புதன், மே 30, 2012

பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு


எனது மதிப்பிற்குரிய இனிய நண்பர் திரு ராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்கள் பக்கவாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றி முகநூலில் ஒரு அருமையான, பயனுள்ள கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.  அவரது அனுமதியின் பேரில் எனது பதிவாக வெளியிடுகிறேன்.  திரு ராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.

உலக அளவில் மரணத்திற்கு காரணமான் நோய்களில் பக்கவாதம் என்று அழைக்கப்படும் "ஸ்ட்ரோக்"..2ம் இடத்தை பிடித்திருக்கிறது.!

ஸ்ட்ரோக் (STROKE) என்றால் என்ன : 

ரத்தக் குழாய்களின் மூலம் மூளைக்கு எடுத்துச் செல்லப்படும் ஆக்சிஜன் அளவு..(பிளாட்டிலட் அக்ரிகேஷன்) ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக தடைபட்டு...அதன் காரணமாக ஏற்படும் பிரச்சினையே பக்கவாதம் என்று அழைக்கப் படுகிறது.!

காரணிகள் என்ன:‍

பொதுவான காரணிகளாக...உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, உயர் கொழுப்பு மற்றும் மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்..STRESS) போன்ற மரபு சார்ந்த மற்றும் இயல்பு சார்ந்த பிரச்சினைகளால் மட்டுமன்றி(என்டோஜீனியஸ்..ENDOGENEOUS)..மாறிவரும் சமூகநிலைகளால்...சிறு வயது முதல்...வயதானவர்கள் வரை ( பெரும்பாலும் ஆண்கள்)...உள்ள தேவையற்ற பழக்கங்களான...தொடர்ந்து மது அருந்துதல், சிகெரெட், புகையிலை..இன்னபிற லாகிரி வஸ்துக்கள்
(எக்ஸோஜீனியஸ்..EXOGENEOUS)...பயன்பாடும்...மேற்கூறிய சிக்கல்களை நாள‌டைவில் ஏற்படுத்தி..எண்ட் ஆர்கன் டேமேஜ் என்று அழைக்கப்படுவதில் ஒன்றான "மூளையின் செயல்பாடு"..பாதிக்கப் படுவதை...பக்கவாதம் ஏற்படுத்தும் காரணிகளாக கொள்ளலாம்.!

விளைவுகள்:

பொதுவாக ஒருவருக்கு மேற்கூறிய காரணங்களில் ஏதாவது ஒன்றின் மூலம்
பக்கவாதம் ஏற்பட்டால்...கை அல்லது கால் செயல்படாமல் போவதையும் (பராலிசிஸ்..PARALYSIS)..மூளையின் ஒருபகுதி செயலிழப்பதால்..முகம் / வாய் கோணலாவதையும் (பேசியல் பிளஷிங்..FACIAL FLUSHING)...ஞாபகசக்தி இழப்பு (மெமரி லாஸ்) மற்றும் பார்த்து புரிந்து கொண்டு செயல்படாமல் போகும் நிலையும் ( டிமென்ஷியா..DEMENTIA)... ஏற்படுவதை நாம் காண்கிறோம்.!


பக்கவாதம் யாருக்கு ஏற்படும்:

முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதித்து வந்த இந்தப் பிரச்சினை..பல்வேறு காரணிகளால்..15 வயது முதலே ஏற்படும் நிலையினால் (விபத்துக்களால் ஏற்படும் தலைக்காயம்)..ஆண்டுதோறும்...60 லட்சம் மக்கள் இறப்பதாக...உலக சுகாதார மையத்தின் அறிவிப்புகளும்..மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் தெரிவிக்கின்றன.!

தீர்வு :

 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்...தங்களது ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும்
கொழுப்பின் அளவை..மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி.. பரிசோதித்துக் கொண்டு..சரிவிகித உணவு, மிதமன உடற்பயிற்சி ( நடைப்பயிற்சி....BARISK WALK) தேவையற்ற‌ பழக்கவழக்கங்களை கைவிடுதல் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.! தேவை ஏற்பட்டால்..நிபுணரின் பரிந்துரைகளின் படி
மருந்துகளை சரியான கால அவகாசத்தில் எடுத்துக் கொள்வதன் மூலமும்..சரியான பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றி...உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை மற்றும் அதிக கொழுப்பு இவற்றை கட்டுப்படுத்தி வைத்து...சீரான வாழ்க்கையினை நடத்தலாம்.!

சரிவிகித உணவு மற்றும் பயிற்சிகள்:


1. நாம் அருந்தும் உண‌வில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க...வறுத்த உணவுக்கு பதிலாக...வேகவைக்கப்பட்ட உணவுகளையும், நார்ச்சத்து மிக்க பழங்களையும் ( சர்க்கரை நோயாளிகள் பழங்கள் உட்கொள்வதில் மருத்துவ ஆலோசனை தேவை)..எடுத்துக் கொள்வதுடன்...உணவில் தாவர எண்ணைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.!


2. மிதமான நடைப் பயிற்சியினை (பிரிஸ்க் வாக்..) தினமும் 30 நிமிடம்..முடிந்தால்.. காலை / மாலை இரு வேளைகளிலும் (அல்லது ஏதாவது ஒரு வேளையிலாவது) மேற்கொள்ள வேண்டும்.!இவை நம் உடலினை சீரான கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.!

LAST BUT NOT THE LEAST...
வாதநோயின் அறிகுறிகள் தெரிந்தால்...கைவைத்தியம் ஏதும் பார்க்கமல் அருகிலுள்ள அரசு தலைமை மருத்துமனையினையோ ( இதற்கென தனிப் பிரிவு ஒவ்வொரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் இயங்குகிறது) அல்லது மருத்துவ நிபுணரையோ..உடனே அணுகி சிகிச்சை பெறுவது சாலச் சிறந்தது.!

நண்பர்களே..இன்று உலக பக்கவாத தினம்...அது குறித்து சில தேவையான குறிப்புகள்...இனிய மதியம் / மாலை வணக்கத்துடன்...:-)
இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.ஞாயிறு, மே 20, 2012

சூரிய கிரகணம் – மே 20, 21 – 2012 வருடம் – நமது நாட்டில் தெரியாது

பேராசிரியர் திருமதி மோகனா அவர்களின் சூரிய கிரகணம் பற்றிய பதிவு அவர்களின் பதிவு.  அவர்களின் அனுமதியுடன் வெளியிடுகிறேன்.  பேராசிரியர் திருமதி மோகனா அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகள்.


வணக்கம் நண்பர்களே.  2012 , மே  20 -21    ல்  ஒரு  சூரிய கிரகணம்  வரப்போவுது. அதுவும் இரண்டு நாளைக்கு நீடிக்கப் போவுது.


இப்போது தான் ஒரு சூரிய  கிரகணம்  பார்த்து  முடிச்சோம்.  அது 2011, ஜனவரி 4 ம் நாளும், ஜூலை முதல் தேதியும் பகுதி சூரிய கிரகணங்களாக வந்தன.

 

  ஒவ்வொரு  சூரிய கிரகணமும்,  ஒவ்வொரு 177  நாட்களுக்கு  ஒரு தடவை,  4 மணி நேரம் மாற்றிய நோடுகளிலும் வரும்.  இப்போது நாளைக்கு ஒரு சூரிய கிரகணம் நிகழ உள்ளது.ஆனால் நாம், இந்தியாவில் இருப்பவர்கள் இந்த சூரியக் கிரகணத்தைப்  பார்க்க மாட்டோம். இது, இதன் பாதை  நம் ஊர் வழியே செல்லாது. இது கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் 2010 , ஜனவரி 15 ல் ராமேஸ்வரத்தில் நிகழ்ந்தது போல  ஒரு கங்கண /வளைய சூரிய கிரகணம்.ஆனால் இது தென்-கிழக்கு ஆசியாவைக் கடந்து செல்லும்.  வட பசிபிக் பெருங்கடல் இந்த சூரிய கிரகணத்தைச் சந்திக்கும். அதுபோல தென்-மேற்கு அமெரிக்க மக்களும் கங்கண சூரிய கிரகணத்தைப் பார்ப்பார்கள் 
இந்த வளைய சூரிய கிரகணம்,  2012 மே 20 ம்  நாள், 
சர்வதேச நேரப்படி,  சரியாக  22 .06 .17  மணிக்கு  சந்திரனின் நிழல் சூரிய வளையத்தைத் தொடத்  துவங்குகிறது.  கிரகண மறைப்பு என்பது, டோங்கிங் வளைகுடாவில் (Gulf of Tongking) தான் துவங்குகிறது. அங்கிருந்து நகர்ந்து வரும் கிரகணப் பாதை,  வளையமடித்து சரியாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் முடிகிறது. அப்போது நேரம் சர்வதேச நேரப்படி இரவு  01 .39 11. அதாவது மே மாதத்தின்  அடுத்த நாள் 21 ம் தேதி பிறந்திருக்கும்.  இந்த சூரிய கிரகணம் இரண்டு நாட்கள் நடக்கிறது என்று சொல்லலாமா? அப்படித்தான் சொல்லவேண்டும், ஏனெனில் மே 20௦ம் நாள் கிழக்கே துவங்கிய கிரகணம்,  நகர்ந்து வட்டமடித்து மே 21 ம் நாள் மேற்கே அமெரிக்காவில் முடிந்தால் இரு நாட்கள் கிரகணம் என்றே கருதத் தோன்றும்.  இந்த கங்கணக் கிரகணம் சரியாக 5  1/2 நிமிடம் மட்டுமே நீடிக்கும். இந்த கிரகணம்,  மிகவும் அகலமான பாதையில் பயணிப்பதால்,  நீண்ட நேரமும் இருப்பதால், இதில் சூரியன் கருப்பாகத் தெரியாது.  குறைவான நிமிடங்கள் சூரிய மறைப்பு நிகழும் போதுதான்,  சூரியன் கருப்பு சூரியனாக மாறும்.  இருந்தாலும் கூட,  இந்த சூரியனையும், நாம் வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. 


 மே 20 நாள் வரும் சூரிய கிரகணம், பெரும்பகுதி ஆசியா,  ரஷ்யா, வடமேற்கு  அமெரிக்கா போன்ற இடங்களில்,  பகுதி சூரிய கிரகணமாகத் தெரியும். இது இவ்விடங்களில் மே 20 ம் நாள் 20 .56 .07 மணிக்குத்  துவங்கி, மே 21 ல்,  நடு இரவு /அதிகாலை  02 .49 .21 க்கு முடிகிறது.  இந்த முறை வரும் சூரிய கிரகணம் 5 1 /2 நிமிடநேரம் நீடித்தாலும்,  இது  மே 20 -21 என இரு நாட்கள் நீடிக்கிறது.  இந்த வளைய/கங்கண கிரகணம் சரியாக சீனாவில் ஓட்டத்தை துவக்குகிறது.  பின் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து,  ஜப்பானின் மீது ஊர்ந்து வருகிறது.  அங்கே, அலூடியன் தீவுகளைத் தாண்டி, பின் வட அமெரிக்காவை எட்டிப்பார்க்கிறது.  அங்கே வளைய கிரகணம் தெரியும் இடம் வட கலிபோர்னியா தான்.  அங்கிருந்து கிரகணம், ரெனோ(  Reno ) வை  ஒரே எட்டாகத்  தாவி, தெற்கு  உடாக்கில்(Southern Utah)  உள்ள  சியான் தேசியப் பூங்கா (Zion National Park) வழியே செல்கிறது.  அங்கிருந்து தெற்கு அரிசோனாவிலுள்ள   கிரான்ட்  கான்யனைப் பார்க்கப் போகிறது. அது பிறகு அல்புகுவிர்க் க்கும் , நியூ மெக்சிகோவுக்கும்  சென்று இறுதியில் டெக்சாசிலுள்ள  லும்போக்கா என்ற இடத்தில் சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனிலிருந்து ஓடியே போய்விடுகிறது.இந்த கிரகணத்தில் சூரியனின் வளையத்திற்குள் சந்திரனின் நிழல் படுகிறது.  எனவே, மீதமுள்ள சூரிய வட்டம் வளையமாகக் காட்சியளிக்கும்.   இதனையே நாம் வளைய சூரிய கிரகணம் என்கிறோம். வளைய கிரகணப் பாதை,  சந்திரன்,  சூரியன்  சீண்டல் விளையாட்டு/  தொட்டுப் பிடி விளையாட்டு / கண்ணா மூச்சி விளையாட்டு சீனக் கடற்கரையில் துவங்குகிறது. அது அப்படியே தைவான், தென் ஜப்பான், அமெரிக்காவின் வட மேற்குப் பகுதி, கனடாவினை முத்தமிட்டு  முடிகிறது. இதில் குவான்ஷோவு, டாய்பேர். டோக்கியோ மற்றும் அல்பூகுயிர்க் (Guangzhou, Taipei, Tokyo andAlbuquerque) போன்ற இடங்களில் தான் கிரகணத்தின் மையப் பகுதி இருக்கும். இதன் அதிக பட்ச மறைப்பு நேரம் வடபசிபிக் பெருங்கடலில்தான் அதுவும், அல்லூதியன் தீவுகளில் சரியாக
 5 நிமிடம், 45.3 நொடிகள் நீடிக்கும்.  பின் வட அமெரிக்காவில் சந்திரன் கோபித்துக் கொண்டு சூரியனை விட்டு விலகும். இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.

வெள்ளி, மே 18, 2012

தோழர் திரு காஸ்யபனுடன் இனிய சந்திப்பு

நான் பதிவு எழுத ஆரம்பித்தது மார்ச், 2011.  எனது பதிவில் ‘என்னைப் பற்றிய குறிப்புகளில்”  எனது படிப்பு SSLC. திரு காமராஜர் காலத்தில் இலவச கல்வித் திட்டம் வந்ததால் இந்த அளவு படிக்க முடிந்தது எனது கொள்கை - முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - ஆலோசனை, இதர வழிகளில்” என்று குறிப்பிட்டிருந்தேன்.


எனது பதிவை படிக்க ஆரம்பித்த திரு காஸ்யபன் (நாக்பூர்) அவர்கள் எனக்கு கடந்த வருடம் ஒரு நாள் தொலைபேசியில் பேசினார்.  எனது கொள்கைக்கு மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.  எங்களது தொலைபேசி தொடர்பு அவ்வப்போது இருந்து கொண்டிருந்தது. அவர் சொல்லியபடி அங்கு உள்ள ஒரு குழந்தைக்கு கல்விக்காக ஒரு சிறு உதவி செய்தேன்.  அதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி – முகம் தெரியாத ஒரு சிறுமிக்கு உதவியிருக்கிறேன் என்று அடிக்கடி கூறுவார்.

இந்த வருடம் ஏப்ரல் மத்தியில் ஒரு நாள் தொலைபேசியில் பேசி மே மாத வாக்கில் தென்காசிக்கு ரயிலில் செல்வதாகவும் சந்திக்க முடியுமா என்று கேட்டார்.  நான் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் வந்து சந்திக்கிறேன் என்று சொன்னேன்.  பிறகு யோசித்தேன், இங்கு நிற்பது 2  நிமிடங்கள் – இதில் இவரை நேரில் பார்த்ததில்லை, ஒன்றும் பேச முடியாது, அதற்குள் ரயில் கிளம்பி விடும்.  எனவே நான் ஒரு மாற்று யோசனை சொன்னேன் – நீங்கள் எந்த கோச்சில் வருவீர்கள் என்று சொல்லுங்கள்.  நானும் எனது மனைவி திருமதி உமா காந்தி அவர்களும் அந்த கோச்சில் ஏறி கடையநல்லூர் வரை வருகிறோம், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம் இருக்கும், நாங்கள் வரும் போது உங்களுக்கு காலை உணவு கொண்டு வந்து விடுகிறோம், நாங்கள் கடையநல்லூர் கோவிலில் சென்று சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று சொன்னோம்.  அவர் நாங்கள் கிளம்பும் போது சொல்கிறேன் என்று சொன்னார்.  நாங்கள் கிட்டத்தட்ட 10 பேர் வரை வருவோம், அதனால் உணவு எல்லாம் கொண்டு வந்து நீங்கள் சிரமப்பட வேண்டாம் என்றும், உங்களைப் பார்த்து பேச வேண்டும் என்று சொன்னார்.

இந்த மாத ஆரம்பத்தில் திருச்சி மகள் வீட்டுக்கு வந்திருப்பதாகவும் வரும் போது சொல்லி விட்டு வருகிறோம் என்றார்.  10.5.2012 அன்று பேசி நாளை வருகிறோம், நீங்கள் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வந்து விடுங்கள், என்னுடன் வரும் மகள் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று வரட்டும், நாம் வெளியில் பேசிக் கொண்டிருப்போம் என்றார்.  அவர்கள் கிளம்பி வரும் வழியில் பாதையை தவற விட்டதில் தாமதமாகி விட்டது.  எனவே அவர் வரும் போது எங்கள் வீட்டில் இறங்கிக் கொள்கிறேன், மற்றவர்கள் கோவிலுக்கு சென்று வந்து என்னை அழைத்துச் செல்வார்கள் என்றார்.  ஊரில் நுழைந்தவுடன் திரு காமராஜர் சிலை அருகில் நின்று போன் செய்தார்கள்.  எனது மனைவி சென்று அவர்களை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.  

திரு காஸ்யபன் அவர்களும், அவரது மனைவி திருமதி முத்து மீனாட்சி அவர்களும் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள்.  அவரது மகள், அவரது மருமகன், அவரது பேரன் எல்லோரும் கோவிலுக்கு சென்று வருகிறோம் என்று கூறிச் சென்றார்கள்.  நாங்கள் எப்படி செல்வது என்று அவர்களுக்கு சொல்லி அனுப்பினோம்.

அவருக்கு வயது 76க்கு மேல் இருக்கும்.  இவ்வளவு மூத்த வயதில் எங்களைப் பார்க்க வந்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.  திருச்சியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்ல வேண்டியது, உங்களைப் பார்ப்பதற்காக தான் இங்கு வந்தோம் என்றார்.  நாங்கள் நெகிழ்ந்து விட்டோம்.  அவர்கள் வரும் போது கிட்டத்தட்ட இரவு 7 மணியாகி விட்டது.  எனவே இரவு உணவு அருந்தி விட்டு சொல்லுமாறு வேண்டினோம்.  அவர்களும் சரி என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட 8.15 அளவில் எனது மனைவி அவர்களுக்கு சப்பாத்தி தயார் செய்து சாப்பிட ஏற்பாடு செய்தார்கள்.  அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.  அவர்கள் எங்கள் வீட்டில் சாப்பிட்டது  எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

திரு காஸ்யபன் அவர்களைப் பற்றி:

அவர் எனக்கு பதிவராக தான் தெரியும்.  அவரிடம் பேசிக் கொண்டிருந்ததில், அவரைப் பற்றிய குறிப்புகளில் படித்ததில் தெரிந்தது – எங்கள் வீட்டிற்கு வந்திருப்பது ஒரு மாமனிதரும் அவரது மனைவியும் என்று.  நாங்கள் மிகவும் நெகிழ்ந்து விட்டோம்.  அவர் ஒரு தொழிற் சங்கவாதி.  தீக்கதிர், செம்மலர் போன்ற பத்திரிக்கைகளில் கிட்டத்தட்ட 35 வருடங்கள் பணி புரிந்திருக்கிறார்.  தமிழில் மூன்று சிறு கதைத் தொகுப்புகளும், ஆங்கிலத்தில் ஒரு சிறு கதைத் தொகுப்பும், இந்தியில் ஒரு சிறு கதைத் தொகுப்பும், ஒரு நாவலும், ஒரு நாடகமும் எழுதியிருப்பதாக அவரது குறிப்புகள் காண்பிக்கின்றன.  அவர் ஜெயா தொலைக்காட்சியில் ஒரு நேர்காணல் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்திருப்பதாகவும், அதன் இணைப்பையும் குறிப்பிட்டார்.


திரு காஸ்யபன் அவரது மனைவி திருமதி முத்து மீனாட்சி அவர்களைப் பற்றி, அவர்கள் ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை பெற்றிருப்பதாகவும் – இவற்றில் மொழி பெயர்ப்பில் ஈடுபட்டிருப்பதாகவும், சமீபத்தில் சாஹித்ய அகாடமிக்கு ஒரு புத்தகம் மொழி பெயர்த்து கொடுத்திருப்பதாகவும், அந்த புத்தகம் அச்சில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.

எங்களுக்கு ஆச்சரியம், தாங்க முடியாத மகிழ்ச்சி.  எவ்வளவு பெரிய மாமனிதர்கள் எங்களைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரங்கள் எங்களது வீட்டில் இருந்தார்கள்.  அப்போது எனது தங்கை மகன் (அடுத்த வீடு தான்) வந்திருந்தான்.  அவன் B.Sc., இறுதியாண்டு படிக்கிறான் என்றும், அவனுக்கு அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டோம்.  அவர் அவனிடம் பேசிக் கொண்டிருந்ததை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தோம்.  அருமையான யோசனைகள் சொன்னார்கள்.

சுமார் 9 மணியளவில் அவரது குடும்பத்தினர் வந்து அழைத்துச் சென்றார்கள்.  இரவு நெடிய பயணம் இருப்பதால் அவர்கள் எங்கள் வீட்டிற்குள்  வர நேரமில்லை.  நாங்கள் இவர்களை அவரது கார் வரை சென்று வழியனுப்பி வந்தோம்.  அங்கு வைத்து எங்களை அவர் மகள் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அவரது மகள் திருச்சியில் பணிபுரிவதாக சொன்னார்; அவர்களும் நிறைய படித்திருக்கிறார்கள்.  அவரது மருமகன் திருச்சி பொறியியல் கல்லூரியில் (முன்பு Regional Enbineering College – REC – தற்போது National Institute of Technology – NIT) பேராசிரியராகவும் ஒரு பிரிவுக்கு தலைவராக (Head of the Department – HOD) ஆக இருப்பதாகவும், அவரது மகன் நாக்பூரில் மத்திய அரசுப் பணி புரிவதாகவும், அவரது மருமகள் தபால் துறையில் பணி புரிவதாகரும் சொன்னார்.  அவரது குடும்பமே ஒரு பல்கலைக்கழகமாக விளங்குகிறது.  அவர்கள் அனைவரும் எங்கள் வீட்டுக்கு வந்தது எங்களுக்கு  பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறோம்.

அவரது பதிவின் இணைப்பு:


அவரது பதிவை நேரம் இருக்கும் போது படித்துப் பாருங்கள்.  அருமையாக எழுதியிருக்கிறார்கள். உங்கள் கருத்துக்களை அவரது பதிவில் பின்னூட்டமாக எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் அவரது ஜெயா தொலைக்காட்சிக்கான  நேர்காணலுக்கான 2 இணைப்புகள் கொடுத்திருக்கிறேன்.  நாங்களும் கேட்டோம்.  ஒவ்வொரு விஷயத்திலும் அவரது கருத்துகள் ‘தீர்க்கமாகவும், ஆழமாகவும், மனதைத் தைப்பதாகவும்’ இருக்கின்றன.நீங்களும் நேரம் ஒதுக்கி ஆழ்ந்து கேட்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  பதிவுகளிலும், நேர்காணல்களிலும் உங்களது மனதில் பட்ட கருத்துக்களை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.

வியாழன், மே 10, 2012

உலக கல்லீரல் தினம் பற்றிய பதிவு

பேராசிரியர் மோகனா அவர்களுக்கு நாளை (11 மே) பிறந்த நாள்.  அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர்களது ‘உலக கல்லீரல் தினம்” கட்டுரையை வெளியிட்டிருக்கிறேன்.

பேராசிரியர் மோகனா அவர்களுக்கு எங்களது இதயங்கனிந்த வாழ்த்துகள்.
 இந்த கட்டுரையை வெளியிட அனுமதி கொடுத்த உங்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகள். 


ஏப்ரல் 19 , உலக கல்லீரல் தினம் ..! 
   
     ஏப்ரல் 19 அன்று உலக கல்லீரல் தினம் கடைப் பிடிக்கப்படுகிறது . மக்களிடையே கல்லீரல் பற்றிய விழிப்புணர்ச்சி உருவாக்கவும், இந்த அற்புத உறுப்பைக் காப்பாற்றவும் இந்த தினம் கொண்டாடப் படுகிறது. இப்போது மக்களுக்கும் மற்றும்  உடல்பாதுகாப்பு துறையில் இருப்பவர்களுக்கும் கூட  கல்லீரல்மற்றும் அதன்  நோய்கள் பற்றிய தகவலையும், எடுத்துச் செல்லவேண்டியிருக்கிறது, என ஐக்கிய நாட்டு சபை கருதுகிறது. அதற்காகவே, இந்த தினம் அனுசரிக்கப் படுகிறது. உடலின் அனைத்து வளர்சிதை மாற்றங்களும் நடைபெறும் மேடை கல்லீரல்தான்.   

  நம் உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்.  இது ஓர் ஆச்சரியமான உறுப்பு என்று கூட கூறலாம். ஏன் தெரியுமா? எம் பேரு கல்லிரல்பா.!  நா.. ஒனக்காக முக்கியமா 500 வேலை செய்யறேன்பா. நா அதே செய்யாட்டி நீ போயிடுவே..! அத்தோட  கொசுறா சும்மா
35 , 000 பணிகள் ஒன் தேவைக்கு ஏத்தாப்பல செய்யறேன்பா..!  இப்படிதான் மொத்தமாக கல்லீரல்  சுமாராக 36,000 பணிகளை அனாயசமாக, சும்மா போகிறபோக்கில்  செய்கிறதாம். இது இல்லாமல் நாம வாழவே முடியாதுங்க..! ஆனால் இதன் மீள் வளர்ச்சி என்பதும், நாம் எதிர்பார்க்காத வகையில் அனாயசமானது.  ஆமாப்பா., இதன்  80 %  சேதமடைந்தாலும் கூட, சாதாரணமாக பணி செய்வார் கல்லீரல் . அதுபோலவே, 80 %  வெட்டி வெட்டி எடுத்துவிட்டாலும் கூட, அடுத்த 15 -20 நாட்களில் இவர் துரித கதியில் படுவேகமாக அதன் பழைய அளவுக்கே வளர்ந்து விடுவார். இதன் மீள்திறனும்  , தாக்குப் பிடிக்கும் தன்மையும் மாயாவி போலதான்.  எடுத்து விட்டாலும் கூட, அடுத்த 15 -20 நாட்களில் இவர் துரித கதியில் படுவேகமாக அதன் பழைய அளவுக்கே வளர்ந்துவிடுவார். இதன் மீள்திறனும்  , தாக்குப் பிடிக்கும் தன்மையும் மாயாவி போலதான்.
 
கல்லீரலும் இதயம், மூளை போல முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.  இது இல்லாவிட்டால் நம்பாடு அம்போ தான்.  இது கருஞ்சிவப்பு நிறத்தில் வயிற்றில் பெரும்பகுதியை அடைத்துக் கொண்டு, கொழுக் மொழுக்கென்று இரு பகுதிகளாக   இருக்கிறது. வலது பகுதி,  இடதை விடப் பெரியது.  கல்லீரலும் மூளையும் எடையில் சமமானவர்கள்.  அதாவது 1400 கிராம்..! அதற்காக கல்லீரல் இடத்தில் மூளையையும், மூளை உள்ள இடத்தில் கல்லீரலையும் வைக்க முடியாது நண்பா..!  நம் உடலின் முக்கிய வேதி தொழிற்சாலையும், சுத்திகரிப்பு தொழிசாலையும் இதுதான். ஆமாப்பா..! நீங்கள் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையற்றதும் , தீங்கு விளைவிப்பவையும் இருந்தால், அவற்றை  உடனடியாக வெளியேற்றுகிற வேலையைச் செய்வது கல்லீரல்தான். அது மட்டுமல்ல நீங்கள் உண்ணும் உணவை, உடலுக்கு வேண்டிய வடிவத்தில் மாற்றிக் கொடுப்பவரும் கல்லீரலார் தான். நம் உடனடி தேவைக்குப் போக, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிளைகோஜனாக சேமித்து வைக்கப் படுவதும் இங்கேதான்.  அவசர தேவையின் சேமிப்புக் களன் கல்லீரலே. உடலில் தேவைக்கேற்ப, தேவையான இடத்தில் தேவையான அளவு, தேவையான நேரத்தில்,  குளுகோஸை அவ்வப்போது   விநியோகம் செய்வதும் இவர்தான். 400-04629137 400-04629137 © blue67sign Model Release: No Property Release: No Illustration of a man running from a dog. © blue67sign / Crestock / Masterfile
நீங்கள் ஓர் ஓட்டப் பந்தய வீரர் என்றால் மட்டுமல்ல, பைரவர் (நாய்) துரத்தும்போது ஓடினாலும் கூட, அந்த ஓட்டத்தின்போது, உடல் தசை செயல்படத் தேவையான குளுகோஸை அதற்குத் தந்து உதவுவது கல்லீரல் தான். இல்லாவிட்டால், நீங்கள் அம்பேல்தான்.  


உங்களின் உடலில் பாக்டீரியா இருந்தாலும் சரி, பாய்சன் இருந்தாலும் சரி, அது உடலுக்கு தேவையற்றது, தீங்கானது என்றால், பாகுபாடு பார்க்காமல், உடனடியாக வெளித் தள்ளுவது கல்லிரலின் பணியே. நீங்கள் எவ்வளவு மதுபானம் அருந்தினாலும், விடம் அருந்தினாலும் அவற்றை வெளியே கொட்டும் வேலையைச் செய்வது இவர்தான். நம் உடலுக்கு வேண்டாத பொருள் அனைத்தையும் பிரித்து, கரைத்து இரத்தத்தின் வழியே சிறுநீரகத்துக்கு அனுப்பி வெளியேற உதவுகிறது . கல்லீரல் மருந்து, மாத்திரை, வைரஸ், பாக்டீரியா, விடம், போன்றவற்றைக் கரைக்கா விட்டால், சிறுநீரகம் அவற்றை வெளியேற்ற முடியாது. உடலில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் யூரியாவையும்  சேகரித்து அனுப்புகிறது.   


அண்ணாச்சி, நமக்கெல்லாம் வறுத்தது, பொரித்தது, சிப்ஸ், உருளை வறுவல் என்று தான் பிடிக்கும்.  அனைத்து உணவுப் பொருளையும் நல்லா , நெறைய எண்ணெய் ஊற்றி, சும்மா மொரு மொறுன்னு வறுத்து சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்னு சொல்ற ரகம் நாம.!  ஆனா நீங்க என்ன எண்ணெய் பொருள் சாப்பிட்டாலும் சரி,  இந்த பெரீய்ய தலீவன் கல்லீரல் இல்லாட்டி ஒண்ணும் ஆவாதுங்கோ..!  ஆமாம்,  எண்ணெய்ப் பொருள்களை சீரணம் செய்வது இவர்தான்.  இதிலுள்ள பித்தப் பையின் சுரப்பி நீரான, பித்தநீர் தான், எண்ணெய் மற்றும் கொழுப்பை உடைத்து சீரணம் செய்பவர் 


0001740742 Image: 0001740742, License: Rights managed, Restrictions: ::::::::::::::, A photograph of a female patient with jaundice due to alcoholic liver disease Jaundice is the yellowish staining of the skin and sclerae the whites of the eyes The yellowing is due to abnormally blood high levels of the bile pigment bilirubin The yellowing extends to other tissues and body fluids Jaundice may indicate liver or gallbladder disease, Property Release: No or not aplicable, Model Release: No or not aplicable, Credit line: Profimedia.com, Alamy Profimedia.com, Alamy

அதனால்தான், மஞ்சள் காமாலை வந்தால், மருத்துவர் உடனடியாக, பால் பொருள்கள், எண்ணெய் வஸ்துக்களை நிறுத்தச் சொல்கிறார். ஏனெனில் மஞ்சள் காமாலை, என்பது  ஹெபடிடிஸ்(Hepatitis) A, B & C போன்ற வைரஸ்களால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவது. ஆனா  நாம என்ன செய்வோம் தெரியுமா? நாட்டு வைத்தியரிடம் சென்று, மருந்தை வாங்கி, அதனை நல்ல கெட்டியான ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடுவோம். நல்ல நாட்டுக்கோழி கறி வாங்கி அதில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுவோம்.அத்தோடு,  கல்லீரலுக்கு நல்ல வெடிகுண்டு வேட்டு வைப்போம்.     கல்லீரல் புரதத்தை உடல் உட்கிரகிக்கும் எளிதான அமினோ அமிலங்களாக மாற்றித் தருகிறது. கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A, D, E & K யின் சேமிப்பு கிடங்கு இதுதான். அது மட்டுமில்ல நண்பா,, உங்களுக்கு ரொம்ப கொழுப்பு இருக்கிறதா? கோபித்துக் கொள்ளாதீர்கள்..! கொலஸ்டிராலைத்தான் சொல்கிறேன். அதன் உற்பத்திக் கலனும்/களனும்  இங்கேதான். இரத்தம் உறைவதற்கான உதவி செய்பவரும் இவரே..! நாம் சாப்பிடும் வலிநிவாரணி உட்பட, அனைத்து வகை மருந்துகளையும் பிரித்து பிரித்து ஆய்பவர் இவரே.!  

கல்லீரலில் இரண்டு பெரிய இரத்தக் குழாய்கள் உள்ளன. அதன் உதவியால்தான் இத்தனை பணிகளும் நடக்கின்றன. இந்த உறுப்பில் 96 % நீர்தான் உள்ளது.  இதன் மீள் திறனும், பணிப் பளுவும் அளப்பரியது. எனவே நல்ல உணவு உண்டு, நிறைய நீர் அருந்தி, நல்ல உடற்பயிற்சி செய்து கல்லீரலை  காக்க வேண்டியது மிக மிக அவசியம். உங்கள் கல்லீரல் நல்ல வேலை செய்யலைன்னா, தோலும், கண்ணும், நகமும் மஞ்சளாகிவிடும்.  மலம் வெள்ளையாக இருக்கும்.  இதனைக் கண்டறிவது எளிதே.!  சில வைரஸ் பாதிப்புகள், சில மருந்துகள், மதுபானம் போன்றவை கல்லீரலை சிர்ரோசிஸ் (cirrhosis) வந்து செயலிழக்க செய்துவிடும். மாசு கலந்த காற்று ,  மன அழுத்தம்,  உடல்  பருமனும் கூட கல்லீரலைப் பாதிக்கும். சர்க்கரை நோய், மன அழுத்தம், உடல் பருமன், மஞ்சள் காமாலை போன்றவை, கொழுப்பு கல்லீரல் உருவாக வழி வகுக்கும். பாதிக்கப் பட்ட கல்லீரலை,
கல்லீரல் மாற்று சிகிச்சை மூலம் சரி செய்யலாம். குடும்பத்தினர்/இரத்த உறவினர்தான், கல்லீரல் தரவேண்டும்.  கல்லீரலும்  புற்று நோய் பாதிப்புக்கு ஆட்படும்
  
  • 1997 ல் லண்டனில் 5 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இப்போதும் இவர் நன்றாக உள்ளார். இதுதான் உலகிலேயே, கல்லீரல் மாற்று சிகிச்சை செய்த குறைந்த வயது . 
  • அப்பல்லோ மருத்துவ மனையில் மட்டுமே, கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 க்கு மேற்பட்ட கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. 
  • அமெரிக்காவில் சிரோசிசால் இறப்பவர்கள் வருடத்திற்கு, 25 ,௦௦௦000 .
  •  இந்தியாவில் சிர்ரோசிஸ் இறப்பு:2007 ல் 1 ,776 ;2008 ல் 1 ,965 ;2009l 2 ,048 . இது தெரிந்த கணக்கு. நம்ம கிராமத்தில் மருத்துவமனைக்கு வராமல் உயிர்விடுபவர்..?  

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.
புதன், மே 09, 2012

சுழல் காற்று

சுழல் காற்று - அறிவியற் தகவல்

எனது இனிய நண்பர் திரு பீர் முகமது புன்னியாமீன் அவர்கள் எழுதிய சுழல் காற்று என்ற அவரது அற்புதமான கட்டுரையை அவரது அனுமதியின் பேரில் எனது பதிவாக வெளியிட்டிருக்கிறேன். 

அனுமதி அளித்த திரு பீர் முகமது புன்னியாமீன் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகளும், வாழ்த்துகளும்படித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்

எனது பதிவில் blogspot லிருந்து blogspot.in என மாறும்போது நிறைய Widgets போய்விட்டன.  இப்போது Followers Widget இணைத்துள்ளேன்.  எனவே திரும்ப தங்கள் பெயரை பதிந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

என்னால் எழுதப்பட்ட சில கட்டுரைகளை என் முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். இக்கட்டுரைகள் இலங்கை ஊடகங்களிலும், சர்வதேச ஊடகங்களிலும் பிரசுரமானவையாகும். இக் கட்டுரை தமிழ் விக்கி பீடியாவில் 18 திசம்பர் 2010 திகதி என்னால் எழுதப்பட்டதாகும்

மின்னலையும், இடியையும் தோற்றுவிக்கக்கூடிய முகிலொன்றின் உட்பகுதியிலிருந்து தொடங்கி நிலமட்டம் வரை நீட்சியடைந்த, கூடிய வேகத்துடன் சுழல்கின்ற வளிநிரலே சுழல் காற்று (Tornado) என அழைக்கப்படுகின்றது.

சுழல் காற்றொன்றின் விட்டம் பல மீட்டர்கள் முதல் 2 கிலோமீற்றர்கள் வரையாக இருக்கக்கூடும். சராசரி சுழல் காற்றின் சுழற்சி வேகம் மணிக்கு 120 கிலோமீற்றர் முதல் 500 கிலோ மீற்றர்வரை வேறுபடலாம். இவ்வாறு சுழல்கின்ற வளி நிரலின் நடுப்பகுதியில் வளிமண்டல அமுக்கம் மிகக் குறைவாகக் காணப்படும். எனவே இவ்வகைச் சுழல் காற்று தரையிலுள்ள பொருட்களை உறிஞ்சி மேலே இழுத்தெடுக்கின்றது.


புவியின் வடவரைக் கோளத்தில் உருவாகும் சுழல் காற்றுக்கள் தம் தாழமுக்க மையத்தைச் சுற்றி இடஞ்சுழியாகச் சுழற்சியடைகின்றன. அதேவேளை, புவியின் தென்அரைக் கோளத்தில் உருவாகும் சுழல்காற்றுக்கள் வலஞ்சுழியாகச் சுழல்கின்றன. சுழல் காற்றொன்று இடம்பெயராமல் ஒரேயிடத்தில் சுழன்று வீசலாம். அல்லது வலிமையாகச் சுழற்சியடைகின்றவாறே முன்னோக்கி நகரலாம். இந்த நகர்வு வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் வரை இருக்கக்கூடும்.

சாதாரண புயல் காற்றைப் போலன்றி தான் நகரும் குறுகிய பாதை நெடுகே மட்டுமே சுழல் காற்று அழிவை ஏற்படுத்துகிறது. சுழல்காற்றின் விட்டத்துக்கு ஏற்பவே இவ்வழிவுப் பாதையின் அகலம் அமைந்திருக்கும். இரு புறத்திலும் உள்ள வீடுகள் எவ்வித பாதிப்பும் அடையாத நிலையில் நடுவிலுள்ள வீடு மாத்திரம் சுழல்காற்றினால் சிதைந்துபோன நிகழ்வுகள் சகஜமாக இடம்பெற்றுள்ளன

மிகத் தாழ்ந்த அமுக்கங்களில், ஒடுங்கிய நீராவியினால் ஆக்கப்பட்ட நிரலொன்று உருவாகும் சந்தர்ப்பங்களில் சுழல்காற்று கண்ணுக்குப் புலப்படக் கூடியதாக இருக்கும். மழை மேகம் பூமியைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் அவ்வேளைகளில் தோற்றமளிக்கும். சுழல்காற்று பெருமளவு புழுதியைக் கிளப்பிச் செல்லும் சந்தர்ப்பங்களிலும் கண்ணுக்குப் புலப்படக் கூடியதாக மாறும்.

முதிர்ந்த சுழல் காற்றொன்று ஒரு தூண் போல நேராகவோ அல்லது சாய்வாகவோ காணப்படலாம். சிலவேளைகளில் முகில் முழுவதும் பூமியைத் தொட்டுக் கொண்டிருப்பது போல அது பரந்ததாகத் தோன்றலாம். இன்னுஞ் சில சந்தர்ப்பங்களில் யானையின் அசைகின்ற தும்பிக்கை போல அது தென்படக்கூடும். வன்மையான சுழல் காற்றொன்றின் போது பிரதான சுழலைச் சுற்றிவரப் பல சிறு சுழல்கள் காணப்படும்.

உலகிலே வருடந் தோறும் அதிக எண்ணிக்கையான சுழல் காற்றுக்கள் தோன்றும் நாடு ஐக்கிய அமெரிக்காவாகும். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கின்றது. இவை தவிர சீனா, இந்தியா, ரஸ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, வங்காளதேசம் உட்படப் பல நாடுகள் சுழல் காற்றுத் தாக்குதலுக்கு உட்படுகின்றன

பூஜிற்றா அளவுத்திட்டம்

சுழல் காற்றுக்களின் வேகங்களை நேரடியாக அளப்பது சிரமமான காரியமாகும். அது ஆபத்தானதும்கூட  அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணி புரிந்த வளிமண்டலவியற் பேராசிரியரான டெட்சுயா ஃவுஜித்தா என்பவர் சுழல் காற்றுக்களை வகைப்படுத்துவதற்கான அளவுத்திட்டமொன்றை 1971ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். சுழல் காற்றினால் கட்டடங்களுக்கும் மனிதனால் நிர்மாணிக்கப்பட்ட ஏனைய அமைப்புகளுக்கும் ஏற்படும் சேதத்தை அடிப்படையாக வைத்தே இந்த பூஜிற்றா அளவுத்திட்டம் (F-Scale) அமைக்கப்பட்டுள்ளது

இந்த அளவுத்திட்டத்தின்படி F0, F1, F2, F3, F4, F5 என ஆறு வகைகளாகச் சுழல் காற்றுக்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றுள்

F0, F1 நலிவான சுழல்காற்றுக்கள்,

F2, F3 வலிமையானவை.

F4, F5 பயங்கரமானவை.

F5 வகை சுழல்காற்று வீடுகளை அத்திவாரத்தோடு பிடுங்கி எறியக்கூடியதாக இருக்கும்.


F4, F5 வகைச் சுழல்காற்றுக்கள் தாம் செல்லும் பாதை நெடுகே பேரழிவை ஏற்படுத்த வல்லவை.
இவற்றினால் வீடுகளும், பெருமரங்களும் அடியோடு பெயர்க்கப்பட்டு வீசப்படுகின்றன. பஸ்வண்டிகள், ரெயில் வண்டிகள் போன்ற பெரிய வாகனங்கள் கூட நிலத்திலிருந்து தூக்கி எறியப்படுகின்றன. வீட்டுக் கூரைகள் பல கிலோமீட்டர் துரத்துக்குத் தூக்கிச் செல்லப்படுகின்றன. இவ்வாறு தூக்கி எறியப்படும் பொருட்கள் காரணமாக மேலும் சேதங்கள் ஏற்படுகின்றன. வன்சுழல் காற்றினால் தூக்கி எறியப்படும் வேகம் காரணமாக மென்மையான பொருட்கள் கூட பேரழிவை ஏற்படுத்தலாம்.

சுழல்காற்றுக்கள் உருவாதல்

சுழல்காற்றுக்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது பற்றி இது வரை தெளிவாக அறியப்படவில்லை. இடி முகிலை நோக்கி மேலே எழும்பும் வெப்பமான காற்றுக்கும், முகிலிலிருந்து கீழ்நோக்கி இறங்கும் குளிரான காற்றுக்கும் இடையில் ஏற்படும் சிக்கலான இடைத்தாக்கங்களே சுழல்காற்றுக்குக் காரணமாக அமைவதாக வானிலையியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

கடலின் மீது சுழல்காற்று ஏற்படும்போது கடல் நீர் முகிலை நோக்கித் தாரையாக உறிஞ்சி இழுக்கப்படும். இத்தோற்றப்பாடு Water sprout என அழைக்கப்படுகின்றது. கடல்நீரோடு மீன்கள் போன்ற கடல் வாழ் உயிரினங்களும் இவ்வாறு முகிலை நோக்கிக் கொண்டு செல்லப்படுவதுண்டு. சில இடங்களில் மழை பெய்யும் போது வானிலிருந்து மீன்கள் விழுவதற்கு இவ்வகைச் சுழல்காற்றே காரணம் என நம்பப்படுகின்றது.

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.