திங்கள், ஆகஸ்ட் 29, 2011

முத்தான மூன்று

தொடர்பதிவு எழுத அழைத்த 'வார்த்தைச் சித்திரங்கள் - http://vaarthaichithirangal.blogspot.com/' 
திருமதி ஜிஜி அவர்களுக்கும்

திருமதி ராஜி
'கற்றலும்  கேட்டலும் - http://suharaji.blogspot.com/' 
திருமதி ராஜி அவர்களுக்கும் மிக்க நன்றி.  

ஸ்ரீ வில்லிபுத்தூர் மண் அவர்களை ஈர்க்கிறது.  திருமதி ஜிஜி அவர்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர்காரர்.  திருமதி ராஜி அவர்கள் குழந்தையாக இருக்கும்போது ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்திருக்கிறார்.  நான் படித்த நீராவி பள்ளியிலே அவரும் படித்திருக்கிறார்.  (நீராழி மண்டபத்தில் அமைந்துள்ளது - சிவகுருநாதன் ஆரம்பப்பள்ளி என்று பெயர் - ஆனால் நீராவி பள்ளி என்று தான் அழைக்கப்படுகிறது) அவர்கள் கேட்டதற்கு இணங்க  நானும் எனது முதல் தொடர்பதிவான 'முத்தான மூன்று' என்று எழுதுகிறேன்.
  1. உங்களைப் பற்றி:
  • நான் எங்கள் வீட்டில் மூன்றாவது பையன்.
  • எனக்கு மகன்கள் மூன்று -
    திரு விஜயவேல்
    திரு சரவணன்
    திரு பிரகாஷ்.
  • நான் படித்த பள்ளிகள் மூன்று:
    சிவகுருநாத ஆரம்பப் பள்ளி, ஸ்ரீ வில்லிபுத்தூர்.
    திரு வி க நடுநிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் (இப்போது மேல் நிலைப்பள்ளி)
    குருஞான சம்பந்தர் உயர்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் (இப்போது மேல் நிலைப்பள்ளி)
    2 .    நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்.
    • பேருந்து , ரயில் பயணங்களின் போது    அன்றைய நிலவரங்கள், நாட்டு நடப்பு, பயணங்களில் மாணவ மாணவிகளின் நடவடிக்கைகள், பயணங்களில் அவர்களது துயரங்கள், அதையும் மீறி அவர்கள் நிறைய படிப்பது.  ஆகியவற்றை உணர்ந்து கொள்வது.
    • நிறைய படிப்பது
    • மழலைகள், மாணவ, மாணவிகள், இளைஞர்களுடன் உரையாடுவது. 

    3.       நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்.          
    •   நடைபாதை ஆக்கிரமிப்பு, சாலையில் ஆக்கிரமிப்பு, பிளக்ஸ் போர்டு கட்டி சாலையின் பார்வையை மறைத்தல்.
    •  திருவிழா போன்ற சமயங்களில் பெரிய ஸ்பீக்கர் கட்டி அலற விட்டு எல்லோரையும் சிரமப்படுத்துவது. 
    • சாக்கடையில் பாலிதீன், மற்ற கழிவுகளை போட்டு தெருவை நாரடிப்பது.  மக்களுக்கு பொறுப்புணர்ச்சி காணாது. மக்கள் தண்டனைக்குத்தான் பயப்படுவார்கள்.

    4.     பயப்படும் மூன்று விஷயங்கள்.
    • புறம் பேசுதல்.
    •  வதந்தியைக் கிளப்புதல்
    • கூட்டம்.

    5.      உங்களுக்குப்  புரியாத மூன்று விஷயங்கள்.
    •  திரும்ப திரும்ப பண இரட்டிப்பு போன்ற விஷயங்கள் காவல் துறையிலிருந்து விளம்பரம் செய்கிறார்கள்.  அதையும் மீறி ஏமாந்து பணம் கட்டி திரும்பவும் காவல்துறையில் வந்து புகார் செய்யும் மக்கள்.
    • வேலை வாங்க என்று பணம் கொடுத்து ஏமாந்து பிறகு அதை தொலைக்காட்சியில் வந்து புகார் செய்து அதை அவர்கள் உரிமை போல் போஸ் கொடுக்கும் மக்கள்.
    • எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை பழி போடும் மக்கள் - நமது கடமையை செய்ய வேண்டும்.
       

     6.      உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.
    • கணினி
    • நிறைய புத்தகங்கள்
    • தொலைபேசி
       

    7. உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.
    •  நடிகர் மணிவண்ணனின் தரமான நகைச்சுவை நடிப்பு
    • அரசியல்வாதிகளின் பேச்சு (அவர்களது ஒரு வார பேச்சுக்களை தொடர்ந்து படித்தால் அவர்கள் தடம்புரள்வது நல்ல நகைச்சுவை)

    8.  தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்:
    •  கணினி கற்றுக் கொள்ள முயற்சி
    • புத்தகம் படித்தல் (a lot of home work pending)
    • ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதியில் உள்ள முக்கிய இடங்களைப் பற்றி எழுத விபரங்கள் சேகரித்தல், இடங்களுக்கு செல்லுதல்.

    9.   வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்.
    •  நமது தமிழ்நாட்டில் உள்ள இடங்களை சுற்றிப் பார்க்க நமது ஆயுள் காணாது - கும்பகோணத்தில் எனது மனைவியுடன் ஒரு மாதம் தங்கி தஞ்சாவூர் பக்கம் உள்ள கோவில்களை நன்கு ஆற அமர்ந்து சுற்றிப் பார்க்க வேண்டும்.
    • முடியும் வரை படித்துக் கொண்டே இருத்தல்.
    • முடியும் வரை மற்றவர்களுக்கு உதவியாக இருத்தல்.

    10.   உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்:
    •  தொடர்ந்து பதிவு எழுதுதல்
    • நிறைய படிக்க வேண்டும்.
    • முடியும் வரை மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

    11. கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:
    • துயரமான செய்திகள்.
    • புறம் பேசுதல்.
    • வதந்தி
     12. கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்:
    • கணினியை திருத்தமாக கற்றுக் கொள்ள வேண்டும்.
    • போடோஷாப் நன்கு கற்று எனது பதிவிற்கும் நல்ல படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
    • மலையாள மொழி கற்று அதில் உள்ள நல்ல இலக்கியங்களை படிக்க வேண்டும்
    13. பிடித்த மூன்று உணவு வகைகள்:
    • எனது மனைவி தயாரிக்கும் அருமையான எளிமையான சப்பாத்தி
    • எனது அம்மா வைத்த கடலைப் பருப்புக்குழம்பு
    • எனது அப்பா தயிர் சேர்த்து பிசைந்து கொடுத்த பழைய சோறு

    14. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்:
           இல்லை.

     15. பிடித்த மூன்று படங்கள்:
    • நெஞ்சில் ஓர் ஆலயம்
    • வேதம் புதிது
    • பிரிவோம் சந்திப்போம்
    16.    இது இல்லாமல் வாழ முடியாது என்று சொல்லும்படியான மூன்று  
             விஷயங்கள்:
    • அடிப்படை விஷயங்களான - உணவு, உடை, இருப்பிடம் - முக்கியமாக போதுமான பண வசதி.
    • வெளி உலக தொடர்பு
    • நல்ல நண்பர்கள்
    17.   தொடர்ந்து எழுத அழைக்கப் போகும் மூன்று நபர்கள்:
    நான் கொஞ்சம் நிறைய பேசப் போகிறேன்.  எனக்கு பதிவுலகமும், முகநூல் உலகமும் கொடுத்த கொடை நிறைய.  நல்ல நண்பர்கள், மனதுக்கு அமைதி & சந்தோசம், நல்ல உடல் நலம் (கடந்த நவம்பரில் இதய நோய்க்கு உட்பட்டு விடுமுறையைக் கழிக்க பதிவுலகத்தில் நுழைந்தேன்), நிறைய மகள்கள், நல்ல மகன், எங்கெங்கிருந்தோ தொடர்பு கொள்ளும் நல்ல நண்பர்கள், நல்ல உள்ளங்கள்.  

    முகநூலில் திரு சபரிசங்கர் என்று ஒரு( மாணவர் ) நண்பர் அறிமுகமானார்.  அன்றே நல்ல மார்க் எடுத்த எளிய  மாணவ மாணவிகள் இருந்தால் உதவுவதாக அறிவுப்பு செய்து எனக்கு கடிதம் அனுப்பினார்.  எங்களது வீட்டுப் பக்கத்தில் விவேகா என்ற மாணவி 1170/1200 மார்க் எடுத்திருந்தார்.  அவர்களது பெற்றோர் தையல் தொழில் செய்கிறார்கள்.  நான் அந்த நண்பருக்கு விபரத்தை தெரிவித்தேன்.  அவர் திரு குமார் என்ற நண்பரை தொடர்பு கொள்ள சொன்னார்.  திரு குமார் - நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் உடற்பயிற்சி இயக்குனராக வேலை செய்கிறார்.  நான் திரு குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.  விபரங்களை அனுப்பி வைக்க சொன்னார்.  அனுப்பி வைத்தேன்.  மறு நாள் காலை எங்கள் வீட்டிற்கு திரு வீரமணி என்று அவருடன் பணி புரியும் நண்பரை அனுப்பி வைத்தார்.  (அப்போது அவருக்கு அந்த கடிதம் கிடைக்கவில்லை).  திரு வீரமணியை மாணவி விவேகா வீட்டிற்கு அழைத்துச் சென்று மாணவியையும் அவரது பெற்றோரையும் சந்தித்து பேச வைத்தோம்.  அவர்களது வீட்டு நிலைமை, வருமானம் முதலியவைகளை விசாரித்து திரு குமாருடன் அவரது பெற்றோரையும் பேச வைத்தார்.  அந்த மாணவி கல்லூரியில் சேர்ந்து வந்தவுடன் ரசீதுகள், மற்ற ஆவணங்கள், புகைப்படம் வாங்கி அனுப்ப சொன்னார்.  அந்த மாணவி குரோம்பேட்டை MIT கல்லூரியில் பொறியியல் 28.7.2011 அன்று சேர்ந்து விட்டார்.  கிட்டத்தட்ட முப்பத்தி ஆராயிரம் ரூபாய்  வரை பணம் கட்டியிருந்தார்.  நான் ரசீதுகளையும், மற்ற ஆவணங்களையும் அனுப்பி வைத்தேன்.  அந்த மாணவி கல்லூரியில் சேர்ந்து விட்டார்.  திரு குமார் அந்த மாணவி ஸ்ரீ வில்லிபுத்தூர் வரும்போது சொல்லச் சொன்னார்.  அந்த மாணவி இங்கு 14.8.2011 அன்று சுதந்திர தின விடுமுறைக்காக வந்திருந்தார்.  திரு குமாரை தொடர்பு கொண்டோம்.  திரு குமார் 15.8.2011 அன்று காலை எட்டு மணிக்குள் அவர்கள் கல்லூரியில் இருக்குமாறு - அந்த மாணவியை அவரது பெற்றோருடன் எங்களையும் அழைத்தார்.  அந்த மாணவி பெற்றோருடன் அந்த கல்லூரிக்கு சென்றார்.  விழாவில் அவர்களுக்கு இருபதாயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார்கள்.  விழா முடிந்தவுடன் திரு குமார் எங்களுக்கு தொலைபேசியில் பணம் வழங்கிய விபரத்தையும், அடுத்து நடிகர் திரு சிவகுமார் வரும்போது விழாவில் இன்னும் ஒரு நல்ல அளவு தொகை வழங்குவதாகவும், அந்த விழாவிற்கு நாங்கள் கட்டாயம் வரவேண்டும் என்றும் சொன்னார்.  எங்களது மகிழ்ச்சிக்கு அளவில்லை.  நாங்கள் எங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும்.  

    இந்த நல்ல உள்ளங்களை இது வரை பார்க்கவில்லை.  எல்லாம் தொலைபேசி, கடிதங்கள் தான்.  இவ்வளவுக்கும் காரணமான - பதிவுலத்திற்கும், முகநூல் உலகத்துக்கும் - மனப்பூர்வ வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.  திரு சபரிசங்கருக்கும், திரு குமாருக்கும் அவர்களது நல்ல அணியினருக்கும் அவரது கல்லூரிக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.


    திரு சபரி சங்கரின் முகநூல் இணைப்பு கீழே கொடுத்திருக்கிறேன். அவரது இயக்கத்தின் பெயர்:  கனவுக்கு  செயல் கொடுப்போம்.
    Sabari Shankar (Kanavuku Seyal Koduppom)
    http://www.facebook.com/sabari.ஷங்கர்
    திரு குமார் அவர்களின் இயக்கத்தின் பெயர் :
    விருட்ச ஜன சகாயதா சங்கம்
    அவரது இயக்கத்தைப் பற்றி அவரை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்.

    நான் அனைவரையும் வேண்டுகிறேன் - நீங்கள் உங்களுக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு முடிந்த அளவு உதவுங்கள்.  வாய்ப்பு இல்லாவிடில் இந்த மாதிரி நல்ல அமைப்புக்களுக்கு முடிந்த அளவு முடிந்த சமயம் உதவுங்கள்.  அவர்கள் தீர விசாரித்து சரியான நபர்களுக்கு தான் உதவுகிறார்கள்.  அவர்களது தொலைபேசி எண்ணும் கொடுத்திருக்கிறேன்.

    திரு குமார் , மதுரை - 94879 48887
    திரு சபரி சங்கர், மதுரை -96777 35704

    18. தொடர்ந்து எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்:


    எனது பதிவுலகில் கிடைத்த அருமைப்பையன் திரு ராம்குமார்
    http://www.facebook.com/profile.php?id=1147750586&sk=info
    அவரது வலைத்தளத்தின் பெயர் சிவகாசிக்காரன்
    http://www.sivakaasikaaran.blogspot.com/



    அடுத்து வலைப்பதிவு தந்த அருமை மகள் திருமதி ஜோசபின்
    http://www.facebook.com/babajosephine?sk=info
    அவரது வலைத்தளத்தின் பெயர் : ஜோசபின் கதைக்கிறேன்.
    அவரது வலைத்தள முகவரி
    http://josephinetalks.blogspot.com/

    அடுத்து மதுரை திருமதி சாகம்பரி கல்லூரி பேராசிரியர்
    அவரது வலைத்தளத்தின் பெயர் : மகிழம்பூச்சரம்
    அவரது வலைத்தளத்தின் முகவரி
    http://mahizhampoosaram.blogspot.com
     
     இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவும், மற்றும் எங்களது பதிவு மேம்பாட்டிற்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றியும், வணக்கமும்.

    இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.  உங்கள் பெயரை Google Connect Widget இல் பதிந்து கொள்ளுங்கள்.  உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு இடும்போது உங்களது மின்னஞ்சல் பெட்டிக்கு வந்து விடும்.

    மிக்க நன்றி.


    செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

    கெத்தேசால் மலைக்கிராமத்தில் ஒரு முகாம்..!

    கல்வி பற்றிய கட்டுரை - 1



    திருமதி எஸ்.மோகனா அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இரண்டு  ஆண்டுகளுக்கு  மாநில துணைத் தலைவராக  'திருநெல்வேலியில் நடைபெற்ற மாநாட்டில்" தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறோம்.



    திருமதி எஸ்.மோகனா அவர்களது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினால் 'கெத்தேசால்' என்னும் மலைப்பகுதியில் நடைபெற்ற மலைவாழ் மக்களுக்கு கல்வி சம்பந்தமான நடத்திய முகாம் நடத்தினார்கள்.  கெத்தேசால் கர்நாடக மலைப்பகுதியில் கடல்மட்டத்திலிருந்து 1224 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.  அந்த முகாமைப் பற்றிய கட்டுரையை அவர்களது முகநூலில் 19.5.2001 நாள் வெளியிட்டிருந்தார்கள்.

    அந்தக் கட்டுரையை 'கல்வி பற்றிய கட்டுரை-1'  என்ற தலைப்பில் மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்.  இந்த கட்டுரையை வெளியிட அனுமதி கொடுத்த திருமதி எஸ்.மோகனா அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம்
    .


    கெத்தேசால் மலைக்கிராமத்தில் ஒரு முகாம்..!

    by Mohana Somasundram on Thursday, May 19, 2011 at 10:50pm
     வாசிப்பு முகாமில், பேரா. ராஜூவுடன் ஒரு குழு..கலந்துரையாடல்

     வாசிப்பு முகாமின் மதிய உணவருந்தும் நேரம்

    கெத்தேசால் செல்லும் மலைப் பாதைவழியே


    மலையிலிருந்து கீழ் நோக்கி

    மே 16 ம் நாள் மாலை நிலா வலம்


    முகாமின் முகப்பில்,ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்க பேனர், அருகில் புதுச்சேரி ஸ்ரீதர், மோகனா + சேலம் சோழகரிகாலன்.

        
    வணக்கம் நண்பர்களே..! தமிழ் நாடு அறிவியல் இயக்கம் பல்வேறு தளங்களில், பல்வேறு பணிகளைச் செய்துவருகிறது. அதில் ஒன்று புத்தக வாசிப்பு இயக்கம். என்னடா இது.. புத்தகத்தை தனியாகத்தான் படிப்பார்கள்.. இதில் இயக்கம் என்ன வேண்டிக்கிடக்கிறது என்கிறீர்களா? ஆம் நண்பர்களே..! புத்தகம் சுமந்து கிராமத்தின் தெருக்களில் ஊர்வலமாய், மாட்டு வண்டியில், மிதிவண்டியில் என  வருவதை, அவற்றை தெருவின் மந்தைகளில் அனைவரும் இணைந்து கூட்டாக அமர்ந்து  படிப்பதை தமிழ் நாடு அறிவியல் இயக்கம், அறிவொளி காலத்திலிருந்து ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதிதான், கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கெத்தேசால் என்னுமிடத்தில் நடைபெற்ற உறைவிட புத்தக வாசிப்பு முகாம்

    கெத்தேசால் உயரம் 1224 அடி. அட்ச ரேகை:.11.7;தீர்க்க ரேகை:077
    .
    கெத்தேசால் காட்டுப் பகுதி

      நீண்ட, அமைதியான, அடர்ந்த காடு 

    கெத்தேசால் என்ற அழகான பசுமைசூழ் மலைக்கிராமம் ,இது  ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி.கடல் மட்டத்திலிருந்து1224 அடி உயரத்தில் இருக்கிறது. அடர்ந்த காடு. கெத்தேசால் சத்தியமங்கலத்திலிருந்து 27 கொண்டை ஊசி வளைவுகளைத்தாண்டி, 44 கி.மீ தொலைவில் உள்ளது.
     கெத்தேசால் கிராமத்துக்கு, கொள்ளேகால் செல்லும் சாலையிலிருந்து போகும் மண்பாதை. அரசு அம்மக்களுக்கு ஒரு தார் சாலை கூட போடவில்லை. அவர்கள் ஓட்டும் போடவில்லை
    . 
    இங்கு சோளகர்கள் என்ற பழங்குடியினர் வாழ்கின்றனர்.இங்குதான் சந்தன வீரப்பன் இந்த கிராம மக்கள்மீது கோபம் கொண்டு 7 பேரை வெட்டிப்போட்டானாம். அதன்பின்னர்தான் அரசு இந்தக் கிராம மக்களிடம், கருணை கொண்டு,கெத்தேசால் பள்ளி வளாகத்தின், 100 ஆண்டு ஓர் அத்தி மரம்  உண்டு உறைவிடப் பள்ளியைக் கட்டி,அங்கு வாழும் மக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தந்து ஒரு நிரந்தர ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலத்தை அவர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தலாம், உழுது பயிரிடலாம். ஆனால் விற்பனை செய்ய உரிமை இல்லை. இதுதான் வனப்பகுதி செட்டில்மென்ட். 
          காட்டு விவசாயம். நீர் பாய்ச்சுவதில்லை.
      சோளகர் குடும்ப மளிகை கடைக்காரர், மங்கிலியுடன்.

    சோளகர் வீடு

    கெத்தேசால், உண்டு உறைவிட பழங்குடியினர் பள்ளி

    விவ்சாயம் பார்த்து சோளகர் குடிசை

         கெத்தேசால் கிராமத்தில் 120 குடும்பங்கள் வாழ்கின்றன. எல்லோருக்கும் காட்டுப் பகுதி விவசாயம்தான் தொழில். அந்த ஊரில் 8 ம் வகுப்புவரைதான் படிப்பு. மேலே படிக்கவேண்டுமானால், 40 கி.மீ கீழே இறங்கி சத்தியமங்கலம்    போக வேண்டும். இந்த மக்கள் மழையை நம்பித்தான் விவசாயம் செய்கின்றனர்.இயற்கைவிவசாயம்தான்.

    சோளகர் குடும்பத்தின் குளியலறை.. சேலை மறைப்புடன்.. குடத்துடன்.. 

    நீங்கள் 10 பேர் சேர்ந்து போய்விட்டால், மக்கள் பயந்து போய் ஓடிவிடுகின்றனர். அவ்வளவு மிரண்டு போயிருக்கின்றனர்; பாதிக்கப்பட்டிருக்கின்றனர்  நமது பாதுகாப்பு காவல் துறையினரால்..! அவர்களின் காயத்தின் வலி இன்னும் குறையவில்லை. அம்மக்களின் மேல் பாய்ந்த பாலியல் ரணமும், அதன் தழும்பும் இன்னும் ஆறாத தடங்களாய் இருக்கின்றன. அச்சத்தின் விளிம்பிலேயே வாழ்கின்றனர். இளம்பெண்களை அலாக்காக தூக்கிப் போய்விடுவார்களாம். அதனால், எங்களைப் பார்த்தும் பயந்துபோய் கதவைத் சாத்தினர். இவர்களுக்கு பெரிய நோய் எதுவும் வந்ததும் கிடையாது; பெரிய மருத்துவ மனைக்குப் போய் மருத்துவம் பார்த்ததும் இல்லை. எல்லாமே இயற்கை வைத்தியம்தான்.பெரிதான ஆசைகள், கனவுகள், கற்பனைகள் இல்லை. ரொம்பவும் வெள்ளந்தியான மக்கள். 

    கெத்தேசால் ஊரில், குடிநீருக்காக..சுனைநீர் எடுக்கச் செல்லும் தாழ்வான, ஒளி குன்றிய சுனை உள்ள இடத்திற்கு செல்லும் வழி 

    அரசின் நீர்க்குழாய்கள் இல்லை. சுனைநீரும் லாரி கொண்டுவரும் நீரும்தான். அரசு வண்ணத்தொலைக் காட்ட்சி இருக்கிறது.

        தரையில் அமர்ந்து,கால் நீட்டி, விவாதம் 

    விவாத இடைவேளையின்போது உரையாடல். பழனி சத்தீஸ்வரி, பேரா.மோகனா, பேரா. விஜய்குமார், பாறையின் மேல் உட்கார்ந்து இருக்கும் பழையவாசனைக்காரர், சென்னை சிலம்பரசன், தரையில் சேலம் வெங்கடேசன்(கடைசியில் இருப்பவர்)

     மரத்தடியில் புத்தக வாசிப்பும், விவாதமும்
     அவரவர் விருப்பம்போல் அமர்ந்து வாசித்து, விவாதம்

     பேரா. விஜயகுமார், பேரா. ராஜூ &தோழர் சுந்தர் 

    இந்த கிராமத்தில்தான், பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கித்தான், 3 நாட்கள் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில புத்தக வாசிப்பு முகாம், ஈரோடு மாவட்டம் சார்பில் நடத்தப்பட்டது. ரொம்ப முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? இங்கு நீங்கள் அலைபேசி மூலம் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது நண்பரே..! அப்பாடா குடும்ப பந்த்தத்திளிருந்து இரண்டு நாள் விடுதலையா? .குழந்தைகளுக்கான புத்தகங்களான, முதல் ஆசிரியர், வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் (இயற்கையை நேசித்தல் தொடர்பாக..அறிதல் தாக்கமாக),எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கிட்டீங்க(ஷாஜகான்) 

    எழுத்தாளாரும், நகைச்சுவை பேச்சாளரும், கவிஞருமான ஷாஜகான்
      
    பள்ளிக் கூட தேர்தல், டோட்டோசாண்(ஜன்னலில் ஒரு சிறுமி), ஓய்ந்திருக்கலாகாது பாப்பா.. போன்ற புத்தகங்கள் கூட்டாக வாசிக்கப்பட்டு விவாதம் செய்யப்பட்டன. இதில் குழந்தைகளை நேசித்தல், அவர்களைப் புரிந்து கொள்ளுதல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தல், குழந்தை மலர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுதல், அவர்களின் குறும்புகளை ரசித்தல், அதன் பின்னணியிலுள்ள அவர்களின் தேடல், அறிவு போனவற்றை தெரிந்து நடப்பதற்காக ஆசிரியர்களுக்கு உணர்த்த வேண்டிதான் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
         முகமது அலி வகுப்பு எடுக்க, பார்வையாளர்கள்

     பேரா. முருகேசன்,பார்வைத்திறன் இழந்தவர். 

    பேரா.செல்வம், பார்வைத்திறன் இழந்தவர்

     சிறப்புரை;முகமது அலி.. வகுப்பறையில் பங்கேற்பாளர்கள்.


     மே 17, காலை 6.30 மணிக்கு, எங்களுக்கு வரடீ தயாரித்து கொடுத்த சமையல் கலைஞர், குப்புசாமி நடுவில்.. அவரின் இரு புறமும்,தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் முனைவர்.மணி(கோடு போட்ட பனியன்), இடது கோடி, பாரதி புத்தகாலய பொறுப்பாளர் நாகராஜ்..கையில் தேநீர் கோப்பையுடன்

     வாசிப்பு முகாமில்  74 மனித  நேயர்கள் பங்கேற்றனர். இந்த முகாமில் ஓர் அற்புதமான ஒரு முரண்தொடை இருந்தது.! என்ன தெரியுமா?  வாசிப்பு முகாமின் பங்கேற்பாளர்களில், 6 பேர் மாற்றுத்திறனாளிகள்  /பார்வைத் திறனற்றவர்கள்.பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள். அவர்களில் இருவர் கல்லூரிப் பேராசிரியர், ஒருவர் பள்ளித் தலைமை ஆசிரியர்.மூவர் ஆசிரியர்கள், இவர்கள் அனைவரும் மாணவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களில் ஒருவரான ஆத்தூர் அரசுக் கல்லூரிப் பேராசிரியர் முருகேசனைப் மாணவர்கள் பக்கம், பக்கமாய் பாராட்டி குவித்திருக்கின்றனர். அவர் பிறந்ததும் அவரைக் கொல்ல குடும்பத்தினர் திட்டமிட்டனராம். அவரது தந்தையும், தாயும் அந்த யோசனைக்கு ஒத்துக் கொள்ளாமல், அவரைக் காப்பாற்றி வளர்த்தனராம். அவரின் தாய், முருகேசனை அணுவளவும் பிரியமாட்டாராம். காரணம்  , கொஞ்சம் பிரிந்தாலும், குடும்பம் அவரைப் போட்டுத் தள்ள திட்டமிட்டு இருந்ததாம்.அவரது விளையாட்டுத்தோழர்கள் கல்லும், குச்சியும்தான். இவைகளுடன்தான் இவர் பேசுவாராம். 9 வயதில்தான் பள்ளி சென்றார் ஒரு பெரியவர் உதவியுடன். மற்ற ஆசிரியர்கள் செய்யாத அளவு மாணவர்களிடம், அறிவுபூர்வமாக  பல உதவிகள் செய்வாராம். முகேசனின் துணைவியும் பார்வை இழந்தவரே..! அவர்களின் பெண்மகவு.. அழகான கயல் விழியுடன் உருட்டி உருட்டி விழித்து பெற்றோரை தனது கொஞ்சு மொழியால் அன்பால் கட்டிப் போடுகிறது..! 
               எழுத்தாளர் ச. தமிழ்செல்வன்

      பேரா. விஜயகுமார், பேரா.ராஜு, பாரதி புத்தகாலய நாகராஜ், பேரா.மோகனா

     புதிய ஆசிரியன்

     எழுத்தாளர். கமலாலயன்

     அமர்ந்திருப்பது முகமதுஅ லி. பேசுவது முனவர்,பேரா. மணி

     முகாமுக்கு பாரதி புத்தகாலயம் நாகராஜ், எழுத்தாளர், பேச்சாளருமான கமலாயன்,ஷாஜகான் & ச. தமிழ் செல்வன்,இயற்கையியளாளர் முகமது அலி,கல்வியாளர்கள் பேரா. ராஜு, விஜயகுமார், தமிழ் நாடு அறிவியல் இயக்க செயலாளர் பேரா. மணி(ஒருங்கிணைப்பு) மற்றும் மோகனா கலந்துகொண்டனர்.

     
    சந்தோஷக் களிப்பில் சூர்யா..! ஒருங்கிணைப்பாளர் மணியின் மகவு. இவர் குடும்பத்துடன் வந்திருந்தார். மூன்று நாள் வீட்டில் சாப்பாட்டுக் காசு மிச்சம்.
    இதில் குழந்தைகள் 8 பேரும் இருந்தனர். குழந்தைகளுக்காக செய்யப்பட்ட அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா தந்திரமா, போன்றவை அவர்களை களிப்பில் ஆழ்த்தின.காலை வானில் தெரிந்த செவ்வாய்,புதன், வியாழன், வெள்ளி கோள்களையும், மாலையில்  சனி கோளையும் பங்கேற்பாளர்களுக்கு காண்பித்தோம். அது மட்டுமல்ல..!

     
    கெத்தேசாலின் விடிகாலை நேரம். அனைவரும் இருகண் நோக்கி மூலமும், தொலைநோக்கி மூலமும்,ட்தொடுவானின் அருகே பளிச் சென தெரியும், வெள்ளிக் கோளையும், கொஞ்சம் உயரே வெள்ளையாய் தெரியும் வியாழனையும், வெள்ளிக்கு கீழே தெரியும் புதனையும், வெள்ளி வியாழனுக்கு இடையே தெரிந்த செவ்வாயையும் பார்த்துப் பரவசித்தோம்.கிழக்கு வானில் தெரியும் வெள்ளி கோள் 

    அது மின்னொளி அதிகம் இல்லாத கிராமமாகையால், நமது சூரிய குடும்பம் வசிக்கும்/இருக்கும் பால்வழி மண்டலத்தையும் பார்த்து மகிழ்ந்தோம். இது ஓர் அரிதான நிகழ்வே..!

    தரையில் மேடு பள்ளமான இடத்திலேயே உணவு பரிமாறல்

    இந்த பதிவை கணினியில் ஏற்ற, இந்த பதிவு மேம்பாட்டிற்காக ஆலோசனைகள் சொல்லும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி 


    இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை - நிறை குறை - பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  எங்களை சீர்திருத்திக் கொள்ள உதவும்.  உங்களது பெயரை Followers  Widget இல் பதிந்து கொள்ளுங்கள்.  தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்கள்.

    உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் அடுத்தடுத்து பதிவு போடும்போது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கே வந்து விடும்.

    மிக்க நன்றி.

    செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

    குழந்தைபொம்மை கட்டமைப்பில் நச்சுப் பொருள்..?

    அறிவியல் கட்டுரைகள் 
    பாகம்- 1

    திருமதி எஸ்.மோகனா அவர்களின் வானியல் கட்டுரைகள் இரண்டு வெளியிட்டோம்.  நாங்கள்  இது வரை எழுதிய பதிவுகளில் அவர்களது இரண்டாவது கட்டுரைக்கு தான் அதிக எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் வந்தன என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    அவர்கள் வானியல் மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் நிறைய எழுதியிருக்கிறார்கள்.  குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் பொம்மைகளில்  உள்ள ரசாயனப் பொருட்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அந்த கட்டுரையை 'அறிவியல் - 1' என்ற தலைப்பில் வெளியிடுகிறோம். இந்த கட்டுரை அவர்கள் முகநூலில் அவர்களது பக்கத்தில் 7.10.2010 அன்று வெளியிட்ட கட்டுரை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  இந்த கட்டுரையை வெளியிட அனுமதி கொடுத்த திருமதி எஸ்.மோகனா அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


    குழந்தைபொம்மை கட்டமைப்பில் நச்சுப் பொருள்..?

    நம் குழந்தைகளுக்கு நாம் சந்தோஷமாய் பொம்மைகளை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறோம். ஆனால் அதிலுள்ள வேதிப் பொருள்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்பவை என்று நமக்குத் தெரிவதில்லை. நம் அரசும் அதனைப் பற்றி கவலையோ, அக்கறையோ கொள்வதில்லை.அதற்கான எந்த கொள்கை முடிவும் கிடையாது. அவரவர்  பெட்டி  நிரம்பினால் போதும் என்பதே அவர்களின் கொள்கை.மக்களின் உயிர் பற்றிய எண்ணம் என்பது கிஞ்சித்தும் கிடையாது. 


    குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் பொம்மைகள், நாம் பயன் படுத்தும் நெகிழிகளில்,அவை வளையும் படியும், கொஞ்சம் ஒளி ஊடுருவும்படியும் இருப்பதற்காக சில வேதிப் பொருள்கள் கலக்கப் படுகின்றன.

    அவைகளில் முக்கியமானவை  தாலேட் (Pthalate) மற்றும் பிஸ்பினால் A ( BIsPhenol A). இவைகள் நம் உடலுக்கு முக்கியமாக பிஞ்சுகளின் பஞ்சு மேனிக்கு தீங்கு விளைவிப்பவை யாகும். நம் குட்டிகள் பல் முளைக்கும் பருவத்தில் அவைகள் கடிப்பதற்காக சில நெகிழி பொம்மைகளைநாம் அன்பை முக்கி,  வாங்கி கொடுக்கிறோம்.அவை நம்  ஆசை செல்வங்களுக்கு தரும் துன்பத்தை அறியாமலேயே. ! அதிலுள்ள வேதிப் பொருள்கள் குழந்தைகளின்  வளர்ச்சியைகுறைக்கின்றன: நரம்பு மண்டலத்தில் சில சரி செய்ய முடியாத பிரச்சனைகளை உருவாக்கு கின்றன; அத்துடன் சில புற்றுநோய் காரணிகளையும் தானமாகத் தருகின்றன என ஆராய்ச்சி தகவல்கள் சொல்வதாக,அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இப்படிப்பட்ட்ட வேதிப் பொருள்கள் உள்ள முக்கியமாக பிஸ்பினால் A உள்ள குழந்தை பொம்மைகளை முதலில் 2007 லேயே தடை செய்தது கனடா அரசுதான். பின் ஐரோப்பிய யூனியன்  , பிரான்சு, அமெரிக்க அரசுகள் தடை செய்துள்ளன. இதைப் பற்றி நம் இந்திய அரசு மூச்சு கூட விடவில்லை.

      நம் இந்திய அரசுக்கு இப்போதுதான் இது பற்றிய ஞானோதயம் பிறந்துள்ளது. நம் அரசு  2009  நவம்பரில் 11 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி உள்ளது. இக்குழு  இந்திய மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப் பட்டு இந்தியாவில்  பயன் படுத்தப் படும்,குழந்தை பொம்மைகளில் உள்ள  நச்சுப் பொருட்களை முக்கியமாக, கன உலோகங்களை ஆராய்வதற்கான சோதனைகளை செய்யும். இந்த சோதனைகள் இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 2 ,800௦௦ கம்பெனிகளின் பொம்மைகளில்  ,( சாதாரண சின்ன கடையில் இருந்து, பெரிய சூப்பர் மார்கெட்டில் உள்ளது வரையிலான பொம்மைகளை )சோதனை செய்யும்.   இந்த தகவலை, தேசிய உணவு நிறுவனத்தின் துணை இயக்குனரான B.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த சோதனை 2010௦,அக்டோபர் முதல் துவங்கப்படும். இக்குழுவில் அகமதாபாத்தின்,தேசிய தொழில் நிறுவனம், ஹைதராபாத்தின் தேசிய உணவு நிறுவனம் மற்றும் டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் உள்ளனர்.

    பொம்மைகளை சோதனை செய்யும் குழு எவ்வாறு உருவாக்கப் பட்டது தெரியுமா? குழந்தை பொம்மைகளில் உள்ள நஞ்சு மற்றும் கன உலோகங்கள் பற்றியும், அதன் பிரச்சினை மற்றும் சிக்கல் பற்றியும் சில தன்னார்வல இயக்கங்கள் அரசு மாற்றும் நீதி மன்றத்திடம் புகார் செய்தன. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சோதனை செய்தது. அதன் விளைவாக ஓர் உத்தரவை மைய அரசுக்கு போட்டது. அந்த உத்தரவின் படியே பொம்மைகளில் உள்ள கன உலோகங்களை ஆராய்ந்து  அதனை  கட்டுப் படுத்த வேண்டும். இல்லையெனில் இந்த நச்சுப் பொருற்கள், பிஞ்சுகளின் வாய் வழியே சென்று, உடலின் பல பகுதிகளுக்கும் சென்றுவிடும். குழந்தைகளுக்கு இரத்த சோகையை உண்டாக்கும்;வளர்ச்சி பாதிக்கப்படும். உடலுக்குள் உள்ள உறுப்புகளை, குறிப்பாக நரம்பு மண்டலத்தில் , சரி செய்ய முடியாத சிதைவுகளை உண்டாக்கும் என அறியப்பட்டுள்ளது. பொம்மை சோதனை செய்யும் கருவி ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்  பட்டுள்ளது.இதன் விலை ஒரு கோடி ரூபாய் என திட்ட பொறுப்பாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்

    குறிப்பு: இது ஏதோ குழந்தைகள் பொம்மைகளில் மட்டும்தான் இருக்கிறது என எண்ண வேண்டாம். ஒளி ஊடுருவும் அனைத்து வகை நெகிழிகளிலும்  உள்ளது. முக்கியமாக, மருத்துவ மனைகளில் பயன்படுத்தப் படும், ஊசி போடும் குழாய்கள், குளுகோஸ் மற்றும் இரத்த குழாய் சிரைகள் மூலம் மருந்துகள் செலுத்தப்படும் அனைத்துவகையான பைகளிலும் பிஸ்பினால் A மற்றும் தாலேட் உள்ளது. 


    வேறு வழியே இல்லாமல்,நோயாளிகளின் உயிர் காக்கும் செயலுக்காகவும், இந்த ஒளி ஊடுருவும் தன்மைக்காகவும்  இதனை பயன்படுத்த வேண்டி உள்ளது. ஒரு முறை பயன் படுத்திய பின் இவற்றை தூர வீசி எறிய வேண்டியது அவசியமாகும். மேலும் கூடியவரை குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பாட்டில் கண்ணாடியில் இருப்பது நலம். நான் பார்த்தவரை  ராமகிருஷ்ணா போன்ற மருத்துவ மனைகளில் குளுகோஸ் கண்ணாடி பாட்டில் களிலேயே கொடுக்கப் படுகிறது. நீங்களும்  கூட மினரல்  தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பத்திரப் படுத்தி பயன்படுத்த வேண்டாம். நெகிழி பொருள்களில் ௧-௪ என்ற என போட்ட பொருள்கள் கொஞ்சம் பாதுகாப்பானவை என தெரிகிறது. 


    இந்த பதிவை கணினியில் ஏற்ற, இந்த பதிவு மேம்பாட்டிற்காக ஆலோசனைகள் சொல்லும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.



    இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை - நிறை குறை - பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  எங்களை சீர்திருத்திக் கொள்ள உதவும்.  உங்களது பெயரை Followers  Widget இல் பதிந்து கொள்ளுங்கள்.  தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்கள்.

    உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் அடுத்தடுத்து பதிவு போடும்போது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கே வந்து விடும்.

    மிக்க நன்றி.