மருத்துவக் கட்டுரைகள் - பாகம் 1
பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் - புற்று நோய் அனுபவங்களை எழுதுகிறார்.
பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்கள் - வானியல் பற்றியும், பிளாஸ்டிக் பற்றியும் எழுதிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தோம். அவர்கள் 25.8.2010 இல் புற்று நோய்க்காக அறுவை சிகிச்சை செய்து அபாரமாக மீண்டு வந்திருக்கிறார். அதற்கு முன் மதுரை மருத்துவமனையில் ஏற்பட்ட அனுபவங்களையும், பின்பு கோவை மருத்துவமனைக்கு சென்றதையும், இடையில் ரேடியேசன் சிகிச்சைக்கு செல்லும்போது சிறுவர் சிறுமிகள் நோயினால் படும் அவஸ்தைகளையும் எழுதியிருக்கிறார். இது கொஞ்சம் பெரிய கட்டுரை. எனவே 2 பகுதிகளாக வெளியிடுகிறோம். எனவே தொடர்ந்து படித்து விழிப்புணர்வு பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.
மார்ச்..8 & 9ம் நாளின்..அனுபவ பகிர்வு..!
by Mohana Somasundram on Thursday, March 10, 2011 at 6:23pm


வணக்கம். நேசமிகு நெஞ்சங்களுடன், நேற்றைய (2011,மார்ச்,9) அனுபவத்தின் நினைவுகள், உணர்வுகள், வேதனைகள், வியப்புகள் என சில பகிர்வுகளை தர எண்ணுகிறேன். . பணமே குறிக்கோளாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில் சில மனித நேய செயல்களும் நடப்பதுண்டு. உயிர்காக்கும் மருத்துவ மனையானாலும் கூட, பணம் இல்லை என்றால், ஒரு நாய் கூட நம்மை மதிக்காது; எந்த உயிரும் காக்கப்பட மாட்டாது. இது எல்லோருக்கும் தெரிந்த நிதர்சனம். நேற்று கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனையில் ஏற்பட்ட ஓர் அனுபவத்தில் நான் மயக்கம் போடாத குறைதான். மார்ச் 4ம் நாள், மருத்துவ பரிசோதனைக்காக , கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனை சென்றேன்.சோதனை முடிந்தது. எனது பல் வேதிசிகிச்சையால் மிகவும் பாதிக்கப்பட்டு, ஒரு வாரமாக பல்வலி. பழனி பல் மருத்துவர்கள், புற்று நோய் நிபுணரின் ஒப்புதலின்றி, எதுவும் செய்ய முடியாது என்றனர்.

நிபுணர் பல் எடுக்க/வேர்க்கால் சிகிச்சை செய்ய ஓகே சொல்லிவிட்டார்.. எதற்கு பிரச்சினை என்று, ராமகிருஷ்ணா மருத்துவ மனையிலேயே பல்லையும் ஒரு கை பார்த்து விடலாம் என எண்ணினேன்.பல் மருத்துவரைக் காண ரூ.150 ௦கட்டி, பல் மருத்துவரிடம் சென்றால், அவரும் சரி என்றார். வேறு சோதனைகள் முடிந்தால் தான், இதனை செய்ய முடியும், பாதி சோதனைகள்தான் முடிந்தன. முடிய ரொம்ப நேரம் ஆகி விட்டது. இரண்டு நாள் சென்று வரலாம் என்று திரும்பி விட்டோம். மீண்டும் மார்ச் 8ம் நாள், சோதனை எடுக்கப்பட்டது. அன்றும் பல்லைக் காண்பிக்க வெளி நோயாளி சீட்டு ரூ.150 க்கு வாங்கினேன். பார்க்கவில்லை, காரணம் சோதனை முடியவே நேரமாகிவிட்டது. மீண்டும் நேற்று கோவை படையெடுப்பு. பல் மருத்துவரிடம் போய், கோகுலின் சீரிய ஆலோசனையுடன், எடுத்தேவிடலாம் என முடிவாய் போனால், அவர் சொன்னதில் நான் மூர்ச்சையாகி, கீழே விழாமல் இருந்தது ஆச்சரியமே..! அப்படி என்ன என்கிறீர்களா?
இந்த மருத்துவ மனையில், ஒரு முறை வெளி நோயாளி சீட்டுக்காக ரூ 150 கட்டிவிட்டால், அடுத்த 15 நாட்களுக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் அந்த மருத்துவரை நீங்கள் பார்க்கலாமாம். என்ன நம்பும்படியாகவா இருக்கிறது.? ஆனால் உண்மை நண்பா..! அது மட்டுமல்ல, அவர் சொன்னதில், அதிர்ச்சியில் இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது.! என்ன தெரியுமா? "பல்லைப் பிடுங்க ரூ.200/- வாங்குவோம். நீங்கள் ஏற்கனவே அதிகமாய் ரூ 150 கட்டிவிட்டதால், அதனை கழித்துக் கொள்கிறோம். பாக்கி 50 மட்டும், பல்லை எடுத்துவிட்டு போய் பணம் கட்டுங்கள்" என்றார். எப்படி இருக்கும்? என்னடா உலகம் இது ? உண்மைதானா..! நம்பவே முடியவில்லை. மரத்துப் போவதற்கான ஊசி போட்டார். 2 நொடிக்குள் மரத்துப் போய்விட்டது. உடனேயே பல்லையும் பிடுங்கிவிட்டார், வலியும் தெரியவில்லை. அனைத்தும் அதிக பட்சம் 5நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டது. எவ்வளவு அவசரம், ஆபத்தான நிலைமை என்றால் கூட, கையிலே காசு, வாயிலே தோசை என்னும் மருத்துவ மனைகள் மத்தியில்,மக்களுக்காக, மனித நேயத்துடன் பணிபுரியும் .. இப்படி ஒரு மருத்துவ மையம்..! அதுவும், நேற்று அதிகம் கட்டிவிட்டீர்கள், இன்று குறைத்து கட்டுங்கள் என்று..!

இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட இரட்டை பெண்குழந்தைகள். ரிது, ரிஷிகாவின் இரண்டாவது பிறந்த நாள், மருத்துவ மனையில்..

கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனை இன்னொரு உயிர் காக்கும்
சேவையையும் சத்தமின்றி செய்கிறது. பூவுலகின் பூத்த சில பிஞ்சுகளின் இரத்த புற்று நோய்க்காக இலவச மருத்துவம் செய்கிறது. ஆமாங்க..! இரத்த புற்று நோய் வந்த மலர்களின் பெற்றோர்கள்/உடனிருப்போருக்கும் சேர்த்து உணவு, உறைவிடம், பாலகர்களுக்கான அனைத்து மருந்துகளையும், பணமின்றி கொடுக்கிறது இந்த மருத்துவ மனை நிறுவனம்.! இப்போது 9 குழந்தைகள் உள்ளன.

உலக புற்று நோய் தினத்தன்று, ஓவியம் தீட்டப்படும், பாதிப்புள்ள பிஞ்சு
அவர்களுக்கு பொழுபோக்கு பொருள்களும் உண்டு. அவர்கள் மிகவும் அன்புடனும், ஆதரவுடனும், கவனிப்புடனும் பார்த்துக் கொள்ளப் படுகிறார்கள். இதைப் பற்றிய தகவளும் இந்த வார விகடனில் வந்துள்ளது. நேற்று 2 வயது பெண் குழந்தை ஒன்றை x கதிர் அறையில் பார்த்தோம். வாய்,மூக்கில் குழாய்கள்..! அருகிலிருந்த தந்தையிடம்,,என்ன சார் விஷயம் என்றால், அவர் கண்களில் நீர் ததும்ப, ஒரு வருடமாய் இரத்தப் புற்று என்கிறார் . நம் கண்ணிலும் நீர் திரண்டது.

பாவம் அந்த ஏதும் அறியாத குழந்தை..!நான் வேதிசிகிச்சைக்காக அங்கு தங்கியுள்ள சமயங்களில் அந்த குழந்தைப் பார்த்து படம் எடுக்க நினைப்பேன். பக்கத்தில் பெற்றோர்கள்..! எப்படி எடுக்க? மூன்று வயது சிறுவன், வேதிசிகிச்சை நடைபாதையில் ஓடியாடி விளையாடித் திரிகிறான்.

தலையில் முடி கொட்டி இருக்கிறது. இரத்தப் புற்று நோய்தான்..! புற்று நோய் சிகிச்சை மையம்/அந்த வார்டுக்குப் போனாலே, மனம் கனத்துப் போய்விடுகிறது.
தொடரும்.....
இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவும், மற்றும் எங்களது பதிவு மேம்பாட்டிற்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றியும், வணக்கமும்.
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுதுங்கள். தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். உங்கள் பெயரை Google Connect Widget இல் பதிந்து கொள்ளுங்கள். உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு இடும்போது உங்களது மின்னஞ்சல் பெட்டிக்கு வந்து விடும்.
மிக்க நன்றி.














































