ஞாயிறு, ஜூலை 24, 2016

திருமலாபுரம் என்ற சொர்க்கம்

திருமலாபுரம் என்ற சொர்க்கம்

மகிழ்ச்சி & நன்றி திரு Michael Amalraj

திருமதி Christina Pappu & குடும்பத்தினர்

நன்றி ஈரோடு கதிர் சார் – 2 வருடங்களுக்கு முன்பு குற்றாலம் செல்லுமுன் திரு மைக்கேல் அமல்ராஜ் அவர்கள் வீட்டுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தார்.  அப்போது குடவரைக் கோவில் (திருமலாபுரம் – சேர்ந்த மரம் என்ற ஊர் அருகில் – அருகிலுள்ள பெரிய ஊர் சுரண்டை) பற்றி படம் பகிர்ந்திருந்தார்கள்.  கழுகுமலை தான் குடவரைக் கோவில் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம், எனவே இது புதிய செய்தியாக இருந்தது.  பிறகு ஒரு செய்தியிலும் திருமலாபுரம் குடவரைக் கோவில் பற்றி படித்தேன்.
 
திரு மைக்கேல் அமல்ராஜ் அவர்கள் ஏற்கனவே புத்தகம் அனுப்பியிருக்கிறார், அதில் தொடர்பு, எனவே போன் செய்து கேட்டேன், எப்படி உங்கள் ஊருக்கு வர வேண்டுமென.  இவர்கள் ஊர் எங்கள் ஊர் வத்திராயிருப்பு மாதிரி, பிரதான சாலையிலிருந்து கொஞ்சம் பிரிந்து உள்ளே செல்ல வேண்டியதிருப்பதால் நிறைய பேருடைய கண்களில் இந்த திருமலாபுரம் குடவரைக் கோவில் படவில்லை.

திரு மைக்கேல் அமல்ராஜ் விவசாயி, பொது வாழ்வில் ஈடுபாடுள்ளவர், குற்றால சீசன் சமயங்களில் அங்கு வியாபாரத் தொடர்பு இருக்கிறது, எனவே ஜுன் முதல் செப்டம்பர் வரை அவர் தொழிலில் பிஸி.  அவரது மனைவி திருமதி கிறிஸ்டினா பாப்பு அவர்கள் பள்ளி ஆசிரியை.  எனவே அவர்களுக்குச் சிரமம் இல்லாத சமயங்களில் செல்ல வேண்டுமென நினைத்தோம்.

பஸ்ஸில் சென்றால் எளிது போலும், சங்கரன் கோவிலிலிருந்து சுரண்டை செல்லும் பேருந்தில் - சேர்ந்த மடம் – என்ற ஊரில் இறங்கினால் இவர்கள் ஊர் திருமலாபுரம் அருகில், ஆட்டோவில் சென்று விடலாம்.

எங்களுக்கு பஸ் பிரயாணம் சிரமம்.  எனவே திரு மைக்கேல் அமல்ராஜ் அவர்களிடம் ரயிலில் வந்து ஆட்டோவில் அல்லது பஸ்ஸில் வருகிறேன் என்றேன்.  அவர் சில மாற்று வழிகள் சொன்னார்.

ரயிலில் அல்லது பஸ்ஸில் சங்கரன் கோவில் வந்து அங்கிருந்து சுரண்டை பஸ்ஸில் வந்து சேர்ந்த மடம் என்ற ஊரில் இறங்கலாம்.

ரயிலில் பாம்பக்கோவில் சந்தை வந்து அங்கிருந்து சுரண்டை பஸ்ஸில் வந்து சேர்ந்த மடம் என்ற ஊரில் இறங்கலாம்.

ரயிலில் கடைய நல்லூர் வந்து அங்கிருந்து ஆட்டோவில் திருமலாபுரம் வரலாம், சுமார் 8 – 10 கி.மீ. இருக்கும் என்றார். 

எனக்கு கடைய நல்லூர் மிகவும் பிடித்த ஊர்.  அங்கு எங்கள் இனிய நண்பர் திருமதி பாலபாரதி அவர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்தேன்.  அவர் ஒரு ஆட்டோ நண்பரின் எண் கொடுத்து, அவரிடமும் சொல்லி விட்டு, எனக்கு போன் செய்தார்.  வெளியூர் செல்லும் போது இப்படி நண்பர்கள் வாய்ப்பது கொடுப்பினை.

நாங்கள் 29.5.16 வருவதாக திரு மைக்கேல் அமல்ராஜ் அவர்களிடம் உறுதி செய்தேன்.  காலை எங்கள் வீட்டில் சாப்பிட்டு வந்து விடுகிறோம், மதியம் உங்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு மாலை 3 மணிக்கு திரும்ப ஆட்டோவில் கிளம்புகிறோம்.  கடைய நல்லூர் ரயில் நிலையத்தில் கொஞ்சம் காத்திருந்து 4.20 பாசஞ்சரில் ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்புகிறோம் என்றோம், சரியான திட்டம் தான் என்றார்.

(நண்பர்களுக்கு ஒரு யோசனை, நீங்கள் நண்பர்களைப் பார்க்கச் செல்லும் போது உணவு விஷயத்தில் தெளிவு படுத்தி விடுங்கள், எத்தனை பேர் செல்வீர்கள், உணவுப் பழக்கம், முடிந்த அளவு – சைவமா, அசைவமா, எந்த நேரம் உத்தேசமாக செல்வீர்கள், அங்கிருந்து கிளம்புவீர்கள், உங்களை உபசரிப்பவர்களுக்கும் நிறைய பணிகள் இருக்கும், அவர்கள் வெளியே கிளம்ப வேண்டியது, ஓய்வு எடுக்க வேண்டியது என).

இனி பயணம்:

இவர்களிடம் தெளிவு படுத்தி விட்டோம், இன்றைய பயணம் உங்கள் வீடு மட்டும் தான் என.  கடைய நல்லூர் ரயில் நிலையத்தில் காலை 10.15 வாக்கில் சென்றடைந்தோம்.  திருமதி பாலபாரதி சொல்லியிருந்த ஆட்டோ நண்பர் காத்திருந்தார்.  கடைய நல்லூர் 1 கி.மீ. தாண்டியிருப்போம், வயல்கள் பார்க்க அவ்வளவு பசுமையாக இருந்தன, ஆட்டோ நண்பர் சொன்னார், ஐயா, ஒரு போகம் நெல் அறுவடை செய்து மறு போகம் அறுவடைக்கு தயாராக இருக்கிறதென்றார்.

சிலு சிலு காற்று, ஆஹா, சொர்க்கம் என்றால் இது தான்.

நாங்கள் செல்லும் வழியிலேயே இவர்கள் எல்லாம் இந்த இடங்களைப் பார்க்க வேண்டுமென நினைத்தேன்.

எங்கள் அருமை மகள் தீபா நாகராணி
திருமதி பால பாரதி
திருமதி சக்தி ஜோதி
ஜெய சுதா (தீபன் அம்மா)
பானு சசிந்தனா குடும்பத்துடன்

எங்கள் மகன்கள் குடும்பத்துடன்
ராஜவேல் (புகைப்படங்களுக்காக)
கிர்த்திகா தரன்
எங்கள் மூத்த அண்ணாச்சி மகன் வைரவேல் குடும்பத்துடன்
எங்கள் அருமை மகள் மீனாட்சி குடும்பத்துடன்
திரு கனவுப் பிரியன் குடும்பத்துடன்
திரு கார்த்திக் புகழேந்தி
திரு நாறும் பூ நாதன் சார் குடும்பத்துடன்

ஒவ்வொரு ஊராக கடந்து வந்தது.  ஒரு மலை, மலை மேல் சர்ச் தோன்றியது.  திரு மைக்கேல் அமல்ராஜ் நாங்கள் சென்ற ஆட்டோ எதிர்பார்த்திருந்து நின்றிருக்கிறார், எங்களை அந்த மலைக்கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

அந்த மலை அதிலுள்ள கோவில் எல்லாம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அருமையாக பராமரிக்கப்படுகிறது.  நல்ல இரும்பு பாலம் போன்ற அமைப்பு, அருமையாக பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கிறது, எனவே வெயில் இருந்தாலும் இரும்பு சூடு தெரியவில்லை.  நல்ல கைப்பிடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

உள்ளே உள்ள சிற்பங்கள் படங்கள் எடுத்து ஏற்றியிருக்கிறேன்.  எனக்கு திருப்பரங்குன்றம் கோவிலில் உள்ள சிலைகளை நினைவுபடுத்தின.  ஒவ்வொரு படத்தின் கீழும் முடிந்த வரை எனக்குத் தெரிந்த விபரங்கள் எழுதியிருக்கிறேன்.  மலையிலே ஒரு சுனை இருக்கிறது. அது நல்ல ஆழமான சுனை, 4 அடி அளவுக்கு தண்ணீர் இருக்கும். 

அந்த மலையின் மேலே ஒரு சர்ச் இருக்கிறது. அந்த சர்ச்சில் சனிக்கிழமை வழிபாடு நடக்கும் என்றார்கள்.  நாங்கள் சென்றது ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மக்கள் மலை மேல் செல்வதைப் பார்க்க முடிந்தது. 

அந்த மலையில் நாங்கள் இருப்பதைப் பார்த்து ஒரு நண்பர் வந்தார், அவர் பெயர் திரு பிலிப் செல்வம், புளியங்குடிக்காரர், எங்களுக்கு படங்கள் எடுக்க உதவி செய்தார்.  அவருக்குத் தெரிந்த தகவல்களும் சொன்னார்.

மலைக்கோவிலை பார்த்து விட்டு திரு மைக்கேல் ராஜ் அவர்கள் வீட்டுக்குச் சென்றோம்.  மலையிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் தான் இருக்கும்.  ரம்யமான சூழல்.  மிகவும் குறைந்த ஜனத்தொகை உள்ள கிராமம், 3000 எண்ணிக்கைக்குள் தான் ஜனத்தொகை இருக்கும் என்றார், இவரது கிராமம் ஒரு பஞ்சாயத்தின் கீழ் வருகிறது, அந்த பஞ்சாயத்தில் 4 கிராமங்கள் இருக்கின்றன, எங்கள் ஊர் அதில் ஒரு கிராமம் என்றார்.  தெருக்கள் திரு பாரதி ராஜா படங்களில் உள்ள அமைப்பை நினைவு படுத்துகிறது.  வெயில் தெரியவில்லை, அவ்வளவு சிலுசிலு காற்று. 

திரு ரவி நாக் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எங்கள் வீட்டுக்கு வந்த  போது சொல்லியிருக்கிறார், ஆரியங்காவு கணவாயில் காற்று வருட முழுக்க இருக்குமென்றார், இவர்கள் குடியிருப்பு ஆரியங்காவு கணவாயின் ஒரு பகுதி என்றார்.  அனைவரும் பார்க்க வேண்டிய பகுதி.

இவர் வீட்டின் மாடியில் நின்று பார்த்தால் மலை மேல் உள்ள சர்ச், மலையின் அமைப்பு அருமையாகத் தெரிகிறது.   எங்கு பார்த்தாலும் பறவைகள், கீச் கீச் சத்தம், ஆஹா அருமை.
இவர்கள் வீட்டின் அருகில் ஒரு பழமை வாய்ந்த வீடு, ஜமீன் வழி வீடா என்றேன்.  இந்த ஊர்க்காரர்கள் வீடு தான் என்றார்.  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிவகிரியார் ஜமீன் பங்களாவை (கீழ ரத வீதியில் இருக்கிறது, முன்பு EB Office இங்கு தான் இருந்தது) நினைவு படுத்துகிறது.  சுவரில் அழகாக மயில் படம் இருந்தது.  அற்புதமான மர வேலைப்பாடுகள், நன்கு பராமரிக்க வேண்டிய கட்டிடம்.

அங்கு பீடி சுற்றும் தொழில் கைத்தொழிலாக இருக்கிறது.  முன்பு மாடு வளர்ப்பு சிறப்பாக இருந்திருக்கிறது, இப்போது குறைந்து விட்டது என்றார்கள்.  அனேகமாக எல்லா வீடுகளிலும் மாட்டுத்தொழுவங்கள் இருக்கின்றன.  அங்கு உள்ள செடிகொடிகளும் மிகச் சிறப்பாக இருக்கின்றன.  அங்குள்ள காற்றும், நீர் வளமும் காரணம்.

(சில பெயர் திரிபுகள்:
சேர்ந்த மரம் – முந்தைய பெயர் சேர்ந்த மங்கலம்
சுரண்டை – சரியான பெயர் சுரந்தை – ஆங்கிலத்தில் Surandai என எழுதி சுரண்டையாக்கி விட்டார்கள், சுரந்தை என்றால் நீர் ஊற்று என வரும் என நினைக்கிறேன்.)

(இந்தப் பதிவில் கிட்டத்தட்ட 31 படங்கள் ஏற்றியிருக்கிறேன்.  எண்ணிக்கை கருதி நிறைய குறைத்திருக்கிறேன்.  இந்தப் படங்கள் எடுத்தது எனது மனைவி திருமதி உமாகாந்தி, நேரம் கருதி, வெயில் காரணமாகவும் சில படங்கள் தெளிவாக இருக்காது.  அடுத்து செல்பவர்கள் நன்கு எடுத்து விபரங்கள் சேகரித்து பதிவில் ஏற்ற வேண்டுகிறேன்.  இந்த குடவரைக் கோவில் ஒரு கலைப்பொக்கிஷம்.)

திருமதி கிறிஸ்டினா பாப்பு எங்களுக்காக அருமையான உணவு தயாரித்திருந்தார்கள்.  பாய் விரித்து, வாழை இலையில் பரிமாறினார்கள்.  அருமையான உபசரிப்பு.
 
சரியாக 3 மணிக்கு ஆட்டோ திரும்பி வந்தது.  அங்கிருந்து கடையநல்லூர் வந்து ரயிலில் ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பினோம்.  ஒரு அற்புதமான பயணம், இனிய நினைவுகள், பழமையெல்லாம் கண்டெடுத்தோம், கிராமத்தை உணர்ந்தோம், நல்ல உபசரிப்பை மகிழ்ந்தோம்.

மிக்க மகிழ்ச்சி & வாழ்த்துகள் திரு மைக்கேல் அமல்ராஜ், திருமதி கிறிஸ்டினா பாப்பு & குடும்பத்தினர் அனைவருக்கும்.
































நன்றி நண்பர்களே.



6 கருத்துகள்:

  1. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன் - திருமலாபுரம் என்ற சொர்க்கம்

    மகிழ்ச்சி & நன்றி திரு Michael Amalraj

    திருமதி Christina Pappu & குடும்பத்தினர் - நீண்ட காலங்களுக்குப் பின் எனது பதிவு. நண்பர்கள் படித்து கருத்து பகிர வேண்டுகிறேன். நன்றி நண்பர்களே.

    பதிலளிநீக்கு
  2. Thanks for sharing your beautiful experience and I always appreciate your articles.
    Thank you,
    Balasubramania Ganesa Thevar
    Atlanta, USA

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சென்ற இடத்திற்கு உங்கள் பதிவு மூலம் சென்றோம். அழகான புகைப்படங்கள், வர்ணனை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா
    அழகான முறையில் வழி நடத்தி அழைத்துச்சென்றீர்கள் புகைப்படங்கள் அருமை.
    நண்பர். திரு. கனவுப் பிரியன் அவர்களுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. நன்றாக விவரமாக எழுதுகிறீர்கள் தொடர்ந்து எழுதவும்

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் உங்கள் அனுபவங்களை படங்களுடன் தருவதால் அது எங்களுக்கு நேரில் சென்ற அனுபவத்தை தருகிறது....நன்றி
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு