புதன், ஆகஸ்ட் 29, 2012

செய்யும் தொழிலே தெய்வம் – ஏ.கே.சி.ஸ்டோர்ஸ், ஸ்ரீவில்லிபுத்தூர்.


இனிய நண்பர்களே,

எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு - ஸ்ரீ ஆண்டாள் கோவில், பெரிய கோபுரம், அருமையான தேர், இன்னும் நிறைய கோவில்கள், அது பற்றி அவ்வப்போது எழுதுகிறேன்.

எங்கள் ஊரில் நேர்மையான வியாபார ஸ்தலங்கள் நிறைய இருக்கின்றன, செய்யும் தொழிலே தெய்வம் – ஆம், நான் எழுதும் ஸ்தாபனங்கள் நடத்துபவர்கள் அவர்கள் தொழிலை அவ்வளவு புனிதமாக நடத்துகிறார்கள்.  நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுத நினைத்த ஸ்தாபனங்கள் = ஏ.எல்.நாறாயண அய்யர் ஜவுளிக்கடை, கதிரவன் ஹோட்டல், இ.கே.எஸ்.மெடிக்கல்ஸ், வெங்கடேஸ்வரா  பால் கோவா கடை (ஸ்ரீ ஆண்டாள் கோவில் அருகில்), ஏ.கே.சி.ஸ்டோர் – எனக்குத் தெரிந்தவை இவை, இன்னும் நான் தெரிந்து கொள்ளும் போது, கற்றுக் கொள்ளும் போது மற்ற நிறுவனங்களைப் பற்றி எழுதுகிறேன்.

இந்த பதிவில் நான் எழுதப் போவது – ஏ.கே.சி. ஸ்டோர்ஸ், (ஏ.கே.சின்னையா நாடார் மில் வளாகம்), சாத்தூர் ரோடு, ஸ்ரீவில்லிபுத்தூர்.

இந்த ஸ்தாபனம் 67 ஆண்டுகள் கடந்த நிறுவனத்திலிருந்து தோன்றியது.  முதலில் அரிசி ஆலையாக துவங்கினார்கள்.  திரு சின்னையா நாடார் என்ற மாமனிதரால் அரிசி ஆலை, அரிசி வியாபாரம் துவங்கப் பட்டது.  அவரது ஒவ்வொரு மகன்களும் தனித் தனியாக வெவ்வேறு துறைகளில் கவனம் செலுத்தும் போது – திரு ஏ.கே.சி.கொண்டல் வண்ணன் – அரிசி விற்பனைப் பிரிவு துவக்கினார்.  கொஞ்சம் கொஞ்சம் பலசரக்குகளும் சேர்த்து வைத்தார்.  அந்த சமயத்தில் மிகவும் சின்ன கடை, அரிசி மூடைகள் முன்னால் விரித்து வைக்கப் பட்டிருக்கும்.  கண்ணுக்கு தெரியும் கொஞ்சம் இடங்களில் பலசரக்குகளை பேக் செய்து அடுக்கி வைத்தார்.  அந்த கடையிலேயே ஒரு பெரியவர் உட்கார்ந்து முறம் வைத்து பலசரக்குகளை புடைத்து சுத்தம் செய்து கொண்டிருப்பார்.   அது அப்போது முன்னோடியான புது முயற்சி (innovative idea).  எனக்கு என் தம்பி திரு ராமராஜன் ஏ.கே.சி. ஸ்டோரில் பலசரக்குகள்  எல்லாம் நன்றாக இருக்கின்றன, 10% வரை விலை குறைவாக இருக்கிறது, இரு சக்கர வாகனத்தில் சென்று நிறுத்தி வாங்க வசதியாக இருக்கும் என்று எனக்கு சிபாரிசு செய்தார்.  அது வரை எங்கள் வீட்டிற்கு கொள்முதல் எல்லாம் எங்கள் குடும்பத் தலைவி திருமதி உமாகாந்தி அவர்கள் தான்.

எனது தம்பி சொன்னதுக்கப்புறம் நான் செல்ல ஆரம்பித்தேன்.  அவர்கள் அடுக்கியிருந்த தோரணை, அவர்களின் கனிவு, சுறுசுறுப்பு, விலைச் சலுகைகள், ஏதாவது offer உடன் சரக்கு வந்தால் அந்த free gifts சேர்த்து கொடுத்து விடுவார்கள்.  நீங்கள் கேட்கவே வேண்டியதில்லை.  நல்ல வியாபாரம் இருந்தது.  அங்கு இருப்பவர்கள் எல்லாம் நெருங்கிய நண்பர்கள் என்பதை விட, நெருங்கிய உறவினர்களாக, நமது குடும்பத்தில் ஒருவர் போல் ஆகி விட்டார்கள்.

நான் சொன்னேன், நல்ல பெரிய சூப்பர் மார்க்கெட் மாதிரி மாற்றுங்கள் என்று சொன்னேன், அதற்கு அவர்கள் அருகில் உள்ள கிட்டங்கியை அப்படித் தான் மாற்றுகிறோம் என்றார்கள்.

நான் சொன்னேன், நல்ல பெரிய சூப்பர் மார்க்கெட் மாதிரி மாற்றுங்கள் என்று சொன்னேன், அதற்கு அவர்கள் அருகில் உள்ள கிட்டங்கியை அப்படித் தான் மாற்றுகிறோம் என்றார்கள்.

அவர்கள் சேவைகள் (service) பேசுகின்றன

நண்பர்களே, ஆச்சரியப் படுவீர்கள்.  காலை 7.15 மணிக்கு சென்றால் கடை திறந்திருக்கும்.  அந்த குடும்பத் தலைவர் திரு கொண்டல் வண்ணன் பொருட்களை எடுத்து ரேக்குகளில் அடுக்கி வைத்துக் கொண்டிருப்பார்.  சுத்தம் செய்யும் பெண்மணி சுத்தம் செய்யும் வேலைகளை ஆரம்பித்திருப்பார்.  அவரது மகன்கள் இருவர் 7.30 மணிக்கு வந்து விடுவார்கள்.  மற்ற ஊழியர்கள் 9 மணிக்கு மேல் வருவார்கள்.  இவர்களும் கடையில் பொருட்களை அடுக்குவது, என்னைப் போல சரக்குகள் எங்கு இருக்கிறது என்ற விபரங்கள் தெரியாதவர்கள் வந்தால் அவர்களுக்கு சரக்கு எடுத்துக் கொடுப்பது போன்ற பணிகளும், பில் போடுவது போன்ற பணிகளும் செய்வார்கள்.  ஆச்சரியமாக இருக்கும்.  அந்த அதிகாலை வேளையில் குளித்து, திருநீறு அணிந்து வருவார்கள், மனதுக்கு நிறைவாக இருக்கும்.  அவர்கள் உபசரிப்பு மறக்க முடியாத நினைவு.  அவர்களுக்கு அவர்கள் கடைக்கு வரும் எல்லா வாடிக்கையாளர்களும் VIPs தான்.

என்னுடன் பணி புரியும் பெண்மணியை இவர்கள் கடை சிபாரிசு செய்தேன்.  இங்கு வாங்கிக் கொண்டிருந்தார்.  புதிதாக இன்னொரு சூப்பர் மார்க்கெட் வேறு பகுதியில் ஆரம்பித்திருந்தார், இன்னொரு நபர்.  அந்த பெண்மணி அந்த புது கடைக்கு சென்று பார்த்து விட்டு, அங்கு பேருக்கு மட்டும் ஏதோ வாங்கி விட்டு திரும்ப இந்த கடைக்கே வந்து விட்டேன் என்றார்.  ஏன் என்றேன், ஏ.கே.சி.ஸ்டோரில் உள்ள மன நிறைவு இல்லை என்றார்.  நான் அதற்கு சொன்ன காரணம் – இங்கு எல்லோரையும் VIP ஆக நடத்துகிறார்கள், அதனால் தான் என்றேன்.  கனிவான உபசரிப்பு, காலையிலிருந்து இரவு கடை அடைக்கும் வரை அதே கனிவு, சிடுசிடுப்பு கிடையாது.

நான் ஒரு தடவை அரிசி வாங்க சென்றேன்.  அரிசி மூடை இல்லை, அருகிலுள்ள கிட்டங்கியிலிருந்து எடுத்து வர வேண்டியதிருந்தது, நான் பிறகு வருகிறேன் என்றேன்.  சற்று இருங்கள் என்றார் அவர்களது மூன்றாவது மகன் திரு விவேக்.  கிட்டங்கிக்கு சென்றார், 75 கிலோ உள்ள மூடையை அவரே முதுகில் வைத்து ஒரு லோடுமேன் போல (in a professional way) தூக்கி வந்தார்.  எனக்கு தாங்க முடியாத ஆச்சரியம்.  இவர்கள் வெற்றியின் பின்னணி இது தான் – எந்த வேலையும் கேவலம் இல்லை.  யார் இருந்தாலும், இல்லையென்றாலும் இவர்கள் கடை இயல்பாக நடைபெறுகிறது.  வேலை செய்யும் பெண்மணிகள் விடுமுறையில் சென்று விட்டால் அவர்கள் வீட்டு பெண்மணிகள் வந்து கவனிக்கிறார்கள்.  குடும்பத்தலைவரின் மனைவி, மருமகள்கள் அனைவரும் வருகிறார்கள், திறம்பட பணியாற்றுகிறார்கள்.  இது எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

திரு ஏ.கே.சி.கொண்டல் வண்ணன் அவர்களைப் பற்றி – ஒரே வார்த்தையில் சொன்னால் மாமனிதர், இப்படி மனிதர்களுக்காகத் தான் மழை பெய்கிறது.  இவர் கோவில் திருப்பணி கமிட்டி, பள்ளிகள் கமிட்டி, மக்களுக்கு நன்மை தரும் செயல்கள் எல்லாவற்றிலும் இருக்கிறார். 

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் என்று ஒரு புராதன அருமையான சிவன் கோவில் (அருள்மிகு வைத்திய நாத ஸ்வாமி உடனுறை சிவகாமி அம்மன் திருக்கோவில்)  இருக்கிறது.  இங்கு 2 தெப்பங்கள் இருக்கின்றன, ஒன்று கோவில் அருகில் இருக்கிறது.  மற்றொன்று தூர்ந்து போய் இருந்தது.  கோவில் அருகில் இருந்த குளத்தை அருமையாக பராமரிப்பு செய்து, தளத்தில் நல்ல சிமிண்ட் பூச்சு பூசி சுற்றிலும் வேலி கட்டி, குளிப்பதை தடை செய்து அருமையாக்கினார்கள்.  எதிரில் உள்ள குளத்தை சீர் செய்து பிரமாதமாக்கி விட்டார்கள்.  மன்னர் காலத் திருப்பணி போன்றிருக்கிறது.

சிவன் கோவிலுக்கு நன்கொடை கொடுத்தால் குடும்பத்துக்கு ஆகாது என்று ஒரு தப்பான அபிப்பிராயம் இருக்கும் போலும், அதனால் இவர் கடையில் ஒரு போர்டு வைத்திருந்தார், நோட்டீஸ்கள் வினியோகித்தார்.  சிவன் கோவிலுக்கு செய்தால் புண்ணியம், 140 ரூ கொடுத்தால் ஒரு சிமிண்ட் மூடை வாங்கிக் கொடுக்கலாம் என நிறைய விபரங்கள் கொடுத்தார்.  இவர் கடையில் வந்து நிறைய பணம் கட்டி திருப்பணியில் எல்லா வகை மக்களையும் (all categories of people) பங்கு பெறச் செய்தார்.  திருமுக்குளம் சீரமைப்பிலும் இவரது பணி மகத்தானது.  கரிசல்குளம் பகுதியில் பள்ளி ஒன்று கட்டிக் கொண்டிருக்கிறார்.  நீங்கள் இவரிடம் விபரம் கேட்கப் போனால் இவருக்கு பேச நேரம் கிடையாது; உட்கார்ந்து சரக்கு அடுக்குதல், பழைய பொருட்களை கழித்தல் போன்ற வேலைகளில் அர்ப்பணிப்பு உணர்ச்சியுடன் இருப்பார்.  வணக்கம் சொல்லக் கூட அவருக்கு நேரம் இருக்காது.  ஆஹா.  அருமை.

சுந்தர மகாலிங்கம் மலையிலும் இவர்களுக்கு அன்னதான மடம் இருக்கிறது.  ஒவ்வொரு அமாவாசைக்கும் சென்று வருகிறார்.  அங்கும் இவர்கள் பணி மகத்தானது.

நான் எங்கள் வீட்டு விசேஷங்கள், குழந்தைகள் மண விழா நாள், பிறந்த நாள் போன்றவற்றுக்கு திருச்செந்தூருக்கு பணம் அனுப்புவேன்.  இப்போது எனக்கு இவர்கள் கடை தான் கோவில்.  இங்கு பணம் கொடுத்து ரசீது வாங்கிக் கொள்வேன்.  சுந்தர மகாலிங்கம் அன்ன தானத்துக்கு சென்று விடும்.

நான் இருதய நோய் வந்து சரியான உடன் வெளியில் சென்று வர வேண்டும் என்று முதலில் சென்றது இவர்கள் கடை தான், கால் பிடிப்பினால் சிரமப்பட்டு ஒரு வாரம் வரை வெளியில் செல்ல முடியுமா, வேலைக்கு போகலாமா என நினைத்து வெளியில் முதலில் சென்றது இவர்கள் கடை தான்.  என்னப் பொறுத்த வரை – இவர்களது அருமையான ஸ்தாபனம், எனக்கு கோவில் போல.

திரு கொண்டல் வண்ணன் அவர்களுக்கு மூன்று மகன்கள் – மூத்தவர் திரு அரவிந்த், இரண்டாவது திரு சிவானந்தம், மூன்றாவது திரு விவேக்.  அனைவரும் பட்டை தீட்டிய வைரங்கள்.  அனைவருடன் எனக்கு நட்பு இருக்கிறது, இது நான் மிகவும் பெருமைப் படும் விஷயம்.  உங்களுடன் நான் கொண்டிருக்கும் நட்பினால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மிகவும் பெருமைப் படுகிறேன் நண்பர்களே.

இந்த பதிவை படித்து உங்கள் பின்னூட்டங்களைப் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் போது ஸ்ரீ ஆண்டாள் கோவிலும் பாருங்கள், இந்தக் கடையையும் வந்து பார்த்துச் செல்லுங்கள்.  நன்றி நண்பர்களே. 22 கருத்துகள்:

 1. சிறப்பான தகவலுக்கு நன்றி ஐயா...

  வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. இதுபோல் கடின உழைப்பில் நேர்மையில் கூட்டு குடும்ப வணிகத்தில் முன்னேறியவர்கள் ஊருக்கு ஒருவர் நிச்சயம் இருப்பார் .இவர்கள்தான் சாதனை மனிதர்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் பக்கம் வந்தால் உங்களை பார்க்காமல் செல்ல முடியாது இந்த கடையையும் அவசியம் பார்க்க வேணும் என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது உங்கள் பதிவு

  பதிலளிநீக்கு
 3. an wonderful innovative appreciative,action.
  RED salute for your action.

  பதிலளிநீக்கு
 4. A.K.C stores கடைக்காரர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு திரு ரத்தினவேல் ஐயா மாதிரி ஒரு வாடிக்கையாளர் கிடைத்ததற்காக!---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 5. உழைக்கும் மனிதர்களை அடையாளம் காட்டும் நல்ல பதிவு. எழுதியவருக்கும், எழுதப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 6. செய்யும் தொழிலில் ஒரு அர்பணிப்புடன் செயல்படும் மனிதர்களுள்
  திரு A .K .C . குடும்பத்தினரும் ஒன்று. valka valamutan.

  பதிலளிநீக்கு
 7. manamara ulamara valuthukiren,seiyum tholilay deivam entru ninaipavarkal nadar samukathinar vadikkaiyalarkal anpu than namathu muthleedu entru ninaithu avarkalai thirupyhi paduthuvathu ,pontravai than muthal maryathai entru ninaipathu nadarkalin kadamai.udal pullarikirathu entha kalathil eppadi nalla varkalaipirtri kelvipaduvathu perumaiyaga ullathu..anpu n.r rathinavel avar kalukku nantri.aduthamurai srivilliputtur varumpothu entha great peoplekalai vanthu paraka aasaiyaka ullathu.anpudan kumudam chellappa

  பதிலளிநீக்கு
 8. அய்யா,

  தாங்கள் குறிப்பிட்ட திரு.கொண்டல் வண்ணன் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர். அவரும், அவர்தம் குடும்பத்தினரும் அனைத்து வளங்களையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ இறைவன் அருளுவான். மேலாண்மை கற்றுக் கொள்ள வெளிநாட்டு நூல்களை நாடுவோர், திரு.கொண்டல் வண்ணனைக் கவனித்தாலே கற்றுக் கொள்ளலாம் என்பது புலப்படுகிறது. சிறப்பான அறிமுகத்துக்கு மிக்க நன்றி.

  ஸ்ரீ....

  பதிலளிநீக்கு
 9. உயரிய மனிதர்களைப் படம் பிடித்துக் காட்டும் உங்கள் உள்ளம்உயரியது.
  ஆங்காங்கே இப்படிப்பட்ட உயரிய மனிதர்கள் வாழ்வதனால்தான் வையம் தழைக்கிறது.பதிவு செய்த விதம் மிகவும் அருமை ஐயா.

  பதிலளிநீக்கு
 10. அன்பின் ரத்னவேல் - சிறந்த மனிதர்களை - வாழ்க்கையில் உண்மையாக உழைத்துமுன்னேறிய மனிதர்களை - அடையாளம் காட்டி அறிமுகம் செய்தல் நன்று. இவ்வுரையில் உள்ள சொற்கள் தங்களின் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து வந்தவை எனபது தெளிவாகத் தெரிகிறது. ஒரு முறை தங்கள் வீட்டிற்கு வரவேண்டும். கதிரவன் ஹோட்டல் குடுமபத்தாரின் திருமணத்திற்கு நான் வந்திருந்த போது தங்கள் விட்டிற்கு வர இயலவில்லை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 11. அன்பு திரு ரத்னவேல் நடராஜன்,மிக மிக நன்றி.அவரது பெயர் கொண்டல் வண்ணன். எவ்வளவு பொருத்தம். இப்படி வாரிவாரி வழங்கியவருக்குப் பொருத்தமான பெயர் அல்லவா. எனக்கும் வாய்ப்பு அந்த வடபத்ரசாயி கொடுக்கட்டும்.ஸ்ரீஆண்டாள் அருளட்டும். உழைப்பின் பெருமை பதிவு பூராவும் மிளிர்கிறது.வாழ்க அவர்களது வர்த்தகமும் வாழ்வும்.

  பதிலளிநீக்கு
 12. நல்ல மனிதரை அடையாளம் காட்டிய பதிவு. பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. அருமையான பதிவு. ஏ.கே.சி. பற்றி விரிவான பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. நான் சதுரகிரி வந்தபோது, இவர்களைக்குறித்து சொன்னீர்கள். இப்போது மிக விபரமாக! நன்றி!

  பதிலளிநீக்கு
 15. சேவைகள் (service) பேசுகின்றன

  அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள் ஐயா..

  பதிலளிநீக்கு
 16. அன்புடன் வணக்கம்
  முன் காலத்தில் கூட்டு குடும்பம் என்ற ஒரு மகத்தான அமைப்பு நம் நாட்டில் இருந்தது தற்போது அது இல்லை !! ஆனால் இது போன்ற ஒரு ஸ்தாபனத்திற்கு கூட்டு குடும்ப அமைப்பு பேருதவியாக இருக்கும்** இங்கே அது இருக்கிறது*** என எண்ணுகிறேன்,, அந்த வைதீஸ்வரன் அந்த குடும்பத்திற்கும் அவர்கள் ஸ்தாபனத்திற்கும் எப்போதும் திரு கண்நோக்கம் வைத்திருக்க பிரார்த்திக்கிறேன்,இது போன்ற ஒரு பாரம்பரியமான விஷயங்களை எடுத்து உபகரித்த உங்களுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 17. அருமையான செய்தி சார்.. ஸ்ரீவி வரும் போது கண்டிப்பாக இந்த கடையை பார்க்க வேண்டும்.. சாத்தூர் ரோடுனு இருக்கு.. சிவகாசி ரோட்ட தான் அப்படி சொல்லிருக்கீங்களா? இது சரியாக எந்த இடத்தில் இருக்கிறது?

  பதிலளிநீக்கு
 18. நல்ல பதிவு. சொந்த ஊரிலுள்ள நல்ல பல விசயங்களை எழுதுவது மனதுக்கும் நிறைவாக இருக்கும். மிக்க மகிழ்ச்சி ஐயா.

  பதிலளிநீக்கு
 19. ஊக்குவிக்கும் பணி.
  நல்ல சேவை.
  உங்கள் பணி தொடரட்டும்
  இறையாசி நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 20. இருபது அம்சத்திட்டத்தில்அது:"கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதும் கிடையாது". இந்திரா அம்மையாரின் அந்தத்திட்டம் எனக்குப்பிடிக்கா. ஆனால் அந்த வரிகளை திரு கொண்டல் வண்ணனும் அவரது மூன்று பிள்ளைகளும் செய்வது கேட்கவே இனிதாக் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 21. சென்ற மாதம் சதுரகிரிக்கு சென்று திரும்பும் வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் கதிரவன் ஹோட்டலில் தான் மதிய உணவு சாப்பிட்டோம். மிகவும் சுவையாக இருந்தது. பக்கத்தில் நிறைய ஹோட்டல்கள் இருந்தாலும் இங்கு தான் அதிக கூட்டம் இருந்தது!

  பதிலளிநீக்கு
 22. உழைப்பே உயர்வு...
  https://www.scientificjudgment.com/

  பதிலளிநீக்கு