வியாழன், ஜூலை 28, 2011

வானியல் கட்டுரைகள்
பாகம்-2

 
 
 
திருமதி எஸ்.மோகனா அவர்களின் "பார்த்திருக்கிறீர்களா சிவப்பு நிலா! " என்ற கட்டுரை புதிய தலைமுறை புத்தகத்தில் பக்கம் 54-56 இல் வந்ததை அவர்களது அனுமதியுடன் எனது பதிவில் வெளியிடுகிறேன். 
 
 
திருமதி எஸ்.மோகனா அவர்களுக்கும் புதிய தலைமுறை பத்திரிக்கைக்கும் எங்களது மனப்பூர்வ நன்றி.


பார்த்திருக்கிறீர்களா சிவப்பு நிலா!
கடந்த பத்து ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மிக அழகான, ஆச்சரியம் கொட்டிக் கிடக்கும், மிக நீண்ட அருமையான முழு சந்திர கிரகணம் ஜூன் 15 நள்ளிரவில் நிகழ்ந்தது.  அந்த அற்புதத்தைப் பார்க்காமல் தூங்கிப்போய் விட்டவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் இது! கடந்த பத்து ஆண்டுகளில் வந்த முழு நிலா நாளில், நிலவை நம் கண் பார்வையிலிருந்து 100 நிமிடங்கள் மறைத்துக் காட்டிய சந்திர கிரகணம் இது மட்டுமே.  அது மட்டுமல்ல, இதனைப் பார்க்க எவ்விதக் கருவியும் தேவை இல்லை!  வெறும் கண்ணால், நேரிடையாகவே நிலவைச் சந்திக்கலாம்.  கண்ணுக்கு எந்தக் கேடும் நிகழாது.
 
 
 
மேகத்துடன் கண்ணாமூச்சி 
 
ஜூன் 15ம் தேதி இரவு முழு சந்திர கிரகணம்.  காணக் காத்திருந்தோம்.  எங்கும் கருமேகங்கள்.  பழனியில் கிரகணத் துவக்கத்தில் சந்திரன் நம்மைக் காணப் பயந்து கொண்டு, மேகத்தைப் போர்த்திக் கொண்டே திரிந்தது.  பின்னர், அது கொஞ்சம் பயம் தெளிந்து வெளியில் வந்த போது, பூமியின் நிழல் கபாலென்று பிடித்துக் கொண்டது.  நிலா, பூமியின் நிழளிடமிருந்து தப்பிக்கவே முடியவில்லை.  மிகச்சரியாக 11.53 க்கு நிலா, பூமியின் நிழலுக்குள் நுழைந்தது.  எவ்வளவு துல்லியமாக இந்த நேரத்தை வானவியலாளர்கள் கணித்திருக்கிறார்கள் என மனதுக்குள் வியந்து கொண்டேன். அப்போதும் கொஞ்சம் மேகம் மூடித்தான் இருந்தது.  ஆனாலும் கூட, சந்திரன் மேல், பூமியின் நிழல் கவிவதை நன்கு காண முடிந்தது.  லேசாக கறுப்புத் துணியால் நிலவின் கிழக்குப் பகுதி ஓரத்தில் மட்டும் அப்படியே லேசாக வீசியது போல இருந்தது.  பின் லேசாக மேகம் விலகியது.  ஆனாலும் சல்லாத்துணி மேகத்துள் இருந்து கொண்டே, நிலா நமக்கு கண்ணாமூச்சி காட்டியது.  பார்க்க, ரசிக்க, மகிழ அட்டகாசமாய் இருந்தது காட்சி!  மனம் குதூகலத்தில் கொண்டாட்டம் போட்டது.  நான் பார்த்ததுடன், எங்கள் அம்மா, நாத்தனாரையும் அழைத்து வெறும் கண்ணிலும், பைனாகுலர் வழியாகவும் காட்டினேன்.  சந்தோஷித்துப்  போயினர்.  'பாரு! எப்படி பாம்பு, நிலவைப் பிடிக்கிறது.  சனீஸ்வரன் ஒரு நாள் சந்திரனிடம் சபதம் போட்டாராம், எப்படியும் ஒரு நாள் உன்னைப் பிடித்தே தீருவேன் என்று.  அதனை சாதித்துக் காட்டி விட்டார்' என்றார்கள்.  நான் சிரித்துக் கொண்டேன்... இரவில் எதற்கு விவாதம்?
 
வானில் ஓர் வைரமோதிரம் 

 நிலவு கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே பூமியின் நிழல் வீட்டுக்குள் சென்று கொண்டே இருந்தது.  கிரகணம் முழுமையாவதற்கு 3 நிமிடம் முன்பு, சந்திரன் தன்னை  மறைத்துக் கொண்டு, வானில் ஓர் அழகான வைர மோதிரமாய் பளீரென ஒளி வீசியது.  மணி நடுச் சாமம் தாண்டி சரியாக 12.54 A.M.  அப்படியே...முழுமையாக நிலா, பூமியின் நிழலுக்குள் ஒளிந்து கொண்டது.  முழு மறைப்பு நிகழ்ந்ததும்...அப்படியே உலகை இருட்டு கவ்வியது.

வர்ண ஜாலம்

ஜூன் 2 ம் நாள் இரவு 2 மணியளவில் கிரகண சந்திரன் இன்னும் கருமையாக இருந்தது.  பைனாகுலர் கொண்டு, எப்படி அதன் கருமை பரவுகிறது என்று பார்த்தோம்.  முதலில் நிலவின் கால் பகுதி கருமையும், நடுவில் கரும்பழுப்பும், மீதிப்பாகம் சிவந்த மஞ்சளுமாய் இருந்தது.  பின்னர் பாதி கருமை, மீதி பழுப்பும், மஞ்சளுமாய்.......! முடிவில் முழுதும் கிட்டத்தட்ட கருமையாக இருந்தது அழகான காட்சி!

வருகிறது இதை விட நீண்டது

இந்த நீண்ட முழு கிரகணத்தைப் பார்க்கத் தவறி விட்டோமே என ஏங்குபவர்களுக்கு ஒரு தகவல்.  இதை விட நீண்ட முழு சந்திர கிரகணம் 2018, ஜூலை 17 அன்று உருவாக உள்ளது.  இதன் முழு மறைப்பு 103 நிமிடங்கள்.  காத்திருப்போம் கருநிலவைக் காண. 


'பாரு! ப்படி பாம்பு, நிலவைப் பிடிக்கிறது' என்றார்கள். நான் சிரித்துக் கொண்டேன்.
 

முப்பது நாளில் மூன்று கிரகணங்கள் !

2011 ம் ஆண்டில் நிகழ உள்ள ஆறு கிரகனங்களில்  மூன்று கிரகணங்கள்  ஜூன் 1 ம் தேதியிலிருந்து ஜூலை 1 ம் தேதிக்குள் நிகழ்கின்றன.  அதாவது முப்பது தினங்களுக்குள்  மூன்று அற்புதமான விருந்தை வானம் நமக்குப் படைக்கிறது.
 
அதுவும் எப்படித் தெரியுமா? ஜூன் முதல் தேதி நிகழ்ந்தது பகுதி சூரியக் கிரகணம்.  ஜூலை முதல் தேதி நிகழவிருப்பதும்  பகுதி சூரியக் கிரகணம் தான்.  இந்த இரண்டு பகுதி சூரியக் கிரகங்களுக்கு இடையே ஒரு நீண்ட முழு சந்திர கிரகணம்.  அதாவது இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு இடையே, இனிப்பான ஜாம் வைத்த பிரெட் சாண்ட்விட்ச் போல. 

இன்று துவங்கி நேற்று முடிந்த கிரகணம்

ஜூன் ஒன்றாம் தேதி இரவு நடுச்சாமத்தில், துருவத்தின் அருகில் வந்து போனது பகுதி சூரியக் கிரகணம்.  இதில் ஒரு நம்ப முடியாத நிகழ்வும் நடந்தது.  என்ன என்கிறீர்களா?  இந்தக் கிரகணம் மறுநாள் துவங்கி, முதல் நாள் முடிந்தது.  என்னடா இது ஒரே குழப்பமாக இருக்கிறது என்று தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம்.  இந்தச் சூரிய கிரகணம், சர்வதேசத் தேதிகோட்டுக்கு அருகில் ஏற்பட்டது (இந்தக் கோள வடிவ பூமியில் எந்தத் இடத்தில் சூரியன் முதலில் தெரிவதாக கணிக்க முடியும்?  இதைத் தீர்ப்பதற்கு சர்வதேசத் தேதிக்கோடு என்ற கற்பனைக்கோடு ஒன்று புவியின் மீது வரையப்பட்டது. நிஜமாக ஒரு கோடு அந்த இடத்தில் இல்லவே இல்லை.  ஆனால் நாம் போட்ட கற்பனையான, சர்வதேசத் தேதிக்கோடு, வட துருவத்தில், அலாஸ்கா, சைபீரியா இடையே காணப்படுகிறது.  அந்தக் கோடு ஒரே நேராகவும் இருக்காது.  அங்கங்கே, நாடுகள் வரும் இடங்களில் நேரக் குழப்பம் மற்றும் நாட்டின் எல்லைக்குழப்பம் தவிர்க்க, அது கொஞ்சம் வளைந்து, நெளிந்து போகும்.  தென்துருவத்தில் அந்தக் கோடு,  ஆளரவம் அற்ற அன்டார்டிக்கில் முடிகிறது.  இந்தக் கோட்டின் கிழக்குப் பகுதியில் தான், ஒரு நாள் துவங்குகிறது.  அது மேற்கு நோக்கிப் போகிறது.  எனவே தான் நமக்கு இந்தியா/ஆசியர்களுக்கு பகலாக இருக்குகும்போது, அதே சமயத்தில் வட அமெரிக்காவில் நேரம், முதல் நாள் இரவாக இருக்கும்.  இது நாமே உருவாக்கிக் கொண்ட ஓர் ஏற்பாடு).

ஜூன் மாதம் நிகழ்ந்த சூரியக் கிரகணம், வட சீன மற்றும் சைபீரியாவில் ஜூன் இரண்டாம் நாள் நாடு இரவில் துவங்கியது.  ஆர்டிக் பகுதியில் சர்வதேசத் தேதிக் கோட்டை அலாஸ்க அருகே கடந்து வட கனடா அருகே ஜூன் முதல் தேதி முடிந்தது.  இது எப்படி?  சர்வதேசத் தேதிக்கோட்டுக்கு கிழக்கே ஜூன் இரண்டாம் தேதி என்றால், அக்கோட்டிற்கு மேற்கே, ஜூன் முதல் தேதி என்பதால் தான். 
 

 
 
இரவில் வந்த சூரியன்

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், இந்தப் பகுதி நேர சூரியக் கிரகணத்தை, நட்ட நாடு ராத்திரியில் பார்த்திருக்கிறார்கள்.  இரவில் எப்படி சூரியனைப் பார்க்க முடியும்?  வட துருவத்தில் இப்போது இருபத்துநான்கு மணி நேரமும் சூரியனைப் பார்க்க முடியும்.  அதனால் தான், டு இரவில் சூரியக் கிரகணத்தைப் பார்க்க முடிந்தது.  ஸ்காண்டிநேவியா மக்கள், 1985 க்குப் பிறகு, இப்போது தான் ஒரு டு இரவு சூரியக் கிரகணத்தைப் பார்த்தார்களாம்.  இது போல ஒரு சூரியக் கிரகணம், இனி 2084 ம் ஆண்டில் தான் உண்டாகுமாம்.


அங்கே பார்க்க ஆளில்லை 


2011, ஜூலை முதல் தேதி ஒரு பகுதி சூரியக் கிரகணம் வரப்போகிறது.  ஜூலை முதல் நாள் நடக்க உள்ளதும், ஒரு வித்தியாசமான, அரிதான, அபூர்வமான, ஆச்சரியமான, பகுதி சூரியக் கிரகணம் தான்.  இது D என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் இருக்கும்.  இந்தக் கிரகணம், தென் துருவத்தில் நிகழ உள்ளது.  தென் துருவத்தில் இப்போது குளிர் காலம்.  சூரியன் அண்டார்டிக்கா பகுதியில், தொடுவானுக்கு கீழே தான் காணப்படும்.  அங்கு மிகவும் குறைவான பகுதி தான் சூரியக் கிரகணம் தெரியும்.  அப்பகுதியில் இந்தக் கிரகணத்தைக் காண எந்த மனிதனும் இல்லை. 


இந்தக் கட்டுரையைப் படித்து உங்கள் வாழ்த்துக்களை திருமதி மோகனா அவர்களுக்கு சொல்லுங்கள்.  இந்தப் பெருமை அவர்களுக்கு உரியது.
 
குறை நிறைகளைப் பின்னூட்டத்தில் எழுதுங்கள்.


இந்தப் பதிவினை கணினியில் ஏற்ற உதவிய திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.

மிக்க நன்றி.





14 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு.திருமதி மோகனா அவர்களுக்கு உங்கள் மூலம் என் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. சந்திர கிரகணங்கள் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அருமையான, ஆச்சரியமான தகவல்கள். எளிதாக புரியும்படி எழுதப்பட்டுள்ளது. எழுதிய திருமதி மோகனா அவர்களுக்கும், பதிவில் வெளியிட்ட ரத்னவேல் ஐயா அவர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு.... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. எவ்வளவு துல்லியமாக இந்த நேரத்தை வானவியலாளர்கள் கணித்திருக்கிறார்கள் என மனதுக்குள் வியந்து கொண்டேன். //

    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. //இந்த இரண்டு பகுதி சூரியக் கிரகணங்களுக்கு இடையே ஒரு நீண்ட முழு சந்திர கிரகணம். அதாவது இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு இடையே, இனிப்பான ஜாம் வைத்த பிரெட் சாண்ட்விட்ச் போல.//
    இரசிக்கும்படியான நல்ல எடுத்துக்காட்டு. எளிமையான நடையில் எழுதிய திருமதி.எஸ்.மோகனா அவர்கட்கும் வெளியிட்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. அருமையான புதிய தகவல்கள்.....!!!

    மிக்க நன்றி அய்யா......

    பதிலளிநீக்கு
  8. வியப்பேற்றும்
    விண்ணுலக தகவல்கள்
    படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. மிகவும் அறிய தகவலை பதிவு செய்துள்ளிர்கள் பாரட்டுக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. //வட துருவத்தில் இப்போது இருபத்துநான்கு மணி நேரமும் சூரியனைப் பார்க்க முடியும். ..//

    ஆறரை மணிக்கு மேலே வெளிச்சம் இருந்தாலே வியக்கும் நம்மூர்க்காரர்களுக்கு இது வியப்பான தகவல்தான்....
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. "மேகத்துடன் கண்ணாமூச்சி", "வானில் ஓர் வைரமோதிரம் ", "முப்பது நாளில் மூன்று கிரகணங்கள் !","இரவில் வந்த சூரியன் "... ஆகா.. இப்படி உபத் தலைப்புகளே சுவாரசியத்தை மேலும் கூட்டுகின்றது. படைத்தவருக்கும் (திருமதி. மோகனா அவர்கள்), அதை மீள்பதிவு செய்த உங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  12. அருமையான தகவல்கள்.. மிக்க நன்றி...
    காட்டான் குழ போட்டான்...

    பதிலளிநீக்கு
  13. வாசிக்க வாசிக்க அதிசயமும் சுவாரஸ்யமும் !

    பதிலளிநீக்கு
  14. ஆச்சரியமான, சுவாரஸ்யமான தகவல்கள்.. சிவப்பு நிலா இப்போதான் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு