செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

கெத்தேசால் மலைக்கிராமத்தில் ஒரு முகாம்..!

கல்வி பற்றிய கட்டுரை - 1



திருமதி எஸ்.மோகனா அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இரண்டு  ஆண்டுகளுக்கு  மாநில துணைத் தலைவராக  'திருநெல்வேலியில் நடைபெற்ற மாநாட்டில்" தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறோம்.



திருமதி எஸ்.மோகனா அவர்களது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினால் 'கெத்தேசால்' என்னும் மலைப்பகுதியில் நடைபெற்ற மலைவாழ் மக்களுக்கு கல்வி சம்பந்தமான நடத்திய முகாம் நடத்தினார்கள்.  கெத்தேசால் கர்நாடக மலைப்பகுதியில் கடல்மட்டத்திலிருந்து 1224 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.  அந்த முகாமைப் பற்றிய கட்டுரையை அவர்களது முகநூலில் 19.5.2001 நாள் வெளியிட்டிருந்தார்கள்.

அந்தக் கட்டுரையை 'கல்வி பற்றிய கட்டுரை-1'  என்ற தலைப்பில் மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்.  இந்த கட்டுரையை வெளியிட அனுமதி கொடுத்த திருமதி எஸ்.மோகனா அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம்
.


கெத்தேசால் மலைக்கிராமத்தில் ஒரு முகாம்..!

by Mohana Somasundram on Thursday, May 19, 2011 at 10:50pm
 வாசிப்பு முகாமில், பேரா. ராஜூவுடன் ஒரு குழு..கலந்துரையாடல்

 வாசிப்பு முகாமின் மதிய உணவருந்தும் நேரம்

கெத்தேசால் செல்லும் மலைப் பாதைவழியே


மலையிலிருந்து கீழ் நோக்கி

மே 16 ம் நாள் மாலை நிலா வலம்


முகாமின் முகப்பில்,ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்க பேனர், அருகில் புதுச்சேரி ஸ்ரீதர், மோகனா + சேலம் சோழகரிகாலன்.

    
வணக்கம் நண்பர்களே..! தமிழ் நாடு அறிவியல் இயக்கம் பல்வேறு தளங்களில், பல்வேறு பணிகளைச் செய்துவருகிறது. அதில் ஒன்று புத்தக வாசிப்பு இயக்கம். என்னடா இது.. புத்தகத்தை தனியாகத்தான் படிப்பார்கள்.. இதில் இயக்கம் என்ன வேண்டிக்கிடக்கிறது என்கிறீர்களா? ஆம் நண்பர்களே..! புத்தகம் சுமந்து கிராமத்தின் தெருக்களில் ஊர்வலமாய், மாட்டு வண்டியில், மிதிவண்டியில் என  வருவதை, அவற்றை தெருவின் மந்தைகளில் அனைவரும் இணைந்து கூட்டாக அமர்ந்து  படிப்பதை தமிழ் நாடு அறிவியல் இயக்கம், அறிவொளி காலத்திலிருந்து ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதிதான், கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கெத்தேசால் என்னுமிடத்தில் நடைபெற்ற உறைவிட புத்தக வாசிப்பு முகாம்

கெத்தேசால் உயரம் 1224 அடி. அட்ச ரேகை:.11.7;தீர்க்க ரேகை:077
.
கெத்தேசால் காட்டுப் பகுதி

  நீண்ட, அமைதியான, அடர்ந்த காடு 

கெத்தேசால் என்ற அழகான பசுமைசூழ் மலைக்கிராமம் ,இது  ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி.கடல் மட்டத்திலிருந்து1224 அடி உயரத்தில் இருக்கிறது. அடர்ந்த காடு. கெத்தேசால் சத்தியமங்கலத்திலிருந்து 27 கொண்டை ஊசி வளைவுகளைத்தாண்டி, 44 கி.மீ தொலைவில் உள்ளது.
 கெத்தேசால் கிராமத்துக்கு, கொள்ளேகால் செல்லும் சாலையிலிருந்து போகும் மண்பாதை. அரசு அம்மக்களுக்கு ஒரு தார் சாலை கூட போடவில்லை. அவர்கள் ஓட்டும் போடவில்லை
. 
இங்கு சோளகர்கள் என்ற பழங்குடியினர் வாழ்கின்றனர்.இங்குதான் சந்தன வீரப்பன் இந்த கிராம மக்கள்மீது கோபம் கொண்டு 7 பேரை வெட்டிப்போட்டானாம். அதன்பின்னர்தான் அரசு இந்தக் கிராம மக்களிடம், கருணை கொண்டு,கெத்தேசால் பள்ளி வளாகத்தின், 100 ஆண்டு ஓர் அத்தி மரம்  உண்டு உறைவிடப் பள்ளியைக் கட்டி,அங்கு வாழும் மக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தந்து ஒரு நிரந்தர ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலத்தை அவர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தலாம், உழுது பயிரிடலாம். ஆனால் விற்பனை செய்ய உரிமை இல்லை. இதுதான் வனப்பகுதி செட்டில்மென்ட். 
      காட்டு விவசாயம். நீர் பாய்ச்சுவதில்லை.
  சோளகர் குடும்ப மளிகை கடைக்காரர், மங்கிலியுடன்.

சோளகர் வீடு

கெத்தேசால், உண்டு உறைவிட பழங்குடியினர் பள்ளி

விவ்சாயம் பார்த்து சோளகர் குடிசை

     கெத்தேசால் கிராமத்தில் 120 குடும்பங்கள் வாழ்கின்றன. எல்லோருக்கும் காட்டுப் பகுதி விவசாயம்தான் தொழில். அந்த ஊரில் 8 ம் வகுப்புவரைதான் படிப்பு. மேலே படிக்கவேண்டுமானால், 40 கி.மீ கீழே இறங்கி சத்தியமங்கலம்    போக வேண்டும். இந்த மக்கள் மழையை நம்பித்தான் விவசாயம் செய்கின்றனர்.இயற்கைவிவசாயம்தான்.

சோளகர் குடும்பத்தின் குளியலறை.. சேலை மறைப்புடன்.. குடத்துடன்.. 

நீங்கள் 10 பேர் சேர்ந்து போய்விட்டால், மக்கள் பயந்து போய் ஓடிவிடுகின்றனர். அவ்வளவு மிரண்டு போயிருக்கின்றனர்; பாதிக்கப்பட்டிருக்கின்றனர்  நமது பாதுகாப்பு காவல் துறையினரால்..! அவர்களின் காயத்தின் வலி இன்னும் குறையவில்லை. அம்மக்களின் மேல் பாய்ந்த பாலியல் ரணமும், அதன் தழும்பும் இன்னும் ஆறாத தடங்களாய் இருக்கின்றன. அச்சத்தின் விளிம்பிலேயே வாழ்கின்றனர். இளம்பெண்களை அலாக்காக தூக்கிப் போய்விடுவார்களாம். அதனால், எங்களைப் பார்த்தும் பயந்துபோய் கதவைத் சாத்தினர். இவர்களுக்கு பெரிய நோய் எதுவும் வந்ததும் கிடையாது; பெரிய மருத்துவ மனைக்குப் போய் மருத்துவம் பார்த்ததும் இல்லை. எல்லாமே இயற்கை வைத்தியம்தான்.பெரிதான ஆசைகள், கனவுகள், கற்பனைகள் இல்லை. ரொம்பவும் வெள்ளந்தியான மக்கள். 

கெத்தேசால் ஊரில், குடிநீருக்காக..சுனைநீர் எடுக்கச் செல்லும் தாழ்வான, ஒளி குன்றிய சுனை உள்ள இடத்திற்கு செல்லும் வழி 

அரசின் நீர்க்குழாய்கள் இல்லை. சுனைநீரும் லாரி கொண்டுவரும் நீரும்தான். அரசு வண்ணத்தொலைக் காட்ட்சி இருக்கிறது.

    தரையில் அமர்ந்து,கால் நீட்டி, விவாதம் 

விவாத இடைவேளையின்போது உரையாடல். பழனி சத்தீஸ்வரி, பேரா.மோகனா, பேரா. விஜய்குமார், பாறையின் மேல் உட்கார்ந்து இருக்கும் பழையவாசனைக்காரர், சென்னை சிலம்பரசன், தரையில் சேலம் வெங்கடேசன்(கடைசியில் இருப்பவர்)

 மரத்தடியில் புத்தக வாசிப்பும், விவாதமும்
 அவரவர் விருப்பம்போல் அமர்ந்து வாசித்து, விவாதம்

 பேரா. விஜயகுமார், பேரா. ராஜூ &தோழர் சுந்தர் 

இந்த கிராமத்தில்தான், பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கித்தான், 3 நாட்கள் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில புத்தக வாசிப்பு முகாம், ஈரோடு மாவட்டம் சார்பில் நடத்தப்பட்டது. ரொம்ப முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? இங்கு நீங்கள் அலைபேசி மூலம் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது நண்பரே..! அப்பாடா குடும்ப பந்த்தத்திளிருந்து இரண்டு நாள் விடுதலையா? .குழந்தைகளுக்கான புத்தகங்களான, முதல் ஆசிரியர், வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் (இயற்கையை நேசித்தல் தொடர்பாக..அறிதல் தாக்கமாக),எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கிட்டீங்க(ஷாஜகான்) 

எழுத்தாளாரும், நகைச்சுவை பேச்சாளரும், கவிஞருமான ஷாஜகான்
  
பள்ளிக் கூட தேர்தல், டோட்டோசாண்(ஜன்னலில் ஒரு சிறுமி), ஓய்ந்திருக்கலாகாது பாப்பா.. போன்ற புத்தகங்கள் கூட்டாக வாசிக்கப்பட்டு விவாதம் செய்யப்பட்டன. இதில் குழந்தைகளை நேசித்தல், அவர்களைப் புரிந்து கொள்ளுதல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தல், குழந்தை மலர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுதல், அவர்களின் குறும்புகளை ரசித்தல், அதன் பின்னணியிலுள்ள அவர்களின் தேடல், அறிவு போனவற்றை தெரிந்து நடப்பதற்காக ஆசிரியர்களுக்கு உணர்த்த வேண்டிதான் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
     முகமது அலி வகுப்பு எடுக்க, பார்வையாளர்கள்

 பேரா. முருகேசன்,பார்வைத்திறன் இழந்தவர். 

பேரா.செல்வம், பார்வைத்திறன் இழந்தவர்

 சிறப்புரை;முகமது அலி.. வகுப்பறையில் பங்கேற்பாளர்கள்.


 மே 17, காலை 6.30 மணிக்கு, எங்களுக்கு வரடீ தயாரித்து கொடுத்த சமையல் கலைஞர், குப்புசாமி நடுவில்.. அவரின் இரு புறமும்,தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் முனைவர்.மணி(கோடு போட்ட பனியன்), இடது கோடி, பாரதி புத்தகாலய பொறுப்பாளர் நாகராஜ்..கையில் தேநீர் கோப்பையுடன்

 வாசிப்பு முகாமில்  74 மனித  நேயர்கள் பங்கேற்றனர். இந்த முகாமில் ஓர் அற்புதமான ஒரு முரண்தொடை இருந்தது.! என்ன தெரியுமா?  வாசிப்பு முகாமின் பங்கேற்பாளர்களில், 6 பேர் மாற்றுத்திறனாளிகள்  /பார்வைத் திறனற்றவர்கள்.பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள். அவர்களில் இருவர் கல்லூரிப் பேராசிரியர், ஒருவர் பள்ளித் தலைமை ஆசிரியர்.மூவர் ஆசிரியர்கள், இவர்கள் அனைவரும் மாணவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களில் ஒருவரான ஆத்தூர் அரசுக் கல்லூரிப் பேராசிரியர் முருகேசனைப் மாணவர்கள் பக்கம், பக்கமாய் பாராட்டி குவித்திருக்கின்றனர். அவர் பிறந்ததும் அவரைக் கொல்ல குடும்பத்தினர் திட்டமிட்டனராம். அவரது தந்தையும், தாயும் அந்த யோசனைக்கு ஒத்துக் கொள்ளாமல், அவரைக் காப்பாற்றி வளர்த்தனராம். அவரின் தாய், முருகேசனை அணுவளவும் பிரியமாட்டாராம். காரணம்  , கொஞ்சம் பிரிந்தாலும், குடும்பம் அவரைப் போட்டுத் தள்ள திட்டமிட்டு இருந்ததாம்.அவரது விளையாட்டுத்தோழர்கள் கல்லும், குச்சியும்தான். இவைகளுடன்தான் இவர் பேசுவாராம். 9 வயதில்தான் பள்ளி சென்றார் ஒரு பெரியவர் உதவியுடன். மற்ற ஆசிரியர்கள் செய்யாத அளவு மாணவர்களிடம், அறிவுபூர்வமாக  பல உதவிகள் செய்வாராம். முகேசனின் துணைவியும் பார்வை இழந்தவரே..! அவர்களின் பெண்மகவு.. அழகான கயல் விழியுடன் உருட்டி உருட்டி விழித்து பெற்றோரை தனது கொஞ்சு மொழியால் அன்பால் கட்டிப் போடுகிறது..! 
           எழுத்தாளர் ச. தமிழ்செல்வன்

  பேரா. விஜயகுமார், பேரா.ராஜு, பாரதி புத்தகாலய நாகராஜ், பேரா.மோகனா

 புதிய ஆசிரியன்

 எழுத்தாளர். கமலாலயன்

 அமர்ந்திருப்பது முகமதுஅ லி. பேசுவது முனவர்,பேரா. மணி

 முகாமுக்கு பாரதி புத்தகாலயம் நாகராஜ், எழுத்தாளர், பேச்சாளருமான கமலாயன்,ஷாஜகான் & ச. தமிழ் செல்வன்,இயற்கையியளாளர் முகமது அலி,கல்வியாளர்கள் பேரா. ராஜு, விஜயகுமார், தமிழ் நாடு அறிவியல் இயக்க செயலாளர் பேரா. மணி(ஒருங்கிணைப்பு) மற்றும் மோகனா கலந்துகொண்டனர்.

 
சந்தோஷக் களிப்பில் சூர்யா..! ஒருங்கிணைப்பாளர் மணியின் மகவு. இவர் குடும்பத்துடன் வந்திருந்தார். மூன்று நாள் வீட்டில் சாப்பாட்டுக் காசு மிச்சம்.
இதில் குழந்தைகள் 8 பேரும் இருந்தனர். குழந்தைகளுக்காக செய்யப்பட்ட அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா தந்திரமா, போன்றவை அவர்களை களிப்பில் ஆழ்த்தின.காலை வானில் தெரிந்த செவ்வாய்,புதன், வியாழன், வெள்ளி கோள்களையும், மாலையில்  சனி கோளையும் பங்கேற்பாளர்களுக்கு காண்பித்தோம். அது மட்டுமல்ல..!

 
கெத்தேசாலின் விடிகாலை நேரம். அனைவரும் இருகண் நோக்கி மூலமும், தொலைநோக்கி மூலமும்,ட்தொடுவானின் அருகே பளிச் சென தெரியும், வெள்ளிக் கோளையும், கொஞ்சம் உயரே வெள்ளையாய் தெரியும் வியாழனையும், வெள்ளிக்கு கீழே தெரியும் புதனையும், வெள்ளி வியாழனுக்கு இடையே தெரிந்த செவ்வாயையும் பார்த்துப் பரவசித்தோம்.கிழக்கு வானில் தெரியும் வெள்ளி கோள் 

அது மின்னொளி அதிகம் இல்லாத கிராமமாகையால், நமது சூரிய குடும்பம் வசிக்கும்/இருக்கும் பால்வழி மண்டலத்தையும் பார்த்து மகிழ்ந்தோம். இது ஓர் அரிதான நிகழ்வே..!

தரையில் மேடு பள்ளமான இடத்திலேயே உணவு பரிமாறல்

இந்த பதிவை கணினியில் ஏற்ற, இந்த பதிவு மேம்பாட்டிற்காக ஆலோசனைகள் சொல்லும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி 


இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை - நிறை குறை - பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  எங்களை சீர்திருத்திக் கொள்ள உதவும்.  உங்களது பெயரை Followers  Widget இல் பதிந்து கொள்ளுங்கள்.  தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்கள்.

உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் அடுத்தடுத்து பதிவு போடும்போது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கே வந்து விடும்.

மிக்க நன்றி.

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

குழந்தைபொம்மை கட்டமைப்பில் நச்சுப் பொருள்..?

அறிவியல் கட்டுரைகள் 
பாகம்- 1

திருமதி எஸ்.மோகனா அவர்களின் வானியல் கட்டுரைகள் இரண்டு வெளியிட்டோம்.  நாங்கள்  இது வரை எழுதிய பதிவுகளில் அவர்களது இரண்டாவது கட்டுரைக்கு தான் அதிக எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் வந்தன என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர்கள் வானியல் மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் நிறைய எழுதியிருக்கிறார்கள்.  குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் பொம்மைகளில்  உள்ள ரசாயனப் பொருட்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அந்த கட்டுரையை 'அறிவியல் - 1' என்ற தலைப்பில் வெளியிடுகிறோம். இந்த கட்டுரை அவர்கள் முகநூலில் அவர்களது பக்கத்தில் 7.10.2010 அன்று வெளியிட்ட கட்டுரை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  இந்த கட்டுரையை வெளியிட அனுமதி கொடுத்த திருமதி எஸ்.மோகனா அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


குழந்தைபொம்மை கட்டமைப்பில் நச்சுப் பொருள்..?

நம் குழந்தைகளுக்கு நாம் சந்தோஷமாய் பொம்மைகளை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறோம். ஆனால் அதிலுள்ள வேதிப் பொருள்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்பவை என்று நமக்குத் தெரிவதில்லை. நம் அரசும் அதனைப் பற்றி கவலையோ, அக்கறையோ கொள்வதில்லை.அதற்கான எந்த கொள்கை முடிவும் கிடையாது. அவரவர்  பெட்டி  நிரம்பினால் போதும் என்பதே அவர்களின் கொள்கை.மக்களின் உயிர் பற்றிய எண்ணம் என்பது கிஞ்சித்தும் கிடையாது. 


குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் பொம்மைகள், நாம் பயன் படுத்தும் நெகிழிகளில்,அவை வளையும் படியும், கொஞ்சம் ஒளி ஊடுருவும்படியும் இருப்பதற்காக சில வேதிப் பொருள்கள் கலக்கப் படுகின்றன.

அவைகளில் முக்கியமானவை  தாலேட் (Pthalate) மற்றும் பிஸ்பினால் A ( BIsPhenol A). இவைகள் நம் உடலுக்கு முக்கியமாக பிஞ்சுகளின் பஞ்சு மேனிக்கு தீங்கு விளைவிப்பவை யாகும். நம் குட்டிகள் பல் முளைக்கும் பருவத்தில் அவைகள் கடிப்பதற்காக சில நெகிழி பொம்மைகளைநாம் அன்பை முக்கி,  வாங்கி கொடுக்கிறோம்.அவை நம்  ஆசை செல்வங்களுக்கு தரும் துன்பத்தை அறியாமலேயே. ! அதிலுள்ள வேதிப் பொருள்கள் குழந்தைகளின்  வளர்ச்சியைகுறைக்கின்றன: நரம்பு மண்டலத்தில் சில சரி செய்ய முடியாத பிரச்சனைகளை உருவாக்கு கின்றன; அத்துடன் சில புற்றுநோய் காரணிகளையும் தானமாகத் தருகின்றன என ஆராய்ச்சி தகவல்கள் சொல்வதாக,அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இப்படிப்பட்ட்ட வேதிப் பொருள்கள் உள்ள முக்கியமாக பிஸ்பினால் A உள்ள குழந்தை பொம்மைகளை முதலில் 2007 லேயே தடை செய்தது கனடா அரசுதான். பின் ஐரோப்பிய யூனியன்  , பிரான்சு, அமெரிக்க அரசுகள் தடை செய்துள்ளன. இதைப் பற்றி நம் இந்திய அரசு மூச்சு கூட விடவில்லை.

  நம் இந்திய அரசுக்கு இப்போதுதான் இது பற்றிய ஞானோதயம் பிறந்துள்ளது. நம் அரசு  2009  நவம்பரில் 11 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி உள்ளது. இக்குழு  இந்திய மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப் பட்டு இந்தியாவில்  பயன் படுத்தப் படும்,குழந்தை பொம்மைகளில் உள்ள  நச்சுப் பொருட்களை முக்கியமாக, கன உலோகங்களை ஆராய்வதற்கான சோதனைகளை செய்யும். இந்த சோதனைகள் இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 2 ,800௦௦ கம்பெனிகளின் பொம்மைகளில்  ,( சாதாரண சின்ன கடையில் இருந்து, பெரிய சூப்பர் மார்கெட்டில் உள்ளது வரையிலான பொம்மைகளை )சோதனை செய்யும்.   இந்த தகவலை, தேசிய உணவு நிறுவனத்தின் துணை இயக்குனரான B.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த சோதனை 2010௦,அக்டோபர் முதல் துவங்கப்படும். இக்குழுவில் அகமதாபாத்தின்,தேசிய தொழில் நிறுவனம், ஹைதராபாத்தின் தேசிய உணவு நிறுவனம் மற்றும் டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் உள்ளனர்.

பொம்மைகளை சோதனை செய்யும் குழு எவ்வாறு உருவாக்கப் பட்டது தெரியுமா? குழந்தை பொம்மைகளில் உள்ள நஞ்சு மற்றும் கன உலோகங்கள் பற்றியும், அதன் பிரச்சினை மற்றும் சிக்கல் பற்றியும் சில தன்னார்வல இயக்கங்கள் அரசு மாற்றும் நீதி மன்றத்திடம் புகார் செய்தன. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சோதனை செய்தது. அதன் விளைவாக ஓர் உத்தரவை மைய அரசுக்கு போட்டது. அந்த உத்தரவின் படியே பொம்மைகளில் உள்ள கன உலோகங்களை ஆராய்ந்து  அதனை  கட்டுப் படுத்த வேண்டும். இல்லையெனில் இந்த நச்சுப் பொருற்கள், பிஞ்சுகளின் வாய் வழியே சென்று, உடலின் பல பகுதிகளுக்கும் சென்றுவிடும். குழந்தைகளுக்கு இரத்த சோகையை உண்டாக்கும்;வளர்ச்சி பாதிக்கப்படும். உடலுக்குள் உள்ள உறுப்புகளை, குறிப்பாக நரம்பு மண்டலத்தில் , சரி செய்ய முடியாத சிதைவுகளை உண்டாக்கும் என அறியப்பட்டுள்ளது. பொம்மை சோதனை செய்யும் கருவி ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்  பட்டுள்ளது.இதன் விலை ஒரு கோடி ரூபாய் என திட்ட பொறுப்பாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்

குறிப்பு: இது ஏதோ குழந்தைகள் பொம்மைகளில் மட்டும்தான் இருக்கிறது என எண்ண வேண்டாம். ஒளி ஊடுருவும் அனைத்து வகை நெகிழிகளிலும்  உள்ளது. முக்கியமாக, மருத்துவ மனைகளில் பயன்படுத்தப் படும், ஊசி போடும் குழாய்கள், குளுகோஸ் மற்றும் இரத்த குழாய் சிரைகள் மூலம் மருந்துகள் செலுத்தப்படும் அனைத்துவகையான பைகளிலும் பிஸ்பினால் A மற்றும் தாலேட் உள்ளது. 


வேறு வழியே இல்லாமல்,நோயாளிகளின் உயிர் காக்கும் செயலுக்காகவும், இந்த ஒளி ஊடுருவும் தன்மைக்காகவும்  இதனை பயன்படுத்த வேண்டி உள்ளது. ஒரு முறை பயன் படுத்திய பின் இவற்றை தூர வீசி எறிய வேண்டியது அவசியமாகும். மேலும் கூடியவரை குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பாட்டில் கண்ணாடியில் இருப்பது நலம். நான் பார்த்தவரை  ராமகிருஷ்ணா போன்ற மருத்துவ மனைகளில் குளுகோஸ் கண்ணாடி பாட்டில் களிலேயே கொடுக்கப் படுகிறது. நீங்களும்  கூட மினரல்  தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பத்திரப் படுத்தி பயன்படுத்த வேண்டாம். நெகிழி பொருள்களில் ௧-௪ என்ற என போட்ட பொருள்கள் கொஞ்சம் பாதுகாப்பானவை என தெரிகிறது. 


இந்த பதிவை கணினியில் ஏற்ற, இந்த பதிவு மேம்பாட்டிற்காக ஆலோசனைகள் சொல்லும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.



இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை - நிறை குறை - பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  எங்களை சீர்திருத்திக் கொள்ள உதவும்.  உங்களது பெயரை Followers  Widget இல் பதிந்து கொள்ளுங்கள்.  தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்கள்.

உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் அடுத்தடுத்து பதிவு போடும்போது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கே வந்து விடும்.

மிக்க நன்றி.

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்


ஸ்ரீஆண்டாள் கோவில் ஏழாம் நாள் திருவிழா:



ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலைப் பற்றி நிறைய படித்திருப்பீர்கள், கேள்விப் பட்டிருப்பீர்கள்.  குறிப்பாக ஏழாம் நாள் திருவிழாவைப் பார்ப்போம். 
ஸ்ரீ வில்லிபுத்தூரில் கிருஷ்ணன்கோவில் தெரு இருப்பது இங்குள்ளவர்களுக்கு தெரியும்.  அங்கு ஒரு அருமையான பெரிய கிருஷ்ணன்கோவில் இருப்பது நிறைய பேருக்கு தெரியாது.  ரயில்வே நிலையம் செல்லும் வழியில் தாலுகா அலுவலகம் இருக்கிறது.  அதில் அத்திகுளம்  செல்லும் பாதை பிரிகிறது.  அந்த பாதையில் தாலுகா அலுவலகத்திற்கு பின் புறம் பெரிய கிருஷ்ணன்கோவில் இருக்கிறது.  அது வருடம் முழுவதும் திறந்திருக்குமா என தெரியவில்லை.  இந்த ஏழாம் நாள் திருவிழா (31.7.2011) அங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 


ஸ்ரீ ஆண்டாள் வீற்றிருக்க ஸ்ரீ ரங்க மன்னார் ஸ்ரீ ஆண்டாளின் மடியில் தலை வைத்திருக்கும் சயன சேவை. இந்த சயன சேவை ஸ்ரீ ஆண்டாள் கோவில் திருவிழாக்களில் சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது.  நான் இந்த வருடம் தான் பார்த்திருக்கிறேன்.  

அன்று இரவு ஏழு மணிக்கு சயன சேவை ஆரம்பிக்கும்; கிட்டத்தட்ட நள்ளிரவு ஒரு மணி வரை பக்தர்கள் வருகை இருக்கும்; தரிசனம் கிடைக்கும் என்று சொன்னார்கள்.


நாங்கள் மாலை ஆறரை மணியளவில் சென்று விட்டோம்.  நிறைய ஆட்டோக்கள், மினிபஸ், நகரப்பேருந்துகள், இருசக்கர வண்டிகள், நடந்து செல்லும் கூட்டம், அந்த சாலை நிறைந்து விட்டது.  இந்த அளவு கூட்டம் அந்த சாலையில் நான் பார்த்தது கிடையாது.  இந்த திருவிழாவிற்கு காவல்துறையினரின் பாதுகாப்பு அருமையாக செய்யப்பட்டிருந்தது.

நாங்கள் இந்த கோவிலுக்கு வந்தது இது தான் முதல் தடவை.  முகப்பு மிகவும் அழகாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.  கோவிலில் ராஜகோபுரம் கட்ட ஆரம்பிக்கப்பட்டு முதல் தளம் மட்டும் கட்டப்பட்டு தடைப்பட்ட மாதிரி இருக்கிறது.  அது நிறைய வருடங்களுக்கு முன்பு இருக்கலாம். கோவில் மிகவும் பெரிய கோவிலாக இருக்கிறது.  திருவிழாவிற்காக நன்கு வெள்ளையடிக்கப்பட்டு சுற்றிலும் தரை செடிகள், முட்செடிகள் எல்லாம் களையப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கிறது.  அப்படியும் நடக்கும் போது தரை காலைப் பதம் பார்க்கிறது.  வெளிப்பிரகாரம் பெரியதாக இருக்கிறது.  சன்னதியில் கிருஷ்ணர் இருக்கிறார்.  நல்ல சிலைகள் இருக்கின்றன.  (இந்த கோவிலை இன்னொரு நாள் அனுமதி வாங்கி புகைப்படங்கள் எடுத்து விபரங்களை சேகரித்து தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்).  தரிசனம் செய்தோம்.

முனனால் உள்ள மண்டபத்தில் சயன சேவை  அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.  உள்ளும் நிறைய ஜனங்கள்.  

உள்ளூர் பக்தர்களை விட வெளியூர், வெளி மாகாணத்திலிருந்து வந்த பக்தர்களின் ஈடுபாடு மிகவும் அற்புதமாக இருந்தது.  ஆச்சரியமாக இருந்தது.  ஆந்திராவிலிருந்து ஒரு குழு கிட்டத்தட்ட முப்பது பேர்கள் இருக்கும் - ஆண்களும் பெண்களும் சேர்ந்து - மிகவும் சிரத்தையுடன் அலங்கரித்து வாத்தியங்களுடன் நடனக் கச்சேரி நடத்தினார்கள். அதை முடிந்தவரை புகைப்படங்கள் எடுத்திருக்கிறோம். 


சயன சேவை ஏழரை மணிக்கு ஆரம்பித்தது.  அதையும் முடிந்தவரை புகைப்படம் எடுத்தோம்.  (எங்களுக்கு முன் அனுபவம் இல்லாததால் புகைப்படம் எடுப்பதற்கு சரியான இடத்தை தேர்ந்தெடுக்கவில்லை- ஒரு மூலையில் நகர முடியாமல் மாட்டிக் கொண்டோம்).  



வெளியே நிறைய கூட்டம் இருந்ததால் முன்கதவை அடைத்து எங்களை கோவிலின் இடது புறம் உள்ள பாதை வழியாக வெளியே அனுப்பினார்கள்.  வெளியே வந்து பார்த்தால் வரிசை அனுமார் வால் மாதிரி நீண்டிருந்தது.  கிட்டத்தட்ட அவர்கள் உள்ளே செல்ல இரண்டு மணி நேரமாவது ஆகும்.  அந்தக்கூட்டத்தை புகைப்படம் எடுத்து தொகுத்திருக்கிறோம்.  (உடனே வந்து சயன கோலத்தை முக நூலில் ஏற்றி விட்டோம்-எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது).


ஆடிப்பூர தேரோட்ட திருவிழா


எங்கள் ஊரின் சிறப்பு ஸ்ரீ ஆண்டாள் கோவில் தேரோட்ட திருவிழா. 2.8.2011 அன்று திருவிழா காலை எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் என்று அறிவிப்பு இருந்தது.  நாங்கள் காலை ஆறு மணிக்கு சென்று விட்டோம்.  ஸ்ரீ ஆண்டாளையும் ஸ்ரீ ரெங்கமன்னாரையும் தேரில் ஏற்றுவதற்கு முன்பு நீராவி பள்ளிக்கூடத்தின் வாசலில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று.  நாங்கள் சற்று தாமதம்.  ஸ்ரீ ஆண்டாள் தேர் ஏறி விட்டார்.  தேர் பக்கம் வந்தோம்.  ஓரளவு கூட்டம் இருந்தது.  தேர் மிக அற்புதமாக ஜோடனை செய்யப் பட்டிருந்தது.  புதிய வடங்கள் மாற்றப் பட்டிருந்தன.  காவல்துறையினர் நிறைய இருந்தனர்.  அவர்களது ஏற்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது.  மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 

தேரின் பின்புறம்:

தேரின் பின்புறம் புல்டோசர்கள் இருந்தன.  இரண்டு லாரிகளில் சறுக்கு கட்டைகள் இருந்தன.  தீயணைப்பு வாகனங்கள் நின்றன.  அரசின் ஏற்பாடுகள்  மிகவும் அருமை.  பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.  அவர்களின் சேவையை மனமார பாராட்டுவோம்.  


தேரின் முன்புறம் மயில் தோகை விசிறிக் கொண்டு மூன்று பேரை பார்த்தோம்.  அதில் ஒரு பெரியவர் வயது எண்பதுக்கு  மேல் இருக்கும்.  அவர் எல்லா ஊர் திருவிழாவிற்கும் செல்வார் என்று சொன்னார்கள்.  செய்தித்தாளிலும் படித்திருக்கிறேன்.  அவரது புகைப்படத்தையும் கொடுத்திருக்கிறோம்.  மற்ற இருவர் இதிலும் விளம்பரம் தாங்கியிருந்தார்கள்.  வெளி மாநிலத்திலிருந்து வந்த பக்தர்கள் குழு குழுவாக வந்து பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருந்தார்கள்.  நிறைய குழுக்கள்.  முடிந்த அளவு புகைப்படங்களை தொகுத்திருக்கிறோம்.  ஒருவர் அனுமார் வேஷம் போட்டிருந்தார்.  சிறுவர்களுக்கான வியாபாரங்களும் களைகட்டியிருந்தன. 



 
கதிரவன் ஹோட்டல் 


எங்கள் ஊரின் மற்றொரு சிறப்பம்சம் கதிரவன் ஹோட்டல்.  அவர்கள் வியாபாரம் மாதிரி நடத்தவில்லை.  ஒரு சமூக சேவை மாதிரி நடத்துகிறார்கள்.  எனக்கு தெரிந்தவரை - வருமான வரி, விற்பனை வரி, பிராவிடன்ட் பண்ட், ESI - மற்றும் அனைத்து வரிகளையும்  கட்டி அவர்களது தொழிலாளர்களுக்கும் நன்கு சலுகைகள் செய்கிறார்கள்.  அங்கு சாப்பிடுவது ஒரு நல்ல அனுபவம்.  நாங்கள்  காலை உணவு அங்கு சாப்பிட்டோம்.  நீங்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் வந்தால் அங்கு சாப்பிட்டு பாருங்கள்.  பிறகு சாப்பிடுவதற்காக எங்கள் ஊருக்கு வருவீர்கள்.  வாழ்க அவர்களது பணி.  இதில் ஒரு பங்குதாரர் திரு பாலச்சந்திரன் எனது பள்ளி தோழர்.

அதன் அருகில் ராம்கோ சிமின்ட்டின் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.  முன்பு நல்ல கூட்டம் இருந்தது.  அந்த ஸ்டாலும் அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அங்கு ஸ்டால் முகப்பையும் பின்பு ஸ்டால் உள்ளே அவர்களது செயல்பாட்டினையும் (நீர், மோர், படங்கள் வழங்குவதை) புகைப்படம் எடுத்தோம்.  உள்ளே எங்களது அருமைப்பிள்ளை திரு ராம்குமார் இருந்திருக்கிறார்.  நான் கவனிக்கவில்லை. அவர் வெளியே வந்து விட்டார்.  எங்களுக்கு மிகவும் சந்தோசம்.

திரு ராம்குமாரைப் பற்றி :

நாங்கள் திருமுக்குளம் பற்றி எழுதியிருந்தபோது திரு வினோத் பாபு என்று ஒரு நண்பர் (ஸ்ரீ வில்லிபுத்தூர்காரர்) பின்னூட்டம் எழுதினர்.  அவர் திரு ராம்குமாரின் பதிவை அறிமுகப்படுத்தினார்.  ராம்குமார் பதிவும் எழுதுகிறார். முகநூலிலும் இருக்கிறார்.  
அவரது தளத்தின் பெயர்: சிவகாசிக்காரன்
தளத்தின் இணைப்பு: http://sivakaasikaaran.blogspot.com/
முகநூலில் அவரது இணைப்பு:
http://www.facebook.com/profile.php?id=1147750586

இந்த பதிவுலகமும் முகநூலும் எங்களுக்கு அளித்தது நிறைய.  நிறைய நண்பர்கள், நிறைய பாசமுள்ள மகள்கள், ராம்குமாரைப் போன்ற பாசமுள்ள பிள்ளை. 

பார்த்தால் பசு - பாய்ந்தால் புலி:
பார்ப்பதற்கு அமைதியாக இருக்கிறார்.  அவரது பதிவுகளும், கதைகளும், அவர் முகநூலில் கொடுக்கும் செய்திகளும் ஆச்சரியமாக இருக்கும்.  நன்கு யோசிக்கும் சுறுசுறுப்பான இளைஞர். இன்று சொல்கிறேன் - அவர் பெரிய ஆளாக வருவார்.    எங்களது பாசப் பிள்ளை அருமை ராம்குமார் சீரும் சிறப்புமாக நீடூழி வாழ எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும். நாங்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் கொடுத்திருக்கிறோம்.  
 
மற்றும் ஹைதராபாத்திலிருந்து ஒரு குடும்பத்தினர் வந்திருந்தார்கள்.  அவர்களுடன் எடுத்த புகைப்படமும் கொடுத்திருக்கிறோம். எங்கிருந்தெல்லாமோ வருகிறார்கள்.  உள்ளூர்காரர்கள் தான் செல்வதில்லை.


மீண்டும் தேருக்கு வருவோம்.  தேர் இழுக்க ஆரம்பித்து விட்டார்கள்.  தேரில் திரு பாலகிருஷ்ணன் ஆசிரியர் தலைமையில் உற்சாகம் ஊட்டும் அணி - இவரது நடவடிக்கைகளை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம். 

தேர் இழுக்க இளைஞர் படை, அதை பார்ப்பதற்கு நல்ல கூட்டம், மாடியிலிருந்தும் பார்க்கிறார்கள்.  இடையில் நிறுத்தி விட்டால் இளைஞர்கள் யாராவது ஒருவரை தூக்கி போட்டு விளையாடுகிறார்கள்.  உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது.  வடம் புதிதாக மாற்றியிருக்கிறார்கள்.  எனவே முக்கு திரும்பும்போது வடத்தை எளிதாக தூக்குகிறார்கள்.  ஆனாலும் இது மிகப்பெரிய பணி. எல்லோரது ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம்.


            





  இந்த பதிவிற்காக புகைப்படங்கள் எடுத்த எனது மனைவி திருமதி உமாகாந்திக்கும், நிறைவு நாள் அன்று புகைப்படங்கள் எடுத்த திருமதி ரமாமணி அவர்களுக்கும் எங்களது மனப்பூர்வ நன்றி. இந்த பதிவு ஸ்ரீ ஆண்டாள் கிருபையால் எழுத முடிந்தது.

இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவும், மற்றும் எங்களது பதிவு மேம்பாட்டிற்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றியும், வணக்கமும்.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.  உங்கள் பெயரை Google Connect Widget இல் பதிந்து கொள்ளுங்கள்.  உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு இடும்போது உங்களது மின்னஞ்சல் பெட்டிக்கு வந்து விடும். 

மிக்க நன்றி.