வியாழன், மே 19, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரில் சந்தனமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா


  
 ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு சிறப்பு சந்தனமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா.  இந்த திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் (அநேகமாக ஏப்ரல் அல்லது மே மாதம் வரும்) அமாவாசை அன்று நடைபெறும்.  கிட்டத்தட்ட 5000  பேருக்கு மேல் அன்று பூக்குழி இறங்குவார்கள்.  
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்தும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் மம்சாபுரம், மீனாட்சிபுரம், ரெங்கநாதபுரம், திருமலாபுரம், வத்திராயிருப்பு, மற்றும் ராஜபாளையம் போன்ற இடங்களிலும் இந்த ஊர் மக்கள் வெளியூரிலிருந்தால் அங்கிருந்து வந்து கலந்து கொள்வார்கள்.  யாதவ பெருமக்கள், தேவர் இன மக்கள், விஸ்வகர்மா இன மக்கள், பிள்ளைமார் இன மக்கள், சாலியர் இன மக்கள் ஆகிய மக்கள் இந்த பூக்குழி இறங்குவதில் கலந்து கொள்கிறார்கள்.

   பூக்குழி திருவிழாவிற்கு 13  நாட்கள் முன்னால் கோவிலில் கொடி ஏற்றுகிறார்கள்.  அன்றிலிருந்து திருவிழா தொடங்கி விடுகிறது.  தினந்தோறும் அம்மனை அலங்காரம் செய்து வீதி உலா எடுத்து செல்கிறார்கள். இந்த திருவிழாக்கள் அனைத்தும் யாதவ பெருமக்களால் நடத்தப்பெறுகிறது. இந்த பூக்குழி திருவிழா 2.5.2011 அன்று நடைபெற்றது.  
உங்களை திருவிழாவிற்கு அழைத்து செல்கிறோம்.  பொதுவாக மாரியம்மன் கோவில்கள் எல்லாம் நீர்க்கரை ஓரங்களிலும் வயல்களிலும் கண்மாய்க்கரை (a big water tank - in some areas they call it us ஏரி) ஓரங்களிலும் அமைந்திருக்கும் என்று திருமதி.தேச மங்கையர்க்கரசி தங்களது சொற்பொழிவுகளில் சொல்வார்கள். இந்த கோவிலும் பெரியகுளம் கண்மாய் கரையில் அமைந்திருக்கிறது.  

   பூக்குழி அன்று காலை இதற்காக விரதம் இருந்தவர்கள் கோவிலில் வந்து காப்பு கட்டி செல்வார்கள்.  

பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் ரதவீதிகளை சுற்றி திருமுக்குளம் வழியாக கோவிலுக்கு செல்வார்கள்.  கோவிலில் எந்நேரம் பூக்குழி இறங்க வேண்டும் என்று குறித்திருக்கும்  நேரம் வரும் வரை காத்திருந்து பூக்குழி இறங்குவார்கள்.
   பூக்குழி இறங்க வரும் ஜனத்திரளை பாருங்கள். வயது வித்தியாசம் இல்லை. கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள், குழந்தைகளைக் கொண்டு ஆண்கள், முதியவர்கள், இளைஞர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் சிறுவர்கள், சிறுமிகள் செல்வது கண் கொள்ளக் காட்சியாக இருக்கும்.
திருவிழா என்றால் கலகலப்பு தான் வியாபாரமும் கலக்குகிறது.இளநீர் வியாபாரம், பனை நுங்கு வியாபாரம்
 (நகர்ப்புறத்தில் இருப்பவர்களுக்காக ஒரு புகைப்படம் சேர்த்திருக்கிறோம்).
பூ வியாபாரம்சிறுவர்கள் சிறுமிகளை கவர்வதற்காக பொம்மைஐஸ் பலூன் வியாபாரம் களை கட்டுகிறது

 

  வழியில் பார்வையற்றோர் ஒரு வேனில் வைத்து பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள்.













   இங்கு மக்கள் பூக்குழி இறங்க செல்வதற்காக காத்திருக்கிறார்கள்.  பூக்குழி திடலில் காவலர்களும் கோவிலை சேர்ந்த இளைஞர் குழுக்களும் நின்று கூட்டத்தை ஒழுங்குபடுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அனுப்புகிறார்கள்.  இதில் காவல்துறையின் பணி மகத்தானது  மிகவும் போற்றத் தக்கது.  கோவில் பகுதியில் இரு சக்கர வாகனம். ஆட்டோ, கார் போன்ற வாகனங்களை முற்றிலும் தடை செய்து விட்டார்கள்.  அதனால் பொதுமக்களுக்கு கோவில் வரை சென்று வருவது சிரமில்லாமல் இருந்தது.  

  பூக்குழியை பார்ப்பதில் இளைஞர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை பாருங்கள்.  
பேனர் கட்டுவதற்கான சாரங்களிலும், வீடு கோவில் மாடிகளிலும் ஏறி நிற்கிறார்கள்.  காவல்துறையிலிருந்து இறங்குமாறு அறிவிப்பு செய்து கொண்டே இருந்தார்கள்.

                   இளங்கன்று பயமறியாது...  

   வாழை மரங்கள் இரண்டு கட்டி இருக்கின்றன.  அவை பூக்குழி திடலின் முன்பு இருக்கின்றன.  
 பூக்குழி இறங்கிய மக்கள்  பின்பு கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்து விட்டு வெளியில் வருகிறார்கள்.  உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்று விரதம் முடிக்கிறார்கள்.  இந்த ஊரின் பாதி அளவாவது இந்த திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். 

கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு முன்பு வீட்டை வெள்ளையடித்து சுத்தம் செய்து விரதம் இருக்கிறார்கள்.  இதனால் எல்லாத் தரப்பு மக்களுக்கும் வேலை வாய்ப்பு, வியாபாரம் உருவாகிறது.  நல்ல பணப்புழக்கமும் , பணச்சுழற்சியும் ஏற்படுகின்றன.  மக்களும் வெயில்காலத்திற்கு வரும் கிருமித் தொற்றுக்கு முன்பு தங்களை தயார் செய்து விடுகிறார்கள். உறவினர் வருகை நல்ல நட்புறவு ஏற்படுகிறது.திருவிழாக்கள் மக்களை தொடர் வேலைப்பளுவிலிருந்து இலகு படுத்துகிறது (relaxed mood). 

   பூக்குழிக்கு மறுநாள் கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது.  நாங்கள் காலையில் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. எனவே முடிந்த தேரை புகைப்படம் எடுத்து சேர்த்திருக்கிறோம். 
 கோவில் வெளியே பொங்கல் வைக்கிறார்கள்.  பொங்கல் பொங்குகிறது - அந்த அழகை பாருங்கள்.
கோவிலின் உள்ளே நேர்த்திக்கடனுக்கு மாவிளக்கு எடுக்கிறார்கள்.  வில்லடிக் கச்சேரி நடைபெறுகிறது.
 அம்மன் முன்பு அலங்காரத்தில் இருக்கிறார்.  அற்புதம்.  கண்கொள்ளக் காட்சி.  நாங்கள் இந்தக் காட்சியை இந்த வருடம் தான் பார்த்திருக்கிறோம்.  உங்களுக்காக சென்றோம்.  இது உங்களுக்கு புண்ணியம். 
 கோவிலுக்கு தேர் செய்வதற்காக அறிவிப்பு ஒன்று இருக்கிறது.  கோவிலின் கல்வெட்டு தோற்றம்.
 இந்த கோவிலை ஒரு படப்பிடிப்புக்கு உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்(வெடிகுண்டு முருகேசன் படம்).

திருமதி தேச. மங்கையர்க்கரசியை பற்றி:

   அவர்களுக்கும் எங்கள் ஊருக்கு பெரிய பாசப் பிணைப்பு இருக்கிறது.  அவர்கள் சிறுமியாக இருக்கும்போதிலிருந்து எங்கள் ஊர் பெரிய மாரியம்மன்கோவில் திருவிழாவிற்கு சொற்பொழிவுக்கு வருகிறார்கள். தற்போது திருமணமாகி இரட்டைக்குழந்தைகள் (பையன்கள்) இருக்கின்றன.  ஒரு வருடம் திருவிழாவில் சொற்பொழிவு நடக்கும் திடலில் உண்டியல் வசூலுக்கு இணையாக அவர்களும் காணிக்கை செலுத்தினார்கள் (10000 வசூல் என்றால் அவர்களும் 10000). 

   இந்த ஊரிலிருந்து அவர்கள் கல்யாணத்திற்கு சைக்கிள் கடை மணி அவர்கள் மன்றத்தின் சார்பாக சென்றிருந்தார்கள். அதை அவர் இந்த வருடம் மேடையில் சொல்லும்போது - உங்கள் ஊர் சார்பில் திரு மணி கலந்து கொண்டார்கள், பெண் வீட்டில் சார்பில் சீதன சாமான்கள் அவர் தான் எடுத்து சென்று மாப்பிள்ளை வீட்டில் ஒப்படைத்தார் என்று சொன்னார்கள்.  அது எங்கள் ஊர் மக்களுக்கு பெருமை.  மறு வருடம் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு வருவதாக சொல்லி இருக்கிறார்.


   இந்த பதிவை புகைப்படம் எடுத்து கணினியில் ஏற்ற உதவி செய்த ராஜவேலுக்கும் புகைப்படம் எடுத்த எனது மனைவி  திருமதி உமா காந்திக்கும் எனது நன்றி.

இந்த பதிவை படித்து நிறைகுறை சொல்லுங்கள்.  பின்னூட்டத்தை (comments) தமிழில் எழுதுவது சிரமம் இருந்தால் ஆங்கிலத்தில் எழுதுங்கள்.  அதனால் ஒன்றும் இல்லை.  நமது மக்கள் புரிந்து கொள்வார்கள்.
                            மிக்க நன்றி.

இணைப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் நாற்பது வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதற்கு திரு சுவாமிநாதன் நிறைய பதிவுகள் எழுதியிருக்கிறார்.  அத்தனையும் அற்புதமாக இருக்கிறது.  நீங்களும் படித்துப் பார்த்து அவருக்கு பின்னூட்டம் எழுதி பாராட்டு செய்யுங்களேன்.


20 கருத்துகள்:

  1. அருமையான படங்களுடன் நல்ல பகிர்வுங்க. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் பதிவும் எங்களூர்க் கோயிலுக்குக் கூட்டிப் போய்விட்டது என்னை !

    பதிலளிநீக்கு
  3. படங்களும் பதிவும் என்னை என் ஊர்க் கோயிலுக்கே கூட்டிப்போய்விட்டது கொஞ்ச நேரம் !

    பதிலளிநீக்கு
  4. சந்தனமாரியம்மன் கோவில் பெருமையை அருமையாக விளக்கி இருக்கீங்க.புகைப்படங்களும் அருமை.பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  5. நல்ல பகிர்வு. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரோட்டோரத்தில் உள்ள ஒரு கோவிலில் மே-5-ம் தேதி வரிசையாக பொங்கலிட்டனர். போக்குவரத்தையே மாற்றி விட்டனர். இரு கி.மீ-க்காக 25 கி.மீ சுற்றி வந்தேன்..

    பதிலளிநீக்கு
  6. திருவிழா துவக்கம் முதல் நிறைவு வரை
    படங்களும் சரி,சொல்லிச் செல்லும் விதமும்
    சரி மிக மிக அருமை
    ஒரு திருவிழாவை நேரடியாகப் பார்ப்பதை போன்ற
    உணர்வை உங்கள் பதிவு ஏற்படுத்திப் போகிறது
    இந்தப் பதிவு சிறப்பாக அமைய உதவிய
    திரு ராஜவேலு அவர்களுக்கும்
    தங்கள் துணைவியாரவர்களுக்கும்
    எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. படங்களுடன் விவரிப்பு அருமை... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. புகைப்படங்களுடன் நல்ல பகிர்வு. திருவிழாவில் நாங்களும் கலந்து கொண்டது போன்ற உணர்வு.

    பதிலளிநீக்கு
  9. அருமை! திங்களுக்கொன்றுதான் உமதிடுகை என்றாலும், தித்திக்கும் விதமாக வரைகின்ற உம் பணி வளர்க!!!ஆண்டாளும் அரங்கனும் அனுதினமும் அம்மாரியும் உமக்கருள்க!! - ரோமிங் ராமன்

    பதிலளிநீக்கு
  10. ராஜாவின் இசை கேட்காத குறை ..
    ரொம்ப நல்லாயிருக்கு படமும் எழுத்தும்

    பதிலளிநீக்கு
  11. அரிய பணி செய்கிறீர்கள்.
    சந்தனமாரியம்மன் கோவிலுக்கு நேரடியாக வந்து பார்த்த உணர்வைத் தந்தீர்கள்.
    புகைப்படங்கள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  12. மிக அழகாக புகைப்படங்களோடு இணைக்கப்பட
    தங்கள் தகவல் அருமை!...பகிர்வுக்கு மிக்க
    நன்றி ஐயா.....

    பதிலளிநீக்கு
  13. அன்பு ரத்னவேல் அய்யா அவர்களுக்கு,
    மாரியம்மன் பூக்குழி நடக்கிற தினம் என் தம்பியிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் நிறையமுறை பூக்குழிக்கு சென்றிருக்கிறேன்... எங்கள் தெருவில் இருந்து அனேகம் பேர் பூக்குழி இறங்குவார்கள்... சிறு குழந்தைகள் பெரியவர்கள், பெண்கள், ஆண்கள் என... எல்லா பக்கத்து ஊர்களிலும் உள்ளூர் விடுப்பு விடப்பட்டிருக்கும்...

    எதிரில் உள்ள முருகன் கோயிலிலும் கூட்டம் இருக்கும்... தலையில் மஞ்சள் தண்ணியும் வேப்பிலை கலந்து ஊற்றியவுடன், திமு திமுவென்று இறங்கி ஓடுபவர்களை கண்டிருக்கிறேன்... ஒரு குறிப்பிட்ட நேரத்தில், கொஞ்சம் கொஞ்சம் பூக்குழியில் இருக்கும் சூடு குறைந்துவிடும்... கொஞ்சம் கனன்று கொண்டு இருக்கும் நெருப்பில் கடைசியில் இறங்குபவர்கள், நிதானமாக நடக்கலாம். ஓடிக்கொண்டிருப்பவர்களின் மேல் ஓடும் போது தெறிக்கும் கங்கு... காயமேற்படுத்தி விடும்... ஆனாலும் பாதத்தில் ஏதும் காயம் இருக்காது.

    படங்கள் அற்புதம்... உங்கள் துணைவியாரின் உதவியும், ராஜவேலு அவர்களின் உதவியும் அளப்பரியது.

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  14. //புகைப்படம் எடுத்த எனது மனைவி திருமதி உமா காந்திக்கும்// அருமையாக எடுத்துள்ளார்கள் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  15. அன்புள்ள ஐயா..
    திருவிழா என்பது நமது பண்பாட்டின் வேர். அடையாளம். கரு. அதைப் போற்றிப் பாதுகாப்பது கடமை. அதை மிகப் பொறுப்பாகச் செய்திருக்கிறீர்கள். புகைப்படங்கள் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு கீழாகக் குறிப்புக்களும் விழாவை அருகிருந்து பார்த்த உணர்வைத் தந்தன. எனக்குத் தெரிந்த ஒரு தகவலை உங்களிடம் கேட்கவேண்டும். சந்தன மாரியம்மன் கோயிலுக்கு முதல் தானத்தை முகம்மதியர்கள்தான் தருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது இந்த சந்தன மாரியம்மன்தானா? அந்தப்பக்கம்தான் குழல்வாய்மொழியம்மன் கோயிலுக்கும் முதல் தானம் முகம்மதியர்களால் தரப்பட்டுத்தான் விழாக்கள் தொடங்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சரியா. பயனுள்ள பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  16. அன்புனன்பரே வணக்கம் நல்ல படைப்பு, மற்றும் ஒரு சின்ன உதவி உங்கள் ஊரில் தானே சதுரகிரி உள்ளது அதை பற்றிய தகவல் கிடைக்குமா.....

    பதிலளிநீக்கு
  17. திருவிழாவிற்கு அழைத்துச் சென்று அன்புடன் காட்சிப்படுத்திய தங்களுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  18. இந்த பதிவை புகைப்படம் எடுத்து கணினியில் ஏற்ற உதவி செய்த ராஜவேலுக்கும் புகைப்படம் எடுத்த எனது மனைவி திருமதி உமா காந்திக்கும் எனது நன்றி.//

    தங்கள் குடும்பத்தினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  19. படங்களும் பதிவும் திருவிழாவிற்கே அழைத்து சென்றது போல் இருந்தது. பகிவுர்க்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  20. படங்களும் அதற்கேற்ற விவரிப்பும் நேரில் பார்த்த நிறைவைத் தந்தது. நன்றி!

    பதிலளிநீக்கு