சனி, மே 05, 2012

பேராசிரியர் மோகனாவின் புற்று நோய் மருத்துவ மனை அனுபவங்கள்

‘உள்ளத்தைக் கசக்கிப் பிழியும்  மலர்கள்’


பேராசிரியர் மோகனா அவர்கள் புற்று நோய்க்காக கோவை இராமகிருஷ்ணா மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து பூரண குணமடைந்தார்கள்.

  அது பற்றி ஏற்கனவே பதிவிட்டிருக்கிறோம்.  அவர்கள் அங்கிருக்கும் போது இருந்த சிறுவர்கள், சிறுமிகள் சிகிச்சை பெற்றதை ‘உள்ளத்தைக் கசக்கிப் பிழியும்  மலர்கள்’ என எழுதியிருக்கிறார்கள்.  அந்த பதிவை அவர்களது அனுமதியின் பேரில் வெளியிடுகிறேன்.  பேராசிரியர் மோகனா அவர்களுக்கு எங்கள் மனப்பூர்வ நன்றி 

 அன்பு நண்பர்களே.. வணக்கம்.
 நான்  முகநூலில் நமது நிலை பற்றிப் போடும் இடத்தில் நேற்று கோவை இராம கிருஷ்ணா மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனை செய்து முடித்த பின் எனக்கு ஏற்பட்ட ஓர் அனுவத்தை லேசாகக் குறிப்பிட்டேன், ஒரு நண்பர் என்ன பிள்ளைகளுக்கு என்றார். அதை ஒட்டி விரிவாக அந்த குழந்தைகள் பற்றி எழுதவேண்டியதாகிவிட்டது.


இராமகிருஷ்ணா மருத்துவ மனை வலைத்தளத்தில் இருந்த படம்


  நண்பர்களே,
 எனக்குத் தெரிந்து கோவை இராம கிருஷ்ணா மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையமும் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளது. நான் கடந்த 1 1/2 ஆண்டுகளாக அந்த மருத்துவ மனையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறேன். கொஞ்சம் குறைந்த கட்டணத்தில் நடுத்தர வர்க்க மக்களுக்கு இராமகிருஷ்ணா அறக்கட்டளை மூலம் சிகிச்சை செய்து வரும் ஒரு மருத்துவ நிறுவனம். இங்கு மற்ற இடங்களை விட கட்டணம் குறைவுதான்.

 எனக்கு வந்த மார்பக புற்று நோய்க்கான சிகிச்சைக்கு சுமார் 1 .25 லட்சத்துக்குள் தான் செலவாயிற்று. அறுவை சிகிச்சையும், வேதிசிகிச்சை மற்றும் மருத்துவமனை கட்டணங்களும் சேர்த்து.. ஓர் 6 மாதம் வரை. ஆனால் இதே சிகிச்சைக்கு பழனியில்  வேறு 3 பெண்கள் 32 -38  வயதுக்குள் உள்ளவர்கள் கோவை +மதுரையில் செய்துள்ளனர். கோவையில் வேறு மருத்துவமனையில் 3 .5 லட்சம் ஆயிற்றாம்.

மதுரையில் சிகிச்சை சுமார் தான். அறுவை சிகிச்சையில் புண் ஆறாமல் இருந்தது. கொஞ்சம் பிரச்சினையும் ஆனது. செலவு 3 -6 லட்சம் செய்துள்ளனர். ஒருவர் 2 மாதத்திலும், ஒருவர் 6 மாதத்திலும்...

 மதுரையில் நோயாளியின் மருத்துவ அறிக்கையும் விபரமாக இல்லை. என்ன வேதிசிகிச்சை, என்ன மருந்து என்பதும் குறிப்பிடப் படவில்லை.ஒரு மருத்துவர் என்ன அறுவை சிகிச்சை செய்தார், எப்படி செய்தார், பயன்படுத்திய மருந்துகள், வேதி சிகிச்சையின் போது நோயாளியின் உடல் நிலை, கொடுக்கப்படும் மருந்துகள், எத்தானையாவது வேதி சிகிச்சை போன்றவையும் குறிக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவை..  மிகவும் தவறான உதாரணங்கள் ஆகும். 


 இராமகிருஷ்ணா மருத்துவ மனை அனைத்து வகை புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறது.


 அறுவை சிகிச்சை நிபுணர்களும், வேதி சகிச்சை நிபுணரும், கதிர்வீச்சு சிகிச்சை நிபுணரும் சிறப்பாக சேவை மனப்பான்மையுடன், சிரித்த முகத்துடன் செயல் படுகின்றனர். 

நோய் குணமாக, மற்றும் மருத்துவர் மேல் நம்பிக்கை உண்டாகி நோய் விரைவில் குணமாக இதுவும் ஒரு காரணியாகும்.

இந்த மருத்துவமனை மிக மோசமாக உள்ள புற்று நோயாளிகளை இலவசமாக ஊர்தி அனுப்பியும் மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர், நீங்கள் தொலைபேசியில் தகவல் தந்தால். சமயத்தில் சிலருக்கு மிகக் குறைவான கட்டணத்திலும் சிகிச்சை செய்யப்படுகிறது. 

குழந்தைகளுக்கான புற்று நோய் பகுதியில், பொருளாதார ரீதியாக வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, முக்கிய மாக இரத்தப் புற்று நோய் உள்ள குழந்தைகளுக்கு எவ்வித கட்டணமும் இன்றி, இலவசமாகவே சிகிச்சை அளிக்கிறது.   இந்த நிறுவனமும்,இதன் அறக்கட்டளையும். குந்தைகளுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு உதவியாக வரும் அன்னை சகோதரி போன்றவர்களுக்கும் உணவு ,மற்றும் உறைவிடம் இலவசமாகவே வழங்கப்படுகிறது.

 2011 ஜனவரி மாதம் இராமகிருஷ்ணாவில் இந்த குழந்தைகள் பகுதியில் 30 குழந்தைகள் இருந்தனர். இந்த பகுதியில் பொதுவாக வேதி சிகிச்சையும், கதிர்வீச்சு சிகிச்சையும் மட்டுமே நடைபெறும் வாய்ப்பு உள்ளதால், புற்றுநோய் மையத்தின் நிர்வாகிதான் இதன் பொறுப்பாளர். இந்த பகுதியை இந்த குழந்தைகளை அன்புடனும், அக்கறையுடனும் செவிலியர்களும் நிர்வாகியும் கவனித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு விளையாட சைக்கிள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் அதன வயசுக்குத் தகுந்தாற்போல பொம்மைகளோ,  பேப்பரோ, பென்சில்/ பேனா கொடுக்கப்படுகிறது. சில குழந்தைகளுக்கு படம் வரைந்து வண்ணம் தீட்ட பேப்பரும், வண்ணப் பென்சிலும் கொடுக்கின்றனர். படிக்க புத்தகமும் கொடுக்கப்படுகிறது.

 நான் நேற்று எனது சோதனை முடிந்தபின் குழந்தைகளைப் பார்க்க குழந்தைகள் பகுதிக்குப் போனேன். நான் ஏற்கனவே அங்கு தங்கி சிகிச்சை எடுத்த போது, அந்த குழந்தைகளுடன் பழகிய/பேசிய அநுபவம் உண்டு, சிலர் பழைய குழந்தைகள், சிலர் புதிய முகங்கள். நேற்று நான் குழந்தைகள் பகுதிக்குச் சென்றபோது, அங்கு 19 மலர்கள் இருந்தனர்..

 2 -15 வயதில். ஒவ்வொருவரும் ஒவ்வொரு முகபாவத்தில், மன நிலையில்..! அந்த பிஞ்சுகளின் உடலில் புற்றுநோயை செலுத்திய கொடியவர் யார்?
 இயற்கைதான்.
எந்த நோய்க்கிருமியாலும் இல்லை.புற்று நோய் என்பது வளர்சிதை மாற்றத்தில், செல்கள் வளர்வதில் கட்டுப்பாடு இழப்பதில் உள்ள மாறுபாடு/செயலற்ற தன்மைதான்.சில பிஞ்சுகளுக்கு அம்மாவின் கருவரைக்குள் கரு  உருவானபோதே கூட அந்த மரபணுவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்தான். 
2 -6 வயது குழந்தை எங்கே சிகரெட் குடித்தது,
 புகையிலை குதப்பியது,
துரித உணவு சாப்பிட்டது..?
புகை மாசு, பருமனில் சிக்கியது. இவர்களுக்கு இயற்கையிலேயே மரபணுவில் உருவான திடீர் மாற்றம்தான் 
இந்த கொடிய நோயை/அரக்கனை இவர்களிடம் வீசி எறிந்தது.அதில் சிக்கி சீரழிகின்றனர் இந்த பிஞ்சு மலர்கள்.

 அந்தப் பகுதிக்குச் சென்று எப்படிப் பேசுவது, எதனை எப்படித் துவங்குவது என்று தெரியாமல் கொஞ்ச நேரம் நின்றேன்
ஓர் அன்னை தன் மகனுடன் வந்து செருப்பை கழட்டிவிட்டு வார்டுக்குள் நுழைகிறார். நான் எந்த ஊர் அம்மா என்றேன். அவர் பேச வில்லை. என்ன பிரச்சினை என மெதுவாகக் கேட்டேன். அவருக்கு கோபம் தலைக்கேறியது.

 இது என்ன வார்டு..யார் இங்க இருப்பாங்க என்றார். 

நான் மீண்டும் என்ன ஊர் அம்மா என்றேன். சொன்னார்
.நான் பல்வேறு காரணங்களால் ஊர் பெயர் குறிப்பிட விரும்பவில்லை.பின் மெதுவாக நாங்களே நொந்து போய் இருக்கிறோம். பிள்ளை எதிரிலேயே சிலர் என்ன வியாதி என்பார்கள். அதானால்தான் நான் யாரிடமும் பேச விரும்புவதில்லை என்றார்கள்.
உண்மைதான். அந்த தாயின் ரணம், வலி , தாயின் மனநிலை, குழந்தையின் மனநிலை,அவர்கள் தானே உணரமுடியும்.  பாவம், வாழ்க்கையின் விளிம்பு நிலையில் இருப்பவர்கள், எப்போது கீழே விழுவோம் என்ற அச்சத்துடன் உள்ளவர்கள்; ஓரத்தில் நின்று கொண்டிருப்பவர்கள்.
அந்தக் குழந்தை ஆண் குழந்தை.நோய் அதிகரித்து எலும்புக்குள் வந்துவிட்டது.நிலைமை அறியாத தாய்மை..!
தலையை வலிக்கிறது என்கிறார் அந்தக் குழந்தை. பேசவும் மறுக்கிறதுஅது. 9 வயதுக் குழந்தையை தாய் சுமந்து திரிகிறார் .

 அவர் கூலித்தொழிலாளி. அவருக்கு இன்னொரு 4 வயது பெண்குழந்தை கணவரிடம்... 
அப்பா மாதம் ஒருமுறைதான் குழந்தையைப் பார்க்க கோவை வருவார்.அடிக்கடி வர வசதியும் இல்லை, தூரமும் கூட..
7 மாதமாக அங்கு இருக்கின்றனர்.  என் எதிரிக்குக் கூட இந்த நோய் வரக்கூடாது என்றார். 
அவர்களுக்கு செலவுக்குக் கூட பிரச்சினைதான். என்ன செய்ய..? என்னால் முடிந்ததை அந்த தாய்க்குச் செய்தேன். 

 . .      அங்குள்ள  குழந்தைகளில் இருவர் இரட்டைக் குழந்தைகள். பெண்சிசுக்கள் ..!  3  வயது.இருவருக்கும் இரத்தப் புற்று நோய். அந்த தாய், அந்த குடும்பம் யாரிடம் போய் புலம்ப முடியும். இரண்டு குழந்தைகளும் கொஞ்சும் கிளியாக இருக்கின்றன

. எத்துணை எத்துனை வேதனை அவர்களின் மனத்துள் கொட்டிக் குவிக்கப்பட்டிருக்கும். யாரிடமும் பகிர முடியாத இடம் அது.. மனம் வலித்தால்  வேதனைப் பட்டாலும் கூட அவர்களால் அழக் கூடமுடியாது.
குழந்தைகள் எதிரில்.எத்தனை சோகம் வேதனை இது?

ஒரு குழந்தை சாப்பிட மறுக்கிறது. என்னை போட்டோ எடுக்கச் சொல்லி கேட்கிறது. அம்மா சீக்கிரம் சாப்பிடு படம் எடுப்பார்கள் என்கிறார்.
முதல் கட்டிலில் உள்ள குழந்தை நான்காம் வகுப்பு படிக்கிறது. முகமெல்லாம் வீங்கி வெளுத்துப் போய் இருக்கிறது. அவருக்கு நேற்றுப் பிறந்த நாள்.அவர் அப்பாவுக்காக காத்திருக்கிறார்.அவரை படம் எடுத்தேன்.

அவரிடம் அடுத்த 15 நாளில் கொண்டு வந்து தருவதாக உறுதி அளித்து வந்தேன். மீண்டும் அங்கு டிசம்பர் 15 போகும்போது படம் பிரின்ட் போட்டு கொடுப்பேன். ஆனால் எந்த படத்தையும் வெளியிட மாட்டேன். அவர்களின் தனி உரிமையில் நுழைய விரும்பவில்லை. அதனைப் பொதுச் சொத்தாக வேண்டாம் என்று நினைக்கிறேன்.

  நான் மருத்துவமனையில் அனுமதி வாங்கிக் கொண்டு, குழந்தைகளுக்கு பழம், பிஸ்கட், பேரீச்சை, கடலை பர்பி, மிட்டாய் என மனதுக்குப் பட்டதை வாங்கிப் போனேன்,
செவிலியர் நீங்களே போய் ஒவ்வொருவரிடமும்  கொடுத்து விடுங்கள் என்றார். 
நிறைய பொருட்கள் இருந்ததால் அவரையும் உடன் அழைத்தப் போய் கொடுத்தேன்.
ஒரு குழந்தை வாங்க மறுத்து விட்டது. அந்தப் பெண் மலர் கையில் பேப்பர் வைத்து ஆங்கிலத்தில் எழுத்துக்களும் வார்த்தைகளும் எழுதிக் கொண்டிருந்தது.நான் கொடுத்ததை வேண்டாம் என்று மறுத்துவிட்டது. நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
இன்னொரு பச்சிளம் சிசு இரு கைகளிலும்  வேண்டும் என கேட்டு வாங்கிக் கொண்டார்.
ஒரு சிறுமி 10 வகுப்பு படிப்பவர். பரீட்சைக்குப் போக வேண்டும் என்றார்.

 ஒரு குழந்தையின் உடல், கை,கால். பல் எல்லாம், ஒரே கருப்பு. வேதி சிகிச்சையின் கொடை இது. நானும் அனுபவித்திருக்கிறேனே .!. அங்கு இரண்டு குழந்தைகள் 10 ம் வகுப்பு. 
ஒரு குழந்தை எனக்கு இனிப்பு வேண்டாம் என்றது. 

. சொந்த அனுபவமே ஏராளமாக உள்ளதே..! 

  அந்த பகுதில் உள்ள அன்னைகள் யார் யாரிடம் என்ன வேதனையைப் பகிர்ந்து கொள்ள முடியும்..?

அங்கு சென்று அவர்களிடம் பார்த்துப் பேசி, வெளியில் வந்த போது சில அன்னைகள் என்னிடம் வந்தனர். அவர்களிடம் குழந்தைகளின் எதிரில் அழாதீர்கள். அவர்களிடம் positiveஆகப் பேசுங்கள்.அதுவே தற்காப்பு சக்தி வழங்கும் என்றேன்.

இந்தக் குழந்தைகளிடம் எப்படிப் பேசி தன்னம்பிக்கை வரவழைப்பது..! 2 -6 வயது குழந்தைக்கு என்ன தைரியம், தன்னம்பிக்கை தரமுடியும்? எதுவுமே தெரியாமல் அந்த சிட்டுக்கள் துவண்டு கிடக்கின்றன.நடந்து விளையாடுகின்றன. பொம்மை செய்கின்றன. வண்ணம் தீட்டுகின்றன. எழுதிப்பார்த்து மகிழ்கின்றன. மனதுக்குள் இன்னும் எத்தனை ஆண்டுகள் இவர்கள் என்று வினவிக்கொண்டே வெளியேறினேன்.
முன்பை விட இப்போது குழந்தைகள் சரியாகி படிக்கப் போகின்றனர் என எனது மருத்துவ நண்பர் ஒருவர் சொன்னார்.

எதுவாயினும் நல்லவையாக நடக்கட்டும்.
 மனம் கனத்து அழுந்தி தொங்கிப் போயிற்று. பேச வார்த்தைகள் வரவில்லை. நெஞ்சு கதறியது. வெளியில் தொலைவில் வந்து கழிப்பறையில் நின்று 5 நிமிடம் அழுதேன். வரும் வழியில் நானும் ரபீக்கும் அழுதோம் 20 நிமிடம். யாரும் யாருடனும் பேசவில்லை, நிமிடங்களும், இடமும் கனத்துக் கிடந்தன.
என் நண்பர் அருணந்தி மூளைப் புற்று நோயால் மறைந்த போது நான் அழுத நான், 6  ஆண்டுகளுக்குப் பின் அழுதேன்.

 நான் கொஞ்சம் கல் நெஞ்சுக்காரி..கலங்கா உள்ளம் கொண்டவள்.அதனால்தான். நெஞ்சை துவைத்துப் போடும் நிகழ்வுகளும், நெகிழ்வுகளும் அங்கே நிறைய...!

புதிய மருந்துகளும், மருத்துவர்களின் கனிந்த மனங்களும், தாய் தந்தையரின் நம்பிக்கைகளும், உங்களின் மந்த்தவிலான ஆதரவும், குழந்தைகளின் பிஞ்சு மான்களும் அவர்களை விரைவில் காப்பாற்றட்டும்..! 

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.



6 கருத்துகள்:

  1. மனதைக் கசக்கிப் பிழியும் நிஜங்கள். படிப்பதற்கே வருத்தமாக உள்ளது. நல்ல உள்ளம் படைத்த டாக்டர்களும் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. நெஞ்சை பிழியும் சோகங்கள்!

    பதிலளிநீக்கு
  3. நாட்டில் அபூர்வமாகத்தான் இது போன்ற மருத்துவமனைகளை தற்காலங்களில் காண முடிகிறது...

    பதிலளிநீக்கு
  4. குழந்தைகளைப்பற்றி படிக்கும் பொழுது மனது கலங்கிவிட்டது. நல்லதொரு மருத்துவமனையைப்பற்றி தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  5. சார் மனதை நெகிழ வைக்கிறது பதிவு :((

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லாபுதன், மே 09, 2012

    நல்லதொரு மருத்துவமனையைப்பற்றி தகவலுக்கு மிக்க நன்றி .
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு