செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவண்ணாமலை அருகில் உள்ள தரகுமலை மாதா கோவில்




ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் திருவண்ணாமலை கோவில் இருக்கிறது. அதன் அருகில் (சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில்) பெரிய மலை ஒன்று உயரமாக கம்பீரமாக இருக்கிறது. நீங்கள் மதுரையிலிருந்து வரும்போது கிருஷ்ணன்கோவில் தாண்டினால் ஒப்பிட்டு பார்க்க வசதியாக இருக்கும்.  திருவண்ணாமலை சிறிய மலையாகவும், இந்த மலை உயரமாகவும் இருக்கும். 

தரகுமலை மாதா கோவில் தோன்றிய வரலாறு:
1973 வருட வாக்கில் தரகுமலையில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்த பையன்களுக்கு மலை உச்சியில் மாதா காட்சியளித்ததாக செய்தி பரவியது.  நாளேடுகளிலும், பார்வையாளர்கள் (கேரளாவிலிருந்து நிறைய) வருகையினாலும் இந்த ஸ்தலம் பிரபலமாக்கப்பட்டது.  
முதலில் ஏசு கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்ட சிலை மட்டும் ஒரு பீடத்தில் நிறுவப்பட்டது.  பாதைகள் கிடையாது.  அப்போது நான் உயர ஏறிச் சென்று பார்த்திருக்கிறேன். பிறகு மாதா சிலை நிறுவப்பட்டிருக்கலாம்.  மாதாவுக்கு உகந்த நாள் சனிக்கிழமை என்று சொன்னார்கள்.  மக்கள் திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை செல்வது வழக்கம். அங்கு முன்பு செல்வதற்கு சைக்கிளில் தான் செல்ல வேண்டும்.


நான் இந்த பதிவு எழுதுவதற்கு காரணம் - எனது இனிய நண்பர் கென்யா ராகவன் (மதுரைக்காரர் - எங்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் மேல் தீராக் காதல் கொண்டவர் - ஸ்ரீ வில்லிபுத்தூரைப் பற்றி நிறைய கதைகள் எழுதியிருக்கிறார்.  பதிவுலகில் இருக்கிறார்.  முக நூலில் எனக்கு நண்பர் - நிறைய தடவைகள் என்னுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.  அவர் தம்பி இங்கு இருக்கிறார். ) எங்களது நரிப்பாறை பதிவிற்கு இட்ட பின்னூட்டத்தை பாருங்கள். நான் எழுதிய பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களில் என்னை மிகவும் நெகிழ வைத்த பின்னூட்டம் இது

அன்பு ரத்னவேல் அவர்களுக்கு,

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது... எத்தனை நாளாச்சு தாய் தகப்பனைப் பாத்து, மனைவி குழந்தைகளை பாத்துன்னு ஒரு ஏக்கம் வருமே அது மாதிரி இருந்தது. அந்த பெரியவர்களின் பெயர்கள் வினோதமாயும் அழகாயும் இருந்தது... மதுரைன்னு பேர் பரவலாக புழங்குவது போல, ஸ்ரீவில்லிபுத்தூர்னு ஒரு பேரோ அல்லது பிள்ளையார் என்ற பேரோ நான் கேள்விப்பட்டதே இல்லை... 

அந்த மேற்குத் தொடர்ச்சி மலை, ஆகாசத்துக்கே பாலூட்டுவது போன்ற அதன் திறந்த மாரும், அதன் கீழே தென்னைமரங்களும், திருநாமலையில் இருந்தாலும் தெளிவாய் தெரியும்... நரிப்பாறையின் தொன்மை போலவே அதில் இருக்கும் அந்த பழுத்த பெரியவரின் முகமும். ரொம்பவும் முன்னால் போயிருக்கிறேன்... நரிப்பாறைக்கு, ஆனால் நீங்கள் சொன்னது போல இத்தனை சிறுதெய்வங்களை பார்த்தது இல்லை... அல்லது ஞாபகம் இல்லை... தரகுமலை வேதக்கோயில் பற்றித் தெரியும் ஆனால் போக வாய்த்ததில்லை இது வரை... நீங்க போயிட்டு வாங்க! நாங்களும் போயிட்டு வர்றோம்... பதிவினூடே...

அன்புடன்
ராகவன்
1 ஆகஸ்ட், 2011 6:27 pm 


 http://koodalkoothan.blogspot.com/

 இந்த பதிவை திரு ராகவன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.  அவரது புகைப்படமும் கொடுத்திருக்கிறேன்.  அவரது தளத்திற்கான இணைப்பும் கொடுத்திருக்கிறேன். 
தளத்தின் பெயர் ராகவன்

நாங்கள் நரிப்பாறையிலிருந்து கிளம்பும் போதே கேமரா பேட்டரி முழுவதும் சக்தி இழந்து விட்டது.  அதற்குப் பிறகு எடுத்த படங்கள் எல்லாம் செல் போன் வழியே எடுத்த படங்கள் தான்.  அதனால் இந்த கோவிலுக்கான வலைத்தளத்திலிருந்தும் சில படங்களை எடுத்திருக்கிறோம். 
கோவிலின் வலைத்தள முகவரி.
www.tharagumalaishrine.com



வரும் வழியில் சித்தர் பீடம் என்று ஒரு இடம் இருந்தது.  வெளியிலிருந்து புகைப்படம் எடுத்திருக்கிறோம்.  விபரங்கள் தெரியவில்லை.  பின்பு மாதாமலைக்கு வந்தோம். திருவண்ணாமலையிலிருந்து சித்தர்பீடம் வழியாக மாதாமலை முடிய அருமையான தார் சாலை போடப்பட்டிருக்கிறது.  இது தற்போது தான் போடப் பட்டிருக்கும்.  அந்த புகைப்படங்களை கீழே கொடுத்திருக்கிறோம். 











திருவிழா ஒன்று நடைபெற இருக்கிறது.  அந்த அழைப்பிதழை ஸ்கேன் செய்து இத்துடன் கொடுத்திருக்கிறோம்.  தமிழிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் அச்சடிக்கப் பட்டிருக்கிறது. 

போக்குவரத்து:
 
ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து சித்தர்பீடத்திற்கு திருவண்ணாமலை வழியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை மினிபஸ் இருக்கிறது.  அரசாங்க நகர் பேருந்தும் இருக்கிறது.  அது எத்தனை தடவை வருகிறது என்ற விபரம் தெரியவில்லை.  ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து ஆட்டோ வசதி இருக்கிறது.  திருவண்ணாமலை அடிவாரத்திலும் ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கிறது.  எனவே போக்குவரத்துக்கு பிரச்னை இல்லை.

மலை நல்ல உயரம்.  எனவே வயதானவர்கள் உயரே செல்ல முயற்சி செய்து சிரமப்படாதீர்கள்.  ஒரு பெண்மணி இறங்க முடியாமல் வழியில் இருக்கும் படத்தை பாருங்கள்.

 
இங்கு கடைகள் எதுவும் இல்லை.  எனவே உங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர், நொறுக்குத்தீனிகளை அங்கிருந்தே கொண்டு வந்து விடுவது நல்லது.  பாலிதீன் உபயோகிக்காதீர்கள்.

மலைக்கு உயரே செல்லும் வழி, இடையிலுள்ள சிறு சிறு ஆலயங்கள், உயரே உள்ள ஆலயங்கள், மலையிலிருந்து திருவண்ணாமலை காட்சி, நகர்ப்புற காட்சி அனைத்தையும் கீழே கொடுத்திருக்கிறோம்.





 


இந்த தொகுப்பில் எங்களது பேரன் தீபன் சக்ரவர்த்தியின் படங்களையும்  தொகுத்திருக்கிறோம். இந்த பதிவிற்காக புகைப்படங்கள் எடுத்த எனது தங்கை மகன்கள் - அருண் ஸ்ரீராம், அசோக் குமார் (இரட்டையர்கள்) - அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.





இந்த பதிவை கணினியில் ஏற்ற, இந்த பதிவு மேம்பாட்டிற்காக ஆலோசனைகள் சொல்லும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.



எங்களது அணியினரை திறம்பட நடத்திச் சென்ற எனது மனைவி திருமதி உமாகாந்திக்கு மனப்பூர்வ வாழ்த்துக்களும் நன்றியும்.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை - நிறை குறை - பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  எங்களை சீர்திருத்திக் கொள்ள உதவும்.  உங்களது பெயரை Followers  Widget இல் பதிந்து கொள்ளுங்கள்.  தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்கள்.

உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் அடுத்தடுத்து பதிவு போடும்போது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கே வந்து விடும்.

மிக்க நன்றி.



வியாழன், ஆகஸ்ட் 04, 2011

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

(EMPLOYEES PROVIDENT FUND)
 பிரச்னைகளும் தீர்வுகளும்
பாகம் - 4

குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரங்கள் நகர்ப்புறங்களை சென்றடையவில்லையா?

இது இன்னுமொரு பிரச்னையும் தீர்வும்.  இந்த தொழிலாளியின் மரணம் நடந்தது 4.6.1992 ஆம் நாள்.  அப்போது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில்  தொழிலாளர்கள் இறக்கும்போது வேலையில் இருந்தால் தான் பென்ஷன் வழங்கப்படும்.  குடும்ப பென்ஷன் கிடையாது.  குடும்ப பென்ஷன் திட்டம் 16.12.1995 நாளன்று அமலுக்கு வந்தது.
 
இந்த தொழிலாளர் இறக்கும்போது வயது 39 இருக்கும்.  அவரது மனைவியின் வயது 36.  இவர் இறக்கும்போது ஏழு குழந்தைகள் இருந்தார்கள்.  பெயர் கொடுக்கவில்லை.  வயது விபரங்கள், ஆண், பெண் விபரங்கள் கொடுத்திருக்கிறேன்.

      குழந்தை        -   வயது
  1.    ஆண்       -     18
  2.    பெண்         -      16
  3.     பெண்         -      13
  4.     பெண்         -       9
  5.     பெண்         -       8
  6.     பெண்         -       6
  7.     ஆண்        -     2 
  8.  
யோசித்துப் பாருங்கள். அவரது மனைவியின் வயது முப்பத்தி ஆறு. ஒரு வங்கி வாசலில் வைத்து பழங்கள் விற்றுக் கொண்டிருப்பவர். அந்த தொழிலாளி  இறக்கும்போது ஏழு குழந்தைகள் (இரண்டு ஆண் குழந்தைகள் & ஐந்து பெண் குழந்தைகள்) பதினெட்டு வயதிலிருந்து இரண்டு வயது வரை. அவரது குடும்பத்தின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.  எவ்வளவு பரிதாபம். 

ஒரு கேள்வி.  குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் பெரிய மாநகரங்களில் மட்டும் நின்று விட்டதா?  நகர்ப்புறங்களை சென்றடையவில்லையா? 



மருத்துவ மனைகளில் போய் பிரசவம் பார்க்காமல் வீட்டிலேயே  மருத்துவச்சிகளை வைத்து பிரசவம்  பார்ப்பதால் அரசாங்கத்தின் கண்களில் இருந்து தப்பி விடுகிறதா?  இது ஒரு பெரிய பிரச்னை தான்.  1992 உடன் நின்று விடவில்லை.  இப்போதும் (2011) இருக்கிறது. நான் நேற்று கேள்விப்பட்ட தகவல் கிட்டத்தட்ட ஒரு நாற்பத்தி ஏழு வயது பெண்மணி ஒருவருக்கு ஏழாவது குழந்தை (பெண்) இருபது நாட்களுக்கு முன்பு பிறந்திருக்கிறது.  கேலி செய்யவில்லை.  மிகவும் தீவிரமான பிரச்னை.  அரசாங்கம் மட்டுமல்ல எல்லோரும் கவனிக்க வேண்டிய விஷயம்.

இனிமேல் நமது விஷயத்திற்கு வருவோம்.  அந்த உறுப்பினர் மருத்துவமனை சென்று வரும்போது வழியில் மயக்கம் வரும்போல் இருக்கிறது என்று சொல்லி உட்கார்ந்து இருக்கிறார்.  அப்படியே சரிந்து விழுந்து இறந்து விட்டார்.  எல்லாம் முடிந்த பிறகு எங்களை அணுகினார்கள்.  நாங்கள் எல்லா ஆவணங்களையும் வாங்கி அனுப்பி பென்ஷன் வாங்கிக் கொடுத்தோம். 

அவரது மனைவிக்கும், அவரது முதல் இரண்டு குழந்தைகளுக்கும் பென்ஷன் கிடைத்தது.  ஒரே தடவையில் (at a time) இரண்டு குழந்தைகளுக்கு கிடைக்கும்.  அந்த குழந்தைகளுக்கு இருபத்தைந்து வயது ஆகும் போது அடுத்த குழந்தைகளுக்கு இயல்பாக (automatically) பென்ஷன் வர ஆரம்பிக்கும். 

இது தொழிலாளர்களுக்கு நல்ல ஒரு திட்டம்.  எங்களைப் போன்ற குறைந்த சம்பளம் வாங்கும்  தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு மிகவும்  அருமையான திட்டம்.

தொழிலாளர் பணியில் இருக்கும்போது இறந்தால் மாநில அரசாங்கத்திலிருந்து அப்போது ஈமக்கிரியை செலவுகளுக்காக முன்னூறு ரூபாய் கொடுத்தார்கள்.  இப்போது அந்த தொகை 2500 கொடுக்கிறார்கள்.  அந்த தொகையை ஒரு மொத்தத் தொகையாக (as a lump sum amount) ரூபாய் ஒரு லட்சமாக கொடுக்கலாம். இந்த உதவி 
குடும்பத் தலைவனை/
குடும்பத் தலைவியை/
உழைக்கும் மகனை/
உழைக்கும் மகளை - 
இழந்து நிர்க்கதியாக நிற்கும் குடும்பங்களுக்கு மாபெரும் உதவியாக இருக்கும்.  இதை அரசாங்கமும், தொழிற் சங்கங்களும், தொழிலார்களும் வற்புறுத்த வேண்டும்; கேட்டுப் பெற வேண்டும்.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக எழுதுங்கள்.  உங்களது பெயரை Followers ஆக Google Connect இல் பதிந்து கொள்ளுங்கள்.  Email address என்ற கட்டத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Inbox க்கு வந்து விடும்.





இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவிய திருமதி ரமாமணி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

மிக்க நன்றி.

சனி, ஜூலை 30, 2011

ஸ்ரீ வில்லிபுத்தூரில் நரிப்பாறை - குகைக்கோவில்
(திருவண்ணாமலை அருகில்)

 
ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் மலை மேல் அமைந்த திருவண்ணாமலை கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் (நின்ற கோலத்தில்) கோவில் இருக்கிறது.  அந்த கோவிலைப் பற்றி எழுதும்படி திரு ரவீந்திரன் கிருஷ்ணசாமி (ரிஷி ரவீந்திரன்) அவர்கள் அன்புக் கட்டளையிட்டார் 


அது பற்றி விபரங்கள் சேகரிக்க, புகைப்படங்கள் எடுக்க நாங்கள் 17.7.2011 அன்று சென்றோம்.  கேமரா சற்று பழுதாகி விட்டது.  அனைத்து புகைப்படங்களும் எடுப்பது இயலாது என்று நினைத்தோம்.  எனவே முதலில் மற்றவைகளை எடுப்போம் என்று முடிவு செய்தோம்.  முதல் கட்டமாக நரிப்பாறை என்ற குகைக்கோவிலுக்கு சென்றோம்.  திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் சற்று விலகி இருக்கிறது.  நிறைய வருடங்களுக்கு முன்பு பள்ளிக் குழந்தைகள் (நடந்து செல்லும் காலத்தில்) சுற்றுலா செல்வதற்கு கூட்டிச் செல்வார்கள். நல்ல சோலை மாதிரி இருக்கும்.  பக்கத்தில் உள்ள பம்ப்செட் கிணற்றில் நீர் இருக்கும். குடிப்பதற்கு அங்கு எடுத்துக் கொள்ளலாம்.

நான் அங்கு சென்று நிறைய வருடங்கள் இருக்கும்.  முன்பு செல்லும்போது ஒரு குகை இருக்கும்.  யாரும் அங்கு செல்வதில்லை.
தற்போது நிறைய மாற்றங்கள்.  சோலை போன்ற தோற்றங்கள் போய் விட்டன.  சுற்றிலும் கட்டடங்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் செங்கல் சூளைகள்.  புகை நாற்றம் நிறைய.  ஒரே ஏமாற்றம்.  ஏக்கப் பெருமூச்சு.இனிமேல் கோவிலுக்கு செல்வோம். நரிப்பாறை குகைக் கோவிலுக்கு செல்லும் வழி என்று ஒரு தகவல் பலகை இருக்கிறது. வழியில் சிறு தெய்வங்கள் இருக்கின்றன.



முன்பு சற்று இளைப்பாறுவதற்காக இடம் இருந்தது.  அது இப்போது கோவிலாக மாறி விட்டது.  அங்கு ஒரு பெரியவர் இருந்தார்.  அவர் ஸ்ரீ வில்லிபுத்தூர் என்று சொன்னார்.  எங்களை குகைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.



நான் இது வரை அந்தக் கோவிலுக்குள் சென்றதில்லை. உயரம் கம்மி.  எனவே குனிந்து தான் செல்ல வேண்டியிருந்தது.







 




அங்கு ஸ்ரீதர் சுவாமிகள் படம் நிறுவப் பட்டிருக்கிறது. நாகராஜருக்கு ஒரு சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது.  குகையின் ஒரு மூலையில் அகஸ்தியருக்கும், ஸ்ரீ ராமனுஜருக்கும் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.



 அதற்கு எதிர் மூலையில் ஒரு சின்ன குகை போன்ற அமைப்பு இருக்கிறது.  அந்த இடத்தில் நல்ல காற்று வருகிறது.  அங்கு தீபம் வைக்க சொன்னார்.  அந்த பெரியவரால் அந்த இடத்திற்கு போக முடியவில்லை.  மிகவும் குறுகலான இடம்.  எனது தங்கை மகன் அருண் அங்கு சென்று தீபம் ஏற்றினான்.  

 
அந்த குகையில் நான், எனது மனைவி திருமதி உமா காந்தி, எனது தங்கை மகன்கள் (இரட்டையர்கள்) அருண், அஷோக், எனது செல்லப் பேரன் தீபன் சக்கரவர்த்தி (எங்களது மகள் ஜெயசுதாவின் மகன்(மதுரை)), எங்களது ஆட்டோ ஓட்டுனர் அனைவரும் தரிசனம் செய்தோம்.  எங்களுக்கு இது ஒரு பெரிய கொடுப்பினையாக கருதுகிறோம்.  திரு ரிஷி ரவீந்திரன் அவர்களுக்கு எனது நன்றி.  இந்த பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.  (கேமரா சரியாக இருந்தால் இங்கு வந்திருக்க மாட்டோம் - எனவே எந்த இடையூறும் இடையூறு அல்ல).

அந்த பெரியவரைப் பற்றி:

அவரது பெயர் என்ன என்று கேட்டோம்.  அவரது பெயர் பிள்ளையார் என்று சொன்னார். பத்து வருடங்களாக பேச்சு வராமல் மௌனமாக இருந்ததாகவும் அதனால் மௌன சாமிகள் என்று சொல்வார்கள் என்றும் சொன்னார்.  இயற்பெயர் வெள்ளைச்சாமி என்று சொன்னார்.  எங்களது சத்தம் கேட்டு வந்ததாக சொன்னார்.  அவர் வந்திராவிடில் எங்களுக்கு இந்த குகை அனுபவம், தரிசனம் கிடைத்திருக்காது.  



பின்பு அருகில்  உள்ள கோவிலுக்கு கூட்டி சென்றார்.  அங்கு நித்தியானந்த சுவாமிகள், ஸ்ரீதர் சுவாமிகள், பழனி மூட்டை சுவாமிகள் படங்கள் இருந்தன.  ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.  நல்ல தரிசனம் செய்தோம்.  சற்று கீழே பிள்ளையார் கோவில் இருந்தது.  அங்கு சென்றோம்.
 



 உள்ளே நுழையும்போது புதிதாக மலை மேல் ஒரு கோவில் தெரிந்தது.   அங்கு செல்வோம்.  



பாலசுப்ரமணிய கோவில் என்று இருக்கிறது.  செல்வதற்கு நிறைய படிக்கட்டுகள் இருக்கின்றன.  இந்த கோவில் ஸ்ரீ வில்லிபுத்தூர் சாலியர் சமுதாயத்தினரால் நன்கு  பராமரிக்கப்பட்டு  வழிபாட்டு வருகிறது.  கோவில் மூடியிருந்தது. 



நரிப்பாறையிலிருந்து பார்த்தால் ஒரு பெரிய கட்டிடம் தெரிந்தது.  என்ன என்று விசாரித்தோம்.  அது ஒரு கிறிஸ்தவ கோவில் என்று சொன்னார்கள்.  இந்த பத்து வருடங்களுக்குள் தான் வந்திருக்க வேண்டும்.  அங்கு சென்றோம்.  


அவர்களிடம் அனுமதி கேட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். 
புனித வனச் சின்னப்பர் ஆலயம் என்று சொன்னார்கள்.  கோவில் நல்ல அமைப்பில் இருந்தது.  நன்கு  பராமரிக்கப்பட்டு வருகிறது.  போக்குவரத்து பாதைகளும் நன்கு சீராக உள்ளன.  அந்த புகைப்படங்களை தொகுத்திருக்கிறோம். 
 



மக்கள் நிறைய   வேனில் வந்து மொட்டை அடித்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி, சமைத்து சாப்பிட்டு விட்டு தங்கி செல்கிறார்கள்.


இங்கு முடித்து விட்டு தரகுமலை மாதா கோவில் ஒன்று மலை மேல் இருக்கிறது.  செல்லும் வழியில் சித்தர் பீடம் என்று ஒரு அமைப்பு இருக்கிறது.  இவைகளை புகைப்படம் எடுக்கிறோம்.  விபரங்களை அடுத்த பதிவில் தருகிறோம்.

இந்த பதிவை படித்து விட்டு நிறை குறை எழுதுங்கள்.  Google Connect Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  உங்கள் மின்னஞ்சல் முகவரியை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் புதிதாக பதிவிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே வந்து விடும்.

இந்த பதிவிற்கு புகைப்படங்கள் எடுக்க உதவிய அருண், அசோக் அவர்களுக்கும், இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவிய திருமதி ரமாமணி அவர்களுக்கும் நன்றி.


 மிக்க நன்றி

வியாழன், ஜூலை 28, 2011

வானியல் கட்டுரைகள்
பாகம்-2

 
 
 
திருமதி எஸ்.மோகனா அவர்களின் "பார்த்திருக்கிறீர்களா சிவப்பு நிலா! " என்ற கட்டுரை புதிய தலைமுறை புத்தகத்தில் பக்கம் 54-56 இல் வந்ததை அவர்களது அனுமதியுடன் எனது பதிவில் வெளியிடுகிறேன்.

வெள்ளி, ஜூலை 15, 2011

வானியல் கட்டுரைகள்
பாகம்-1




திருமதி எஸ்.மோகனா  அவர்கள் face book இல், மற்றும் புதிய தலைமுறை பத்திரிக்கையில் வானியல் கட்டுரைகள் மிக அருமையாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  face book இல் உள்ள கட்டுரைகளை எனது பக்கங்களில் நிறைய பகிர்ந்திருக்கிறேன்.  அவர்களை  நீங்கள் பதிவு எழுதலாம், நிறைய பேர் படிப்பார்கள் என்று தொலைபேசியில் சொன்னேன்.  அவர்கள் எனக்கு நேரமில்லை என்றார்கள்.  நான் தங்களது கட்டுரைகளை எனது பதிவில் போட்டுக் கொள்ள அனுமதி கேட்டேன்.  அவர்கள் மனப்பூர்வமாக அனுமதி கொடுத்து விட்டார்கள்.  எனவே அவர்களது கட்டுரைகளை பாகம் பாகமாக வெளியிடுகிறேன்.  face book இல் இருந்து எடுத்ததா? எந்த பத்திரிகையில் எடுத்தது என்ற தகவலையும் குறிப்பிட்டு விடுகிறேன்.

இந்த கட்டுரை 'புதிய தலைமுறை' 16.6.2011 இதழில் பக்கம் 56-58 பகுதிகளில் வெளியாகி இருக்கிறது. திருமதி எஸ்.மோகனா அவர்களுக்கும் 'புதிய தலைமுறை' பத்திரிக்கைக்கும் எங்களது மனப்பூர்வ நன்றி.

வியாழன் வந்திருக்காக, வெள்ளி வந்திருக்காக, மற்றுமுள்ள சுற்றத்தார்  எல்லாம் வந்திருக்காக.

கண்ணால் பார்க்கக் கூடிய அளவிற்கு சில கோள்கள் காலை வானில் தென்படுகின்றன.  இவற்றை நாம் வெறும் கண்ணால் ஜூன் 25 வரை பார்க்கலாம். இப்போது விட்டால் இவற்றை மீண்டும் 2040 இல் தான் பார்க்க முடியும்.

நீல வானின் அழகை ரசிப்பதென்றால் நமக்கெல்லாம் கொள்ளைப் பிரியம் தான்.  அதுவும், நொடியில் தன வண்ணத்தை மாற்றி மாற்றி அழகைக் கூட்டி நம்மைக் கிறங்கடிக்கும் விடிகாலை வானம் என்றால் கேட்கவே வேண்டாம்.  அந்தப் புலரும் காலைப் பொழுதில் இப்போது நமக்கு வேறொரு விருந்தும் நடந்து கொண்டிருக்கிறது.  நம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள், வழக்கத்திற்கு மாறாக ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, வண்ணக் கோளங்களின் ஊடே நடனமாடுகின்றனர். அவர்கள் யார் தெரியுமா? செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக் கோள்கள் தான்.  இவற்றை நாம் எந்தக் கருவியும் இன்றி வெறும் கண்ணால் இன்னும் 15 நாட்களுக்கு பார்க்கலாம்.

எங்க குடும்பம்  ரொம்பப் பெரிசு
 
சூரியக் குடும்பத்தின் நாயகன் பகலவன் தான்.  அதன் குடும்ப உறுப்பினர்கள் அதனை சுற்றித் தான் வருகிறார்கள்.  அதனை முதல் அடுக்கில் சுற்றி வரும் 8 கோள்கள், அவற்றின் துணைக் கோள்கள், அவற்றுக்கு அருகில் உள்ள குள்ளக்கோள்கள் (Dwarf planets), செவ்வாய், வியாழனுக்கு இடையே உள்ள astroid வளையத்தின் விண்கற்கள், கோள்களுக்கு அப்பால் உள்ள குயூபர் வளையம் (Quipper belt), அதனைத் தாண்டி உள்ள ஊர் மேகம் (Oort cloud), அதிலிருந்து புறப்பட்டு அவ்வப்போது வந்து சூரியனை தரிசித்து விட்டுச் செல்லும் வால் மீன்கள் (comets) எல்லாமாய் சேர்ந்தது தான் சூரியக் குடும்பம்.
 
சுற்றும் சூரியன்

அது சரி... எப்படி இந்தக் கோள்கள் காலை வானில் ஒரே நேரத்தில் ஊர்வலம் வருகின்றன?
ஒரு காலத்தில் சூரியன் தான், கடவுள் படைத்த பூமியை மையமாக வைத்து சுற்றுகிறது என நம்பிக் கொண்டிருந்தனர்.  ஆனால், நடக்கும் கதையே வேறு.  சூரியன் தான் தன் ஈர்ப்பு விசையால், தனது கோள்களையும் அனைத்து சூரியக் குடும்பப் பொருள்களையும் தன்னைச் சுற்றி வரச் செய்கிறது.  அனைத்தும் நீள் வட்டத்தில் சுற்றுகின்றன.  இதன் காரணம்,
சூரியக் குடும்பத்தின் 99.85% நிறையை சூரியன் தன்னகத்தே கொண்டுள்ளது தான்.  ஆனால், சூரியக் குடும்பக் கோள்களின் சுற்றுப் பாதையான நீள் வட்டம் ஒரே மாதிரி இல்லை.  ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு சாய் கோணத்தில் சுற்றுகின்றன.  அது மட்டுமா...நாம், பூமி தான் சூரியனை சுற்றுகிறது என அறிவோம்.  ஆனால் சூரியன், தன் குடும்ப உறுப்பினர்களை இழுத்துக் கொண்டு, தனது தாய் வீடான பால்வழி மண்டலத்தை சுற்றி வளம் வருகிறது. எவ்வளவு காலத்தில் தெரியுமா?  ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 22.5 கோடி ஆண்டுகள் ஆகின்றன.  இதனை நாம் ஒரு பிரபஞ்ச ஆண்டு (cosmic year) என்கிறோம்.  ஆனால், சூரியனின் சுற்று வேகம் நொடிக்கு சுமார் 220-250 கி.மீ.

பிரபஞ்சமே சாய்வாக
 
இந்தப் பிரபஞ்சம், பால்வழி மண்டலம், சூரியக் குடும்பம் இவற்றில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் ஒன்று கூட நேராக இல்லை.  அனைத்தும் கொஞ்சம் சாய்ந்தே காணப்படுகின்றன.  பூமி 23.5 பாகை (டிகிரி) தன் அச்சில் சாய்ந்துள்ளது.  சந்திரன் தன் அச்சில் சாய்ந்துள்ளது.  சந்திரன் தன் அச்சில் 6.5 பாகை சாய்ந்துள்ளது.  சூரியன் 7 பாகை சாய்ந்துள்ளது.  புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய எல்லாக் கோள்களும் சாய்ந்தே உள்ளன.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது

'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்று ஒரு பழமொழி உண்டு.  இதன் பொருள், புதன் கிழமை என்பது அல்ல.  புதன் கோளை எளிதில் பார்க்க முடியாது என்பதே.  இது சூரியனுக்கு முதல் அடுக்கில், மிக அருகில் உள்ளதால், சூரியனை 88 நாட்களுக்குள் சுற்றி முடித்து விடுகிறது.  மேலும் இது விடிகாலை வேளையிலும், அந்தி சாய்ந்த நேரத்திலும் தான் தொடுவானின் மேல் அதிகபட்ச 28 பாகை உயரத்தில் தெரியும்.  சூரிய உதயம் / மறைவுக்கு முன்னரோ / பின்னரோ ஒன்றரை மணி நேர அவகாசம் தான் இவரது வருகை.  காலையில் எட்டு வாரங்களும், மாலையில் எட்டு வாரங்களும் தான் தெரியும்.  இந்தச் சுழற்சி, வருடத்தில் மூன்று முறை ஏற்படும்.  இடையில் சில நாட்கள் வானுக்கு வராமல் காணாமல் போய்விடும்.  அதனாலேயே தான், 'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்ற பழமொழி வந்தது.  ஐரோப்பிய வானவியலாளர் கோபர்நிகஸ், என்ன முயன்றும் அவரின் வாழ்நாளில் புதன் தரிசனம் அவருக்கு கிட்டவே இல்லையாம்.

வெள்ளி முளைத்தது

நம் பூமிக்கு முதல் அடுக்கில் உள்ள வெள்ளிக் கோ
ள் தான் நிலவுக்கு அடுத்து இரவு வானில் பிரகாசமாய் வலம் வரும் வான் பொருள்.  இதன் ஒளி சிரியஸ் விண்மீனை விட பிரகாசமானது.  இதுவும் கூட, மாலை வானத்தையும், விடிகாலை வானத்தையும் தன் ஒளியால் மிளிரச் செய்யும்.  சூரியனுக்கு மிக அருகில் வரும்போது, அதன் ஒளியால் எட்டு நாட்கள் நமக்கு தலையைக் காட்டாமல் ஓடி விடும்.  பின் 263 நாட்கள் மாலை வெள்ளியாகவும், பிறகு 263 தினங்கள் விடிவெள்ளியாகவும் காட்சி தரும்.  வெள்ளி அதிகபட்சமாய் 40 பாகை உயரத்தில் காணப்படும்.  இது சூரிய உதத்திற்கு மூன்று மணி நேரம் முன்னும், மறைவுக்குப் பின் மூன்று மணி நேரமும் வானில் இருக்கும்.  1610 இல் கலிலியோவுக்கு முதலில் தொலைநோக்கியில் முகம் காண்பித்த கோள் வெள்ளி தான்.

பெரிய அண்ணாச்சி 

கோள்களின் பெரிய அண்ணாச்சி வியாழன் தான்.  இது பூமியை விட பதினோரு மடங்கும், சனியை விட 20% அளவிற்கும் பெரியது.  வியாழனுக்குள் 1,330 பூமிப் பந்துகளை எண்ணிக் கொண்டே போட முடியும்.  இது சூரியனிலிருந்து பெரும் ஆற்றலைப் போல் இரண்டரை மடங்கு ஆற்றலை, தானே உண்டு பண்ணுகிறது.  அதிகமான துணைக்கோள்கள் உள்ள கோள் இது மட்டுமே.  69 துணைக் கோள்கள்.  ஏராளமான குட்டி துணைக் கோள்கள்.  மற்ற எல்லா கோள்களையும் விட, இது அதிவேகமாய் சுற்றும்.  கலிலியோ இதனையும் தன் தொலைநோக்கியால் கி.பி.1610 இல் பார்த்துப் பதிவு செய்தார்.

காலை வானில் கோள்கள் ஊர்வலம்

சூரியக் குடும்பத்தின் நான்கு கோள்கள் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் இந்த ஆண்டு (2011) மே மாதக் காலை வேளையில் கிழக்கு வானில் வரிசையாகத் தெரிந்தன.  இவற்றை நாம் எந்தக் கருவியும் இன்றிப் பார்த்து ரசிக்கலாம்.  இன்னும் 15 நாட்களுக்கு அவற்றை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம்.

கோள்களை அடையாளம் காண

மேகம் கவியாத வானமாக இருந்தால் நன்கு கோள்களை காண முடியும்.  காலையில் எழு
ந்திருப்பவராக இருந்தால், காலை ஐந்து மணிக்கு கிழக்கு வானைப் பாருங்கள்.  அங்கே, பளிச்சென ஒரு வெள்ளைப்புள்ளி, விண்மீன் போல ஆனால், மினுக்காமல் தெரிந்தால் அது தான் வியாழன்.  இவர் நான்கு மணிக்கே வந்து விடுவார்.  வானில் மிகவும் கூர்ந்து கவனித்தால் அதன் அருகே ஒரு முற்றுப்புள்ளி போல ஒரு புள்ளி தெரிந்தால், அது அதனுடைய துணைக்கோள்.  ஐந்து மணிக்கு மேலே, அடி வானைப் பாருங்கள்.  அங்கே, மிகவும் பிரகாசமாய் மஞ்சள் வண்ணத்தில் ஒரு விண்மீன் போல ஒன்று தெரியும்.  அதுவே வெள்ளிக் கோள்.  விடிவெள்ளி எனப்படுவதும் இது தான்.  நீங்கள் மின்னொளி இல்லாத இடத்தில் இருந்தால் இதன் அருகே, சிவப்பாக ஒரு புள்ளி தெரியும்.  அதுவே செவ்வாய்.  வெள்ளிக்கு கீழே தெரியும் சிறிதான வெள்ளை விண்மீன் போன்ற கோள் தான் புதன்.

காலையில் எழுந்திருக்க சோம்பல்பட்டுக் கொண்டு இந்த அரிய காட்சியைப் பார்க்காமல் விட்டு விடாதீர்கள்.  இப்படியான கோள்களின் சந்திப்பு இனி 2040 இல் தான் நிகழுமாம்.  இதற்கு முன் கி.பி.968 இல் தான் இது போல ஒன்றாக காலை வானை இவை வலம் வந்தனவாம்!
 




இந்த அருமையான கட்டுரையை வெளியிட அனுமதி கொடுத்த 
திருமதி எஸ்.மோகனா அவர்களுக்கு மனப்பூர்வ நன்றி.  
புதிய தலைமுறை பத்திரிக்கையினருக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.
 
 
 
இந்த பதிவினை படித்து உங்கள் வாழ்த்துக்களை திருமதி மோகனா அவர்களுக்கு தெரிவியுங்கள்.  குறை எதுவும் இருப்பின் எங்களுக்கு சொல்லுங்கள்.

இந்த பதிவினை கணினியில் ஏற்ற உதவிய திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.


மிக்க நன்றி.

 

சனி, ஜூலை 09, 2011


ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் ஆற்றில் இறங்கும் திருவிழா

 எங்கள் ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஒரு வித்தியாசம்.  எல்லா ஊரிலும் அழகர் மட்டும் ஆற்றில் இறங்குவார்.
எங்கள் ஊரில் ஸ்ரீ ஆண்டாள் பிரதானம்.  எனவே ஸ்ரீ ஆண்டாளும் கூடவே ஸ்ரீ ரெங்க மன்னாரும் ஆற்றில் இறங்குவார்கள். இந்த வருடம் சித்திரா பௌர்ணமி (18.4.2011) அன்று நடந்த திருவிழாவை புகைப்படங்களுடன் தொகுத்தளிக்கிறோம்