செவ்வாய், ஜூன் 28, 2011

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
(EMPLOYEES PROVIDENT FUND)
பிரச்னைகளும் தீர்வுகளும்.
பாகம்-3
இது இன்னொரு மிகவும் பரிதாபத்திற்குரிய கேஸ்.இந்த பகுதிகளில் படிப்பறிவு குறைவாக இருந்த சமயங்களில் பெண் பிள்ளைகளுக்கும், பையன்களுக்கும் மிக சிறிய வயதிலே திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.  பெண் பிள்ளைகளுக்கு பதினைந்து, பதினாறு வயதிலும், பையன்களுக்கு 20, 21 வயதிலும் திருமணம் அநேகமாக முடிந்து விடும்.இப்போது கல்வி விழிப்புணர்வு கூடினதும் சிறிய வயது திருமணங்கள் மிகவும் குறைந்து விட்டன.இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.  எங்களது ஆண் தொழிலாளர் ஒருவர் தனது இருபத்தொன்பது வயதில் அகால மரணமடைந்து விட்டார் (விபத்து அல்ல). இறந்த தேதி - 14.11.2000.அப்போது அவரது மனைவியின் வயது 23 (இருபத்து மூன்று) , அவருக்கு அப்போது இரண்டு பெண் குழந்தைகள் - மூத்த குழந்தையின் வயது 2 - பிறந்த தேதி (8.2.98) - இரண்டாவது குழந்தையின் வயது 1 - பிறந்த தேதி (16.8.99).அவர் இறக்கும் போது மனைவி மூன்றாவது குழந்தையை கர்ப்பமாக இருக்கிறார்.  எவ்வளவு துயரமான நிலைமை - நினைத்துப் பாருங்கள்.

இந்த பெண்மணி தனது தகப்பனார் இருக்கும் ஊரில் தான் இருக்கிறார்.  மாப்பிள்ளை வழி ஆள்கள் துக்கத்திற்கு வந்து விட்டு இவரை பார்த்து விட்டு இங்கேயே விட்டு விட்டு சென்று விட்டார்கள்.  அதற்குப் பிறகு எந்த ஆதரவும் இல்லை.

கிளைம் பற்றிய விஷயத்திற்கு வருவோம்.  கிளைம் அனுப்புவதற்கு கீழ்கண்ட விஷயங்கள் வேண்டும்.
  1.  தொழிலாளரின் மரண சான்றிதழ்.
  2.  வாரிசு சான்றிதழ்
  3. குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்
  4. தொழிலாளரின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வங்கியில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்து பாஸ் புத்தகங்கள்.

மேற்கண்டவை எல்லாம் வாங்குவதற்கு குழந்தைகளுக்கு 'நகராட்சியில் பிறப்பு பதியப்படவில்லை'. சிக்கல் ஆரம்பமாகி விட்டது.நாங்கள் பெண்ணின் தகப்பனாரை கூப்பிட்டு நீதி மன்றத்தை அணுகி பிறப்பு சான்றிதழ் கொடுக்க நகராட்சிக்கு உத்தரவிட மனு செய்ய சொன்னோம். நல்ல வேளை அவர் குழந்தைகளின் பிறந்த தேதிகளை குறித்து வைத்திருந்தார். அதை வைத்து இரண்டு பெண் குழந்தைகளுக்கும் 'ஜாதகம்' பக்கத்திலுள்ள பெரிய ஜோஸ்யர் ஒருவரை வைத்து தயார் செய்ய சொன்னோம். அவர் பெரிய மனசு வைத்து தயார் செய்து கொடுத்தார்.பணம் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.பிறகு அந்த தெருவிலுள்ள பெரிய மனிதர்கள் இருவர், வார்டு கவுன்சிலர் ஆகியோரிடம் குழந்தை பிறந்தது உண்மை தான் என கடிதம் வாங்கினோம்.பிறகு நீதிமன்றத்தை அணுகி, இந்த விஷயங்களில் செய்தித்தாளில் அறிவித்து சிரமப்பட்டு நகராட்சியில் இரண்டு பெண் குழந்தைகளும் பிறப்பு சான்றிதழ் வாங்கினோம்.இவ்வளவு சிரமங்களும் பெண்ணின் அப்பா தான் செய்தார் - அவரும் வயது முதிர்ந்தவர், இருதய நோயாளி. பையனின் அப்பா கண்டு கொள்ளவேயில்லை.

கர்ப்பமாக இருக்கும் குழந்தையையும் நாம் காண்பிக்க வேண்டுமே.  எனவே பெண்ணின் தகப்பனாரை கூப்பிட்டு - மகளை அரசாங்க மருத்துவர் ஒருவரிடம் அழைத்து சென்று 'மறைந்த இன்னாரது மனைவி கர்ப்பமாக இருக்கிறார்' என சான்றிதழ் வாங்க சொன்னோம்.  ஒரு இளம் விதவைக்கு என்னவெல்லாம் கஷ்டம் பாருங்கள்.  

இதற்கிடையில் 'Tamilnadu Labour Welfare Board' லிருந்து மனுச்செய்து Rs.1,500/.. வாங்க ஏற்பாடு செய்தோம். இந்த தொகை 'இறுதி செலவு பணம்'. தமிழ்நாடு அரசாங்கம் தொழிலாளர்கள் பணியிலிருக்கும்போது ஏற்படும் மரணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கலாம்.  தலைவனை இழந்து திண்டாடும் குடும்பத்திருக்கு ஆதரவாக இருக்கும்.அதே மாதிரி 'இறுதி செலவு பணம்' ஐயாயிரம் ரூபாய் கொடுக்கலாம்.  இதெல்லாம் இனாம் அல்ல.செய்ய வேண்டிய உதவிஇதற்கு அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் முயற்சி செய்ய வேண்டும்.

இதற்கிடையில் குழந்தைகளுக்கு 'கிராம நிர்வாக அதிகாரியிடம்' பிறந்த சான்றிதழ் வாங்கி கிளைம் படிவங்களை அனுப்பி வைத்தோம்.  ஆனால் 'நகராட்சி பிறந்த சான்றிதழ்' வேண்டும் என அனைத்து படிவங்களும் திரும்பி வந்து விட்டன.  அந்த படிவங்கள் அனுப்பும்போது அந்த பெண்மணி "மூன்றாவது குழந்தையை கர்ப்பமாக இருக்கிறார்" என்று அரசு மருத்துவரிடமும் வாங்கிய சான்றிதழும் சேர்த்து அனுப்பி தகுந்த இடத்தில் எழுதி விட்டோம். மூன்றாவது பெண் குழந்த 28.2.2001 பிறந்தது.அதை நகராட்சியில் பதிந்து விட்டார்கள்.

27.1.2001 தேதியன்று இரண்டு பெண் குழந்தைகளுக்கு கிடைத்த நகராட்சி சான்றிதழ்களை சேர்த்து மனு செய்தோம்.அந்த பெண்ணின் தகப்பனார் தான் நன்கு அலைந்து எங்களது வழி காட்டுதலின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்தார்.வருங்கால வைப்பு நிதி பணம் 14.2.2001 தேதி அனுப்பியதாக கடிதம் வந்தது.எல்லா இடங்களிலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் உங்களது படிவங்கள் முழுமையாக இருந்தால் சீக்கிரம் கணக்கு முடிந்து பணம் வந்து விடும். நீங்கள் நேரில் செல்ல வேண்டியதில்லை.எந்த செலவும் கிடையாது.  இது மிகவும் போற்றப்பட வேண்டிய விஷயம்.  நான் இது வரை அந்த அலுவலகத்திற்கு சென்றதில்லை.  செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் பணியை நான் மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.

8-8-2001 தேதியன்று பென்ஷன் அனுமதிக்கப்பட்டு கடிதம் வந்தது.இதற்கிடையில் சில விஷயங்கள் கேட்டு கடிதம் வந்தது.நாங்கள் உடனுக்குடன் விபரங்கள் கொடுத்து விட்டோம்.எங்களுக்கு ஒரு மன நிறைவு.மூன்றாவது குழந்தையை குடும்ப விபரத்தில் சேர்க்க வேண்டுமே. எனவே பென்ஷன் வந்த பிறகு எழுதுவோம் என்று இருந்து விட்டோம்.  இன்றேல் ஏதாவாது சிக்கல் ஆகி விடும் என்று பயம். 24.9.2001 தேதியன்று அந்த பெண்மணியை கடிதம் எழுதச்சொல்லி பிறப்பு சான்றிதழுடன் குடும்ப பட்டியலில் இணைக்க சொல்லி அனுப்பினோம்.27.2.2002 தேதியன்று மூன்றாவது பெண் குழந்தை பெயரையும் இணைத்து வங்கிக்கு கடிதம் அனுப்பி இந்த பெண்மணிக்கும் கடிதம் வந்து விட்டது.

எங்களது பெரிய கடமை முடிந்தது.  மன நிறைவு.
இந்த பென்சனின் சிறப்புகள்.  
  • மனைவிக்கு அவரது ஆயுள் காலம் முடிய (மறு மணம் செய்யாமலிருந்தால்) பென்சன் வரும்.
  • இரண்டு குழந்தைகளுக்கு அவர்களது இருபத்தைந்து வயசு முடிய (அவர்கள் மணமாயிருந்தாலும்) பென்சன் வரும்.
  • இப்போது முதல் இரண்டு குழந்தையில் மூத்த குழந்தைக்கு இருபத்தைந்து வயசாகி விட்டால் அடுத்த குழந்தைக்கு பென்சன் வர ஆரம்பிக்கும்.
  • பெண் குழந்தைக்கு மணமாகவில்லை என்றால், ஊனமுற்றிருந்தால் (அரசாங்க சான்றிதழ் வாங்கி சமர்ப்பிக்க வேண்டும்) அதன் ஆயுள் காலம் முடிய பென்சன் வரும்.

இது ஒரு அருமையான திட்டம்.  மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும்.அவர்கள் கேட்கும் ஆவணங்களை சரியாக கொடுக்கவேண்டும்.எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.


இந்த பதிவை படித்து பார்த்து உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக எழுதுங்கள்.

இந்த பதிவை அழகுற அமைத்த, இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவிய திருமதி.ரமாமணி அவர்களுக்கு மனப்பூர்வ நன்றி
.

மிக்க நன்றி.

27 கருத்துகள்:

  1. மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும்.அவர்கள் கேட்கும் ஆவணங்களை சரியாக கொடுக்கவேண்டும்.எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.//

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பானப் பதிவு . அந்த நிகழ்வை முதலில் வாசித்த பொழுது அந்தப் பெண்ணின் நிலை எண்ணி மனம் கனத்துபோனது .

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் சிறப்பானப் பதிவு

    பதிலளிநீக்கு
  4. ஆன்மீகப்பதிவர் என நினைத்தேன்.. சாரி.. ஆல் இன் ஆல் பதிவர் போல.. வாழ்த்துக்கள் அய்யா

    பதிலளிநீக்கு
  5. அரசு எல்லாதிட்டங்களையும் சரியாகத்தான் வைத்திருக்கிறது., சில தவறுகளில் அதிகாரிகளின் பங்கும், சில தவறுகளில் நமது பங்கும் இருக்கிறது., இரண்டு தவறுகளும் கலையப்படுமாயின் எல்லா திட்டங்களும் எல்லோருக்கும் நன்மை பயக்கும்!

    பதிலளிநீக்கு
  6. மிகவும் பயனுள்ள பதிவு இது, மக்களுக்கும் கொஞ்சம் விழிப்புணர்வு தேவைதான் இல்லையா...???

    பதிலளிநீக்கு
  7. உங்களுக்கு உதவி புரிந்து கொண்டிருக்கும் நண்பரிடம் சொல்லி இங்கு வேறு சட்டையை மாட்டச் சொல்லுங்க. ஒவ்வொரு முறையும் உள்ளே வர ரொம்ப மெனக்கெட வேண்டியதாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  8. அனுபவத்திலிருந்து முக்கியமான பதிவு.

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான மிகவும் பயனுள்ள பதிவு!

    பதிலளிநீக்கு
  10. பயனுள்ள பகிர்வு. பலரையும் சென்றடைய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. பாதிக்கப்பட்டோருக்கு பயன் அடைய உதவும் நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  12. மிக தேவையான பதிவு ஐயா.. நன்றி பகிர்வுக்கு..:)

    பதிலளிநீக்கு
  13. விரிவான விளக்கத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்.நிச்சயம் பிரயோசனமான பதிவு.நன்றி ஐயா !

    பதிலளிநீக்கு
  14. ஐயா நீங்கள் ஒரு சமுக போராளி
    வாழ்த்துக்கள் வாசிக்க வாசிக்க உங்கள் கடின உழைப்பு தெரிகிறது கண்முன்

    பதிலளிநீக்கு
  15. நான் முதலில் மருந்து பிரதிநிதியாக இருந்தபோது எனக்கு மாதாமாதம் EPF க்கு பிடிக்கப்பட்ட தொகை பின்பு கிடைக்க நான் பட்ட பாடு பெரிய கதை ஐயா... மும்பையில் உள்ள EPF அலுவலகம் தொடர்ந்து எந்த பதிலும் எனது கடிதத்துக்கு பதில் தராததால் நுகர்வோர் நீதிமன்றம் மூலமே எனக்கு கிடைத்தது....

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
  17. நல்ல பதிவு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. மிக மிக பயனுள்ள பதிவு..

    நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  19. பயனுள்ள பதிவு
    விளக்கமாகவும் தெளிவாகவும் பதிவிட்டுள்ளமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. அருமையான, எத்தனையோ பேருக்கு உதவக்கூடிய பயனுள்ள‌ பதிவு!

    பதிலளிநீக்கு
  21. சிரமம் பாராமல் என் தளத்திற்கு வருகைப் புரிந்து தூயாவை வாழ்த்தியமைக்கு நன்றி அய்யா. !

    பதிலளிநீக்கு
  22. இன்றைக்குத் தான் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வலைப்பதிவிற்குள் வந்தேன்.செந்தில்குமார் சார் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.ஆன்மிக பதிவல்ல.ஆல் இன் ஆல் பதிவு.பயனுள்ள பதிவுகள்.நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு