செவ்வாய், செப்டம்பர் 25, 2012

திரு சொல் கேளான் கிரியை சந்தித்தோம் – அவர் ஒரு பலாப்பழம்


இனிய நண்பர்களே,

எங்களது முகநூல் நண்பர் திரு சொல் கேளான் கிரி அவர்களை சிவகாசியில் நாங்களும் முகநூலில் எங்களுக்கு கிடைத்த எங்கள் அருமை மகன் ராம்குமாரும் சந்தித்தோம்.  அது பற்றிய பதிவு.  உங்களது கருத்துக்களை பதியுங்கள்.  உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.  திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.


திரு சொல் கேளான் கிரியை friend request கொடுத்து நான் அவரது நண்பனானேன்.  அவரது நிலைத்தகவல்கள், அவரது கருத்துக்கள், அவரது விமர்சனங்கள்  எனக்கு மிகவும் பிடித்திருந்தன.  சிவகாசி ஒரு திருமண வீட்டுக்கு வருவதாக தகவல் எழுதியிருந்தார்.  சிவகாசி என்றவுடன், எந்த திருமணத்திற்கு என்று தகவல் கேட்டேன்.  அவர் சொன்ன மணவீடும், நாங்கள் செல்லவிருக்கும் மண வீடும் ஒன்று தான், திருமண வீட்டில் காலையில் சந்திக்கிறேன் என்று தகவல் சொன்னேன்.  அதற்கு அவர் முந்தைய நாள் நிச்சயதார்த்திற்கு இருந்து மறு நாள் காலையில் சென்னை மெரினா பீச்சில் இலங்கைத் தமிழர்களுக்காக மெழுகு வர்த்தி ஏற்றும் நிகழ்ச்சியில் கிளம்புவதாக சொன்னார்.  அவரது கொள்கைப் பிடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  மறு நாள் திருமண வீட்டில் சென்று விசாரித்தேன்.  அவர் எங்களது நெருங்கிய உறவினர் என்று தெரிந்தது; அவரும் உறுதி செய்தார்.

நண்பரின் கவிதைகளைப் பற்றி திரு சுஜாதா அவர்கள் அவரது “கற்றதும் பெற்றதும்” பகுதிகளில் ஒரு தடவைக்கு மேல் குறிப்பிட்டிருக்கிறார், எனக்கு அவர் மேல் உள்ள மதிப்பு இன்னும் கூடியது.

தினமலரில் பின் அட்டையில் அவரது கவிதை வெளியானது.  தினமலரில் கடைசிப் பக்கத்தில் வந்தால் பொதுவாக கவிதை நன்றாக, பொருள் பொதிந்ததாக இருக்கும்.  அவரது கவிதையை தட்டச்சு செய்து, அவரது படத்துடன் எனது பக்கத்தில் வெளியிட்டேன்.  அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.  (இது எல்லோருக்கும் நான் செய்வது தான், நல்ல செய்திகள் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து வெளியிடுவேன், அவர்கள் எனக்கு தெரியாதவர்களாகவும் இருப்பார்கள்).  அவரது  தொலைபேசி எண் கொடுத்தார், எனது எண் வாங்கிக் கொண்டார்.  பின்பு என்னைக் கூப்பிட்டு பேசினார், அவ்வளவு பாசத்துடன் பேசினார், பேச்சில் அவரது இனிமை.  சென்னை வரும் போது அவரது தாம்பரம் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.  அவரது புத்தகங்களை அனுப்பி வைப்பதாகவும், எனது அஞ்சல் முகவரி அனுப்பும்படி கேட்டார்.  நானும் அனுப்பி வைத்தேன்.


நாட்கள் கடந்தன; மறந்து விட்டார் என நினைத்தேன்.  ஒரு நாள் கூரியரில் அவரது கீழ் கண்ட 5 புத்தகங்கள் வந்தன.

நெஞ்சம் மறப்பதில்லை
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
சிரித்து வாழ வேண்டும்
சிந்திக்க வேண்டுகிறேன்
சொர்க்கம் எப்போதும் நம் கையில்
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.  உடனே தொலைபேசியில் புத்தகங்கள் வந்த தகவலை சொல்லி விட்டு, படித்து விட்டு தகவல் சொல்கிறேன் என்று சொன்னேன்.

மதியம் 3 மணியளவில் படிக்க ஆரம்பித்தேன்.  4 புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.  நான் முகநூலில் செய்தி அனுப்பினேன்.  திரு சொல் கேளான் கிரி அவர்களின் புத்தகங்களிலிருந்து அவ்வப்போது செய்திகளை வெளியிடுகிறேன்; கொஞ்சம் கசப்பாக இருக்கும் (உண்மை கசக்கும்), எனவே மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் எழுதுங்கள், தனி மனிதத் தாக்குதல் இருக்கக் கூடாது என்று.


அவரது கருத்துக்களை எனது பக்கத்தில் போடும் போது நிறைய பின்னூட்டங்கள்; நிறைய நண்பர்கள் அவருக்கும் தொலைபேசியிலும், முகநூல் செய்திகளிலும் அவருக்கு தெரிவித்திருக்கிறார்கள்.  அதற்கப்புரம் தான் நான் வெளியிட்ட செய்திகளைப் பார்த்திருக்கிறார்.  எனக்கு போனில் பேசினார்; மிக்க மகிழ்ச்சி தெரிவித்தார். 

அவரது புத்தகங்களைப் பற்றி கருத்து கேட்டார்.  நான் அவருக்கு தனித்தகவல் கொடுத்தேன்.

ஐயா, உங்கள் புத்தகங்கள் வந்த உடன் தொடர்ச்சியாக 4 புத்தகங்களை படித்து முடித்து விட்டேன்.  நிறைய சிரித்தேன்; நிறைய அழுதேன்.  அருமையான புத்தகங்கள் என்றேன்.  (மிகவும் நெகிழ்ந்து விட்டேன்).

எனக்கு 10 செட் விலைக்கு கொடுக்க முடியுமாயின் விலை எவ்வளவு என்று சொல்லுங்கள், பணம் அனுப்பி வாங்கிக் கொள்கிறேன் என்றேன்.  அவர் இது விற்பதற்கு எழுதவில்லை.  நான் எனது வீட்டு விழாக்களில் வழங்குவதற்கு, நண்பர்கள் வற்புறுத்தலின் பேரில் எழுதினேன் என்றார்.

கூரியரில் அனுப்புகிறேன் என்றார்.

இந்த மாத ஆரம்பித்தில் ஒரு நாள் தகவல் கொடுத்தார்; 3ம் தேதி கிளம்பி சிவகாசி வருவதாகவும், 5ம் தேதி காலையில் சிவகாசியில் 11 மணி அளவில் பார்க்க முடியுமா என்று கேட்டார், அன்று மதியம் 2 மணி ரயிலில் கிளம்பி குற்றாலம் செல்கிறேன் என்றார்.

நான் 5 காலை சீக்கிரம் வந்து விட்டு திரும்பி விடுகிறேன் என்றேன்.  வரும்  போது சிவகாசி நண்பர்கள் – திரு ராம் குமார், திரு வைரம் சிவகாசி அவர்களையும் உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன் என்றேன்.  அவர் சம்மதம் தெரிவித்தார்.

நானும் என் மனைவி திருமதி உமாகாந்தியும் 10.30 மணிக்கு வந்தோம்.  சிவகாசி பேருந்து நிலையம் அருகில் பாண்டியன் லாட்ஜில் தங்கி இருந்தார்; ரிசப்ஷனில் சொன்னோம்.  அவருக்கு போன் செய்தார்கள்.  எங்களை அறை எண் சொல்லி செல்ல சொன்னார்கள். 

ஆச்சரியம், எங்களை வரவேற்க அவர் கீழே வந்து விட்டார்; நாங்கள் ஒரு முதியவரை எதிர் பார்த்தோம்.  அருமையாக உடை அணிந்து,  இளைஞர் போல் நடையில் ஒரு வேகம், எங்களுக்கு தாங்க முடியாத ஆச்சரியம்.  50 வயதுக்கு மேல் மதிக்க முடியாது.  மனதில் இளமை, எனவே பார்ப்பதற்கு இளமையாக இருக்கிறார், நடையில் ஒரு துள்ளல்.

எங்களை அழைத்துச் சென்றார்.  அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  பேசிக் கொண்டிருந்தோம்.  திரு ராம்குமாருக்கு போன் செய்தேன்.  வந்து கொண்டிருப்பதாக சொன்னார்.  திரு வைரம் சிவகாசி ஒரு அவசர நிகழ்ச்சி 11 மணிக்கு இருப்பதால் வர முடியவில்லை என்றார்.

திரு ராம்குமார் வந்தார், அவரை அறிமுகப் படுத்தினேன்.  திரு கிரி அவர்களுக்கு ஆச்சரியம், எப்படி இவ்வளவு இளைஞர்களை நண்பர்களாக வைத்திருக்கிறீர்கள் என்று.  எனது பதில்; இப்போது உள்ள இளைஞர்களின் சக்தி மகத்தானது, அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.  எனக்கு முகநூல் அறிமுகப்படுத்தியது எனது அருமை மகன் ராஜவேல், கணினியில் தமிழ் இறக்கிக்  கொடுத்து, எப்படி “அழகி+” ஐ பயன் படுத்துவது திரு ராம் குமார் என்றேன்.  கணினி சம்பந்தமாக எதுவும் சந்தேகம் என்றால் ராம்குமாரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி இவரது போன் எண் அவரிடம் வாங்கிக் கொடுத்தேன்.  ஒரு அருமையான சந்திப்பு.

திரு கிரி அவர்களும் சில நண்பர்களைப் பற்றி, அவர்கள் அருமையாக எழுதுகிறார்கள் என்றார்.  திரு உதயகுமார் (அவர் எனது நண்பர் தான்), செல்வி கண்மணி ராஜன் (பிறகு நண்பரானேன், திரு ராம்குமாருக்கு சொல்லி அவரும் நண்பரானார்), இன்னும் சில நண்பர்கள். 

திரு கிரி அவர்கள் 4 செட் புத்தகங்கள் கொண்டு வந்து அதில் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.  மிக்க மகிழ்ச்சி.

திரு கிரி அவர்கள் 20 வருடங்களாக பாண்டியன் லாட்ஜில் தான் தங்குவதாக கூறினார், நன்கு பராமரிக்கப் படுகிறது, வாடகையும் அதிகமாக இல்லை.  அருகில் பாலாஜி பவன் என அருமையான சைவ உணவு விடுதி இருக்கிறது.  சிவகாசி செல்பவர்கள் இந்த 2 இடங்களையும் பயன்படுத்தலாம்.  எங்களுக்கு இது வரை தெரியாது.

மதியம் சிவகாசிக்கு செங்கோட்டை ரயில் 1 மணிக்கு வரும், எனவே 12.30 மணிக்கு ரயில் நிலையத்தில் இருக்குமாறு கிளப்பி அனுப்பினோம்.  எங்களுடன் மதிய உணவு அருந்த முடியவில்லை என அவருக்கு மிகுந்த வருத்தம்.  அடுத்து நல்ல சந்தர்ப்பம் வரும்; பார்த்துக் கொள்ளலாம் என்றோம்.

திரு கிரி அவர்களைப் பற்றி எல்லோரிடமும் ஒரு வித மாறுபட்ட கருத்து இருக்கிறது.  அவரது பின்னூட்டங்களுக்கு எல்லோரும் பின் வாங்குகிறார்கள் என நினைக்கிறேன்.  அவரது மனதில் பட்டதை எழுதுகிறார்.  எந்த குழு மனப்பான்மையோ, யார் மனதையும் காயப்படுத்த வேண்டும் என்றோ, யாருடனும் பகைமை உணர்ச்சியோ கிடையாது.  எனது பக்கத்தில் திரு கிரி தான் எனக்கு சரியான விமர்சகர்.  எனது பதிவில் “விமர்சனம் செய்பவர்கள்/மாற்றுக் கருத்து சொல்பவர்கள்” எனது நெருங்கிய நண்பர்கள் தான்.

திரு ரவி சாரங்கன், திரு கார்த்திக் லட்சுமி நரசிம்மன், திரு ஸ்ரீ கருடாழ்வான், திரு பிரகாஷ் எம் ஸ்வாமி, திரு சொல் கேளான் கிரி, திரு ராம் குமார், திருமதி ஜோஸ்பின் பாபா = இவர்களிடம் நான் கற்றுக் கொள்கிறேன்; என்னைத் திருத்திக் கொள்கிறேன். (இன்னும் சிலர் விட்டுப் போயிருக்கலாம், பொறுத்துக் கொள்ளுங்கள்).

திரு கிரி அவர்களைப் பற்றி எனது கருத்து.  அவர் பலாப்பழம் போன்றவர்.  அவரது இனிமை பழகிப் பார்த்தால் தான் தெரியும்.

ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியை எழுதுகிறேன்.  சிவகாசியில் இருக்கும் போது அவருக்கு போனில் வந்த செய்தியை காண்பித்தார்.  தேனி நண்பர் ஒருவரை இவர் unfriend செய்திருக்கிறார்; அதற்கு அவர் வருத்தம் தெரிவித்து செய்தி அனுப்பியிருந்தார்; அதை காண்பித்தார்.  இவரும் மிகவும் மனம் வருத்தப் பட்டார்.  இந்த நிகழ்ச்சியை சில நாட்கள் கழித்து தேனி நண்பருக்கு தனிச்செய்தியில் சொன்னேன்.

இவரது கருத்துகள் தீர்க்கமானவை.  இவரைப் பற்றி இவரே சொல்கிறார், சில செய்திகள்:

சொல்கேளான்... பொல்லாதவன்... 
பொய் சொல்லாதவன்... 
நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன் 
வம்புக்கும் தும்புக்கும் போகிறவன்..
எங்கெங்லாம் இருள் இருக்கிறதோ 
அங்கெல்லாம் மெழுகுவத்தியாய் 
ஒளி வழங்குகிறவன்... 
சட்ட ரீதியாகத் தவறு செய்யாதவன்.. 
இரண்டு கவிதைத் தொகுதிகள் 
நான்கு கட்டுரை நூல்கள் எழுதியிருப்பவன்..

உன் அறிவைக் கொண்டு சிந்தி 
என்று சொன்ன பெரியாரையும் 
உலகில் எங்கு அநீதி நடந்தாலும் அதைக் 
கண்டு நீ கோபப்படுகிறாய் என்றால் 
நீயும் நானும் நண்பனே என்று சொன்ன சேகுவராவையும் பாராட்டுகிறவன்.. 

------
இந்த அளவுக்குப் போதுமென்று 
நிளைக்கிறேன். இதற்குள் நீங்கள் வேறு தளங்களுக்கும் வலைப் பக்கங்களுக்கும் 

போயிருப்பீர்கள்..காதல் கவிதைகளைத் தேடி... 

இவரது சில நிலைத்தகவல்கள்

இன்று ஒருசெய்தி படித்தேன்---
“2-ம் வத்திக்கான் சங்கப் பொன்விழாவும்
திருச்சபையில் தலித் வாழ்வும்...அழைப்பு விடுப்பவர்கள்..ஒருங்கிணைந்த தலித் கிறிஸ்துவ இயக்கங்கள்...கூட்டம் 22.09.12... லயோலா கல்லூரி..

--தெரியாமல்தான் கேட்கிறேன்...

தேவனின் திருச்சபையில் எல்லோரும் கர்த்தரின் பிள்ளைகள்தானே.. எங்கிருந்து வந்தது சாதி..?
--பரமபிதாவே ... இவர்களை மன்னியும்.. ஆமென்..


தங்கள் கடவுளை அவமதித்து மனதைப் புண்படுத்தி விட்டார்கள் என்று சாலையில் இறங்கி போராடுகிறார்கள் சில இஸ்லாமிய சகோதரர்கள்...

மக்களுக்கும் பொதுச் சொத்துக்கும் சேதம் விளைவிப்பதைத் தவிர்த்து இறைவனிடம் கையேந்தி வேண்டினால் இறைவன் அவர்களை தண்டித்து விட மாட்டாரா?

எந்த மதத்தினராக இருந்தாலும்... எந்தப் பிரச்சினை களுக்கும் வன்முறையில் ஈடுபடுவது... பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது.. மக்களுக்கு இடையூறு செய்வது போன்ற்வை மிகவும் கண்டிக்கத் தக்கதாகும்...

ஏன் அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது ...காவல் துறையினரை அடி வாங்க வைக்கிறது என்பது புரியவில்லை...?

விநாயகனே....

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்கக் கரிமுகத்து தூமணியே
நீ எம் மக்களுக்கு பகுத்தறிவை மட்டும் தா....

எனது கருத்து:
இவருக்கு யார் மீதும் வெறுப்பும் கிடையாது, விருப்பும் கிடையாது.  எந்த மத சார்பும் கிடையாது, துவேஷமும் கிடையாது.

நாங்கள் அவருடன் எடுத்துக் கொண்ட படங்கள்:



மிக்க நன்றி நண்பர்களே.



17 கருத்துகள்:

  1. ரத்னவேல் ஐயாவுக்கு,

    மிக்க நன்றி ஐயா. ஓரு படைப்பாளியை எங்களுக்கு அறிமுக படுத்தினீர். அவரது புத்தகதை படிப்பதற்கு நானும் ஆவலாக இருக்கிறன். தயவு செய்து எனகு ஒரு ப்ரதி கிடைக்க செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான சந்திப்பு.மனிதர்களைப் புரிந்து கொள்வதற்கும்
    அவர்களின் குணம் நாடி,ஏற்பதற்கும் உயரிய மனோபாவம் வேண்டும்.அது எப்போதுமே தங்களிடம் உண்டு ஐயா.அதை அழகான விதத்தில் பதிவு செய்துள்ளீர்கள்.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. சொல்கேளான் கிரி அவர்கள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது உங்கள் பதிவு மூலம். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு அய்யா! இவர்களைப் போன்ற நட்புக்கள்தான் நம் வாழ்க்கைக்கு இன்னொரு பரிணாமத்தை அர்த்தத்தைக் கொடுக்கின்றன! தொடரட்டும் நட்பு உலா! :)

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு நண்பரை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  6. அன்பின் ரத்னவேல் - நட்பினைத் தேடி நண்பர்களாக்கிக் கொள்ளும் செயல் நன்று. அருமையாக வீள்கக உரையுடன் கூடிய பதிவு. எத்தனை தகவல்கள் உள்ளன. மிக மிக இரசித்துப் படித்தேன். நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. இணையத்தால் உருவான இனிய நட்பு இது,,,

    நல்ல பகிர்வு அய்யா,,,
    இணையத்தால் இவ்வளவு பகிர்வுந்து கொள்ள முடிகிறதே...!

    நன்றி!!

    பதிலளிநீக்கு
  8. நல்ல கண்ணியமிக்க இருவரை சந்தித்தது என் வாழ்வில் நான் செய்த புண்ணியம்.. ஐயா ரத்னவேல் அவர்களை ஏற்கனவே சந்தித்திருந்தாலும், ஐயா சொல்கேளான் கிரியை அப்போது தான் சந்தித்தேன்.. மனதில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தாலும், அவரின் சிரித்த முகத்தில் இருந்து வந்த வெளிப்படையான பேச்சுகள் என் தயக்கத்தை தூக்கி எறிந்துவிட்டன.. இந்த மாதிரி மூத்த அறிஞர்கள், பெர்யவர்களின் நட்பு(!!!) கிடைத்தது என் பாக்கியம்.. இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.. ஐயா சொல்கேளான் கிரி அவர்களின் எழுத்துக்களை (சொர்க்கம் எப்போதும் நம் கையிலே) நேற்றில் இருந்து தான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.. முழுதாக வாசித்து விட்டு சொல்கிறேன்..

    பதிலளிநீக்கு
  9. சொல் கேளான் கிரி என்ற பெயர் ஏன் வைத்தார் என்று எனக்குள் நான் சிந்திப்பதுண்டு. இவர் இப்படிப் பெயர் வைத்தால் இவரது பிள்ளைகள் எப்படி சொல் கேட்பார்கள் என்றும் எண்ணுவதுண்டு.
    மிக்க நன்றி பதிவிற்கு.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  10. இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  11. முகநூல் நண்பர்களின் திறமைகளை மற்றவர்களும் அறிந்து கொள்ள தங்கள் நல்மனதை பாராட்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
  12. தங்களின் நல்லதொரு நண்பரை நாங்களும் தெரிந்து கொண்டோம். நன்றி

    பதிலளிநீக்கு
  13. Thank you so much for introducing him!
    Thanks also for stopping by and commenting on my blog.
    Do visit often! :)
    Indian Fashion n Travel Blogger! - Bhusha's INDIA TRAVELOGUE

    பதிலளிநீக்கு
  14. எனக்கும் நன்கு அறிமுகமான முதலாளி ஆனால் கோபப்படும் முதலாளி...

    பதிலளிநீக்கு
  15. மிகவும் அருமையான சந்திப்பு இல்லையா ஐயா!? ராம் குமார் அவர்களை முகநூலில் பழக்கம் உண்டு!. கிரி ஐயாவையும் அறிந்துகொள்கின்றோம்! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு