ஞாயிறு, அக்டோபர் 30, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு சிறப்பு ‘சதுரகிரி (சித்தர் மலை)’





சதுரகிரி மலையைப் பற்றிய பதிவு இது.  என்னால் அங்கு வரை பயணம் செய்ய முடியவில்லை.  எனது மகன் சரவணன் அடிக்கடி பயணம் செய்து நண்பர்களை அழைத்துச் சென்று (trekking),  அங்கு  எனது தம்பி இராமராஜனுடன் ‘டீசல் ஜெனெரேட்டர் மாட்டுவதற்கு என பள்ளியில் படிக்கும் போது, நிறைய ஈடுபாட்டுடன் சென்றிருக்கிறான்.  நான் திருவண்ணாமலை பற்றி எழுதும் போது ஒரு நண்பர் சதுரகிரி பற்றி எழுதும்படி கேட்டார்.  எனது உடல் நிலைமை அனுமதிக்காது என்று அவருக்கு பதில் எழுதினேன்.  அந்த நண்பரின் பிரார்த்தனை என்று நினைக்கிறேன். நேற்று எனது மகன் சரவணன் (29.10.11)  சென்னையிலிருந்து வந்திருந்தான்.  தாணிப்பாறை வரை அழைத்து செல்கிறேன் என்று சொன்னான்.  இது தான் கடவுள் கிருபை போலும்.  நான் தாணிப்பாறை வரை சென்றதை தனி பதிவாக எழுதுகிறேன்.

எனது மகன் சரவணனின் சதுரகிரி பயண அனுபவங்களையும் புகைப்படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  முதற்கண் சதுரகிரி சுந்தர மகாலிங்கத்திற்கு எங்களது பணிவான வணக்கங்கள்.  அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சுந்தரமகாலிங்கம் மலை கிட்டத்தட்ட நாற்பது கிலோமீட்டர் தொலைவு இருக்கும்.  ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வத்திறாயிருப்பு இருபது கிலோமீட்டர் தூரம் இருக்கும்.  அடிக்கடி பேருந்து, மினி பஸ் வசதி இருக்கிறது.  வத்திறாயிருப்பிலிருந்து தாணிப்பாறை செல்ல வேண்டும்.  பத்து கிலோமீட்டர் தூரம் இருக்கும்.  தாணிப்பாறையிலிருந்து அடிக்கடி மினி பஸ், ஆட்டோ வசதி இருக்கின்றன. 

தாணிப்பாறை


தாணிப்பாறையிலிருந்து சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மலைப்பாதை கால்நடையாக செல்ல வேண்டும்.  கிட்டத்தட்ட ஏழு முதல் பத்து கிலோமீட்டர் தூரம் இருக்கலாம்.  மனதிலும் உடலிலும் நல்ல வலு இருக்க வேண்டும்.  வயதானவர்கள், ரத்த அழுத்தம், இருதய பலவீனம் போன்ற நோயுள்ளவர்கள் தாணிப்பாறையில் இருக்கும் விநாயகரையும், ராஜேஸ்வரி அம்மன் கோவிலையும், கருப்பண சாமி கோவிலையும் தரிசித்து, உங்களது அதிர்ஷ்டம் இருந்தால் அருகிலுள்ள ஆற்றில் தண்ணீர் ஓடினால் அதில் உள்ள சின்ன அருவியில் குளித்து விட்டு அங்கிருந்தே மானசீகமாக ‘சுந்தர மகாலிங்கத்தை தரிசித்து விட்டு சந்தோஷமாக திரும்பி விடலாம்.  ரிஸ்க் எடுக்க வேண்டாம்.





தாணிப்பாறையிலிருந்து கிளம்புவோம்.  கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்கள் ஓரளவு கற்பாறைகள் நிறைந்த பாதை வழியே (ஓரளவு சிரமம் இருக்கும்) வந்தால் ‘செயின் பாறை (linked by Chain between two rocks)  என்ற இடம் வரும்.  இரண்டு பாறைகள் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கும்.  சில நேரங்களில்  தண்ணீர் அதிகம் ஓடும்.  அதனால் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு கடக்கலாம்.  அந்த புகைப்படங்களை இணைத்திருக்கிறோம். 

சங்கிலிப் பாறை



சங்கிலிப் பாறையிலிருந்து ஒரு அரை மணி நேரம் நல்ல ஏற்றம் இருக்கும்.  இளைஞர்களே கிட்டத்தட்ட மூன்று நான்கு தடவை இடை தங்கி இளைப்பாறிச் செல்வார்கள்.  மூச்சு வாங்கிப் போகும்.  அடுத்து ஓரளவு நல்ல பாதை இருக்கும்.  ‘ பசுத்தடம் ‘ என்ற இடம் வரும். எனக்கு தெரிந்த வரலாறு.  காமதேனு பசு வழி தெரியாமல் இருந்த ஒரு பக்தருக்கு வழி காட்டியதாகவும், அந்த காமதேனு பசுவின் ‘கால் தடம் என்று சொல்கிறார்கள்.

அடுத்து ஒரு இறக்கம் இருக்கிறது.  அதற்கான புகைப்படம் இருக்கிறது.  அந்த இறக்கம் உப்புத்துறையிலிருந்து (தேனி மாவட்டம்) வரும் பாதை.  அந்தப் பாதை ஆடி அமாவாசைக்கு மட்டும் பயன்படுத்துவார்கள்.  மிகவும் ஏற்றம் என்பதால் அனேகமாக யாரும் உபயோகிப்பதில்லை.  அதனால் இந்த பாதையில் இறங்கி விடாதீர்கள்.  அது நமக்கான பாதை இல்லை. 


அடுத்து நாம் நேரே மலை ஏறுவோம்.  அடுத்து வருவது கோரக்கர் குகை.  அடுத்து வருவது ‘நாவல் ஊற்று என்ற ஊற்று இருக்கும்.  குடிநீர் அதில் எடுத்துக் கொள்ளலாம்.  நீர் இனிப்பாக இருக்கும்.  வருடம் முழுவதும் நீர் இருக்கும்.  இங்கு தண்ணீர் வற்றுவதில்லை.

அடுத்து ‘இரட்டை லிங்கம் இருக்கும்.  ஒரு லிங்கத்தில் சிவனும், ஒரு லிங்கத்தில் விஷ்ணுவும் இருப்பதாக நம்பிக்கை.  அதன் புகைப்படத்தை கீழே கொடுத்திருக்கிறோம். 
இரட்டை லிங்கத்தை தாண்டி ஓரளவு இறக்கம் இருக்கும்.  அங்கு ஒரு கேணியும், சிறு நீர்வீழ்ச்சியும் இருக்கிறது.  அங்கு நல்ல தெம்பாக இருப்பவர்கள் குளிக்கலாம்.  சற்று சரிவு பாதையில் இறங்க வேண்டும்.  இன்றேல் தண்ணீர் விழும் அழகை பார்த்து விட்டு கிளம்பலாம். 

இரட்டை லிங்கம்




ஓரளவு நாம் பயணத்தின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டோம்.  நல்ல ஏற்றம் இருக்கும்.  வழியில் பாதை நன்கு கற்கள் அடுக்கி, இரு பக்கங்களும் மரங்கள் நமக்கு தோகை பிடித்திருப்பது போன்று, ஒரு குகை போன்ற தோற்றமும் இருக்கும்.  நன்கு சில்லென்று இருக்கும்.  நம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம்.  எவ்வளவு வெயில் இருந்தாலும் அங்கு மட்டும் ஊட்டியில் இருப்பது போன்று (சென்னை வாசிகளுக்கு Air Condition இல் இருப்பது போல்) இருக்கும்.  இது அங்கு சென்று  அனுபவித்தால் தான் தெரியும்.  இந்த ஏற்றம் முடிந்தவுடன் ‘பிலாவடி கருப்பசாமி கோவில் இருக்கும்.  பலா மரத்தின் அடியில் கருப்பசாமி இருக்கிறார்.  காலங்கி நாதர் என்ற சித்தர் உலோகங்களை தங்கமாக மாற்றியதாகவும், அந்த தங்கங்களை ஒரு கிணற்றில் வைத்திருப்பதாகவும், அந்த கிணற்றுக்கு கருப்பசாமி தான் காவல் தெய்வம் என்றும் ஒரு நம்பிக்கை.  இங்கு கருப்பசாமியை தரிசனம் செய்து கொள்வோம்.


பிலாவடி கருப்பசாமி கோவில்


பிலாவடி கருப்பசாமி


நாம் கிளம்புவோம்.  கருப்பசாமி கோவிலுக்கு அருகில் உள்ள ஓடையில் குளித்து விட்டு செல்வோம்.  இன்னும் ஒரு பத்து நிமிஷ நேரம் ஏற்றம்.  அடுத்து ‘பெரிய பசுக்கடை என்ற ஒரு பெரிய சமதளம் வரும்.  அங்கு தான் ஆடி அமாவாசை சமயங்களில் கடைகள் இருக்கும்.  சமதள முடிவில் ஒரு ‘அடி பம்பு (Hand Pump) இருக்கும்.  குடி நீர் அங்கு சேகரித்துக் கொள்ளலாம்.  அருகில் ‘சிவகாசி நாடார் உறவின் முறைக்கு சொந்தமான அன்ன தான மண்டபம் இருக்கிறது. 

அடுத்து சற்று தூரம் சென்றால் ஒரு இடத்தில் இரண்டு பாதைகள் பிரியும்.  இடது பக்கம் உள்ள பாதையில் சென்றால் ‘சந்தன மஹாலிங்கம் கோவில் இருக்கும்.  வலது பக்கம் உள்ள பாதையில் சென்றால் ‘சுந்தர மஹாலிங்கம் கோவில் இருக்கும்.

சந்தன மஹாலிங்கம் கோவில்

நாம் படி ஏற ஆரம்பிக்கிறோம்.  முதலில் ‘அமாவாசை அன்ன தான மண்டபம் இருக்கிறது.  இந்த மண்டபம் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு A.K.C.கொண்டல் வண்ணன் அவர்களால் சிறப்பாக நிர்வகிக்கப் படுகிறது.  அடுத்து பௌர்ணமி அன்ன தான் மண்டபம் சிவகாசி நாடார்களால் நிர்வகிக்கப் படுகிறது.  அடுத்து கோவிலுக்கு வந்து விட்டோம்.  ‘சித்தர் தோரண வாயில் – கோவிலின் முகப்புக்கு வந்து விட்டோம்.  இங்கு பதிணெண் சித்தர்கள் சிலை இருக்கின்றது.  பதினெட்டு சித்தர்களுக்கும் ஒரே இடத்தில் சிலை இருப்பது இங்கு மட்டும் தான் – இது ஒரு தனி சிறப்பு.  எதிரே நவக்கிரகங்கள் இருக்கிறார்கள்.  அருகில் சட்ட நாதர் குகை இருக்கிறது.  அதன் அருகில் ஒரு இடத்தில் நீள் வட்டமான அமைப்பில் மூன்று கம்பிகளை வைத்து சமையல் செய்கிறார்கள்.  அதில் இருந்து விழும் சாம்பலை திருநீறாக வழங்குகிறார்கள். 

பௌர்ணமி அன்ன தான் மண்டபம்



பதிணெண் சித்தர்கள் சிலை


நவக்கிரகங்கள்








சந்தன மஹாலிங்கம் கோவிலுக்கு வந்து விட்டோம்.  இங்கு சுயம்பு லிங்கம் சந்தனக் காப்பிடப் பட்டிருக்கிறார்.  இங்கு சந்தனமும், திருநீறும் பிரசாதமாக வழங்கப் படுகிறது.  சுயம்பு லிங்கத்தை பிரகாரம் சுற்றி வரலாம்.  முன்பு சந்தன மரம் இருந்திருக்கிறது.  இப்போது இல்லை.  பக்கத்தில் ஆகாச கங்கை அருவி இருக்கிறது.  அருவியிலிருந்து வரும் தண்ணீர் தான் இங்கு பூஜைக்கு, சமையலுக்கு, குடிநீருக்கு எல்லாம்.  அருவிக்கு அடுத்தாற் போல் வினாயகர், முருகன், சந்தன மஹா தேவி எல்லாம் இருக்கிறார்கள்.  அனைவரையும் தரிசனம் செய்து கொள்வோம்.  நாம் கிளம்புவோம்.

சந்தன மஹாலிங்கம் கோவில்



ஆகாச கங்கை அருவி



மற்ற விபரங்கள் – இங்கு மலை வாழ் மக்கள் (பளியர்கள்) கிட்டத்தட்ட ஆறு குடும்பங்கள் தங்கியிருக்கிறார்கள்.  மாடு வளர்க்கிறார்கள்.  இவர்களது வாழ்க்கைக்கு ‘தேன் எடுத்தல், சாம்பிராணி சேகரித்தல், மூலிகைகள் சேகரித்தல் போன்ற தொழில் செய்கிறார்கள்.  நயம் (original)  சாம்பிராணி அங்கு நம்பி வாங்கலாம்.  இங்கு மின் இணைப்பு கிடையாது.  டீசல் ஜெனரேட்டர் வைத்து தான் மின்சாரம் தயாரித்துக் கொள்ள வேண்டும்.  கோவிலுக்கு நல்ல வருமானம் வருகிறது.  அரசாங்கத்திற்கு நல்ல வருமானம்.  இந்த அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்ய வேண்டும்  இந்த மலை வாழ் மக்களுக்கு நல்ல வசதிகள் செய்ய வேண்டும்.  இவர்கள் தான் காட்டை பாதுகாக்கிறார்கள்.   

சுந்தர மஹாலிங்கம் கோவில்
சுந்தரனார் என்ற சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடம்.  இவர் சுயம்பு லிங்கம்.  சற்று சாய்வாக இருக்கிறார்.  இங்கு விபூதி பிரசாதம் வழங்கப் படுகிறது.  இங்கு பூஜை நேரத்தில் சங்கு ஊதப்படுகிறது.  லிங்கருக்கு மேலே செப்பு கலயம் இருக்கிறது.  நாள் முழுக்க நீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருக்கிறது.  இது ஒரு வித்தியாசமான அமைப்பு.  இது சற்று பெரிய கோவில்.  பிரகாரம் சுற்றி வரலாம்.





சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா.

மற்ற விபரங்கள்:
இங்கு நடக்க முடியாதவர்களை மலைவாழ் மக்கள் ‘டோலி கட்டி தூக்கி வருகிறார்கள்.  சமையலுக்கு வேண்டிய பொருட்கள் தூக்கி வரும் பணிகளையும் மலைவாழ் மக்கள் செய்கிறார்கள்.  அதற்கான கட்டணம் உண்டு.  மற்றும் வழித்துணையாகவும் (Guide) வருகிறார்கள்.  அவர்களை கூலி தானே என்று அலட்சியப் படுத்தாதீர்கள்.  கௌரவமாக நட்த்துங்கள்.  அவர்கள் தான் காட்டை அழியாமல் பாதுகாக்கிறார்கள்.  இது சம்பந்தமாக ஏதாவது உதவி தேவைப் பட்டால் எனது மகன் சரவணனின் Email id கொடுத்திருக்கிறேன்.  தொடர்பு கொள்ளுங்கள்.
Saravanan.Rathnavel@gmail.com

டோலி கட்டி தூக்கி வருகிறார்கள்



பாலிதீன் கொண்டு செல்லாதீர்கள்.  மது பானம் அங்கு வைத்து அருந்தி அங்கு பாட்டில்களை உடைத்து சுற்றுபுற சூழ்நிலையை கெடுக்காதீர்கள்.  முடியா விட்டால் அங்கு செல்லாதீர்கள்.  உங்கள் கடவுளை வீட்டிலிருந்தே கும்பிட்டுக் கொள்ளுங்கள்.

வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்கு பணிந்து நடக்க வேண்டும்.  அங்கு செடி கொடிகளை பறித்து நாசம் செய்யாதீர்கள்.  அங்கேயே இருப்பது தான் அழகு.

இந்த பதிவை அருமையாக கணினியில் ஏற்ற, விபரங்கள், படங்கள் கொடுத்து உதவிய எனது அருமை மகன் சரவணனுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.  இந்த பதிவு எழுத முந்தைய பதிவுகளில் விபரங்கள் எடுத்திருக்கிறோம்.  அந்த முகம் தெரியா நல்ல உள்ளங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.  இந்த விபரங்களில் ஏதாவது தவறுகள் இருந்தால் எனக்கு சுட்டிக் காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்.  திருத்திக் கொள்கிறேன்.
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.  மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.
மிக்க நன்றி.

100 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வருகையில் நிச்சயமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் சதுரகிரி மலைக்குப் போக வேண்டும்.. அழகான படங்களும் விளக்கங்களும் அருமை.. பதிவிற்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  2. அன்புடன் வணக்கம்
    தங்களின் இந்த பதிவு மிக அருமை ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்தை தரிசித்து போன்ற ஒரு நிறைவு புகைபடங்கள் மிக அருமை.// நன்றி...

    my second son is residing at New Jersey.

    பதிலளிநீக்கு
  3. மீண்டும் நேரில் சென்றுவந்த மனநிறைவு, நன்றி அப்பா

    பதிலளிநீக்கு
  4. நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு. சென்ற மாத அமாவாசை தினத்தன்றுதான் நான் முதன் முறையாகச் சென்றேன்.ஒரு வாரம் என்னால் நடக்க முடியாமல் கால் வலித்தது. அடிவாரத்தில் அருமையான காலை உணவு கொடுத்தார்கள். மதிய உணவினை மேலே மலையில் வழங்கினார்கள். அவ்வளவு பொருட்களையும் எப்படித்தான் எடுத்துச் செல்கிறார்களோ! நிறைவான பதிவு.படங்களும் அருமை. நன்றி ஐயா!! என்னுடைய வலையில் "மொக்கராசுவின் கட்டில்" http://alaiyallasunami.blogspot.com/2011/10/blog-post_27.html உங்கள் விமர்சனத்தை எதிபார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. தெளிவான படங்கள்.,

    பகிர்வுக்கு நன்றியும் வாழ்த்துகளும்,..

    பதிலளிநீக்கு
  6. மன நிறைவு தரும் பகிர்வு. சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க மனம் ஏங்கிடும்.

    பதிலளிநீக்கு
  7. அசத்தல். அட்டகாசம். பின்னல்.

    ரொம்ப நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ஐயா மிக நல்ல பதிவு. கோயிலிற்கு நேரே சென்று வந்த உணர்வு வந்தது. படங்களும் மிக தெளிவு. மிக்க நன்றி., உங்கள் மகனாருக்கும்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  9. அருகில் உள்ள ஊர்க்காரனாய் இருந்தாலும் 55-60 வயது வரை சதுரகிரி பற்றியே தெரியாது. தற்பொழுது வயது 63. இருபதும் சென்னையில் எனவே, செல்லும் வாய்ப்புக்கிடைக்குமோ இல்லையோ. நேரில் பார்த்த நிறைவைத் தந்தது கட்டுரை. அது சரி, இத்தனை வலைப்பூக்களையும் படிக்க ஒருநாள் போதாதே. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. சந்தன மாகாலிங்கத்தையும் சுந்தர மகாலிங்கத்தையும் தரிசித்து பரவசமடைந்தேன்.

    பதிலளிநீக்கு
  11. parppadharke iyarkkai ezhil kongum idamaga ulladhu
    kangalukku virundhdhaliththa ungalukku enadhu nandri
    vanakkam

    பதிலளிநீக்கு
  12. Ayya,
    நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு
    enathu vendukollukkuu sevimaduthamaikku mikka nandri,
    கோயிலிற்கு again நேரே சென்று வந்த உணர்வு வந்தது. படங்களும் மிக தெளிவு. மிக்க நன்றி.
    Maduraisuki.9442882923

    பதிலளிநீக்கு
  13. நல்ல விவரங்களுடன் கூடிய பகிர்வு ஐயா... புகைப்படங்களும் அருமை.

    பகிர்வுக்கு மிக்க நன்றி. பார்க்க வேண்டிய இடங்கள் எத்தனை எத்தனை...

    பதிலளிநீக்கு
  14. அழகான படங்களோடு ஒரு அருமையான பகிர்வு. மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  15. மிக அருமையான் அனுபவப் பகிர்வுகளுக்கும்,
    அருமையான படங்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.ஐயா..

    பதிலளிநீக்கு
  16. அன்பின் ரத்னவேல் - அருமையான உரை. புகைப்படங்கள் அத்தனையும் அருமை. நேரில் சென்று பார்த்தது போல இருக்கிறது. ஒரு சிறு தகவல் கூட விட்டு விடாமல் அத்தனையையும் அழகாக விளக்கமாக - ஆங்காங்கே எச்சரிக்கைகளுடன் - பகிர்ந்தமை நன்று. மெதுவாகப் படித்து - படங்கள் இரசித்து - மகிழ்ந்தேன். நல்வாழ்த்துகள் ரத்னவேல் - சரவணனுக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  17. நேரில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு..முடிந்தால் அங்கு வரும்போது செல்கிறேன் ஐயா..

    பதிலளிநீக்கு
  18. நல்ல பதிவு. அடுத்து செல்லும் பொழுது, எங்களையும் அழையுங்களேன்?

    பதிலளிநீக்கு
  19. அய்யா,
    அகண்ட பரிபூரண இறைநிலை கொண்ட ஸ்ரீசதுரகிரி பற்றிய உங்கள் பதிவு,அந்தத் தென் திருக்கயிலைக்குப் பயணம் செய்யக் காத்திருப்போருக்கு வழிகாட்டும் சிறந்த பணி.

    தாங்கள் பதித்துள்ள புகைப் படங்களே சதுரகிரியின் முழுமையான தரிசனத்தைத் தந்துள்ளது போன்று என் மனம் நெகிழ்கின்றது.

    குருவருள் கூட்டி வைப்பின்,நான் அங்கு பயணம் செய்ய் வரும்போது உங்களையும் கண்டு மகிழ விரும்புகின்றேன்.

    நீண்ட நாள் வாழ்ந்திருந்து பிறருக்கு உதவும் நற்பணிகள் பலவற்றையும் நிறைவேற்றும் பேற்றினை இறைவன் உங்களுக்கு அருள்வானாக!

    அன்புடன்,
    கிருஷ்ணன்பாலா / 31.10.2011
    http://ulagathamizharmaiyam.blogspot.com
    & http://krishnanbalaa.blogspot.com

    பதிலளிநீக்கு
  20. மிக ரம்மியமான அனுபவம். நானும் ஒரு முறை சென்றிருக்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  21. உங்க கூடவே பயணித்த அனுபவம் சூப்பர் அய்யா, படங்களும் அருவியும் அருமை...!!!!

    பதிலளிநீக்கு
  22. படங்களை பார்க்கும் போதே சிலு சிலுன்னு இருக்கு அய்யா....!!!

    பதிலளிநீக்கு
  23. அழகாகன புகைப்படங்கள்,நல்ல பதிவு!

    உசிலம்பட்டி,M.கல்லுப்பட்டி வழியாக வாழைத்தோப்பு என்ற இடத்திலிருந்து இன்னொரு பாதை உள்ளது,இதன் வழியே சென்றால் தூரம் குறைவு, அதிக ஏற்றத்துடன் மிகவும் திரில்லிங்காக இருக்கும்,

    பதிலளிநீக்கு
  24. இந்த பதிவை நேற்றே படித்து விட்டேன். எனினும், இன்றுதான் கருத்து பதிவு செய்ய இயன்றது.

    பதிலளிநீக்கு
  25. மிக நல்ல பதிவு, நண்பர் நிகழ்காலத்தில் அவர்கள் ஏற்க்கனவே இந்த இடம் பற்றி சொல்லி இருக்கிறார், உங்கள் பதிவிலும் பல பிதிய தகவல்கள் உள்ளது, நன்றி!!! வாழ்த்துக்கள்.............

    பதிலளிநீக்கு
  26. அழகான படங்கள்.விளக்கமான வழிகாட்டுதல். சுந்தரமகாலிங்க தரிசனம் செய்வித்து விட்டீர்கள்.நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  27. தங்களின் இப்பதிவு சதுரகிரி மலைக்கு முதல்முறை வருகிறவர்களுக்கு நல்ல வரைப்படம் போல் அமையும்... அந்தந்த இடத்திற்க்கான புகைப்படங்களையும் இணைத்தது மிக சிறப்பாக உள்ளது... ஐயா...

    பகிர்வுக்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  28. நல்ல விடயத்தை நேர்த்தியான படங்களுடன் நாம் நேரடியாக தர்சித்த உணர்வை உங்கள் பதிவு கொடுக்குது நன்றி ஐயா மறு முறை போகும் போது நிச்சயம் சித்தர்மலைக்கு போகனும் என்ற ஆர்வத்தைக் கூட்டுகின்றபதிவு!

    பதிலளிநீக்கு
  29. பெரும்பான்மையான தென்மாவட்ட இளையவர்கள் சதுரகிரி சென்று வருவதை மகிழ்ச்சியுடன் கவனித்திருக்கிறேன். என் மகனும் சென்று வந்துள்ளார். அது பற்றிய அருமையான பதிவு மனதளவில் புனித பயணம் சென்று வந்த அனுபவத்தை தந்தது. புகைப்படங்கள் மிக அருமை. திரு.சரவணனுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. அருமையான பதிவு நிச்சயமாக சதுரகிரி மலைக்குப் போக வேண்டும். விளக்கங்களும் அழகான படங்களும் அருமை.அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  31. மிக அருமை

    நேரில் பார்த்ததுபோல் இருந்தது

    பதிலளிநீக்கு
  32. நேரில் அழைத்து சென்றது போல் உள்ளது ஐயா
    நன்றி பகிர்வுக்கு


    இப்பதிவு மற்றவர்களுக்கும் சென்றடைய வாக்களித்தேன்

    த.ம 9

    பதிலளிநீக்கு
  33. நீண்ட நாட்களாக சென்று பார்க்கவேண்டும் என்று
    நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு திருத்தலத்தை
    அருமையா விளக்கி சொல்லியிருகீங்க ஐயா.....
    போயிட்டு வந்தது போல இருந்தது..

    பதிலளிநீக்கு
  34. சதுரகிரி சித்தர் மலையை படங்களுடன் விளக்கங்களை அழகாக பகிர்ந்துள்ளீர்கள்... இங்கு செல்ல மனம் ஆவல் கொள்கிறது ஐயா... திரும்பவும் வந்து படிக்கிறேன்..... பகிர்வுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  35. மிக அருமையான பதிவு. படங்களும் அருமை. அதைவிட அருமை உங்களின் உபதேசங்கள். எல்லாமே நச் என்று இருக்கிறது.. முக்கியமாக இந்த வரிகள் `மது பானம் அங்கு வைத்து அருந்தி அங்கு பாட்டில்களை உடைத்து சுற்றுபுற சூழ்நிலையை கெடுக்காதீர்கள். முடியா விட்டால் அங்கு செல்லாதீர்கள். உங்கள் கடவுளை வீட்டிலிருந்தே கும்பிட்டுக் கொள்ளுங்கள்` மிக அருமை. அனைவருக்கும் உரைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  36. நான் ஏற்கனவே சதுரகிரிக்கு சென்று சந்தன, சுந்தர மகாலிங்கத்தை தரிசித்திருக்கிறேன். அப்போழுது அடைந்த அந்த அனுபவத்தை இப்பதிவை வாசிக்கும் பொழுது அடைந்தேன். புகைப்படங்கள் மிக அருமை. உங்கள் பதிவுகள் தொடரட அந்த சுந்தர மகாலிங்கத்தை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  37. ஐயா, நேரில் சென்று தரிசித்ததைப் போல ஒரு உனர்வு. உங்களுக்கும் திரு சரவணன் அவர்களுக்கும் எனது பணிவான நன்றி.

    அன்புடன்
    எம்.கே.குமார்

    பதிலளிநீக்கு
  38. நேரில் தரிசித்ததைப் போல இருக்கிறது ஐயா. உங்களுக்கும் திரு சரவணன் அவர்களுக்கும் நன்றிகள் பல.

    அன்புடன்
    எம்கே குமார்

    பதிலளிநீக்கு
  39. நேர்த்தியான பயணக் கட்டுரை.

    நிறைய பேருக்கு சதுர கிரி மலை செல்ல வேண்டும் என்ற அவா உள்ளது. ஆனால் சரியான விவரங்கள் தெரியாமல் அந்த அவா அப்படியே மனதில் மட்டுமே இருந்து விடுகிறது. இருப்பினும் சதுரகிரி மலை செல்வதற்கென ஒரு பிராப்தம் வேண்டும்.

    தங்கள் மகன் எடுத்துள்ள நிழற்படங்கள் கட்டுரைக்கு மேலும் அணி சேர்க்கிறது.

    இதை 64 பக்க அளவில் ஒரு புத்தகமாக வெளியிட்டால் அனேக பேர் பயனடைவர்.

    வாழ்த்துகள் !

    Advocate P.R.Jayarajan,
    www.sattaparvai.blogspot.com
    www.jayarajan.blogspot.com

    பதிலளிநீக்கு
  40. கால் வலியில்லாமல் மலை ஏறி தரிசித்த சந்தோஷத்தைக் கொடுத்தது இந்தப் பதிவு.. மிக அருமை சார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கும் சரவணனுக்கும்..:)

    பதிலளிநீக்கு
  41. ¾.Áஅருள்மிகு சுந்தர மகாலிங்கம் கோவில் குறித்து
    இத்தனை தெளிவாக அழகிய படங்களுடன் யாரும்
    எழுதியதாகத் தெரியவில்லை
    படிப்பவர்களும் உடன் செல்வது போன்று
    மிக அழகாக பதிவிட்ட்டமைக்கு
    அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி
    த.ம 12 12

    பதிலளிநீக்கு
  42. அழகான படங்களோடு அருமையான பயணக் கட்டுரை...வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  43. படங்களுடன் விளக்கம் அருமை ......வாழ்த்துக்கள் ஐயா மிக்க நன்றி பகிர்வுக்கு .........

    பதிலளிநீக்கு
  44. சந்தன மஹாலிங்கம் கோவில் பற்றிய அரிய தகவலுக்கு நன்றி ஐயா.படங்கள் அற்புதமாக உள்ளன.

    இந்த பதிவு ஏற்றுவதற்கு உதவிய தங்களின் மகனுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  45. உங்களுக்கும் தங்கள் மகனாருக்கும் மனம் நிறைந்த
    நன்றிகள். இந்த மலையும் சுந்தர சந்தன லிங்கங்களையும் மற்ற சுனைகளையும் இனிமைத் தண்ணீரையும் உண்ட நிலை எனக்குக் கிட்டியது.

    போக முடியாத இடங்களுக்கு அழைத்துச் சென்று புண்ணியம் தேடிக் கொண்டீர்கள் ஸ்ரீ ரத்னவேல் ஐயா.

    பதிலளிநீக்கு
  46. மிக அருமையான பயணப்பதிவு... ஒரு நல்ல மலைப்பயண அனுபவத்தை அளித்தமைக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  47. அழகான இடம்- படங்கள் அருமை. கட்டுரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  48. Excellent narration..pictures matching the flow. complete coverage..some I wanted to take pictures of, but could not, have been included and so this becomes a good source. Thanks for the pains taken to share.

    பதிலளிநீக்கு
  49. ஒரு முறை சதுரகிரி சென்று
    வந்திருக்கிறேன். மறுபடியும் செல்லும் ஆசையை தூண்டியிருக்கிறது தங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
  50. arumayana pathivu(www.astrologicalscience.blogspot.com)

    பதிலளிநீக்கு
  51. அன்புள்ள அய்யா அவர்களுக்கு ,

    தங்களது சதுர கிரி பற்றிய பதிவு மிகவும் சுவாரசியமாக இழுத்து செல்கிறது .நானும் ,சதுர கிரி போகவேண்டும் என்று மூன்று ஆண்டுகளாக திட்டமிட்டு வருகிறேன் .ஆனால் ,இன்று வரை கூட்டுவிக்கவில்லை .எல்லாம் ,சுவாமி சுந்தர மகாலிங்கத்தின் செயல் .அவர் என்று என்னை அழைப்பார் என்று தெரியவில்லை .ஆனாலும் ,தங்களின் பதிவு ,எனது மனதில் உள்ள வெற்றிட்டத்தை நிரப்பியது .
    பல கோடி நன்றிகள் உரித்தாகுக .

    அன்புடன்
    தமிழ் விரும்பி

    பதிலளிநீக்கு
  52. எனது நீண்ட நாள் எதிர்பார்ப்பு.. இப்போது படங்களுடன் படிக்க இன்னும் ஆவல் கிளர்ந்தெழுகிறது. என்று அந்த வேளை வாய்க்குமோ.

    பதிலளிநீக்கு
  53. ஐயா,தங்களின் ஆன்மீக பதிவுகளைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  54. வணக்கம் உங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளது

    பதிலளிநீக்கு
  55. மிக அருமை. நீண்ட நாள் ஆசை இந்த மலைக்கு சென்று வர.

    பதிலளிநீக்கு
  56. அய்யா வணக்கம் உங்கள் பதிவை இன்றுதான் என்னால் படிக்க முடிந்தது . படங்களும் விளக்கங்களும் அருமை. இடையிடையே விழிப்புணர்வு கருத்துகளும் சுவை. கணினியில் படித்தால் கண் எரிச்சல் ஏற்ப்படுகிறது. ஆனால் உங்கள் பதிவு நல்ல மருந்தாய் குளுமையை தருகிறது. நன்றி வணக்கம்.

    பதிலளிநீக்கு
  57. ஏன் ஐயா தினசரி நடக்கும் ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகளின் கஞ்சி மடத்தைப் பற்றி மட்டும் எழுத மறந்துவிட்டீர்கள்? அங்கு அன்னதானம் நடப்பது பற்றியும் நவராத்திரி ஆனந்தவல்லி திருவிழா பற்றியும் எழுத விட்டது எனக்கு மிக வருத்தமாக உள்ளது, அதுபற்றிய தகவல் வேண்டுமானால் காளிமுத்து சுவாமிகள் ஆசரமத்தில் அல்லது கோவில் அலுவலகத்தில் விசாரித்து கொள்ளுங்கள் அமாவாசை திருவிழாவிற்கு மேல் ஒருவார திருவிழா அங்கு நடைபெறுவதையும் தாங்கள் நவராத்திரி அழைப்பிதழ் பார்த்தது இல்லைபோலும்
    நண்பர்
    வை,பூமாலை
    சுந்தரபாண்டியம்

    பதிலளிநீக்கு
  58. ஏன் ஐயா தினசரி நடக்கும் ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகளின் கஞ்சி மடத்தைப் பற்றி மட்டும் எழுத மறந்துவிட்டீர்கள்? அங்கு அன்னதானம் நடப்பது பற்றியும் நவராத்திரி ஆனந்தவல்லி திருவிழா பற்றியும் எழுத விட்டது எனக்கு மிக வருத்தமாக உள்ளது, அதுபற்றிய தகவல் வேண்டுமானால் காளிமுத்து சுவாமிகள் ஆசரமத்தில் அல்லது கோவில் அலுவலகத்தில் விசாரித்து கொள்ளுங்கள் அமாவாசை திருவிழாவிற்கு மேல் ஒருவார திருவிழா அங்கு நடைபெறுவதையும் தாங்கள் நவராத்திரி அழைப்பிதழ் பார்த்தது இல்லைபோலும்
    நண்பர்
    வை,பூமாலை
    சுந்தரபாண்டியம்

    பதிலளிநீக்கு
  59. சதுரகிரின் மகத்துவம் உங்களுக்கு தெரியாததல்ல.இணையத்தில் சதுரகிரி என்று நீங்கள் டைப் செய்தால் பல கோடி தகவல்கள் அங்கே கொட்டி கிடக்கும்.
    என்றாலும் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கோரக்கர் என்பவர் சதுரகிரி பயணத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்றும், அங்கிருக்கும் அரிய மூலிகைகளை கண்டு கொள்வது எப்படி என்றும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தன ஏடுகளில் அழுத்தி இருக்கிறார்.

    நமது வலைப்பூவை வாசிக்கும் பக்தர்கள், மற்ற எல்லோரும் பயணம் மேற்கொள்ளும் சாதாரண வழியை மேற்கொள்ளாமல், கோரக்கர் சொல்லிய வழியில் பயணம் மேற்கொண்டால் பல அமானுஷ்யங்களும், ஆச்சிரியங்களும் அங்கே அமையும் என்பது எனது நம்பிக்கை. அந்த பேரொளியில் கலந்த சித்தர்களையும் காண முடியும் என்பதே இந்த வழியின் மகத்துவமே.

    அடுத்த முறை பயணம் மேற்கொள்ளும்போது , கோரக்கர் சொல்லிய வழியில் சென்று நாம் முயற்சித்து பார்க்கலாமே.

    SEE MORE at http://otakoothan.blogspot.in/search/label/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF

    பதிலளிநீக்கு
  60. arpudhamana idangalai veliye thedi selgirom, nam oorilum azagiya matrum adhisaya visayangal irukindradhu, indha vivarangalai vaithu therindhu kolla udhaviya anbaruku mikka nandri.

    பதிலளிநீக்கு
  61. Annachi,ennaku ipothe ooruku vanthu koilku pogavendum pola irukuthu.Thanks for nice pictures Saravana! pularikuthu!!nandri

    பதிலளிநீக்கு
  62. Annachi,ennaku ipove namma orruku vanthu malaiku poganum pola irruku pularikuthu!! thanks for nice pictures Saravana!

    பதிலளிநீக்கு
  63. அழகான பதிவு நேரில் சென்று வந்த உணர்வை தந்தது

    பதிலளிநீக்கு
  64. may god bless all of us!! sarvam sivamayam!!nama shivaya

    பதிலளிநீக்கு
  65. வணக்கம் அப்பா. காலையில் எழுந்ததும் சதுரகிரி மகாலிங்கம் சாமியை தரிசித்து விட்டேன் . நிஜமாகவே சென்று வந்த உணர்வு. வாழ்த்துக்கள் தம்பி..

    பதிலளிநீக்கு
  66. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  67. நானும் சந்தன மகாலிங்கத்தை தரிசனம் செய்தது போன்ற உணர்வு..எளிய நடையில் அருமையான் பதிவு ,நன்றி அப்பா

    பதிலளிநீக்கு
  68. சென்ற ஆண்டு நான் சென்று வந்தேன் ,சதுரகிரியை பற்றி எட்டு வருடம் முன்பு தான் அறிந்தேன் ,மீண்டும் பயணிப்பது போன்ற ஒரு அனுபவம் தங்கள் கட்டுரைதனை படித்தபொழுது

    பதிலளிநீக்கு
  69. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  70. தங்களை வாழ்த்தி வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு
  71. Thank you for the details. The Post refreshed my Mind with memories about this trip.

    Thank you Again Rathnavel Uncle and Saravanan for the Post and Pic.

    பதிலளிநீக்கு
  72. ஒரு முறை சதுரகிரி சென்று
    வந்திருக்கிறேன். மறுபடியும் செல்லும் ஆசையை தூண்டியிருக்கிறது தங்கள் பதிவு.
    +91-7305018180

    பதிலளிநீக்கு
  73. ஒரு முறை சதுரகிரி சென்று
    வந்திருக்கிறேன். மறுபடியும் செல்லும் ஆசையை தூண்டியிருக்கிறது தங்கள் பதிவு.
    +91-7305018180

    பதிலளிநீக்கு