வெள்ளி, மே 27, 2011


                    
                   காக்கை குருவி எங்கள் ஜாதி  

 எங்கள் உறவினர் திரு தங்கராஜ் சிவகாசியில் பறவைகளுக்கு தினந்தோறும் வீட்டு மொட்டை மாடியில் தான்யங்களும் தொட்டியில் நீரும் கடந்த மூன்று வருடங்களாக வைத்து பராமரித்து வருகிறார்.  இது எளிய செய்தியாக இருக்கும்.  நேரில் பார்த்தால் அதில் உள்ள சிரமங்களும், அவரது குடும்பத்தினரின் ஒத்துழைப்பும், அவரது விடா முயற்சியும் தெரியும்.

நாங்கள் உங்களை சிவகாசிக்கு திரு தங்கராஜ் வீட்டிற்கு அழைத்து செல்கிறோம்.  சிவகாசியில் விருதுநகர் புறவழிச் சாலையில் சுப்ரமணியபுரம் பகுதியில் அமைந்திருக்கிறது.  நமது களம் வீட்டின் இரண்டாவது மாடி - மொட்டை மாடி - 25' X 25' - சுற்றிலும் உயர்ந்த கட்டிடங்கள் உள்ளன.  பக்கங்களில் நிறைய மரங்கள் உள்ளன.  மாடியில் பெரிய நீர்த் தேக்கம் ஒன்று வைத்திருக்கிறார், உபரியாக சின்டெக்ஸ் நீர்த்தேக்கம் ஒன்றும் வைத்திருக்கிறார்.  மாடிச் சுவரில் பறவைகள் நீர் அருந்துவதற்காக இரண்டு சிமின்ட் தொட்டிகள் வைத்திருக்கிறார்.  

அளவு இரண்டு அடி நீளம், ஒரு அடி அகலம், அரை அடி ஆழம்.  இவை பறவைகளுக்காக தேடிப் பிடித்து விசேஷமாக ஆர்டர் கொடுத்து வாங்கப் பட்டவை.  பிளாஸ்டிக், மற்றும் இரும்பு தகடுகளில் செய்தால் தண்ணீர் சீக்கிரம் சூடாகி விடும்.  பறவைகள் நீர் அருந்த வராது என்கிறார்.

அந்த மூலையிலே ஒரு தண்ணீர் குழாய் அமைத்திருக்கிறார்.  தரை முழுவதும் பாருங்கள்.  தான்யங்கள் சிதறிக் கிடக்கின்றன.  அரிசி, கோதுமை முதலியன.



















இவர் பறவைகளை பராமரிக்க வேண்டும் என நினைத்திருக்கிறார்.  ஒரு பாத்திரத்தில் தான்யங்களை வைத்துப் பார்த்திருக்கிறார்.  பறவைகள் நீர் மட்டும் அருந்தி விட்டு சென்று விடுகின்றன.  ஒரு நாள் இவரது குழந்தைகள் விளையாட்டில் தான்யங்கள் பாத்திரங்கள் கொட்டி தான்யங்கள் சிதறி விடுகின்றன.  மறு நாளிலிருந்து பறவைகள் தான்யங்களை பொறுக்க ஆரம்பிக்கின்றன.  அதிலிருந்து தான்யங்களை விதை விதைப்பது போல் தூவ ஆரம்பித்து விட்டார்.

காலை ஆறு மணியிலிருந்து பத்தரை மணி முடிய காகங்கள் வரும், நீர் அருந்தி விட்டு தான்யங்களை பொறுக்கிவிட்டு செல்லும்,  விசேஷமாக வடை வாங்கி சிறிய துண்டுகளாக பிய்த்து மேலே சிமின்ட் கிராதி மேல் தூவுகிறார். காகங்கள் விரும்பி உண்கின்றன.  இவர் சற்று தாமதமாகி விட்டால் காகங்கள் கரைகின்றன.  இவரை ஞாபகப் படுத்துகின்றன.  இதற்கு இவரது குழந்தைகள் - ஸ்வேதா, ஸ்வாதி - ஒத்துழைப்பும், ஆர்வமும் அதிகம்.

பறவைகளுக்காக இவர் மொட்டை மாடியை உபயோகிப்பதும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் - காலை பத்தரை மணி முதல் மதியம் ஒன்றரை மணி முதல் - துணிகள் காயப்போடுவது, வடகம், கோதுமை போன்ற தான்யங்கள் காயப் போடுவது, குழந்தைகள், பெரியவர்கள் நடமாட்டம் போன்றவை.  உணவுப் பொருட்கள் காயப் போட்டால் கருப்பு துணி விரித்து காயப் போடுகிறார்கள்.  பறவைகள் கருப்பு நிறத்திற்கு வராது என்கிறார்.

இன்று (22.5.11) ஞாயிற்றுக் கிழமை மதியம் சுமார் மூன்று மணி இருக்கும்.  மொட்டை மாடி காலியாக இருக்கிறது. 

பறவைகள் ஆள் நடமாட்டம், ஏதாவது அசைவுகள் இருந்தால் இறங்காது என்பதால் நாங்கள் மூடிய கதவிற்கு பின்னால் நின்று கொண்டு கிராதியின் துவாரங்கள் வழியாக பார்த்துக் கொண்டு காத்திருக்கிறோம்.  மெதுவாக ஒரு புறா மட்டும் சுவரில் வந்து அமர்கிறது. 

 படிப்படியாக எதிரில் உள்ள சுவரில் மற்ற புறாக்கள்  காத்திருக்கின்றன.  இந்த ஒற்றைப் புறாவின் சைகைக்காக காத்திருக்கின்றன.  இடையிடையே காக்கைகள் வந்து தண்ணீர் குடித்து விட்டு, சில குளித்து விட்டும் செல்கின்றன.  அணில்கள் வந்து தான்யங்களை சாப்பிட்டு விட்டு தண்ணீர் அருந்தி விட்டும் செல்கின்றன. 


அணில் இரண்டு கால்களில் உட்கார்ந்து கொண்டு இரண்டு கால்களில் சாப்பிடும் அழகு அழகு தான்.

நிறைய நேர காத்திருப்பிற்குப் பின் ஒரு புறா இறங்குகிறது.  பின் படிப்படியாக இறங்குகின்றன.  ஒரே தடவையில் கிட்டத்தட்ட நாற்பது புறாக்கள் வரை இறங்குகின்றன. 


 கிட்டத்தட்ட நான்கைந்து வகைகள் இருப்பது போன்று தெரிகின்றது. ஆண் புறா சற்று பெரிதாக இருக்கின்றது.  கம்பீரமாக இருக்கின்றது.  கூட்டமாக இரை எடுக்கும்போது ஆண் புறா சுற்றிச் சுற்றி வந்து காவல் செய்வது போல் கம்பீரமாக வருகிறது.  பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது.  படங்களை பாருங்கள்.  

ஏதாவது சாலையில் வண்டிச் சத்தமோ ஏதாவது வெடிச் சத்தமோ ஏதவாது பாத்திரங்கள் விழும்போது உள்ள சத்தங்களோ கேட்டால் உடனே கூட்டமாக கிளம்பி விடுகின்றன.  ஒரே தடவையில் உடனே கிளம்பி விடுகின்றன.  பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

 கரிச்சான் குருவி, சிட்டுக் குருவி, மைனா, காகங்கள், அண்டங்காக்கா போன்ற பறவைகள் வருகின்றன.  தற்போது மயில்களும் காலையில் வருகின்றன என்றார்.  படங்களை பாருங்கள்.
 




















திரு தங்கராஜைப் பற்றி, இவர் எனது மூத்த தமக்கையின் மகன்.  படிப்பு என்னைப் போல் பத்தாவது வகுப்பு தான்.  பிறந்த ஊர் சிவகாசி.  சிவகாசி என்றாலே சுறுசுறுப்பு தான்.  இந்த மண்ணை மிதித்தாலே சுறுசுறுப்பு உங்களை பற்றிக் கொள்ளும்.  வந்து பாருங்களேன்.  இங்குள்ள மக்கள் எப்படி இருக்கின்றார்கள் என்று.  இரவும் பகலும் சந்தோசமாக உழைத்துக் கொண்டே  இருப்பார்கள்.  இந்தியா முழுக்க சுற்றி வருவார்கள்.  எனவே வெளியே உள்ள மாறுதல்கள், கட்டிடக்கலை, துணி வகைகள், ஆபரணங்கள் போன்றவைகள், புதிய வாகனங்கள் இங்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.  எளிமையான வாழ்க்கை, கடுமையான உழைப்பு, நல்ல வாழ்க்கை தரம், படிப்பிற்கு உதவுவது, தொழிலாளர்களுக்கு உதவுவது - கிட்டத்தட்ட ஒரே குடும்பம் போன்று தான் இருப்பார்கள் -  நாம் இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

இவர் மின்சார வயரிங் சம்பந்தப்பட்ட சிறிய தொழிற்சாலை வைத்திருக்கிறார்.  இவரது மனைவியும் சேர்ந்து கவனித்துக் கொள்கிறார்.  கீழே தொழிற்சாலை, மாடியில் வீடு.  மதியத்திற்கு பிறகு இவருக்கு வேலையும்  சேர்த்து  பறவைகளைக் கவனிப்பதுவும் ஒரு வேலை தான்.  இரண்டரை மணிக்குப் பிறகு மணிக்கொரு தடவை மாடிக்குப் போய் பறவைகள் சாப்பிட சாப்பிட தான்யங்களை தூவி விட்டு,

 தண்ணீர் குறைந்தால் பக்கத்துக்கு குழாயிலிருந்து பிடித்து ஊற்றி விட்டு வருகிறார்.  இந்தப் பணி ஆறரை மணி வரை நடக்கிறது.  தினந்தோறும் இவரே தொட்டிகளை கழுவி தண்ணீர் மாற்றி விடுகிறார்.  மூன்று நாட்களுக்கு ஒரு முறை மொட்டை மாடியை நன்கு பெருக்கி சுத்தம் செய்கிறார்.  இவர் வேலைக்கு வெளியில் செல்ல வேண்டியிருந்தால் இவரது மனைவி இந்தப் பணியை செய்கிறார்.  இவர்கள் குடும்பத்துடன் வெளியில் செல்ல வேண்டியிருந்தால் தண்ணீர் மாற்றி விட்டு தான்யங்களை நிறைய போட்டு விட்டு செல்கிறார்கள்.இரண்டு மூன்று நாட்கள் செல்ல வேண்டியிருந்தால் பக்கத்து வீட்டுக்காரர்களை பார்த்துக் கொள்ளச் சொல்லி செல்கிறார்கள்.  குழந்தை வளர்ப்பு போல் கவனித்துக் கொள்கிறார்கள்.

தினந்தோறும் கிட்டத்தட்ட மூன்று கிலோ அரிசி, அரைக் கிலோ கோதுமை, மற்றும் வடை முறுக்கு (மாற்றி மாற்றி) கொடுத்து வருகிறார்.  இந்தச் செலவு இவருக்கு பெரிதல்ல. 

இவரது பொன்னான நேரமும், இவர்களது குடும்பத்தினரின் ஒத்துழைப்பும், இவரது அர்ப்பணிப்பு உணர்வும் தான் போற்றத் தக்கது.  நாங்கள் இவரையும் இவரது குடும்பத்தினரையும் சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறோம்.

மற்றுமொரு செய்தி - ஒரு ஊனமுற்ற காக்கை வாடிக்கையாக வந்து நீர் அருந்தி செல்கிறது.

  சில நேரம் நோயுற்ற காக்கை, அணில்கள் அந்த சின்டெக்ஸ் தொட்டி அருகில் வந்து இருக்குமாம்.  இவர் அதற்கு தனியாக தண்ணீர், உணவு வைப்பாராம்.  இரண்டு மூன்று நாட்கள் கூட தொடர்ச்சியாக இருக்குமாம்.  சரியானவுடன் சென்று விடுமாம்.  மரணமடைந்து விட்டால் அப்புறப் படுத்தி விடுவாராம்.  பறவைகளுக்கும் அணில்களுக்கும் இவருக்கு பாசப் பிணைப்பு அப்படி இருக்கிறது.

இந்த பதிவு ஒரு ஞாயிறு மாலைப் பொழுது முழுவதையும் எங்களுக்கு ஒதுக்கி எங்களுக்கு வசதி செய்து கொடுத்த திரு தங்கராஜ் குடும்பத்தினருக்கும், எனது மனைவி திருமதி உமாகாந்திக்கும்,

 எனது மனவோட்டத்தை புரிந்து புகைப்படங்கள் எடுத்த (கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் அந்த கதவிற்கு பின்னால் நின்று) எனது பாசப்பிள்ளை ராஜவேலுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

உங்களுக்கு ஒரு வேண்டுகோள் - முடிந்தால் நீங்களும் உங்களது வீட்டு மொட்டை மாடியில் ஒரு சிமின்ட் தொட்டியில் நீர் வைத்து உணவுகளும் கொடுத்து (தான்யங்கள் அல்லது சோறு) பறவைகளை பராமரியுங்கள்.  ஏதாவது விபரங்கள் தேவைஎன்றால் என்னை தொலைபேசியிலோ மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.  நான் அவரிடம் கேட்டு உங்களுக்கு முடிந்த உதவி செய்கிறேன்.

இந்த பதிவை படித்து நிறை குறை ஆலோசனைகள் எழுதுங்கள்.

                                                                    மிக்க நன்றி.



வியாழன், மே 19, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரில் சந்தனமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா


  
 ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு சிறப்பு சந்தனமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா.  இந்த திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் (அநேகமாக ஏப்ரல் அல்லது மே மாதம் வரும்) அமாவாசை அன்று நடைபெறும்.  கிட்டத்தட்ட 5000  பேருக்கு மேல் அன்று பூக்குழி இறங்குவார்கள்.  
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்தும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் மம்சாபுரம், மீனாட்சிபுரம், ரெங்கநாதபுரம், திருமலாபுரம், வத்திராயிருப்பு, மற்றும் ராஜபாளையம் போன்ற இடங்களிலும் இந்த ஊர் மக்கள் வெளியூரிலிருந்தால் அங்கிருந்து வந்து கலந்து கொள்வார்கள்.  யாதவ பெருமக்கள், தேவர் இன மக்கள், விஸ்வகர்மா இன மக்கள், பிள்ளைமார் இன மக்கள், சாலியர் இன மக்கள் ஆகிய மக்கள் இந்த பூக்குழி இறங்குவதில் கலந்து கொள்கிறார்கள்.

   பூக்குழி திருவிழாவிற்கு 13  நாட்கள் முன்னால் கோவிலில் கொடி ஏற்றுகிறார்கள்.  அன்றிலிருந்து திருவிழா தொடங்கி விடுகிறது.  தினந்தோறும் அம்மனை அலங்காரம் செய்து வீதி உலா எடுத்து செல்கிறார்கள். இந்த திருவிழாக்கள் அனைத்தும் யாதவ பெருமக்களால் நடத்தப்பெறுகிறது. இந்த பூக்குழி திருவிழா 2.5.2011 அன்று நடைபெற்றது.  
உங்களை திருவிழாவிற்கு அழைத்து செல்கிறோம்.  பொதுவாக மாரியம்மன் கோவில்கள் எல்லாம் நீர்க்கரை ஓரங்களிலும் வயல்களிலும் கண்மாய்க்கரை (a big water tank - in some areas they call it us ஏரி) ஓரங்களிலும் அமைந்திருக்கும் என்று திருமதி.தேச மங்கையர்க்கரசி தங்களது சொற்பொழிவுகளில் சொல்வார்கள். இந்த கோவிலும் பெரியகுளம் கண்மாய் கரையில் அமைந்திருக்கிறது.  

   பூக்குழி அன்று காலை இதற்காக விரதம் இருந்தவர்கள் கோவிலில் வந்து காப்பு கட்டி செல்வார்கள்.  

பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் ரதவீதிகளை சுற்றி திருமுக்குளம் வழியாக கோவிலுக்கு செல்வார்கள்.  கோவிலில் எந்நேரம் பூக்குழி இறங்க வேண்டும் என்று குறித்திருக்கும்  நேரம் வரும் வரை காத்திருந்து பூக்குழி இறங்குவார்கள்.
   பூக்குழி இறங்க வரும் ஜனத்திரளை பாருங்கள். வயது வித்தியாசம் இல்லை. கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள், குழந்தைகளைக் கொண்டு ஆண்கள், முதியவர்கள், இளைஞர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் சிறுவர்கள், சிறுமிகள் செல்வது கண் கொள்ளக் காட்சியாக இருக்கும்.
திருவிழா என்றால் கலகலப்பு தான் வியாபாரமும் கலக்குகிறது.இளநீர் வியாபாரம், பனை நுங்கு வியாபாரம்
 (நகர்ப்புறத்தில் இருப்பவர்களுக்காக ஒரு புகைப்படம் சேர்த்திருக்கிறோம்).
பூ வியாபாரம்சிறுவர்கள் சிறுமிகளை கவர்வதற்காக பொம்மைஐஸ் பலூன் வியாபாரம் களை கட்டுகிறது

 

  வழியில் பார்வையற்றோர் ஒரு வேனில் வைத்து பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள்.













   இங்கு மக்கள் பூக்குழி இறங்க செல்வதற்காக காத்திருக்கிறார்கள்.  பூக்குழி திடலில் காவலர்களும் கோவிலை சேர்ந்த இளைஞர் குழுக்களும் நின்று கூட்டத்தை ஒழுங்குபடுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அனுப்புகிறார்கள்.  இதில் காவல்துறையின் பணி மகத்தானது  மிகவும் போற்றத் தக்கது.  கோவில் பகுதியில் இரு சக்கர வாகனம். ஆட்டோ, கார் போன்ற வாகனங்களை முற்றிலும் தடை செய்து விட்டார்கள்.  அதனால் பொதுமக்களுக்கு கோவில் வரை சென்று வருவது சிரமில்லாமல் இருந்தது.  

  பூக்குழியை பார்ப்பதில் இளைஞர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை பாருங்கள்.  
பேனர் கட்டுவதற்கான சாரங்களிலும், வீடு கோவில் மாடிகளிலும் ஏறி நிற்கிறார்கள்.  காவல்துறையிலிருந்து இறங்குமாறு அறிவிப்பு செய்து கொண்டே இருந்தார்கள்.

                   இளங்கன்று பயமறியாது...  

   வாழை மரங்கள் இரண்டு கட்டி இருக்கின்றன.  அவை பூக்குழி திடலின் முன்பு இருக்கின்றன.  
 பூக்குழி இறங்கிய மக்கள்  பின்பு கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்து விட்டு வெளியில் வருகிறார்கள்.  உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்று விரதம் முடிக்கிறார்கள்.  இந்த ஊரின் பாதி அளவாவது இந்த திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். 

கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு முன்பு வீட்டை வெள்ளையடித்து சுத்தம் செய்து விரதம் இருக்கிறார்கள்.  இதனால் எல்லாத் தரப்பு மக்களுக்கும் வேலை வாய்ப்பு, வியாபாரம் உருவாகிறது.  நல்ல பணப்புழக்கமும் , பணச்சுழற்சியும் ஏற்படுகின்றன.  மக்களும் வெயில்காலத்திற்கு வரும் கிருமித் தொற்றுக்கு முன்பு தங்களை தயார் செய்து விடுகிறார்கள். உறவினர் வருகை நல்ல நட்புறவு ஏற்படுகிறது.திருவிழாக்கள் மக்களை தொடர் வேலைப்பளுவிலிருந்து இலகு படுத்துகிறது (relaxed mood). 

   பூக்குழிக்கு மறுநாள் கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது.  நாங்கள் காலையில் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. எனவே முடிந்த தேரை புகைப்படம் எடுத்து சேர்த்திருக்கிறோம். 
 கோவில் வெளியே பொங்கல் வைக்கிறார்கள்.  பொங்கல் பொங்குகிறது - அந்த அழகை பாருங்கள்.
கோவிலின் உள்ளே நேர்த்திக்கடனுக்கு மாவிளக்கு எடுக்கிறார்கள்.  வில்லடிக் கச்சேரி நடைபெறுகிறது.
 அம்மன் முன்பு அலங்காரத்தில் இருக்கிறார்.  அற்புதம்.  கண்கொள்ளக் காட்சி.  நாங்கள் இந்தக் காட்சியை இந்த வருடம் தான் பார்த்திருக்கிறோம்.  உங்களுக்காக சென்றோம்.  இது உங்களுக்கு புண்ணியம். 
 கோவிலுக்கு தேர் செய்வதற்காக அறிவிப்பு ஒன்று இருக்கிறது.  கோவிலின் கல்வெட்டு தோற்றம்.
 இந்த கோவிலை ஒரு படப்பிடிப்புக்கு உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்(வெடிகுண்டு முருகேசன் படம்).

திருமதி தேச. மங்கையர்க்கரசியை பற்றி:

   அவர்களுக்கும் எங்கள் ஊருக்கு பெரிய பாசப் பிணைப்பு இருக்கிறது.  அவர்கள் சிறுமியாக இருக்கும்போதிலிருந்து எங்கள் ஊர் பெரிய மாரியம்மன்கோவில் திருவிழாவிற்கு சொற்பொழிவுக்கு வருகிறார்கள். தற்போது திருமணமாகி இரட்டைக்குழந்தைகள் (பையன்கள்) இருக்கின்றன.  ஒரு வருடம் திருவிழாவில் சொற்பொழிவு நடக்கும் திடலில் உண்டியல் வசூலுக்கு இணையாக அவர்களும் காணிக்கை செலுத்தினார்கள் (10000 வசூல் என்றால் அவர்களும் 10000). 

   இந்த ஊரிலிருந்து அவர்கள் கல்யாணத்திற்கு சைக்கிள் கடை மணி அவர்கள் மன்றத்தின் சார்பாக சென்றிருந்தார்கள். அதை அவர் இந்த வருடம் மேடையில் சொல்லும்போது - உங்கள் ஊர் சார்பில் திரு மணி கலந்து கொண்டார்கள், பெண் வீட்டில் சார்பில் சீதன சாமான்கள் அவர் தான் எடுத்து சென்று மாப்பிள்ளை வீட்டில் ஒப்படைத்தார் என்று சொன்னார்கள்.  அது எங்கள் ஊர் மக்களுக்கு பெருமை.  மறு வருடம் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு வருவதாக சொல்லி இருக்கிறார்.


   இந்த பதிவை புகைப்படம் எடுத்து கணினியில் ஏற்ற உதவி செய்த ராஜவேலுக்கும் புகைப்படம் எடுத்த எனது மனைவி  திருமதி உமா காந்திக்கும் எனது நன்றி.

இந்த பதிவை படித்து நிறைகுறை சொல்லுங்கள்.  பின்னூட்டத்தை (comments) தமிழில் எழுதுவது சிரமம் இருந்தால் ஆங்கிலத்தில் எழுதுங்கள்.  அதனால் ஒன்றும் இல்லை.  நமது மக்கள் புரிந்து கொள்வார்கள்.
                            மிக்க நன்றி.

இணைப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் நாற்பது வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதற்கு திரு சுவாமிநாதன் நிறைய பதிவுகள் எழுதியிருக்கிறார்.  அத்தனையும் அற்புதமாக இருக்கிறது.  நீங்களும் படித்துப் பார்த்து அவருக்கு பின்னூட்டம் எழுதி பாராட்டு செய்யுங்களேன்.


சனி, ஏப்ரல் 23, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகதோப்பு



     ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமுக்குளம் பதிவிற்கு பின்பு   'செண்பக தோப்பு'  பற்றி பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தோம். எனது இனிய நண்பர் வருங்கால வைப்பு நிதி ஆய்வாளர் திரு தனபால் அவர்கள் அவரது ஆணையாளரின் மகளும் அவரது கல்லூரி தோழியும் 'மலை வாழ் மக்களது வாழ்க்கை முறை'  பற்றி அவர்களது ஆய்வுக்காகவும் அவர்களை நேர்காணல் செய்ய வேண்டும் எனவும் அதற்கான உதவிகள் செய்ய முடியுமா என கேட்டார்கள். எங்களது இனிய நட்பு கடந்த முப்பது வருடங்களுக்கு மேற்பட்டது. எனவே ஏற்பாடுகள் செய்ய  ஆரம்பித்தோம்.

சாம்பல் நிற அணில்
முன் ஏற்பாடுகள்
     பொதுவாக காட்டுப்பகுதிகளுக்குள் செல்வதற்கு முன் வன இலாகாவில் அனுமதி பெற வேண்டும். செண்பக தோப்பு சாம்பல் நிற அணில்கள்  சரணாலயம்' . எனவே முதலில் 'The Warden, Srivilliputtur Grizzled Squirrel Sanctuary, Madurai Road, Opposite Co-operative Mill Buss top, Srivilliputtur. 626 125இவர்களுக்கும் மனுவின் நகல் 'The Range Officer, Wild Life Sanctuary, Near CMS School Play Ground, Shenbagathoppu Road, Srivilliputtur. 626 125அனுப்ப வேண்டும். இவர்களை அணுகி அனுமதி பெற்றுக் கொண்டு செல்ல  வேண்டும்.


செண்பகதோப்பு செல்வதற்கு முன்
      இது சரியான  வனப்பகுதி. எனவே ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்தே  'உணவு ,   தண்ணீர், நொறுக்குத்தீனிகள்என தேவையானவைகள்  அனைத்தையும் கொண்டு செல்ல வேண்டும். பேருந்து வசதி காலை ஆறு மணிக்கு ஒரு தடவையும் மாலை ஆறு மணிக்கு ஒரு தடவையும் தான் இருக்கிறது. எனவே இங்கிருந்தே ஆட்டோ அல்லது  டாக்சி ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஆட்டோ சென்று திரும்புவதற்கு  200-250 கேட்பார்கள். கூடுதல் நேரம் எடுத்தால் செலவு கூடும். நான் சிபாரிசு  செய்யும் எனது ஆட்டோ நண்பர்கள்: திரு முனியராஜ் (ஆறுமுகனார் ஆட்டோ) 99769 05415 & 98942 0028 திரு முருகன் (கலியனாண்டி ஆட்டோ) 98421 26886 - இருவர்களும் சகோதரர்கள் - இவரது இன்னொரு சகோதரர் டாக்சி வைத்திருக்கிறார்: திரு சங்கர்:  98943 16119). எனவே வருபவர்கள் முன்பாகவே இவர்களிடம் தொடர்பு கொண்டு வந்தால் எளிதாக இருக்கும்.எனவே அந்த மாணவிகள் இருவரும் மதுரையிலிருந்து காலை  9.00  மணிக்கு வந்தார்கள். நாங்கள் ஆட்டோவில்(20.3.2011) கிளம்பி சென்றோம். இங்கிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இயற்கை சூழ் மலை அடிவாரம். செண்பக தோப்பு வரை அருமையான சாலை வசதி இருக்கிறது.

செண்பக தோப்பில் மலை வாழ்மக்கள்(பளியர்கள்) குடியிருப்பு உள்ளது. அவர்களது குடியிருப்பில் நல்ல சாலை வசதியிருக்கிறது. கிட்டத்தட்ட  24 வீடுகள் இருக்கின்றன. தெரு விளக்கு சூரிய ஒளி (solar panelமூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.வீடுகளுக்கு மின்சார இணைப்பு  கொடுக்கப்பட்டிருக்கிறது. நியாயவிலைக்கடை (RationShop) ஒன்று 

அமைந்திருக்கிறது. நீர் மேல் நிலை தொட்டி ஒன்று அமைந்திருக்கிறது .  பாலர் பள்ளி ஒன்று (மாத குழந்தையிலிருந்து வயது குழந்தைகள் முடிய) அமைந்திருக்கிறது. ஒரு கல்யாண மண்டபம் (Community Hallஒன்று அமைந்திருக்கிறது. 

மலை வாழ் மக்களின் குழந்தைகளின் படிப்பு
     இவர்களது குழந்தைகள் இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள 'வள்ளலார் இல்லம்' என்ற தொண்டு நிறுவனத்தில் உள்ள பள்ளிக்கு நடந்து செல்கிறார்கள். அங்கு ஐந்து முடிய படிக்க வசதியிருக்கிறது. ஐந்துக்கு மேல் படிப்பதற்கு மம்சாபுரம் செல்கிறார்கள். அங்கிருந்து பள்ளி வேன் வருகிறது. சில குழந்தைகள் பேருந்தில் சென்று ஸ்ரீவி குரு ஞான சம்பந்தர் மேல் நிலைப்பள்ளிக்கு செல்கிறார்கள் (நான் அங்கு தான் படித்தேன்). மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 15-20 இருக்கும். கூடுதல் படிப்பு எட்டு முடிய இருக்கும். 
நிறைய குழந்தைகளுக்கு ராஜபாளையம் ராம்கோ குரூப் (Madras Cements) நிறைய உதவி செய்வதாக சொல்கிறார்கள். கிட்டத்தட்ட  120  பேர்களுக்கு  படிப்பு,  வேலை வாய்ப்பு ஏற்பாடு போன்றவை ராஜபாளையத்தில் செய்திருப்பதாக சொல்கிறார்கள். வீடுகள் கட்டுவதற்கும் அவர்களது முயற்சியும்உதவியும் அதிகம் என்கிறார்கள். மலைவாழ் மக்கள் ராம்கோ குரூப்பை பற்றி மிக உயர்வாக சொல்கிறார்கள்.
மதுரை அண்ணா நகரில் அமைந்துள்ள சோகோஸ் ட்ரஸ்ட் (Socos Trust)  நன்கு உதவுவதாக சொல்கிறார்கள்.
நமது மாநில காவல் துறை உயரதிகாரி திருமதி. லத்திகா சரண் அவர்களது வருகையையும் அவர்கள் எல்லோரிடமும் எளிமையாக பழகும் முறையையும் உதவிய முறையையும் (immediate arrangement for ration cards - normally it will take 2-3 months or more) வெகுவாக சொல்கிறார்கள். வாழ்க திருமதி லத்திகா சரண். இவர்களுக்கு மருத்துவ வசதி என்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் அல்லது மம்சாபுரம் தான் செல்ல வேண்டும். 

மலை வாழ் மக்களை (பளியர்) பற்றி
     அவர்களது குடியிருப்புமின்சார வினியோகம்சாலை வசதிவாழ்க்கை  தரம் நன்றாக இருக்கின்றன. அவர்கள் நகருக்கு சென்று வருவதற்கு பேருந்து வசதிகள் போதுமானதாக இல்லை. மினி பஸ் வசதிகள்  ஏற்படுத்தலாம்.நல்ல உள்ளம் படைத்த 'தொண்டு நிறுவனங்கள்' அவர்களுடன் பேசி வாரம் ஒரு முறை 'நடமாடும் மருத்துவ குழு'  மூலம் மருத்துவ வசதி செய்து கொடுக்கலாம். இது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

 அவர்கள் முன்னேறுவதற்கு சிறு தொழில் வளர்ச்சிகள் ஏற்படுத்தி கொடுத்து தொண்டு நிறுவனங்கள் வங்கிகளுடன் இணைந்து செய்யலாம். ஆர்வமுள்ள இளைஞர்கள் குழுக்களாக இணைந்து அவர்களுடன் பேசி அவர்களது குழந்தைகளுக்கு  கணினிகணிதம்ஆங்கிலம் கற்றுக் கொடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தலாம். அவர்களை நன்கு மதித்து பழகுங்கள்.
பேச்சியம்மன் கோவில்
     முன்பு தெரியும் வளைவு 'பேச்சியம்மன் கோவிலுக்கு' செல்லும் பாதை. முன்புறம் அழகிய வினாயகர் கோவில் ஒன்று உள்ளது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பேச்சியம்மன் கோவில் இருக்கிறது.
 மக்கள் வேன் களிலும் இரு சக்கர வாகனங்களிலும் பயணம் செய்கிறார்கள். காலையில் பரிவாரமாக சென்று மதியம் சமைத்து சாப்பிட்டு விட்டு மாலை திருபுகிறார்கள்.

பேச்சியம்மன் கோவில் பக்கத்தில் உள்ள ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. சமைப்பதற்கும் குளிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். நல்ல சோலை போன்ற இடமாக இருக்கிறது. குழந்தைகள் விளையாட, மற்றவர்கள் நல்ல பொழுது போக்க (in a relaxed mood) நல்ல இடமாக இருக்கிறது.பேச்சியம்மன் கோவில் பக்கத்திலுள்ள ஆற்றங்கரையிலிருந்து எடுத்த புகைப்படங்கள். ஒரு சிறுமி ஆனந்தமாக நீந்தும் காட்சி. 
அங்கிருந்து மலையின் கம்பீர தோற்றம். மரங்களின் பச்சைப் பசேர் என கண்ணை கவரும் தோற்றம்.
பூக்களின் கண்ணைக்கவரும் தோற்றம்.. கோவிலின் அழகு தோற்றத்தை பாருங்கள். அதிலுள்ள கல்வெட்டு.திரும்பி வரும் வழ்யிலுள்ள பாலம். ஒரு பசு மாடு எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கதிரும்பி போஸ் கொடுக்கிறது.


செண்பகதோப்பிலிருந்து வரும் வழியில்
     திரும்பி வரும் வழியில் சாலை வசதி நன்றாக இருக்கிறது. தனியாரது மினரல் வாட்டர் பிளான்ட் ஒன்று அமைந்திருக்கிறது. ஒரு பாழடைந்த மண்டபம் ஒன்று இருக்கிறது. வேலி போட்டு பாதுகாத்து வைத்திருக்கிருக்கிறார்கள். கருப்பசாமி கோவில் ஒன்று இருக்கிறது.
 எங்கள் ஊரின் மற்ற சிறப்பான 'வள்ளலார் இல்லம்' அமைந்திருக்கிறது. அதைப் பற்றி தனி பதிவு போடுகிறேன்.
 ஆட்டுப் பண்ணை ஒன்று அமைந்திருக்கிறது. அது ஒரு சிறப்பம்சம். வள்ளலார் இல்லம் பதிவுடன் சேர்த்து விபரங்கள் கொடுக்கிறேன். மொட்டைப்பத்தான் கண்மாய் அமைந்திருக்கிறது. எங்கள் ஊர் நீர் நிலை அமைந்திருக்கிறது. கோட்டைக்காளியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. கான்வென்ட் மடம் அமைந்திருக்கிறது. எங்கள் ஊர் இரு பள்ளிகளின் விளையாட்டு மைதானங்கள் அமைந்திருக்கின்றன. வனச்சரக அலுவலகம் அமைந்திருக்கிறது.
அங்கு செல்பவர்களுக்கு முக்கிய வேண்டுகோள்
     பாலிதீன் பொருட்கள் கொண்டு செல்லாதீர்கள். மது அருந்துதல் போன்ற செயலை அங்கு போய் செய்யாதீர்கள். அங்குள்ள மரங்களை, காய் கனிகளை பூக்களை பறிக்காதீர்கள். இரைச்சல் போடாதீர்கள். நீங்கள் கண்காணிக்கப் படுவீர்கள். வனக்காவலர்களின் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாவீர்கள். அங்குள்ள சட்டத்திற்கு மதிப்பு கொடுங்கள்.
வனத்தில் செல்ல அனுமதி அளித்த வன இலாகாவினருக்கும், எங்களுடன் ஆய்விற்கு வந்த மாணவிகள் செல்வி.சுஸ்மா ஷர்மா, செல்வி.சவேரா மாகி அவர்களுக்கும், மலைவாழ் மக்கள் குடியிருப்பில் விபரங்கள் தந்து எங்களை நன்கு உபசரித்த திரு கோபால் அவர்களுக்கும், அங்குள்ள பாலர் பள்ளியின் ஆசிரியையும் திரு முத்தையாவின் மனைவியும் ஆகிய திருமதி சின்னத்தாய் அவர்களுக்கும், எங்களுக்கு ஆட்டோ செலுத்தி வந்த எங்களது குடும்ப நண்பர் திரு முருகனுக்கும், அவர் எங்களுடன் வந்து புகைப்படம் எடுக்க உதவியாக இருந்ததற்கும் மிக்க நன்றி. வழக்கம் போல் இவ்வளவுக்கும் உறு துணையாக இருந்த எனது மனைவி திருமதி உமா காந்திக்கும், எனது தம்பி மகன் எனது பாசப்பிள்ளை ராஜவேலுக்கும் எனது
மனப்பூர்வ நன்றி.


                               நன்றி.