என்றிருக்கிறது.  இந்த கொண்டை கடலைகளை கோவிலிலிருந்து சுண்டலாக தயார் செய்து வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்.  இது அனுபவம் & சிக்கனம் & பயன்பாடு போதிக்கும் அருமையான பாடம்.

இன்னும் சில படங்கள் இணைத்திருக்கிறேன்.  நீங்கள் அடுத்து விருதுநகர் செல்லும் போது இந்த கோவிலுக்கு செல்லுங்கள்.  பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்திருக்கிறது.  நீங்களும் இந்த அற்புதமான கோவிலை தரிசிக்க வேண்டுகிறேன்.  மிக்க நன்றி.


இனிய நண்பர்களே, இந்த பதிவை படித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.





புதன், ஆகஸ்ட் 29, 2012

செய்யும் தொழிலே தெய்வம் – ஏ.கே.சி.ஸ்டோர்ஸ், ஸ்ரீவில்லிபுத்தூர்.


இனிய நண்பர்களே,

எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு - ஸ்ரீ ஆண்டாள் கோவில், பெரிய கோபுரம், அருமையான தேர், இன்னும் நிறைய கோவில்கள், அது பற்றி அவ்வப்போது எழுதுகிறேன்.

எங்கள் ஊரில் நேர்மையான வியாபார ஸ்தலங்கள் நிறைய இருக்கின்றன, செய்யும் தொழிலே தெய்வம் – ஆம், நான் எழுதும் ஸ்தாபனங்கள் நடத்துபவர்கள் அவர்கள் தொழிலை அவ்வளவு புனிதமாக நடத்துகிறார்கள்.  நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுத நினைத்த ஸ்தாபனங்கள் = ஏ.எல்.நாறாயண அய்யர் ஜவுளிக்கடை, கதிரவன் ஹோட்டல், இ.கே.எஸ்.மெடிக்கல்ஸ், வெங்கடேஸ்வரா  பால் கோவா கடை (ஸ்ரீ ஆண்டாள் கோவில் அருகில்), ஏ.கே.சி.ஸ்டோர் – எனக்குத் தெரிந்தவை இவை, இன்னும் நான் தெரிந்து கொள்ளும் போது, கற்றுக் கொள்ளும் போது மற்ற நிறுவனங்களைப் பற்றி எழுதுகிறேன்.

இந்த பதிவில் நான் எழுதப் போவது – ஏ.கே.சி. ஸ்டோர்ஸ், (ஏ.கே.சின்னையா நாடார் மில் வளாகம்), சாத்தூர் ரோடு, ஸ்ரீவில்லிபுத்தூர்.

இந்த ஸ்தாபனம் 67 ஆண்டுகள் கடந்த நிறுவனத்திலிருந்து தோன்றியது.  முதலில் அரிசி ஆலையாக துவங்கினார்கள்.  திரு சின்னையா நாடார் என்ற மாமனிதரால் அரிசி ஆலை, அரிசி வியாபாரம் துவங்கப் பட்டது.  அவரது ஒவ்வொரு மகன்களும் தனித் தனியாக வெவ்வேறு துறைகளில் கவனம் செலுத்தும் போது – திரு ஏ.கே.சி.கொண்டல் வண்ணன் – அரிசி விற்பனைப் பிரிவு துவக்கினார்.  கொஞ்சம் கொஞ்சம் பலசரக்குகளும் சேர்த்து வைத்தார்.  அந்த சமயத்தில் மிகவும் சின்ன கடை, அரிசி மூடைகள் முன்னால் விரித்து வைக்கப் பட்டிருக்கும்.  கண்ணுக்கு தெரியும் கொஞ்சம் இடங்களில் பலசரக்குகளை பேக் செய்து அடுக்கி வைத்தார்.  அந்த கடையிலேயே ஒரு பெரியவர் உட்கார்ந்து முறம் வைத்து பலசரக்குகளை புடைத்து சுத்தம் செய்து கொண்டிருப்பார்.   அது அப்போது முன்னோடியான புது முயற்சி (innovative idea).  எனக்கு என் தம்பி திரு ராமராஜன் ஏ.கே.சி. ஸ்டோரில் பலசரக்குகள்  எல்லாம் நன்றாக இருக்கின்றன, 10% வரை விலை குறைவாக இருக்கிறது, இரு சக்கர வாகனத்தில் சென்று நிறுத்தி வாங்க வசதியாக இருக்கும் என்று எனக்கு சிபாரிசு செய்தார்.  அது வரை எங்கள் வீட்டிற்கு கொள்முதல் எல்லாம் எங்கள் குடும்பத் தலைவி திருமதி உமாகாந்தி அவர்கள் தான்.

எனது தம்பி சொன்னதுக்கப்புறம் நான் செல்ல ஆரம்பித்தேன்.  அவர்கள் அடுக்கியிருந்த தோரணை, அவர்களின் கனிவு, சுறுசுறுப்பு, விலைச் சலுகைகள், ஏதாவது offer உடன் சரக்கு வந்தால் அந்த free gifts சேர்த்து கொடுத்து விடுவார்கள்.  நீங்கள் கேட்கவே வேண்டியதில்லை.  நல்ல வியாபாரம் இருந்தது.  அங்கு இருப்பவர்கள் எல்லாம் நெருங்கிய நண்பர்கள் என்பதை விட, நெருங்கிய உறவினர்களாக, நமது குடும்பத்தில் ஒருவர் போல் ஆகி விட்டார்கள்.

நான் சொன்னேன், நல்ல பெரிய சூப்பர் மார்க்கெட் மாதிரி மாற்றுங்கள் என்று சொன்னேன், அதற்கு அவர்கள் அருகில் உள்ள கிட்டங்கியை அப்படித் தான் மாற்றுகிறோம் என்றார்கள்.

நான் சொன்னேன், நல்ல பெரிய சூப்பர் மார்க்கெட் மாதிரி மாற்றுங்கள் என்று சொன்னேன், அதற்கு அவர்கள் அருகில் உள்ள கிட்டங்கியை அப்படித் தான் மாற்றுகிறோம் என்றார்கள்.

அவர்கள் சேவைகள் (service) பேசுகின்றன

நண்பர்களே, ஆச்சரியப் படுவீர்கள்.  காலை 7.15 மணிக்கு சென்றால் கடை திறந்திருக்கும்.  அந்த குடும்பத் தலைவர் திரு கொண்டல் வண்ணன் பொருட்களை எடுத்து ரேக்குகளில் அடுக்கி வைத்துக் கொண்டிருப்பார்.  சுத்தம் செய்யும் பெண்மணி சுத்தம் செய்யும் வேலைகளை ஆரம்பித்திருப்பார்.  அவரது மகன்கள் இருவர் 7.30 மணிக்கு வந்து விடுவார்கள்.  மற்ற ஊழியர்கள் 9 மணிக்கு மேல் வருவார்கள்.  இவர்களும் கடையில் பொருட்களை அடுக்குவது, என்னைப் போல சரக்குகள் எங்கு இருக்கிறது என்ற விபரங்கள் தெரியாதவர்கள் வந்தால் அவர்களுக்கு சரக்கு எடுத்துக் கொடுப்பது போன்ற பணிகளும், பில் போடுவது போன்ற பணிகளும் செய்வார்கள்.  ஆச்சரியமாக இருக்கும்.  அந்த அதிகாலை வேளையில் குளித்து, திருநீறு அணிந்து வருவார்கள், மனதுக்கு நிறைவாக இருக்கும்.  அவர்கள் உபசரிப்பு மறக்க முடியாத நினைவு.  அவர்களுக்கு அவர்கள் கடைக்கு வரும் எல்லா வாடிக்கையாளர்களும் VIPs தான்.

என்னுடன் பணி புரியும் பெண்மணியை இவர்கள் கடை சிபாரிசு செய்தேன்.  இங்கு வாங்கிக் கொண்டிருந்தார்.  புதிதாக இன்னொரு சூப்பர் மார்க்கெட் வேறு பகுதியில் ஆரம்பித்திருந்தார், இன்னொரு நபர்.  அந்த பெண்மணி அந்த புது கடைக்கு சென்று பார்த்து விட்டு, அங்கு பேருக்கு மட்டும் ஏதோ வாங்கி விட்டு திரும்ப இந்த கடைக்கே வந்து விட்டேன் என்றார்.  ஏன் என்றேன், ஏ.கே.சி.ஸ்டோரில் உள்ள மன நிறைவு இல்லை என்றார்.  நான் அதற்கு சொன்ன காரணம் – இங்கு எல்லோரையும் VIP ஆக நடத்துகிறார்கள், அதனால் தான் என்றேன்.  கனிவான உபசரிப்பு, காலையிலிருந்து இரவு கடை அடைக்கும் வரை அதே கனிவு, சிடுசிடுப்பு கிடையாது.

நான் ஒரு தடவை அரிசி வாங்க சென்றேன்.  அரிசி மூடை இல்லை, அருகிலுள்ள கிட்டங்கியிலிருந்து எடுத்து வர வேண்டியதிருந்தது, நான் பிறகு வருகிறேன் என்றேன்.  சற்று இருங்கள் என்றார் அவர்களது மூன்றாவது மகன் திரு விவேக்.  கிட்டங்கிக்கு சென்றார், 75 கிலோ உள்ள மூடையை அவரே முதுகில் வைத்து ஒரு லோடுமேன் போல (in a professional way) தூக்கி வந்தார்.  எனக்கு தாங்க முடியாத ஆச்சரியம்.  இவர்கள் வெற்றியின் பின்னணி இது தான் – எந்த வேலையும் கேவலம் இல்லை.  யார் இருந்தாலும், இல்லையென்றாலும் இவர்கள் கடை இயல்பாக நடைபெறுகிறது.  வேலை செய்யும் பெண்மணிகள் விடுமுறையில் சென்று விட்டால் அவர்கள் வீட்டு பெண்மணிகள் வந்து கவனிக்கிறார்கள்.  குடும்பத்தலைவரின் மனைவி, மருமகள்கள் அனைவரும் வருகிறார்கள், திறம்பட பணியாற்றுகிறார்கள்.  இது எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

திரு ஏ.கே.சி.கொண்டல் வண்ணன் அவர்களைப் பற்றி – ஒரே வார்த்தையில் சொன்னால் மாமனிதர், இப்படி மனிதர்களுக்காகத் தான் மழை பெய்கிறது.  இவர் கோவில் திருப்பணி கமிட்டி, பள்ளிகள் கமிட்டி, மக்களுக்கு நன்மை தரும் செயல்கள் எல்லாவற்றிலும் இருக்கிறார். 

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் என்று ஒரு புராதன அருமையான சிவன் கோவில் (அருள்மிகு வைத்திய நாத ஸ்வாமி உடனுறை சிவகாமி அம்மன் திருக்கோவில்)  இருக்கிறது.  இங்கு 2 தெப்பங்கள் இருக்கின்றன, ஒன்று கோவில் அருகில் இருக்கிறது.  மற்றொன்று தூர்ந்து போய் இருந்தது.  கோவில் அருகில் இருந்த குளத்தை அருமையாக பராமரிப்பு செய்து, தளத்தில் நல்ல சிமிண்ட் பூச்சு பூசி சுற்றிலும் வேலி கட்டி, குளிப்பதை தடை செய்து அருமையாக்கினார்கள்.  எதிரில் உள்ள குளத்தை சீர் செய்து பிரமாதமாக்கி விட்டார்கள்.  மன்னர் காலத் திருப்பணி போன்றிருக்கிறது.

சிவன் கோவிலுக்கு நன்கொடை கொடுத்தால் குடும்பத்துக்கு ஆகாது என்று ஒரு தப்பான அபிப்பிராயம் இருக்கும் போலும், அதனால் இவர் கடையில் ஒரு போர்டு வைத்திருந்தார், நோட்டீஸ்கள் வினியோகித்தார்.  சிவன் கோவிலுக்கு செய்தால் புண்ணியம், 140 ரூ கொடுத்தால் ஒரு சிமிண்ட் மூடை வாங்கிக் கொடுக்கலாம் என நிறைய விபரங்கள் கொடுத்தார்.  இவர் கடையில் வந்து நிறைய பணம் கட்டி திருப்பணியில் எல்லா வகை மக்களையும் (all categories of people) பங்கு பெறச் செய்தார்.  திருமுக்குளம் சீரமைப்பிலும் இவரது பணி மகத்தானது.  கரிசல்குளம் பகுதியில் பள்ளி ஒன்று கட்டிக் கொண்டிருக்கிறார்.  நீங்கள் இவரிடம் விபரம் கேட்கப் போனால் இவருக்கு பேச நேரம் கிடையாது; உட்கார்ந்து சரக்கு அடுக்குதல், பழைய பொருட்களை கழித்தல் போன்ற வேலைகளில் அர்ப்பணிப்பு உணர்ச்சியுடன் இருப்பார்.  வணக்கம் சொல்லக் கூட அவருக்கு நேரம் இருக்காது.  ஆஹா.  அருமை.

சுந்தர மகாலிங்கம் மலையிலும் இவர்களுக்கு அன்னதான மடம் இருக்கிறது.  ஒவ்வொரு அமாவாசைக்கும் சென்று வருகிறார்.  அங்கும் இவர்கள் பணி மகத்தானது.

நான் எங்கள் வீட்டு விசேஷங்கள், குழந்தைகள் மண விழா நாள், பிறந்த நாள் போன்றவற்றுக்கு திருச்செந்தூருக்கு பணம் அனுப்புவேன்.  இப்போது எனக்கு இவர்கள் கடை தான் கோவில்.  இங்கு பணம் கொடுத்து ரசீது வாங்கிக் கொள்வேன்.  சுந்தர மகாலிங்கம் அன்ன தானத்துக்கு சென்று விடும்.

நான் இருதய நோய் வந்து சரியான உடன் வெளியில் சென்று வர வேண்டும் என்று முதலில் சென்றது இவர்கள் கடை தான், கால் பிடிப்பினால் சிரமப்பட்டு ஒரு வாரம் வரை வெளியில் செல்ல முடியுமா, வேலைக்கு போகலாமா என நினைத்து வெளியில் முதலில் சென்றது இவர்கள் கடை தான்.  என்னப் பொறுத்த வரை – இவர்களது அருமையான ஸ்தாபனம், எனக்கு கோவில் போல.

திரு கொண்டல் வண்ணன் அவர்களுக்கு மூன்று மகன்கள் – மூத்தவர் திரு அரவிந்த், இரண்டாவது திரு சிவானந்தம், மூன்றாவது திரு விவேக்.  அனைவரும் பட்டை தீட்டிய வைரங்கள்.  அனைவருடன் எனக்கு நட்பு இருக்கிறது, இது நான் மிகவும் பெருமைப் படும் விஷயம்.  உங்களுடன் நான் கொண்டிருக்கும் நட்பினால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மிகவும் பெருமைப் படுகிறேன் நண்பர்களே.

இந்த பதிவை படித்து உங்கள் பின்னூட்டங்களைப் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் போது ஸ்ரீ ஆண்டாள் கோவிலும் பாருங்கள், இந்தக் கடையையும் வந்து பார்த்துச் செல்லுங்கள்.  நன்றி நண்பர்களே. 



செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

ஓம் - திரு ரவி நாக் அவர்களின் கட்டுரை

என் இனிய நண்பர்களே,

நீண்ட நாட்கள் கழித்து வருகிறேன்.  இடை வெளிக்கு மன்னிக்க வேண்டுகிறேன். திரு பழனி கந்தசாமி அவர்கள் ஒரு நாள் தொலைபேசியில் கூப்பிட்டு நீண்ட நாட்களாக நீங்கள் பதிவுகள் எழுதுவதில்லை, எப்போதும் முகநூலில் இருக்கிறீர்கள், குறைத்துக் கொள்ளுங்கள் என்று உரிமையுடன் எச்சரித்தார்.  திரு டி.என்.ஷண்முகம் என்னும் முகநூல் நண்பர் ஒருவரும் மிகவும் கடுமையாக எச்சரித்தார், இன்னும் தூங்கப் போகவில்லையா என்று.  மதிப்பிற்குரிய நண்பர்களே, உங்கள் கருத்துகளுக்கு தலை வணங்குகிறேன்.  இனி மேல் முகநூலில் கழிக்கும் நேரத்தை ஒரு முறைப்படுத்திக் கொள்கிறேன்.

திரு வை.கோபாலகிருஷ்ணன் என்னும் பதிவர், எனக்கு வயதில் மூத்தவர், மாமனிதர் எனக்கு இரண்டு அவார்டுகள் வழங்கி என்னை எழுத ஊக்குவித்தார்.  அவருக்கும் சொன்னேன்,  ஐயா, மன்னித்துக் கொள்ளுங்கள், நீங்கள் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி, இனி மேல் வாரத்திற்கு 2 பதிவுகள் எழுதுகிறேன் என்றேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக எனது மனைவியின் இனிய சொற்கள் கடுமையாக சாட்டையடி போன்று இருந்தது .  நீங்கள் முகநூலில் மட்டும் இருந்தால் , பதிவுலகில் காணாமல் போய் விடுவீர்கள் என்றார்.  நிஜம் தான்.

இனிமேல் வாரத்துக்கு 2  பதிவுகள் எழுதுகிறேன்.  இன்று திரு ரவி நாக் அவர்களின் 'ஓம்' என்ற கட்டுரையுடன் மீண்டும் வருகிறேன்.  அவருடைய கட்டுரையை எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம் என்று பாசத்துடன் அனுமதித்திருக்கிறார்.  திரு ரவி நாக் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.  இவ்வளவு வேலைப்பளு இடையிலும் அற்புதமான கட்டுரைகள் எழுதும் திரு ரவி நாக் அவர்களுக்கு எனது மனப்பூர்வ வாழ்த்துகள்.  அவரை எனது மூத்த மகனாக நினைக்கிறேன்.  வாழ்த்துகள் எனது அருமை மகன் ரவி நாக் அவர்களே.


ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா?
என்னது உலகமயமாக்கபட்ட சொல்லா, இது நம்மூர் ஹிந்துக்கள் தானே உபயோகிக்கும் ஒரு தமிழ் சொல் அல்லது எனக்கு தெரிந்த வரை ஓம், அல்லது அவும் அல்லது அம் என்ற வட மொழி சொல்லின் மறுவலே இந்த ஓம் என்ற சொல் இது எப்படி உலகம் முழுவதும் என்று கேட்பவர்களுக்கான விளக்கத்தை இரண்டாம் பாராகிராஃபில் தெரிவித்துள்ளேன்





அதற்கு முன் இந்த ஓம் என்ற சொல் நம் மனித வாழ்வில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்தாலும் இதை நவீன விஞ்ஞானம்- இந்த சொல்லுக்கு ஒரு சூப்பர் பவர் என நிருபித்து உள்ளது……….ஓம் என்ற சொல் தமிழில் பிரணவ மந்திரமாக குறிக்கப்பட்டதன் காரணம் அதற்குள் அடங்கிய பாசிட்டிவ் வைப்ரேஷன் எனப்படும் ஒரு நல்ல விஷயங்களுக்கான அதிர்வு தான் அந்த வார்த்தை.

ஆம் ஒரு சில கோயில்களிலும், அரண்மனைகளிலும், சில வீடுகள் மடங்கள் இந்த மாதிரி இடத்திலும் நீங்கள் காணக்கூடிய ஒரு ஸ்ரீ சக்கரம் (யந்த்ரம்) என்னவென்று பலருக்கு தெரியாது. பலர் இதை ஒரு செப்புத் தகடின் கிறுக்கல்கள் என நினைத்திருக்கலாம். ஓம் என்ற சொல்லின் உருவம் அல்லது படிவம் தான் என்று சயின்ஸ் நிருபித்துள்ளது.

ஆம் ஹான்ஸ் ஜென்னி என்னும் விஞ்ஞானி ஸ்விஸ் நாட்டை சேர்ந்தவர்தான் ஒலியின் பரிமாணத்தை நம் பார்வைக்கு கொண்டுவந்தவர். இவர் கண்டுபிடித்த சாதனம் தான் டோனோஸ்கோப் (Tonoscope) என்னும் ஒரு வரலாற்று முக்கிய கருவி. இந்த டோனோஸ்கோப்பில் ஓம் என்று உச்சரித்தால் ஸ்ரீ சக்ரா எனப்படும் யந்திர உருவத்தை .காண முடியும் அதன் படத்தையும் இங்கு இணைத்துள்ளேன். நீங்களும் உச்சரித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


ஆனால் இந்த உருவத்தை நாம் வரைந்து வைத்திருப்பதை அதுவும் பல ஆயிரகணக்கான ஆண்டுகளூக்கு முன் ஒம் என்ற உச்சரிப்பின் பரிமாணம் இது தான் என்று வேத ரிஷிகளும் முனிவர்களும் இதன் அர்த்தத்தை உணர்ந்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு பெரிய உண்மை.

சரி நம் ஓம் சொல்லுக்கு வருவோம்

ஒம் பல மொழிகளின் பிரணவ மந்திரமாக, வடிவ, உருவ அளவில் வேறுபட்டாலும் இதன் ஒலி ஓங்கார நாதமாக ஒன்றாக இணைந்த அளவில் உள்ளது. ஒம் என்ற தமிழ் சொல்லிற்கு ஒ = அ + உ + ம் (அ என்பது முதல்வனான சிவனையும், உ என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள்).

இதை பிராமண சொல் என்று கூறுபவர்களுக்கு,  இந்த ஓம் வடிவம் சட்டைமுனி சூத்திரத்தில் – ” ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு ” என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார். ஓ என்ற சொல் தாழ்ந்தும் ம் என்ற சொல் நீண்டும் இருந்தால் ஒருவித ஒலி அதிர்வுகள் கிடைக்கும். அது போக ஒ என்ற வார்த்தை உச்சரிக்கும் போது மூச்சை உள்ளே இழுத்து ம் என்றும் கூறும் போது எல்லா வாயுவையும் வெளியே அனுப்பும் இன்னொரு சான்றோரின் மூச்சு பயிற்சியின் சீக்ரெட்.


அது போக ஓ என்று ஜெபிக்கையில்,  நினைத்த நல்ல விஷயத்தை/உருவத்தை/விரும்பும் கடவுளை நிலை நிறுத்தினால்,  ம் என்று கூறும்போது அது அப்படியே அந்த அதிர்வலை நம்மை சுற்றி சூழ்ந்து கொண்டு நல்லது நடக்கும் என உறுதியாகிறது. அது போக ஓம் என்ற ஒலியை நாம் கேட்கும் போது சயின்டிஃபிக்காய் கெட்ட விஷயங்கள் தோன்றுவது தடைப்படும்.  நிறைய குழப்பங்கள் இருக்கும் போது இந்த ஓம் ஒலி அதிர்வின் எல்லையில் நாம் இருந்தால் நம் மனதும் தெளிவு பெறும் என்பது தெளிவாகிறது.

பகவத் கீதை ஒரு கற்பனை கதை அல்லது அது கிருஷ்ணனின் அவதாரத்தை குறிக்கும் ஒரு வரலாற்று உண்மை என கூறுபவர்களுக்கு,  இதோ கீதையில் கூட ஓம் என்ற வார்த்தை வருகிறது பாருங்கள்,  கீதை – 8 – 13 “எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்.
 ஓம் என்ற சொல் ஓம் என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது.

ஓம் என்ற சொல்லில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன. இவை மூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிப்பதாகவும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை, இம்மூன்று நிலைகளையும் (அ-து, விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது.


சாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய பாரதி கூட தன் மனைவிக்கும் குடும்பத்தாருக்கும் கடிதம் எழுதும் போது ஓம் என்று முதலில் எழுதி தான் இந்த கடிதத்தை எழுதவே ஆரம்பிப்பானாம்.  இதை விட இதை 108  தடவை உச்சரிக்கும் ஒரு விஷயமும் அறிவியல் பூர்வ உண்மையை பல ஆண்டுகளுக்கு முன் கணித்த நம் மாமுனிவர்களின் விளக்கமும் சில ஆண்டுகளுக்கு முன் வான் வெளி ஆராய்ச்சி உண்மையும் ஒன்று தான்.

அதாவது சூரியன், சந்திரனின் சராசரி டயாமீட்டர்களின் அளவு தான் பூமியின் தூரம். இது 0.5% சூரியனுக்கும் 2.0% சந்திரனுக்கும் என்ற சமீபத்திய புள்ளிய தூர விவரம் பல்லாயிர ஆண்டு இந்தியர்களின் அறிவை மெச்சுகின்றன.

ஓம் என்ற வார்த்தை பிராமணர்களின் சொல், அல்லது வட மொழி சொல், அல்லது இது ஆர்யர்களின் சொல் என்று சிலர் கூறலாம். இது உண்மையல்ல. பிரபஞ்சம் எப்படி கடவுளின் வடிவமைப்போ அது போலத்தான் இந்த ஓம் என்ற சொல்லும். சிந்து வெளி நாகரிகம் என்ன என்பது நம் எல்லோருக்கு தெரிந்ததே, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே அருமையாக கட்டப்பட்ட கட்டிடங்கள், நவீன மாட மாளிகைகள், பிரமாண்டமான வேலைப்பாடுகள் நிறைந்த நவீன கட்டமைப்பை கொண்டு வந்தவர்கள் தான் இந்த சிந்து வெளி சமூகம்.

இந்த சிந்து வழி சமூகத்தின் செங்கல்களில் கூட இந்த ஓம் என்ற சொல் இருந்ததாக தொல் பொருள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இது பல நாடுகளில், பல மாதிரி கூறினாலும் இதன் வலிமையை உணர்ந்த முதல் ஐரோப்பிய மனிதன் ஹிட்லர் தான். சிந்து நதிக்கரையில் வசிக்கும் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களைக்  கொண்ட உலக பெருமைகள் கொண்ட நாடென்றால் அது இந்தியா என்னும் மாபெரும் நாடுதான்.


உலகத்தின் ஒவ்வொரு ஆளும் கண்களுக்கு, இந்தியா தான் டார்க்கெட். அது பிரிட்டிஷ் ஆகட்டும், போர்ச்சூகீஸ் ஆகட்டும், பிரஞ்சு ஆகட்டும், ஜப்பானியர்கள் ஆகட்டும், மொகலாயர்கள் ஆகட்டும் இந்தியாவின் மீது கொண்ட ஆசை இங்கிருந்த கலாச்சாரம், விலை மதிப்பில்லா பொருட்கள் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். அதன்படி பார்த்தால் ஹிட்லரின் ஸ்வஸ்திக் சின்னமும் இந்த ஓம் என்ற சொல்லின் தழுவல் தான். இது ஹிட்லர் உபயோகிக்கும் முன் இந்துக்கள் இப்படி இருக்க காரணம், அவர்களிடம் உள்ள முதல் மந்திரமான ஓம் என்ற எழுத்துதான் என மேடிசன் கிரான்ட் என்பவரின் நூலே (தி பாஸிங் ஆஃப் கிரேட் ரேஸ்)  இதற்கு சான்று.

அதை நிலை நிறுத்தி ஹிட்லரின் மூளையாக செயல் பட்ட ஹென்ரிச் மூலரும் இதை கூறியுள்ளார். இதை விட அவர் கூறிய வார்த்தைகள் தான் மிகுந்த ஆச்சரியத்தில் உண்டாக்கியது. அது அவர் எப்படி யூத இனத்தை அழிக்க ஹிட்லர் கமான்டை நான் உபயோகித்தேன் என்றால், ஒரு கையில் பகவத் கீதை மற்றும் ஹிட்லர் வார்த்தை, கிருஷண பகவான் அர்ஜுனனுக்கு எப்படி ஒரு சத்திய வாக்கோ அதே தான் என்னுடைய பணியும், அது போல ஹிட்லரை நான் 11ஆவது கிருஷ்ண அவதாரமாக காண்கிறேன் என்று அவர் மட்டுமல்ல, மேக்ஸ்னியானி போர்ட்டஸ் எனற பிரஞ்சு பெண் (பின்பு தன்னை சாவித்ரி தேவி என்று மாற்றி கொண்டவர்) கூட கூறுகிறார்.

இதற்கு மேலே இதை பற்றி நாம் பேசினால் பவர்ஃபுல் ஆர்யர்கள் நாங்கதான் என்ற குரல் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஒலிக்க இதற்கு போட்டி இருந்தது- இருக்கிறது.

ஓம் என்ற வார்த்தை, ஒரு காலத்தில் நல்லது நினைத்து தியானம் கொண்ட முனிவர்களுக்கும், கெட்டது நினைத்து தவம் கொண்ட சில அரக்கர்களுக்கும்,  உருவான ஒரு காமன் லேங்குவேஜ்  இந்த ஒம்.

ஓம் என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாதவர்கள், அவர்கள் மனதுக்குள்  தியானம், யோகா, உடற்பயிற்சி செய்யும் போது கூட இதை ஃபாலோ பண்ணினாலே  நிறைய மாறுதல்கள் உண்டாகும் என சவுன்ட் ஆஃப் ஹீலீங் கோட்பாடுபடி இது மரணத்தை கூட தள்ளி வைக்கும் ஒரு அற்புத செயல் என ஜொனாதன் கோல்ட்மேன் என்ற அமெரிக்க டாக்டர் கூறுகிறார்.
 ஓம் ஓம் ஓம்…………. நன்றியுடன் ரவி நாகராஜன் …..
என் இனிய நண்பர்களே, இந்த பதிவை படித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.  மீண்டும் அடுத்து ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்.
மிக்க நன்றி.