வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்


ஸ்ரீஆண்டாள் கோவில் ஏழாம் நாள் திருவிழா:ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலைப் பற்றி நிறைய படித்திருப்பீர்கள், கேள்விப் பட்டிருப்பீர்கள்.  குறிப்பாக ஏழாம் நாள் திருவிழாவைப் பார்ப்போம். 
ஸ்ரீ வில்லிபுத்தூரில் கிருஷ்ணன்கோவில் தெரு இருப்பது இங்குள்ளவர்களுக்கு தெரியும்.  அங்கு ஒரு அருமையான பெரிய கிருஷ்ணன்கோவில் இருப்பது நிறைய பேருக்கு தெரியாது.  ரயில்வே நிலையம் செல்லும் வழியில் தாலுகா அலுவலகம் இருக்கிறது.  அதில் அத்திகுளம்  செல்லும் பாதை பிரிகிறது.  அந்த பாதையில் தாலுகா அலுவலகத்திற்கு பின் புறம் பெரிய கிருஷ்ணன்கோவில் இருக்கிறது.  அது வருடம் முழுவதும் திறந்திருக்குமா என தெரியவில்லை.  இந்த ஏழாம் நாள் திருவிழா (31.7.2011) அங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 


ஸ்ரீ ஆண்டாள் வீற்றிருக்க ஸ்ரீ ரங்க மன்னார் ஸ்ரீ ஆண்டாளின் மடியில் தலை வைத்திருக்கும் சயன சேவை. இந்த சயன சேவை ஸ்ரீ ஆண்டாள் கோவில் திருவிழாக்களில் சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது.  நான் இந்த வருடம் தான் பார்த்திருக்கிறேன்.  

அன்று இரவு ஏழு மணிக்கு சயன சேவை ஆரம்பிக்கும்; கிட்டத்தட்ட நள்ளிரவு ஒரு மணி வரை பக்தர்கள் வருகை இருக்கும்; தரிசனம் கிடைக்கும் என்று சொன்னார்கள்.


நாங்கள் மாலை ஆறரை மணியளவில் சென்று விட்டோம்.  நிறைய ஆட்டோக்கள், மினிபஸ், நகரப்பேருந்துகள், இருசக்கர வண்டிகள், நடந்து செல்லும் கூட்டம், அந்த சாலை நிறைந்து விட்டது.  இந்த அளவு கூட்டம் அந்த சாலையில் நான் பார்த்தது கிடையாது.  இந்த திருவிழாவிற்கு காவல்துறையினரின் பாதுகாப்பு அருமையாக செய்யப்பட்டிருந்தது.

நாங்கள் இந்த கோவிலுக்கு வந்தது இது தான் முதல் தடவை.  முகப்பு மிகவும் அழகாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.  கோவிலில் ராஜகோபுரம் கட்ட ஆரம்பிக்கப்பட்டு முதல் தளம் மட்டும் கட்டப்பட்டு தடைப்பட்ட மாதிரி இருக்கிறது.  அது நிறைய வருடங்களுக்கு முன்பு இருக்கலாம். கோவில் மிகவும் பெரிய கோவிலாக இருக்கிறது.  திருவிழாவிற்காக நன்கு வெள்ளையடிக்கப்பட்டு சுற்றிலும் தரை செடிகள், முட்செடிகள் எல்லாம் களையப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கிறது.  அப்படியும் நடக்கும் போது தரை காலைப் பதம் பார்க்கிறது.  வெளிப்பிரகாரம் பெரியதாக இருக்கிறது.  சன்னதியில் கிருஷ்ணர் இருக்கிறார்.  நல்ல சிலைகள் இருக்கின்றன.  (இந்த கோவிலை இன்னொரு நாள் அனுமதி வாங்கி புகைப்படங்கள் எடுத்து விபரங்களை சேகரித்து தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்).  தரிசனம் செய்தோம்.

முனனால் உள்ள மண்டபத்தில் சயன சேவை  அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.  உள்ளும் நிறைய ஜனங்கள்.  

உள்ளூர் பக்தர்களை விட வெளியூர், வெளி மாகாணத்திலிருந்து வந்த பக்தர்களின் ஈடுபாடு மிகவும் அற்புதமாக இருந்தது.  ஆச்சரியமாக இருந்தது.  ஆந்திராவிலிருந்து ஒரு குழு கிட்டத்தட்ட முப்பது பேர்கள் இருக்கும் - ஆண்களும் பெண்களும் சேர்ந்து - மிகவும் சிரத்தையுடன் அலங்கரித்து வாத்தியங்களுடன் நடனக் கச்சேரி நடத்தினார்கள். அதை முடிந்தவரை புகைப்படங்கள் எடுத்திருக்கிறோம். 


சயன சேவை ஏழரை மணிக்கு ஆரம்பித்தது.  அதையும் முடிந்தவரை புகைப்படம் எடுத்தோம்.  (எங்களுக்கு முன் அனுபவம் இல்லாததால் புகைப்படம் எடுப்பதற்கு சரியான இடத்தை தேர்ந்தெடுக்கவில்லை- ஒரு மூலையில் நகர முடியாமல் மாட்டிக் கொண்டோம்).  வெளியே நிறைய கூட்டம் இருந்ததால் முன்கதவை அடைத்து எங்களை கோவிலின் இடது புறம் உள்ள பாதை வழியாக வெளியே அனுப்பினார்கள்.  வெளியே வந்து பார்த்தால் வரிசை அனுமார் வால் மாதிரி நீண்டிருந்தது.  கிட்டத்தட்ட அவர்கள் உள்ளே செல்ல இரண்டு மணி நேரமாவது ஆகும்.  அந்தக்கூட்டத்தை புகைப்படம் எடுத்து தொகுத்திருக்கிறோம்.  (உடனே வந்து சயன கோலத்தை முக நூலில் ஏற்றி விட்டோம்-எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது).


ஆடிப்பூர தேரோட்ட திருவிழா


எங்கள் ஊரின் சிறப்பு ஸ்ரீ ஆண்டாள் கோவில் தேரோட்ட திருவிழா. 2.8.2011 அன்று திருவிழா காலை எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் என்று அறிவிப்பு இருந்தது.  நாங்கள் காலை ஆறு மணிக்கு சென்று விட்டோம்.  ஸ்ரீ ஆண்டாளையும் ஸ்ரீ ரெங்கமன்னாரையும் தேரில் ஏற்றுவதற்கு முன்பு நீராவி பள்ளிக்கூடத்தின் வாசலில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று.  நாங்கள் சற்று தாமதம்.  ஸ்ரீ ஆண்டாள் தேர் ஏறி விட்டார்.  தேர் பக்கம் வந்தோம்.  ஓரளவு கூட்டம் இருந்தது.  தேர் மிக அற்புதமாக ஜோடனை செய்யப் பட்டிருந்தது.  புதிய வடங்கள் மாற்றப் பட்டிருந்தன.  காவல்துறையினர் நிறைய இருந்தனர்.  அவர்களது ஏற்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது.  மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 

தேரின் பின்புறம்:

தேரின் பின்புறம் புல்டோசர்கள் இருந்தன.  இரண்டு லாரிகளில் சறுக்கு கட்டைகள் இருந்தன.  தீயணைப்பு வாகனங்கள் நின்றன.  அரசின் ஏற்பாடுகள்  மிகவும் அருமை.  பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.  அவர்களின் சேவையை மனமார பாராட்டுவோம்.  


தேரின் முன்புறம் மயில் தோகை விசிறிக் கொண்டு மூன்று பேரை பார்த்தோம்.  அதில் ஒரு பெரியவர் வயது எண்பதுக்கு  மேல் இருக்கும்.  அவர் எல்லா ஊர் திருவிழாவிற்கும் செல்வார் என்று சொன்னார்கள்.  செய்தித்தாளிலும் படித்திருக்கிறேன்.  அவரது புகைப்படத்தையும் கொடுத்திருக்கிறோம்.  மற்ற இருவர் இதிலும் விளம்பரம் தாங்கியிருந்தார்கள்.  வெளி மாநிலத்திலிருந்து வந்த பக்தர்கள் குழு குழுவாக வந்து பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருந்தார்கள்.  நிறைய குழுக்கள்.  முடிந்த அளவு புகைப்படங்களை தொகுத்திருக்கிறோம்.  ஒருவர் அனுமார் வேஷம் போட்டிருந்தார்.  சிறுவர்களுக்கான வியாபாரங்களும் களைகட்டியிருந்தன.  
கதிரவன் ஹோட்டல் 


எங்கள் ஊரின் மற்றொரு சிறப்பம்சம் கதிரவன் ஹோட்டல்.  அவர்கள் வியாபாரம் மாதிரி நடத்தவில்லை.  ஒரு சமூக சேவை மாதிரி நடத்துகிறார்கள்.  எனக்கு தெரிந்தவரை - வருமான வரி, விற்பனை வரி, பிராவிடன்ட் பண்ட், ESI - மற்றும் அனைத்து வரிகளையும்  கட்டி அவர்களது தொழிலாளர்களுக்கும் நன்கு சலுகைகள் செய்கிறார்கள்.  அங்கு சாப்பிடுவது ஒரு நல்ல அனுபவம்.  நாங்கள்  காலை உணவு அங்கு சாப்பிட்டோம்.  நீங்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் வந்தால் அங்கு சாப்பிட்டு பாருங்கள்.  பிறகு சாப்பிடுவதற்காக எங்கள் ஊருக்கு வருவீர்கள்.  வாழ்க அவர்களது பணி.  இதில் ஒரு பங்குதாரர் திரு பாலச்சந்திரன் எனது பள்ளி தோழர்.

அதன் அருகில் ராம்கோ சிமின்ட்டின் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.  முன்பு நல்ல கூட்டம் இருந்தது.  அந்த ஸ்டாலும் அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அங்கு ஸ்டால் முகப்பையும் பின்பு ஸ்டால் உள்ளே அவர்களது செயல்பாட்டினையும் (நீர், மோர், படங்கள் வழங்குவதை) புகைப்படம் எடுத்தோம்.  உள்ளே எங்களது அருமைப்பிள்ளை திரு ராம்குமார் இருந்திருக்கிறார்.  நான் கவனிக்கவில்லை. அவர் வெளியே வந்து விட்டார்.  எங்களுக்கு மிகவும் சந்தோசம்.

திரு ராம்குமாரைப் பற்றி :

நாங்கள் திருமுக்குளம் பற்றி எழுதியிருந்தபோது திரு வினோத் பாபு என்று ஒரு நண்பர் (ஸ்ரீ வில்லிபுத்தூர்காரர்) பின்னூட்டம் எழுதினர்.  அவர் திரு ராம்குமாரின் பதிவை அறிமுகப்படுத்தினார்.  ராம்குமார் பதிவும் எழுதுகிறார். முகநூலிலும் இருக்கிறார்.  
அவரது தளத்தின் பெயர்: சிவகாசிக்காரன்
தளத்தின் இணைப்பு: http://sivakaasikaaran.blogspot.com/
முகநூலில் அவரது இணைப்பு:
http://www.facebook.com/profile.php?id=1147750586

இந்த பதிவுலகமும் முகநூலும் எங்களுக்கு அளித்தது நிறைய.  நிறைய நண்பர்கள், நிறைய பாசமுள்ள மகள்கள், ராம்குமாரைப் போன்ற பாசமுள்ள பிள்ளை. 

பார்த்தால் பசு - பாய்ந்தால் புலி:
பார்ப்பதற்கு அமைதியாக இருக்கிறார்.  அவரது பதிவுகளும், கதைகளும், அவர் முகநூலில் கொடுக்கும் செய்திகளும் ஆச்சரியமாக இருக்கும்.  நன்கு யோசிக்கும் சுறுசுறுப்பான இளைஞர். இன்று சொல்கிறேன் - அவர் பெரிய ஆளாக வருவார்.    எங்களது பாசப் பிள்ளை அருமை ராம்குமார் சீரும் சிறப்புமாக நீடூழி வாழ எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும். நாங்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் கொடுத்திருக்கிறோம்.  
 
மற்றும் ஹைதராபாத்திலிருந்து ஒரு குடும்பத்தினர் வந்திருந்தார்கள்.  அவர்களுடன் எடுத்த புகைப்படமும் கொடுத்திருக்கிறோம். எங்கிருந்தெல்லாமோ வருகிறார்கள்.  உள்ளூர்காரர்கள் தான் செல்வதில்லை.


மீண்டும் தேருக்கு வருவோம்.  தேர் இழுக்க ஆரம்பித்து விட்டார்கள்.  தேரில் திரு பாலகிருஷ்ணன் ஆசிரியர் தலைமையில் உற்சாகம் ஊட்டும் அணி - இவரது நடவடிக்கைகளை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம். 

தேர் இழுக்க இளைஞர் படை, அதை பார்ப்பதற்கு நல்ல கூட்டம், மாடியிலிருந்தும் பார்க்கிறார்கள்.  இடையில் நிறுத்தி விட்டால் இளைஞர்கள் யாராவது ஒருவரை தூக்கி போட்டு விளையாடுகிறார்கள்.  உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது.  வடம் புதிதாக மாற்றியிருக்கிறார்கள்.  எனவே முக்கு திரும்பும்போது வடத்தை எளிதாக தூக்குகிறார்கள்.  ஆனாலும் இது மிகப்பெரிய பணி. எல்லோரது ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம்.


            

  இந்த பதிவிற்காக புகைப்படங்கள் எடுத்த எனது மனைவி திருமதி உமாகாந்திக்கும், நிறைவு நாள் அன்று புகைப்படங்கள் எடுத்த திருமதி ரமாமணி அவர்களுக்கும் எங்களது மனப்பூர்வ நன்றி. இந்த பதிவு ஸ்ரீ ஆண்டாள் கிருபையால் எழுத முடிந்தது.

இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவும், மற்றும் எங்களது பதிவு மேம்பாட்டிற்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றியும், வணக்கமும்.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.  உங்கள் பெயரை Google Connect Widget இல் பதிந்து கொள்ளுங்கள்.  உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு இடும்போது உங்களது மின்னஞ்சல் பெட்டிக்கு வந்து விடும். 

மிக்க நன்றி.


37 கருத்துகள்:

 1. அம்பாளைக் காணக் கண்கோடி வேண்டும் .மிக அழகாக
  படம்பிடித்து விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு.........

  பதிலளிநீக்கு
 2. எதோ நேரடி வர்ணனை பார்ப்பது போல இருக்கிறது உங்கள் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
 3. ஏழாம் நாள் திருவிழா பற்றிய தகவல்கள் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி ஐயா. ஆண்டாள் ரங்கமன்னார் மற்றும் பிற படங்கள் எல்லாம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நேரில் கலந்து கொண்டது போல உணர்கிறோம்.

  பதிலளிநீக்கு
 5. முழுமையான தகவல்களுடன், படங்களும் தந்து எங்களுக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணர்வைத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா....

  பதிலளிநீக்கு
 6. அற்புதமான படங்களும், அபாரமான நேரடி ஒலி ஒளிபரப்பு போல் துல்லியமான வர்ணனைகளுமான அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 7. படங்களைப்பார்க்கும் போது தேரோட்டத்தில் நேரில் கலந்திட்ட உணர்வை ஏற்படுத்துகிறது... நன்றி

  பதிலளிநீக்கு
 8. படங்களோடு பாங்கான பதிவு படு அமர்க்களம்!
  நன்றிகள் பலப்பல.

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லாசனி, ஆகஸ்ட் 13, 2011

  மிக அருமை .நேரில் பார்ப்பது போல டென்மார்க்கிலிருந்து பார்த்தோமென்றால் நாம் கொடுத்து வைத்தவர்களல்லவா!. மிக்க நன்றி ஐயா! இறை ஆசி நிச்சயம் கிட்டும் எல்லோருக்கும்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 10. மிக அருமை .நேரில் பார்ப்பது போல டென்மார்க்கிலிருந்து பார்த்தோமென்றால் நாம் கொடுத்து வைத்தவர்களல்லவா!. மிக்க நன்றி ஐயா! இறை ஆசி நிச்சயம் கிட்டும் எல்லோருக்கும்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 11. அன்பு ரத்னவேல் அவர்களுக்கு,

  எனக்கு ஆண்டாள் மேலுள்ள மிகப்பெரிய ஈர்ப்பு அவளின் காதலும், கவிதையும். ஆண்டாளின் நட்சத்திரத்தில் பிறந்ததால் கூடுதல் ப்ரீத்தி அவள் மேல். ஆண்டாள் தேர் பற்றி நிறைய சொல்வார் எங்க அப்பா... ஒன்பது தட்டோ பதினொரு தட்டோ இருந்த போது சரிந்தது பற்றி... தேர் நிலைக்கு வராமல் மாதக்கணக்காய் இழுத்துக் கொண்டிருந்தது பற்றி... நிறைய கதைகள் தேர் வட பிரிகளாய் பின்னி பின்னி எங்களுக்குள்... இந்த தேரில் மூன்று தட்டுகளுக்கு மேல் பார்க்கமுடியவில்லை... அளவில் சிறிதாய் இருப்பதாய்ப் படுகிறது. அலங்காரங்களிலும் வர்ணத் தெரிவுகளிலும், ஓவியங்களிலும், பொம்மைகளிலும் முன்னாடி இருந்தது போல ஒரு நேர்த்தியும், அழகும் இல்லாதது போல இருந்தது.

  ஏழாம் நாள் சயன சேவை, கிருஷ்ணன்கோவில் எதையுமே என்னால் மறக்கமுடியாது. ஆண்டாளில் அழகு சொல்லி மாளாது என்னால்... உற்சவ ஆண்டாளை விட மூல ஆண்டாள் படுபாந்தமான அழகும், செரிவான குமிழ் சிரிப்பும்...

  ”குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
  மங்கல வீதி வலம்செய்து மணநீர்
  அங்கவனோடும் உடன் சென்று அங்கானைமேல்
  மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்” கண்ட கனவு பழித்தது...

  அன்புடன்
  ராகவன்

  பதிலளிநீக்கு
 12. மிக நல்ல கவரேஜ் சார் ! நன்றிகள் !

  பதிலளிநீக்கு
 13. அற்புதமான
  அசத்தும்
  படைப்பு

  பதிலளிநீக்கு
 14. ஆண்டாள் தரிசனம் பெற்றோம் ஐயா

  பதிலளிநீக்கு
 15. அழகிய ஃபோட்டோக்கள், நல்ல எழுத்து நடை

  பதிலளிநீக்கு
 16. ஏழாம் நாள் திருவிழா பற்றிய தகவல்கள் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி ஐயா

  பதிலளிநீக்கு
 17. நல்ல விவரங்களுடன் முழுமையான பதிவு. ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் படுத்திருக்கும் சயனக் கோலக்காட்சி கண்ணை விட்டு அகலாமல் நிற்கிறது. அடுத்த வருடம் முன்கூட்டியே தகவல் கொடுக்கவும். மண்டிப்பாக வர முயல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. உங்கள் போட்டோவையும் ரசித்தேன். கூட இருப்பது உங்கள் மகனா?

  பதிலளிநீக்கு
 19. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி., கோதை நாச்சியார்., ஆண்டாள் ., மீரா எல்லாரையும் எனக்குப் பிடிக்கும். ஜீவாத்மா பரமாத்வோடு சேர்வதற்கு பாவை நோன்பு நோற்றவளல்லவா அவள்..

  பகிர்வுக்கு நன்றி ரத்னவேல் ஐயா..:)

  பதிலளிநீக்கு
 20. நீங்கள் கண்டுகளித்தவற்றை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் ஆர்வம் பதிவில் நிதரிசனமாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு ,
  வணக்கம் . தங்களின் பதிவு ,என்னை திருவில்லிபுத்தூர் ,ஆண்டாள் கோவில்க்கு நேரில் சென்று வந்தது போல் பதிவுசெய்து
  உள்ளீர்கள் .அனைத்து நிழல் படங்களும் அருமை .மிக்க நன்றி .
  மு .குருபர ராமலிங்கம்

  பதிலளிநீக்கு
 22. வில்லிப்பூத்தூருக்கு 1996 முதல் 1999 வரை, பணி நிமித்தமாக, ஒவ்வொரு மாதமும்..மதுரையிலிருந்து, வந்து சென்ற அனுபவம் உண்டு. எனக்கு மிகவும் பிடித்த ஊர். வேலை மிகவும் சுலபமாக முடிந்து விடும் ( பயண நேரத்தை விட, வேலை நேரம் குறைவு)...நீண்ட காலம் ஆகிவிட்ட படியால், மிக்ச்சரியாக, தகவல்களை, நினைவு படுத்த முடியவில்லை. அதே சமயம், இன்றளவும் நண்பர்கள் தொடர்பு உண்டு. ஆடிப்பூர‌ உற்சவ காலத்திலும், இராஜபாளையத்தில் தங்கியிருந்து, நண்பர்களுடன், வந்து சென்றுள்ளோம் (பகலில்). உங்களது பதிவின் மூலம் தான், இரவில் நடக்கும் நிகழ்வுகளின் சிறப்புகளை அறிய முடிந்தது என்றால் அது மிகையாகாது. மிக்க மகிழ்ச்சி. மேலும் "ரத்தம் ஒரே நிறம்"...பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அது பற்றி, விரிவாக, பிறிதொரு சமயம் உரையாடுவோம்.

  பதிலளிநீக்கு
 23. அருமையான புகைப்படங்களுடன் சுவையான தகவல்கள் நிறைந்த நல்ல கட்டுரை.

  பதிலளிநீக்கு
 24. நேர கோவில் தரிசனம் பெற்றது போல
  நாட்டு நலத்திட்டம் சுப்பர்
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 25. கோபுர தரிசனம் கோடி புண்ணியம், கோவையிலிருந்தே கோபுரதரிசனம் தந்துட்டீங்க,,,
  நன்றி, ஐயா தங்களுக்கு தலைப்பு டிசைன் செய்து அனுப்பினேன் தங்கள் இதுவரை பயன் படுத்தவில்லியே ஏன்?

  இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
  http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

  பதிலளிநீக்கு
 26. நேரடி ஒளிபரப்பிற்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 27. படங்களுடன் பகிர்வும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 28. படங்களும் கருத்துக்களும் அருமையாக உள்ளன.. ரொம்பப் பெருமையாகவும் பாசமாகவும் நன்றியாகவும் இருக்கிறது. உங்கள் பிள்ளையாக நினைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிக்க நன்றி. உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி, எல்லாம் நடக்க இறைவனை வேண்டுகிறேன்..

  பதிலளிநீக்கு
 29. அருமையான புகைப்படங்கள், காட்சிகள். இந்த இடங்களை பார்க்கும் போது நேரில் பார்க்கனும் போல இருக்கிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
 30. நேரடி ஒளிபரப்பிற்கு நன்றி ஐயா!
  படங்களுடன் பகிர்வும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 31. நீங்கள் செல்வதுடன் எங்களையும் அழைத்து சென்றுள்ளீர்கள் அப்பா. அருமையான அறிய வேண்டிய தகவல்கள் அடங்கிய பதிவு!

  பதிலளிநீக்கு
 32. ஆந்திராவிலிருந்து ஒரு குழு கிட்டத்தட்ட முப்பது பேர்கள் இருக்கும் - ஆண்களும் பெண்களும் சேர்ந்து - மிகவும் சிரத்தையுடன் அலங்கரித்து வாத்தியங்களுடன் நடனக் கச்சேரி நடத்தினார்கள். அதை முடிந்தவரை புகைப்படங்கள் எடுத்திருக்கிறோம் என்று தாங்கள் குறிப்பிட்டுள்ள குழு கோயமுத்தூர் நீலிக்கோனாம்பாளையம் ஸ்ரீ கிருஷ்ணலீலா பிருந்தாவன் பஜனைகுழு. ஆசியர் நீ.கா.ராமசாமி 9952346646,9751787737.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா, தாங்கள் தொலைபேசியிலும் பேசினீர்கள். அந்த குழுவினர் ஆந்திர மாநிலம் என்று நினைத்தோம். நமது கோவை மாவட்டம் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஈடுபாடான கலைநிகழ்ச்சியும் அன்று எங்களை பெரிதும் கவர்ந்தது. மிக்க மகிழ்ச்சி. தங்களிடம் தொலைபேசியில் சொன்னபடி இந்த வருட ஸ்ரீ ஆண்டாள் தேரோட்ட அழைப்பிதழ் அனுப்பி வைக்கிறேன். நீங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வரும்போது எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்று தகவல் சொல்லுங்கள், நாங்கள் உங்களையும், உங்கள் குழுவினரையும் உங்கள் இடத்தில் வந்து பார்க்கிறோம். நீங்கள் அனைவரும் எங்கள் வீட்டிற்கு வரும்படி மிகவும் கேட்டுக் கொள்கிறோம். இன்று நீங்கள் பேசியது ஸ்ரீ ஆண்டாளின் குரலாக நினைக்கிறோம். மிக்க மகிழ்ச்சி.

   நீக்கு
 33. மிக்க நன்றி ஐயா, நாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வரும்போது தகவல் சொல்லுமிக்கிறோம் மிக்க மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 34. "எங்கிருந்தெல்லாமோ வருகிறார்கள். உள்ளூர்காரர்கள் தான் செல்வதில்லை." -முற்றிலும் உண்மை. கொஞ்சம் கொஞ்சமாய் தேரை இழுத்து ஒரு மாதம் வரை தேர்த் திருவிழாவாக இருந்த வரையில் நம் மக்கள் கொண்ட ஆர்வம், காலையில் தொடங்கி மதியத்தில் தேர் நிலைக்குத் தள்ளப்படும் பொழுது இல்லவே இல்லை. அழகிய புகைப்படங்களுடன் சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு