வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை.


நாங்கள் 27.8.12 ஒரு திருமணத்திற்காக விருதுநகர் சென்றிருந்தோம்.  எனது மனைவி திருமதி அவர்களுக்கு விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்றால் தனி ஈர்ப்பு.  எனது மூத்த மகன் விஜயவேலுக்கு எங்கள் மூத்த மருமகள் திருமதி தில்லை நிவேதா அவர்களை அங்கு வைத்துத் தான் பெண் பார்த்தோம், ஒரே முயற்சியில் திருமணம் முடிந்து விட்டது (14.11.2005).

 எனது 2வது மகன் சரவணனுக்கு அங்கு சென்று வந்த பிறகு வியாழக்கிழமையில்  தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வந்த உடன் திருமணம் கைகூடி விட்டது.  எனவே 3வது மகன் பிரகாஷிற்கு 2010 ஜனவரியிலிருந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், இன்னும் திருமணம் தகையவில்லை, எனவே திருமணத்திற்கு செல்லும் போது விருதுநகர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வருவோம் என்று எனது மனைவி சொன்னார்.

எனக்கு – மனைவி சொல்லே மந்திரம்
(ஐயா, திரு சொல் கேளான் கிரி அவர்களே, கவனித்துக் கொள்ளுங்கள்).

நாங்கள் பொதுவாக கோவில்களுக்கு செல்வது மிகவும் குறைச்சல், அதுவும் திருவிழா என்றால் செல்வது அரிது, கூட்டம் என்றால் ஒரு ஒவ்வாமை, உடல் நிலை அனுமதிக்காது.

இந்த கோவில் 20.8.2012 அன்று காலை சுமார் 9.30 மணி இருக்கும் சென்றோம்.  லிங்கருக்கும், அம்பாளுக்கும் ஆரத்தி காண்பித்துக் கொண்டிருந்தார்கள், முடிந்த உடன் கோவிலை சுற்றி வந்தோம்.  அலங்காரங்களுடன் ரிஷப வாகனங்களில் – சொக்கர், பிரியாவிடை ஒரு வாகனத்திலும், மீனாட்சி ஒரு வாகனத்திலும் – விநாயகர் மூஞ்சூறு வாகனத்திலும் - வீற்றிருந்தார்கள்.  அலங்காரம் அற்புதமாக இருந்தது.  எங்களுக்கு ரயில் 12.20க்கு தான், எனவே ஏதோ நிகழ்ச்சி நடைபெறப் போகிறது இருந்து பார்த்து விட்டு போவோம் என முடிவு செய்தோம்.

முன்புறம் உள்ள மேடையில் -  சொக்கர், மீனாட்சிக்கு அபிஷேகம் நடைபெற்றது; பின் அலங்காரம் நடைபெற்றது.  எங்களுக்கு மிகவும் கொடுப்பினை போலும்.  அங்கு பார்த்துக் கொண்டு உட்கார்ந்த போது எனக்கு தோன்றிய எனது எண்ணங்களை எழுதியிருக்கிறேன்.

 

கனியைக் கேட்டோம், கனிச் சோலையைக் கொடுத்தாய் இறைவனே!


இது வரை மீனாட்சி நான் பார்த்ததில்லை.  எனது மகள் பெயர் மீனாட்சி.  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒன்று அல்லது இரண்டு தடவை போயிருக்கிறேன்.  ஒரு தடவை திருப்பணி நடந்து கொண்டிருந்தது, ஒரே தூசிமயம், மற்றொரு தடவை நல்ல வட இந்திய கூட்டம், நல்ல தரிசனம் கிடைக்கவில்லை.  அடிக்கடி செல்லவும் முடியவில்லை

இங்கு சொக்கர் லிங்க வடிவிலும், மீனாட்சி வெள்ளிக் கவசத்தில் நல்ல உயரமாக அற்புதமான அலங்காரத்தில் இருந்தார்கள்.  காணக் கண் கோடி வேண்டும்.  எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் முன்பு இருப்பது போல் உணர்ந்தேன்;

மிகவும் நெகிழ்ந்து விட்டேன்.  கிட்டத்தட்ட அரை மணி நேரம் அங்கு அமர்ந்திருந்திருப்போம்.

அலங்கார வாகனங்கள் அருகே ஏதோ நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றன.  நாங்களும் காத்திருந்தோம். 
‘சிவபெருமானின் பிட்டுக்கு மண் சுமந்த லீலை’
காட்சிகளாக நடைபெறும் என்றார்கள். 

 அந்த காட்சியை நாங்கள் பார்த்தோம்.  முழு ஈடுபாட்டில் பார்த்ததால் படம் எடுக்க வேண்டும் என தோன்றவில்லை; அனுமதிப்பார்களா என்றும் தெரியவில்லை.  எனவே தினமலர் பத்திரிக்கையில் வந்த படத்தை ஸ்கேன் செய்து போட்டிருக்கிறேன்.  எனக்கு முடிந்த அளவு எழுதுகிறேன்.

ஓரளவு ஈர மண் கொட்டி செடிகள் நட்டி ஆறு போன்ற அமைப்பு அமைத்திருக்கிறார்கள்.  முன்னால் ஒரு பாட்டி அமர்ந்திருக்கிறார், சிவபெருமான் தலையில் தட்டுடன் அருகில் நிற்கிறார்.  இனி மேல் நிகழ்ச்சிகளை நான் சொல்கிறேன்,

வாகனங்களில் அமர்ந்திருந்த தெய்வங்களுக்கு ஆரத்தி, பூஜை சிறப்பாக நடைபெற்றன.  இரண்டு சிவாச்சாரியார்கள் வாகனங்கள் அருகே நின்று ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ நிகழ்ச்சியை நடத்திக் காண்பிக்கப் போகிறோம் என்றார்கள்.  அவர்கள் இருவரும் கையில் புத்தகங்கள் வைத்திருந்தார்கள்.  அவர்கள் வாசிக்க வாசிக்க இங்கு காட்சிகள் நடைபெறுகின்றன.

சிவபெருமான் வேலையாளாக வேலை தேடி வருகிறார்.  இங்கு பாட்டி ஒருவர் இருக்கிறார், அவர் வீட்டில் அவரைத் தவிர வேறு ஆட்கள் கிடையாது.  மன்னர் உத்தரவுப்படி வீட்டுக்கு ஒருவர் சென்று ஆற்றை சரி செய்ய வேண்டும்.  வேலையாள் வேலை தேடி பாட்டியிடம் வருகிறார், பசியாக இருப்பதாக சொல்கிறார், பாட்டி வேலை செய்யும்படி கேட்கிறார்.  பாட்டி புட்டு தருவதாகவும், சாப்பிட்டு விட்டு வேலை செய்யும்படி கேட்கிறார்; சம்பளம் வேறு ஒன்றும் தர முடியாது என்கிறார்.  வேலையாளும் சரி என்கிறார்; புட்டு வாங்கி சாப்பிடுகிறார்.  சாப்பிட்டு விட்டு மண் வெட்டியை ஒரு ஓரமாக வைத்து விட்டு மரத்தடியில் வைத்து விட்டு உண்ட மயக்கத்தில் தூங்கி விடுகிறார்.


  மன்னர் யானையில் வருகிறார்.  நடந்த வேலைகளை மேற்பார்வையிடுகிறார்.  இந்த பாட்டியின் வேலை மட்டும் முடியாமல் கிடக்கிறது.  வேலையாளை கூப்பிடுகிறார்.  கேள்விகள் கேட்கிறார்.  அவரும் அவருக்கு தோன்றிய பதில் சொல்கிறார்.  வேலை செய்யாததிற்கு பிரம்பால் 3 அடிகள் அடித்து தண்டனை கொடுக்கிறார்.  அந்த 3 அடிகள் மக்கள் மீது விழுவதாக ஐதீகம்.

ஆஹா, மிகவும் அருமை.  மக்களுக்கு இப்படி நடத்தினால் தான் புரியும், எத்தனை பேர் படிக்கிறார்கள்?

இந்த நிகழ்ச்சியை நடத்திய கோவில் நிர்வாகத்தினர்களுக்கும், அந்த நிகழ்ச்சியை நடத்திய சிவாச்சாரியார்களுக்கும், இதர இசைக் கலைஞர்களுக்கும், மற்ற பணியாளர்களுக்கும், பொறுமையுடன், அமைதியாக, ஒரு ஒழுங்குடன் பார்வையிட்ட பொது மக்களுக்கு எனது வணக்கங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதிவை படிக்கும் உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்.  மிக்க நன்றி.

அன்னை மீனாட்சி நேற்றும் (30.8.2012) எங்களை அழைத்திருந்தார்.  நாங்கள் அன்னை மீனாட்சி சன்னதி முன்பு மனம் நெகிழ்ந்து அமர்ந்தோம்.  மன நிறைவாக இருந்தது.

விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பற்றி – மிக நேர்த்தியாக, சுத்தமாக பராமரிக்கப் படுகிறது.  எல்லா இடங்களிலும் ஒரு ஒழுங்கு, அருமையான நடைமுறைகள் கடைப் பிடிக்கப் படுகின்றன. 

தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஒரு அறிவிப்பு இருந்தது.  வழக்கமாக கொண்டைக்கடலைகளை ஊற வைத்து நூலில் கோர்த்து (பாசி மாலை கோர்ப்பது போல்) கொண்டு வந்து சார்த்துவார்கள்.  அந்த கொண்டை கடலை மாலை முடிந்தவுடன் கழற்றி கீழே தான் போகும்.  இந்த அறிவிப்பில் – கொண்டை கடலைகளை ஊற வைத்து கோர்த்து கொடுப்பதற்கு பதிலாக = ஊற வைக்காமல் அப்படியே ஒரு பொட்டலமாக (packet) போட்டு கொண்டு வந்தால் சாமி பாதத்தில் வைத்து கோவிலில் சேர்த்து விடுகிறோம் என்றிருக்கிறது.  இந்த கொண்டை கடலைகளை கோவிலிலிருந்து சுண்டலாக தயார் செய்து வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்.  இது அனுபவம் & சிக்கனம் & பயன்பாடு போதிக்கும் அருமையான பாடம்.

இன்னும் சில படங்கள் இணைத்திருக்கிறேன்.  நீங்கள் அடுத்து விருதுநகர் செல்லும் போது இந்த கோவிலுக்கு செல்லுங்கள்.  பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்திருக்கிறது.  நீங்களும் இந்த அற்புதமான கோவிலை தரிசிக்க வேண்டுகிறேன்.  மிக்க நன்றி.


இனிய நண்பர்களே, இந்த பதிவை படித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.





8 கருத்துகள்:

  1. மிக்க நன்றி ஐயா... படங்களும் விளக்கமும் அருமை...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் மனது உங்கள் பதிவில் தெரிகிறது. விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கே எங்களை கூடி சென்று வந்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  3. அய்யா,

    சிறப்பாகப் பராமரிக்கப்படும் ஆலயத்துக்கு விருதுநகர் செல்லும்போது கட்டாயம் செல்கிறேன். தகவல்கள் அருமை.

    ஸ்ரீ....

    பதிலளிநீக்கு
  4. கட்டாயமாக செல்ல வேண்டிய இடங்களில் ஒன்றாக குறித்து விட்டேன்.நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா. உங்களது அறிவுரை ஆணியடித்தால் போல் பதிந்து விட்டது. முகநூலில் நேரத்தை மிகவும் குறைத்து விட்டேன். மற்றும் படிப்பதில், பதிவில் என தகுந்த அளவு நேரம் ஒதுக்கி விட்டேன்.
      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  6. அன்பின் ரத்னவேல் - அருமையான பதிவு - ஒரு கோவிலுக்குச் சென்று - அங்கு நடக்கும் ஒரு நிகழ்வினைக் கண்டு - பிட்டுக்கு மண் சுமந்த லீலையைக் கண்டு - களித்து - அவ்வுணர்வுகளைப் பதிவாக வடித்தமை நன்று. நல்லதொரு செயல் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. அனுபவம் & சிக்கனம் & பயன்பாடு போதிக்கும் அருமையான பாடம்.

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு